Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி
- பா.சு. ரமணன்|ஏப்ரல் 2018|
Share:
பக்தர்களால் பகவான் என்றும் மஹரிஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில், சுந்தரம் அய்யர் - அழகம்மை தம்பதியினருக்கு டிசம்பர் 30, 1879 அன்று மகனாகப் பிறந்தார். பெற்றோர்கள் அவருக்கிட்ட பெயர் வேங்கடராமன். தந்தை சுந்தரம் ஐயர், அரசுப் பதிவுபெற்ற வக்கீல் மணியமாகப் பணியாற்றினார். திருச்சுழியில் பாலர் வகுப்பில் பயின்ற வேங்கடராமன், பின்னர் திண்டுக்கல்லில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றான். பின்னர் மதுரை ஸ்காட் இடைநிலைப்பள்ளியில் பயின்றான். மூத்த சகோதரன் நாகசாமியும் வேங்கடராமன் படித்த அதே பள்ளியில் பயின்று வந்தான்.

வேங்கடராமனுக்கு பன்னிரண்டு வயது நடந்து கொண்டிருந்தபோது தந்தை திடீரெனக் காலமானார். குடும்பம் நிலைகுலைந்தது. சுந்தரமையரின் இளைய சகோதாரர்கள் சுப்பையரும், நெல்லையப்பையரும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். வேங்கடராமன் மதுரை அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் சேர்க்கப்பட்டான். ஆனாலும் படிப்பை விட மாணவத் தோழர்களுடன் விளையாடுவதும், நீந்துவதும், குஸ்தி போடுவதும் ஆடிப்பாடுவதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது.

ஒருநாள் உறவினர் ஒருவர் வேங்கடராமனின் வீட்டிற்கு வந்தார். அவரை அதற்கு முன் கண்டதாக வேங்கடராமனுக்கு நினைவில்லை. அதனால், "நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர் "அருணாசலத்திலிருந்து வருகிறேன்" என்றார். "அருணாசலம்" என்ற வார்த்தையைக் கேட்டதுமே அவனுக்கு ஒரு வியப்பு உண்டானது. அதுவரை இல்லாத ஓர் ஆனந்தப் பரவசம் ஏற்பட்டது. ஆனாலும் அதை இன்னதென்று அறிய இயலாத அவன், "அருணாசலமா, அது எங்குள்ளது?" என்று கேட்டான்.

"அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா? திருவண்ணாமலை என்ற க்ஷேத்திரத்தின் இன்னொரு பெயர்தான் அருணாசலம்" என்றார் உறவினர்.

"அருணாசலம்" என்ற அந்தப் பெயரைக் கேட்டது முதல் வேங்கடராமனுக்கு விளக்க இயலாத ஆனந்த அதிர்வுநிலை ஏற்படத் துவங்கியது. பாடங்களில் மனம் செல்ல மறுத்தது. பெரிய புராணத்தை விரும்பிப் படித்தான். ஆன்மீக உணர்வு தலைதூக்கியது. அடிக்கடி மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் செல்வதும், அம்மையையும், அப்பனையும் அருள் வேண்டி வழிபடுவதும் அவன் வழக்கமானது.

ஒருநாள் இரவு. சிற்றப்பா வீட்டு மாடியறையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த வேங்கடராமனுக்கு, திடீரென 'சாகப் போகிறோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடல் வியர்த்துக் கொட்டியது. கை, கால் நடுங்கியது. "சாவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்" என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கை, கால்களை நீட்டி, விறைத்த கட்டை போலப் படுத்துக்கொண்டான். கண்களை இறுக மூடிக்கொண்டான். மூச்சை அடக்கினான். "இதோ, இந்த உடல் செத்துவிட்டது. ஆனால், இந்த உடலையும் மீறி ஓர் உணர்வு உயிர்ப்போடு இருக்கிறதே, அது என்ன? நான் என்பது இந்த உடலன்று; நான் என்பது இந்த மூச்சன்று; நான் என்பது இந்த நினைவுமன்று. இவற்றையெல்லாம் தாண்டிய தனிப்பொருள் ஒன்று என்னுள் ஒளிர்கிறதே, அதுவே நான். ஆம் அதுவே என்றும் அழிவற்ற நித்ய வஸ்துவாகிய ஆன்மா. அது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமே அது. அதுவே நான்." - இந்த எண்ணம் உறுதிப்பட்டவுடன், தான் யார் என்ற உண்மை மலர்ந்தது. அத்துடன் அவனது வாழ்வே மாறிப்போனது.

நாளாக நாளாகப் படிப்பின்மேல் நாட்டம் குறைந்தது. விளையாட்டுக்களிலும் ஈடுபாடு போய்விட்டது. தன்னுள் ஆழ்ந்து கண்களை மூடி அமர்ந்திருப்பது, அல்லது எங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருப்பதும் வழக்கமானது. ஒருநாள் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்தவன் அதில் திடீரெனச் சலிப்பும், வெறுப்பும் தோன்றவே, கண்களை மூடி அமர்ந்தான். நிஷ்டையில் ஆழ்ந்தான். அதைக் கண்ட அண்ணன் நாகசாமி, "இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு" என்றார் கோபத்துடன். சட்டென்று தன்னுள் ஏதோ ஒன்று அறுந்ததை உணர்ந்தான் வேங்கடராமன்.

"ஆமாம், இவர் சொல்வது உண்மைதானே! இப்படியெல்லாம் இருக்க நினைக்கும் எனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. என் தந்தை அருணாசலம் இருக்கும் இடத்தில் அல்லவா நான் இருக்கவேண்டும்?" என்ற எண்ணம் தோன்றியது. மனம் உறுதிப்பட்டது.

மறுநாள் காலை எழுந்ததும் இந்திய வரைபடத்தை எடுத்துப் பார்த்தான், அதில் திருவண்ணாமலை திண்டிவனத்திற்கு அருகில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக அங்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. வீட்டை விட்டுப் புறப்பட நினைத்தான். ஆனால் எப்படிப் போவது? வீட்டில் இருப்பவர்கள் பார்த்தால் விடமாட்டார்களே என்ற எண்ணம் தோன்றியது. சிறிது நேரம் யோசித்தவாறு அமர்ந்திருந்தான். பின் "எனக்குப் பள்ளியில் சிறப்பு வகுப்பு இருக்கிறது. நான் போகவேண்டும்" என்றான் அண்ணனிடம். அண்ணனும் "அப்படியானால் கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் இருக்கிறது. போகும் வழியில் என் கல்லூரியில் எனக்கான மாதக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்" என்று கூறினார்.

வீட்டினுள் சென்றான். வேக வேகமாக உணவருந்தினான். அதுதான் அந்த வீட்டில் அவன் உண்ணும் கடைசி உணவு என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை. சித்தி, அண்ணனின் சொற்படி ஐந்து ரூபாயை வேங்கடராமனிடம் கொடுத்தார். வழிச்செலவுக்கு மூன்று ரூபாய் மட்டும் போதும் என்று நினைத்த வேங்கடராமன், தன் நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தான். எழுதினான்.

"நான் என்னுடைய தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இதற்காக யாரொருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்யவேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. 2 இதோடு கூட இருக்கிறது.

இப்படிக்கு
.........
என்று எழுதி வைத்து விட்டுக் கிளம்பிவிட்டான். 'நான்' என்று ஆரம்பித்து 'இது'வாகி கடைசியில் '......' என்று கடிதத்தை முடித்து தனக்குள்ளே தான் ஒடுங்கி, பேரும், ஊரும் அற்றிருப்பதை சூட்சுமமாக பகவான் பால ரமணர் அன்றே உலகுக்கு உணர்த்தி விட்டார். ஆனால் அதை அப்போதே உணர்வார்தான் யாருமில்லை.

ரயிலில் ஏறி விழுப்புரத்தில் இறங்கி மாம்பழப்பட்டு வரை சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து அண்ணாமலையை அடைந்தார் பால ரமணர். பின் அதுவே அவரது நிரந்தர வாசஸ்தலமாயிற்று. பாதாளலிங்கக் குகை, மாமரத்துக் குகை, பவழக்குன்று, விருபாக்ஷிக் குகை, ஸ்கந்தாச்ரமம் என பல இடங்களிலும் மாறி மாறி வசித்தார்.

இந்நிலையில் மானாமதுரையில் சித்தப்பா நெல்லையப்பையர் காலமானார். சில மாதங்களில் நாகசுந்தரத்தின் மனைவியும் காலமானாள். இதனால் அன்னை அழகம்மை மிகவும் மனம் உடைந்தாள். இறுதிக் காலத்திலாவது பகவானுடன் சேர்ந்து வசிக்கலாம் என்று நினைத்தாள். உடன் அண்ணாமலை வந்து சேர்ந்தாள். அப்போது விருபாஷியில் பகவான் மட்டுமல்லாது பல அடியார்களும் உடன் வசித்தனர். அவர்கள் அன்னையின் வருகையைக் கண்டு அஞ்சினர். எங்கே பகவான் எல்லாவற்றையும் உதறிவிட்டு வேறெங்கேனும் சென்று விடுவாரோ என்று பயந்தனர். ஆனால் பகவான் அவ்வாறு செய்யவில்லை. ஆதரவேதுமில்லாமல் இறுதிக் காலத்தில் தன்னை நாடி வந்த அன்னைக்கு, துறவியாக இருந்தாலும் தன் கடமையைச் செய்வது அவசியம் என்று கருதினார். அதே சமயம் உலகப் பற்றுக்களில் சிக்குண்ட அன்னையை அதிலிருந்து மீட்டு, ஞானநிலை அடையவும் உதவ விரும்பினார். அதனால் அன்னை வந்ததற்கு அவர் மறுப்பேதும் சொல்லவில்லை. அதேசமயம் அன்னை என்பதற்காக அவருக்கு எந்தச் சலுகையும் காட்டவில்லை. தன்மீது தாய் என்ற உரிமையை அன்னை எடுத்துக் கொள்ளவும் சம்மதிக்கவில்லை. அதற்காக அவரைப் புறந்தள்ளவும் இல்லை. ஒரு அதியாச்ரமியாக பகவானது வாழ்க்கை அண்ணாமலையில் தொடர்ந்தது.

நாளடைவில் தம்பி நாகசுந்தரம் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு பகவானின் சேவைக்காக அண்ணாமலையை வந்தடைந்தார். துறவறம் பூண்டு 'நிரஞ்சனானந்தர்' என்ற பெயரில் பகவானுக்கான பணிவிடைகளைக் கவனிக்கத் தொடங்கினார். அன்னையும் மனப்பக்குவம் பெற்று, காஷாய உடை தரித்து ஒரு துறவிபோல் வாழ ஆரம்பித்தார்.

சில வருடங்களில் அன்னையின் உடல்நலம் சீர்கேடடையத் துவங்கியது. பிணிமுற்றி 1922ம் ஆண்டு அன்னை காலமானார். அன்னையின் மரணத்தின்போது பகவானே உடனிருந்து அவளது ஆன்ம வாசனைகளை அகற்றி அவளை முக்திநிலைக்கு உயர்த்தினார். அன்னையின் உடல் கீழே உள்ள பாலிதீர்த்தக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு ஓர் இடத்தில் சமாதி செய்விக்கப்பெற்றது. நாளடைவில் அன்னையின் நினைவாக அங்கே ஓர் ஆலயமும் எழுப்பப் பெற்றது. மாத்ருபூதேஸ்வரர் ஆலயம் என்று அது அழைக்கப்பெற்றது. நாளடைவில் பகவான் அங்கேயே வந்து வசிக்கத் தொடங்கினார். அதையொட்டி சிறுசிறு குடில்களும், கட்டிடங்களும் அமைக்கப்பட்டன. அதுவே இன்றைக்கு நாம் பார்க்கும் 'ரமணாச்ரமம்' ஆகிற்று.

மனிதர்கள் மட்டுமல்லாது காகம், பசு, மயில், குரங்கு, நாய், அணில் என மிருகங்கள் மீதும் பகவான் அளவற்ற அன்புபூண்டு ஒழுகினார். காகத்திற்கும், பசு லக்ஷ்மிக்கும் முக்தி அளித்தார். தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக உணர்வைத் தூண்டி உள்ளொளி எழுப்பினார். பகவானது அருள் ஒளி தரிசனம் பெறப் பலரும் திரண்டு வந்தனர். ஆன்மீக சூரியனாய் அவர் தகிக்க, அவரது ஒளி தரிசனத்தைப் பெற உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பலர் வந்தனர். அருளமுதம் பருகினர். பகவானின் புகழைப் பரப்பினர். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய் இருந்து நயன தீக்ஷை வழங்கி, அவர்களை ஊக்குவித்தார். முக்தி வழிகாட்டினார்.

நாளடைவில் பகவானுக்குப் புற்றுநோய் ஏற்பட்டது. பகவான் தம்மை உடல் என்று கருதாததால் அந்த நோய் குறித்துக் கவலைப்படவில்லை என்றாலும் அதனால் கடும் வேதனையைச் சந்தித்தார். எந்த வகை மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படவில்லை. படுத்த படுக்கையாகவும் சில நாட்கள் இருக்கவேண்டி வந்தது. ஏப்ரல் 14, 1950 அன்று இரவு 8.47 மணிக்கு பகவான் மகாசமாதி அடைந்தார். அவர் உயிர்பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது. இதன்மூலம் தந்தை அருணாசலரே, பூவுலக மக்களின் துயர் துடைக்கத் தாம் அனுப்பிய மைந்தன் ரமணரை, தம்முள் ஒடுக்கிக் கொண்டார் என்ற கருத்து வலுப்பட்டது.

தாயாரின் சமாதியை ஒட்டி பகவானது உடல் திருமந்திர முறைப்படி சமாதி செய்விக்கப் பெற்றது. பகவானின் ஜயந்தி மார்கழி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அவரது குருபூஜை ஆராதனை விழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இன்றும் தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் பகவான் உதவிக்கொண்டுதான் இருக்கிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline