Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஓவியர் S.R. வெங்கடேசன்
- அரவிந்த்|மே 2018||(1 Comment)
Share:
கவின்கலைகள் எப்போதுமே பணக்காரர்களின் பொழுதுபோக்குத்தானோ என்று கருதத் தோன்றும் உலகத்தில், இல்லை, அவை படைப்பாற்றல் கொண்டவனின் உயிர்மூச்சு என நிரூபிப்பது S.R. வெங்கடேசனின் கலை வாழ்க்கை. கூலிவேலை செய்யும் அன்னையின் குடிசையில் ஆகட்டும், புலருமுன் காலை 4.30 மணிக்குப் புறப்பட்ட புதுச்சேரி ரயிலில் ஆகட்டும், இவரது தூரிகையின் வேகம் துயில் கொள்ளவில்லை. வண்ணக் கலவையின் உயிர்ப்பு, வடிவங்களில் கணநேரம் மூச்சை நிறுத்திவிடும் துல்லியம், பார்த்தபின் தலையைத் திருப்பவொட்டாத அழகியல் இவை வெங்கடேசன் படைப்புகளின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். தூறல் விழும் மங்கலான தெருக்கள், பூக்கட்டும் பெண், விறகு சுமந்த பெண்மணி, புன்னகைக்கும் முதிய சாமியார், ரமண பகவான், இளையராஜா, திருவண்ணாமலையின் தெருக்கள், ஆலயப் பிரகாரம், திருத்தேர் உற்சவம், யானை பவனி என்று அவரது நீர்வண்ண (Watercolor) ஓவியங்கள் வாழ்க்கையைப் பேசுவன. நீர்வண்ணம் என்னும் மீடியம் சற்றுக் கடினமானது. சிறு தவறு நேர்ந்தாலும் திருத்தவிடாது. அத்தகைய மீடியத்தை மிக நேர்த்தியாகக் கையாளுகிறார் வெங்கடேசன். வரைவது மட்டுமல்ல, ஆர்வமுள்ளவர்களுக்குச் சொல்லியும் கொடுக்கிறார். கண்காட்சி நடத்துகிறார். விரும்பி வாங்குவோர் பலர் உள்ளனர். ஓவியக் கலைக்கே தன்னை அர்ப்பணித்து வாழும் வெங்கடேசன், தனது வாழ்க்கைப் பயணத்தைச் சொற்களால் நமக்கு வரைந்து காட்டுகிறார்....

*****


அண்ணாமலையில் தோன்றிய ஆர்வம்
வந்தாரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலை என்னுடைய சொந்த ஊர். திருவிழாக்கள் நிறைந்த ஊர். கார்த்திகை தீபமும், மார்கழி மாதத் திருவிழாக்களும் மிகவும் பிரசித்தம். எனக்கு அம்மா மட்டும்தான். அப்பா இல்லை. என் பாட்டி மிகவும் தெய்வபக்தி உடையவர். நாள்தோறும் இரவில் ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லித் தூங்கவைப்பார். அதேபோல் மார்கழி மாதம் முப்பது நாளும், ஒருநாள்கூடத் தவறாமல் காலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்கு என்னை அழைத்துக்கொண்டு போவார். விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதும், எங்கும் ஒலிக்கும் திருவெம்பாவைப் பாடல்களும், ஆலயத்தின் அமைதியும் அந்தச் சிறுவயதில் என்னை மிகவும் ஈர்த்தன. சுமார் ஒரு மணி, இரண்டு மணி நேரம் கோயிலிலேயே இருப்போம். சில நாட்களில் பாட்டியும் நானும் பிரிந்து விடுவோம். காரணம், உண்ணாமுலை அம்மன் சந்நிதி. அங்கே நூற்றுக்கணக்கான தெய்வீக ஓவியங்கள் சுவரில் மாட்டப்பட்டிருக்கும். அவற்றில் பெரும்பாலானவை திருச்சி ஸ்ரீ கணேசன் கலைக்கூடத்தின் மூத்த ஓவியர் திரு. கந்தசாமி அவர்களால் வரையப்பட்டவை என்பதைப் பின்னால் அறிந்தேன். அவற்றின் அழகில், நேர்த்தியில், ஈர்ப்பில் அங்கேயே லயித்து நின்று கொண்டிருப்பேன்.



பாட்டி சொன்ன கதைகளுக்கும் அந்த ஓவியங்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அவை என்னை அந்தப் புராண, இதிகாசக் காலகட்டங்களுக்கே அழைத்துக்கொண்டு போவதுபோல உணர்வேன். அந்த ஓவியங்களை எனக்குள் அசைபோட்டு, தினந்தோறும் பள்ளியில் வரைவேன். பள்ளித் தோழர்களுக்குக் காட்டுவேன். அவர்கள் வியப்பார்கள். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். இப்படித்தான் ஓவிய ஆர்வம் முகிழ்த்தது.

நான் முதலாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில வருடப் பிறப்பன்று ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் ஓவியம் கொண்ட தினசரி கேலண்டரை என் வீட்டில் மாட்டினார்கள். நான் விளையாடிவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். அந்தக் கேலண்டரைப் பார்த்தவுடன் ஏதோ ஓர் உணர்வு கிளர்ந்தது. சிலேட்டை எடுத்துக்கொண்டு கேலண்டரில் இருந்த படத்தை அப்படியே பல்பத்தால் வரைந்தேன். அதைப் பார்த்து என் வீட்டில் உள்ளவர்கள் அசந்து போயினர். இன்றும் என்னுடைய அம்மா அந்த நாளை நினைவுகூர்கிறார். எல்லோரிடத்திலும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார். அதுதான் என்னுடைய கலைப் பயணத்தின் தொடக்கம்.

திருப்புமுனை
பள்ளியில் படிக்கும் காலத்தில் ஓவியப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றிருக்கிறேன். என்றாலும், ஓவியத்தைப் பாடமாக எடுத்துப் படிக்கமுடியும் என்பது எனக்குத் தெரியாது. ஆர்வத்தால் வரைந்து கொண்டிருந்தேன். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தேன், அங்கும் என்னுடைய ஓவிய முயற்சிகளை விடவில்லை. கல்லூரியில் நடைபெறும் சிறப்பு விருந்தினர் கூட்டம், ஆண்டு விழாக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்தல் போன்றவற்றில் என்னுடைய ஓவியங்கள் பெரிய பெரிய பேனர்களாக அலங்கரித்தன. மாணவர்கள், பேராசிரியர்கள் என்று என் நட்பு வட்டம் விரிவடைந்தது. பலரது தொடர்பு கிடைத்தது. அவர்கள் கேட்டபடி பேனர்கள் வரைந்து கொடுப்பேன். படிப்பை முடித்த பின்னர் அதனையே தொழிலாகச் செய்து கொண்டிருந்தேன். சுமார் எட்டு ஆண்டுகள் அப்படியே தொடர்ந்தது. அப்போதுதான் அந்தத் திருப்புமுனை ஏற்பட்டது.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் படித்த காலத்தில் தமிழ்ப் பேராசிரியர் திரு. வே. நெடுஞ்செழியன், நான் ஓவியம் வரைவதை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்ப்பார். ஒருநாள், "நீ இவ்வளவு அற்புதமாக ஓவியம் வரைகிறாயே! ஏன் ஓவியக் கல்லூரியில் சேரவில்லை?" என்று கேட்டார். பின் சென்னை எழும்பூரில் ஓவியக் கல்லூரி இருக்கிறதென்று எடுத்துச் சொன்னார். அப்போதுதான் எனக்கு ஓவியத்தைக் கல்லூரியில் பயிலலாம் என்பதே தெரிந்தது! ஓவியக் கல்லூரியில் சேரும் ஆசை என்னுள் கனலத் தொடங்கியது. அந்தக் கனவுடன் விளம்பர நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தினேன். ஆனால், அதில் பெரிய ஆதாயம் எதுவுமில்லை. கடை வாடகைக்கே வருமானம் சரியாகப் போய்விட்டது. அது டிஜிட்டல் பேனர்களின் துவக்ககாலமும் கூட. தொழில் நொடித்துப் போனது. வறுமையும், வேதனையும் வாட்டின. என்றாலும் ஓவியக் கல்லூரிக் கனல் மட்டும் சுடர்ந்துகொண்டே இருந்தது.



கனவை நனவாக்கியவர்கள்
நினைத்துப் பார்த்தால் அந்தக் காலகட்டம் சற்றுக் கொடுமையானது. பல ஓவியர்கள் வேறு துறைக்கு மாறிப் போய்விட்டனர். என் குடும்பமும் வறுமையில் வாடியது. சில ஆண்டுகள் இப்படியே கடந்தன. என்னுடன் சிறுவயது முதலே பழகிய ஓவியர் திரு. குமார் அண்ணன் ஓவியத்துறையில் எனக்குப் பலவிதத்தில் உதவியவர். அவர்மூலம் புதுச்சேரி ஓவியர் திரு. பத்மநாபனின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் புதுச்சேரி ஓவியக் கல்லூரி பற்றித் தெரியவந்தது. அவர், அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பிரபல ஓவியர்களான திரு. ராஜராஜன், டாக்டர். சிற்பி பிரபாகரன், டாக்டர். சிற்பி ஜெயராமன் போன்றோரை அணுகி, ஆலோசிக்கும்படிச் சொன்னார்.

அவர்களைச் சந்தித்தேன். என் ஓவியங்களைக் காட்டினேன். பார்த்து ரசித்த அவர்கள், ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயில அனுமதித்தனர். என்னுடைய ஓவியக் கல்லூரிக் கனவை நினைவாக்கிய, தெய்வங்கள் இவர்கள். எனக்கு வாய்ப்பு அளித்த பேராசிரியர்களுக்கு இங்கே நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஓர் ஓவியனாக என்னுடைய வாழ்க்கை அந்தக் கல்லூரியில் துவங்கியது.

ஒரு தோழியின் பேருதவி!
என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்தது அந்தக் கல்லூரி. எதிர்காலம் எதுவென்றே புரிபடாத நிலையில், ஓவியம் மட்டுமே தெரிந்த எனக்கு வெளிச்சப் பாதையைக் காட்டியது ஓவியக் கல்லூரி. ஓவியம் வாழ்க்கையாக முடியும் என்ற நம்பிக்கையை அது அளித்து மறுவாழ்வு தந்தது. ஆனால், அது அவ்வளவு சுலபத்தில் நிறைவேறி விடவில்லை.

முதலாமாண்டு சேர வாய்ப்புக் கிடைத்தவுடன், படிக்க முடியுமா என்ற பயம் எனக்கு வந்தது. காரணம், குடும்பப் பொருளாதாரம். அந்தக் காலகட்டத்தில் என்னுடைய தோழி ஜெயந்தி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவர் கூறிய நம்பிக்கை வார்த்தைகளும், முதலாமாண்டுச் சேர்க்கைக் கட்டணத்தைத் தான் தருவதாகக் கூறிய உறுதிமொழியும் எனக்கு மிகப்பெரிய ஊன்றுகோலாக அமைந்தது. அவர் வேலை பார்த்து, தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி மாதந்தோறும் எனக்குப் பணம் உதவினார். நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளம்பர போர்டு எழுதிப் பொருளீட்டி, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன்.



நீர்வண்ண மோகம்
நீர்வண்ணத்தைக் கையாளுவது பெரிய சவால். சிறுவயதிலேயே எனக்கு அந்த மீடியத்தின் மீது ஒரு மோகம். அதை வசப்படுத்த மிகவும் உழைத்தேன். இன்னமும்கூட நான் பயிற்சி செய்து கொண்டிருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். அதன் அலாதியான அழகியலின் காரணமாக நான் நீர்வண்ணத்தை அதிகம் பயன்படுத்துகிறேன். இந்த மீடியத்தில் சிறிய தவறு ஏற்பட்டுவிட்டாலும் திருத்துவது மிகக்கடினம், ஓவியமே வீணாகிவிடலாம்.

நான் நீர்வண்ண ஓவியத்தை வரைய ஆரம்பிக்கும் முன் நன்கு தீர்மானித்துவிட்டே ஆரம்பிப்பேன். இப்படி உழைத்து வரைந்த நீர்வண்ண ஓவியங்கள்தாம் எனக்கு விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கித் தந்திருக்கின்றன. பிற ஓவியர்களிடமிருந்தும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. இன்றைக்கு அது அமெரிக்கப் புகழ் 'தென்றல்' என்னை நேர்காணல் செய்யும் இடத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.

குறிப்பாக, என் அம்மாவை நான் வரைந்த ஓவியங்கள் எனக்குப் பல விருதுகளைத் பெற்றுத் தந்திருக்கின்றன. நான் பெற்ற முதல் விருது என் அம்மாவின் ஓவியத்துக்குத் தான். (பார்க்க: அம்மா படங்கள்) எனது ஓவிய முயற்சிகளுக்கு தேசிய அளவில் கேம்லின் ஆர்ட் ஃபவுண்டேஷன் விருது கிடைத்தது. அதுபோல கோவையில் உள்ள ஸ்ரீ கஸ்தூரி ஸ்ரீநிவாசன் ஆர்ட் ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஒவியப் போட்டிகளிலும் நீர்வண்ண ஓவியத்திற்காகப் பரிசுகளைப் பெற்றுள்ளேன். கல்லூரிகளில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

சவாலான ஓவியங்கள்
நீர்வண்ண ஓவியங்களில் நிலக்காட்சிகளை வரைவது கடினமென்றாலும் முகத்தோற்றத்தை (Portrait) வரைவது இன்னும் பெரிய சவால். நான் விரும்பி அந்தச் சவாலை ஏற்றேன். முகவுருவ ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து வரையத் தொடங்கினேன். கண்டோரை அவை கவர்ந்தன. விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன. குறிப்பாக, மலைவாழ் மனிதர் ஒருவர் சாப்பிடுவதுபோல் நீர்வண்ண ஓவியம் ஒன்று. அதில் பின்னணியில் கீற்று வீடும், ஒரு மஞ்சம்பில் வீடும் வரைந்தேன். அது நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது. நான் நான்காமாண்டு படிக்கும்போது வரைந்தது. அதைச் சக மாணவர்களும், ஆசிரியர்களும் வியந்து பாராட்டினார்கள். பிற ஓவியர்களும் வியப்புடன் எப்படி வரைந்தீர்கள் என்று கேட்டனர். (பார்க்க: மலைவாழ் மனிதர்) அதுதான் எனக்கே ரொம்பப் பிடித்த சவாலான ஓவியம் என்று சொல்வேன்.



ஓவியப்பள்ளி
நான் ஓவியப்பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் திருவண்ணாமலையிலும் பாண்டிச்சேரியிலும் நடத்தி வந்தேன். தற்போது திருவண்ணாமலையில் மட்டும் நடத்துகிறேன். சுமார் 50 மாணவர்கள் பயில்கிறார்கள். பத்திரிகை ஓவியங்கள், விளம்பர ஓவியங்கள், திரைப்பட ஓவியங்கள் போன்றவற்றில் எனக்கு முன்பு ஆர்வம் இருந்தது. இப்போது இல்லை. முழுக் கவனமும் நீர்வண்ண ஓவியத்தில்தான் இருக்கிறது.

என்னைக் கவர்ந்த ஓவியர்கள்
எனக்கு நீர்வண்ண ஓவியர்களை மிகவும் பிடிக்கும், என்னுடைய ஓவியக் கல்லூரிப் பேராசிரியர் இராஜராஜன் இந்த மீடியத்தில் மிகவும் பிரபலமானவர். அவர் சில குறிப்பிடத்தக்க நீர்வண்ண ஓவியர்களை உருவாக்கியுள்ளார், அதில் நானும் ஒருவன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வேன். எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் திரு. ஏழுமலை மற்றும் திரு. ஆபேல் இருவரது நீர்வண்ண ஓவியங்களையும் நான் மிகவும் ரசிப்பேன்.

வாழ்க்கையின் தூண்கள்
நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் அப்பாவைப் பார்த்தது இல்லை. அம்மாதான். மிகவும் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைத்தார். ஆளாக்கினார். அவர்கூடச் சில ஆண்டுகளுக்கு முன்பு, "படம் போடறத விட்டுட்டு வேற ஏதாவது வேலைக்குப் போனா, அன்னாடம் கொஞ்சம் வருமானம் வருமே" என்று அடிக்கடி கூறுவார். காரணம், வறுமையின் பாரம். அது எனக்குப் புரிந்தது. ஆனாலும், மனதைத் தளரவிடாமல் நான் ஓவியத்துறையில் பிடிவாதமாகப் பயணித்தேன். அன்றைக்குப் பட்ட கஷ்டங்களுக்கு இன்றைக்குப் பலன் கிடைத்திருக்கிறது. இன்று பலர் மத்தியில் என் மகன் ஒரு ஓவியன் என்று சொல்லி அவரே பெருமைப்படுகிறார்.

இன்று நான் ஒரு முழுநேர ஓவியனாக இருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்காரணம், என்னுடைய தோழியாக, காதலியாக இருந்து, என்னுடைய ஓவியக் கல்வியை ஊக்குவித்து, அடித்தளம் அமைத்துக் கொடுத்து, இன்று என்னுடைய மனைவியாகி இருக்கும் ஜெயந்திதான்.

படித்து முடித்தபின் அவரையே என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டேன். அவரும் ஓவியப் பயிற்சி முடித்தவர். பகுதிநேர ஓவிய ஆசிரியர். விலை உயர்ந்த பிரஷ்கள், கேமராக்கள் என்று என்னுடைய தேவைகளைப் பார்த்துப் பார்த்து நிறைவேற்றியவர், தற்போதும் நிறைவேற்றி வருபவர். இன்றும் என்னுடைய வளர்ச்சிக்கு ஒரு தூணாக இருப்பவர் அவர்தான்.



"நீர்வண்ண ஓவியங்களின் மூலம் நம் நாட்டின் மக்களையும், கலாசாரத்தையும், நமது நாட்டின், மண்ணின் வண்ணத்தையும் படங்களில் அகப்படுத்தி, அவற்றை உலகெங்கிலும் கொண்டு சேர்க்க எனக்கு ஆசை. என்னுடைய ஓவியங்கள் என் தாய் நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும். இதுவே என் லட்சியம், விருப்பம் எல்லாம். நிச்சயம் நான் இதை நிறைவேற்றுவேன்" என்கிறார் வெங்கடேசன். எந்தக் கேள்வி கேட்டாலும் அவருடைய தன்னம்பிக்கையில் மெல்லிய கூச்சமும் இழையோடுவதைக் காண முடிகிறது. "அமைதியாக, அடக்கமாக இருப்பது என்பது எனது இயல்பான சுபாவம் சார். அதைச் சட்டென்று மாற்றிக்கொள்ள முடியவில்லை" என்கிறார். அதுவே அவரை உயர்த்தும் என்று நமக்குள் எண்ணியபடி, அவரை வாழ்த்தி விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த்

*****
வண்ணமும் எண்ணமும்
அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மாவட்ட அளவில் ஓவியப்போட்டி நடைபெற்றது. என் பள்ளியின் சார்பாக நான் பங்கேற்றேன். 'தேசிய ஒருமைப்பாடு' என்பது தலைப்பு. பங்கேற்ற பிற மாணவர்கள் பயன்படுத்திய ஓவிய உபகரணங்கள் மிக விலை உயர்ந்தைவையாக இருந்தன. அதைப் பார்த்து எனக்குப் பிரமிப்பாக இருந்தது. என்னுள் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்திவிட்டது. அவர்களுடைய ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர். நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. என்னிடம் அந்த அளவுக்கு ஒவியக் கருவிகள் இல்லை. அந்தத் தலைப்பில் சுலபமான ஓவியம் - அதாவது மூன்று மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் கைகோர்த்து இருப்பதுபோல் - வரைந்து வெறும் கறுப்பு அவுட்லைன் போட்டுச் சீக்கிரம் முடித்துக் கொடுத்து விட்டேன். ஆனால், அந்த ஓவியம் எனக்கு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசைப் பெற்றுத் தந்தது. மாவட்ட ஆட்சியர் எனக்குப் பரிசு வழங்கிக் கௌரவித்தார். அவர் மேடையில் பேசும்போது, "ஓவியத்தில் வண்ணங்கள் மட்டும் முக்கியமல்ல; எண்ணங்களும் முக்கியம். தலைப்பிற்கேற்ப கருப்பொருளை வெளிப்படுத்த வேண்டும். அதை இவர் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்" என்று அனைவர் முன்பும் பாராட்டிப் பேசினார்.

அன்றுமுதல் தாழ்வு மனப்பான்மைக்கு நான் இடம் கொடுப்பதில்லை. ஓவியத்தில் சாதனை புரியக் கரிக்குச்சி கூடப் போதும் என்பதற்கு அந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. அதை என்னால் மறக்கவே முடியாது.

- S.R. வெங்கடேசன்

*****


நினைக்கவே நடுக்கம் தரும் நாட்கள்
ஓவியக் கல்லூரி நாட்களை நினைத்தால் இப்போதும் உடம்பு நடுங்கும். காரணம் சொல்கிறேன் கேளுங்கள். நான் வசித்தது திருவண்ணாமலையில். கல்லூரி புதுச்சேரியில். தங்கிப் படிக்கலாம் என்றால், வீட்டுவாடகை, சாப்பாட்டுச் செலவு எல்லாம் சேர்ந்து குறைந்தபட்சம் ரூபாய் மூன்றாயிரம் மாதந்தோறும் தேவைப்படும். அது சாத்தியமில்லை. எனக்கு அம்மா மட்டும்தான். அவர் கூலிவேலை செய்துதான் என்னைப் படிக்கவைத்தார். அதனால் தினமும் ரயிலில் போக முடிவெடுத்தேன். ரயில்வே பாஸ் மாதத்துக்கு ஐநூறு ரூபாய்தான். என் அம்மாவையும் பார்த்துக் கொண்டதுபோல் இருக்கும், செலவும் குறையும் என்பதால் நான் அப்படித் தீர்மானித்தேன். இதற்காக என் அம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

வீட்டிலிருந்து ஸ்டேஷன் ஆறு கி.மீ. விடியற்காலை 4.30 மணிக்கு ரயில். அம்மா 2.30 மணிக்கே எழுந்து சமையல் தொடங்குவார். என்னை 3.00 மணிக்கு எழுப்பிவிடுவார். நான் 3.45 மணிக்குக் கிளம்பி, கையில் உணவோடு சைக்கிளில் ரயில்நிலையம் போவேன். கல்லூரி முடிந்து இரவு 8.30 மணிக்குப் புதுச்சேரியிலிருந்து கிளம்பி, வீடு வந்து சேரும்போது இரவு 11.00 மணி ஆகிவிடும். ஒவ்வொரு நாளும் 250 கி.மீ. பயணம். நான் படித்த நேரத்தைவிட ரயில் பயணம் செய்த நேரமே அதிகம். தூக்கம்கூட இரண்டாம் பட்சம்தான். ஆனால், ரயிலில் கூடப் படம் வரைவேன். அப்படி நான் கஷ்டத்தைப் பார்க்காமல் உழைத்ததால் என்னால் இந்த இடத்தை அடைய முடிந்திருக்கிறது.

- S.R. வெங்கடேசன்

*****


நீங்கள் காண விரும்பினால்...
ஓவியக் கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறேன். நான் ஓவியக் கல்லூரியில் நான்காமாண்டு படித்துக் கொண்டு இருக்கும்போது பல சிரமங்கள், பயணங்கள், பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியில், புதுச்சேரியில் தனிநபர் நீர்வண்ண ஓவியக் கண்காட்சி நடத்தி எங்கள் கல்லூரியில் பாராட்டுகளைப் பெற்றேன். அதில் பல ஓவியங்கள் விற்பனை ஆயின.

என் இணையதளம் www.srvartist.com
என் முகநூல் பக்கம்: www.facebook.com/srv.artist.1

நான் வரையும் புதிய ஓவியங்களை இதில் பதிவேற்றி வருகிறேன். தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

- S.R. வெங்கடேசன்

*****
Share: 




© Copyright 2020 Tamilonline