|
கோமல் சுவாமிநாதன் |
|
- அரவிந்த்|ஏப்ரல் 2018| |
|
|
|
|
"நாடகத்தின் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் உள்ளடகத்திலும் உத்தியிலும் பல பரிசோதனைகளைச் செய்து புதிய பரிமாணம் படைத்தவர்" - இப்படிப் பாராட்டியவர் 'சிட்டி' பெ.கோ. சுந்தர்ராஜன். பாராட்டப்பட்டவர் 'கோமல்' என்று இலக்கிய, நாடக உலகில் அன்புடன் அழைக்கப்பட்ட கோமல் சுவாமிநாதன். கோமல் என்ற பெயர் அவர் கூடவே இணைந்திருந்தாலும் அது அவரது சொந்த ஊரல்ல. முன்னோர்களின் ஊர்தான். ஜனவரி 27, 1935ல், காரைக்குடியை அடுத்த செட்டிநாட்டில், சுவாமிநாதன் பிறந்தார். தந்தை தபால்துறையில் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அதனால் அடிக்கடி ஊருக்கு ஊர் பணிமாற்றம் நிகழ்ந்தது. சுவாமிநாதனின் பள்ளிப்பருவம் குளித்தலை, திருப்பத்தூர், காரைக்குடி, பெரியகுளம் என்று பல்வேறு இடங்களில் கழிந்தன. அந்தப் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களே பிற்காலத்தில் அவரை எழுத்தாளராக்கியது. பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார். நாடகங்களிலும் நடித்தார். நூலகங்களுக்குச் சென்று வாசிப்பதும் தொடர்ந்தது. சிறுவயதில் வாசித்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கை வரலாறு இவருள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
காரைக்குடி எஸ்.எம்.எஸ். கலாசாலையில் படித்தபோது, அங்கு சா. கணேசன் தலைமையில் நிகழ்ந்த கம்பராமாயணக் கூட்டங்கள் இவருக்குள் இலக்கிய ஆர்வத்தைத் தோற்றுவித்தன. அங்குள்ள கலாநிலையம் நூலகத்தில் வாசித்த புத்தகங்கள் புதிய உலம் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தன. கே.எம். முன்ஷி, புதுமைப்பித்தன் எனப் பலரது எழுத்துக்கள் இவருக்கு அங்கு பரிச்சயமாயின. நண்பனுடன் இணைந்து 'பாலர் சோலை'என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றையும் சிலகாலம் நடத்தினார். பள்ளிப் படிப்பை முடித்ததும் மதுரைக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படிப்பை நிறைவு செய்தார். அக்காலகட்டத்தில் தமிழின் மீதான ஆர்வம் அதிகரிக்கவே "தமிழ் எழுச்சி மன்றம்" என்ற அமைப்பை நிறுவி நடத்தினார். நாடக ஆர்வத்தால் நண்பர்களுடன் இணைந்து 1953ல் 'இதயத் துடிப்பு' என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தை மேடையேற்றினார். அது ஒரு அரசியல் கிண்டல் நாடகம். தொடர்ந்து மேற்கல்விக்காகச் சென்னை சென்றார். ஒய்.எம்.சி.ஏ. வணிகவியல் பள்ளியில் சேர்ந்து டிப்ளமோ பயின்றார். ஓய்வு நேரத்தில் அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி, தியாசஃபிகல் சொசைட்டி, மாக்ஸ்முல்லர் பவன் போன்ற நூலகங்களில் உறுப்பினராகிப் பரவலாக வாசித்தார்.
சென்னையில் அப்போது நிறைய நாடகங்கள் நடத்தப்பட்டன. பல நாடகங்களுக்கும் சென்று நாடக நுணுக்கங்களைப் பயின்றார். கேரள பீப்பிள் ஆர்ட் சென்டர் நடத்திய நாடகங்கள் இவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டன. யதார்த்த நாடகங்களை எப்படி எழுதுவது என்பதை இவ்வகை நாடகங்கள் மூலம் அறிந்தார். மிகையேதுமில்லாமல் யதார்த்தமாகவே தனது நாடகங்களை எழுத வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சந்திரபாபு உள்பட சிலரது படங்களுக்கு கதை-வசனம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவை வெற்றி அளிக்கவில்லை. நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். நாடகத்திற்கு வசனம் எழுதுவது பற்றிய நுணுக்கங்களை சகஸ்ரநாமம், பி.எஸ். ராமையா, என்.வி. ராஜாமணி, கலாசாகரம் ராஜகோபால் ஆகியோரிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். நாடகப் பயிற்சியை முடித்துவிட்டு சேவா ஸ்டேஜ் குழுமத்திலேயே பணியாற்றத் துவங்கினார்.
சேவா ஸ்டேஜிற்காக இவர் எழுதிய முதல் நாடகமான 'புதிய பாதை' 1961ல் அரங்கேறியது. இதற்கு சி.சு.செல்லப்பா, தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சி., கல்கி ராஜேந்திரன் உள்ளிட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. இரண்டாவது நாடகம் 'தில்லைநாயகம்' பரவலாகப் பேசப்பட்டது. பின்னர், 1971ல் தனது நாடகக் குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவக்கினார். அதன் மூலம் 'சன்னதித் தெரு' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இவரது 'நவாப் நாற்காலி' பரவலாகப் பாராட்டப்பட்டது. பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. இவரது நாடகங்களில் குறிப்பிடத் தகுந்தது 'தண்ணீர் தண்ணீர்'. தண்ணீர்ப் பஞ்சத்தால் கிராமத்து மக்கள் படும் அவதிகளையும், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அவர்களுக்குக் கொடுக்கும் மதிப்பையும், அலைக்கழிப்பையும் முகத்தில் அறைவதுபோல் காட்டியிருந்தார் கோமல். அந்நாடகம் அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அது அகில இந்திய ரீதியில் கோமல் சுவாமிநாதனை அடையாளம் காட்டியது. அவரது அந்நாடகம். 250 முறைக்குமேல் மேடையேறியது. 1981ல் இந்நாடகத்தை கே. பாலசந்தர் திரைப்படமாக எடுத்தார். சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது இப்படத்திற்குக் கிடைத்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தது. ரஷ்யன் உள்ளிட்ட சில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பலராலும் பாராட்டப்படது. பேராசிரியர் எஸ். சங்கர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பி.சி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் இது நாடகமாகவும் நடத்தப்பட்டது.
இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் சில வருடங்கள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க கோமல், தானும் சில படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய முதல் படம் 'அனல்காற்று' என்றாலும் முதலில் வெளிவந்தது 'யுத்த காண்டம்' தான். 'சுவர்க்கபூமி' என்ற தனது நாடகத்தையே 'அனல்காற்று' என்ற திரைப்படமாக்கியிருந்தார் கோமல். யுத்தகாண்டமும் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டதுதான். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. 'சாதிக்கொரு நீதி' (நாடகம்: செக்குமாடுகள்), ஒரு இந்தியக்கனவு போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். 'பெருமாளே சாட்சி' என்ற நாடகம் தமிழில் 'குமார விஜயம்' என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாக வெளிவந்தது. 'ராஜ பரம்பரை' நாடகம், 'பாலூட்டி வளர்த்த கிளி' என்ற பெயரில் படமானது. 'டெல்லி மாமியார்' நாடகம், 'கற்பகம் வந்தாச்சு' என்ற பெயரில் திரைப்படமானது. 'அசோகவனம்', 'இருட்டில தேடாதீங்க', 'நாற்காலி', 'என் வீடு, என் கணவன், என் குழந்தை' போன்றவை தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த இவரது நாடகங்களாகும். |
|
|
தன் குழுவிற்கு மட்டுமல்லாமல் புகழ்பெற்ற வேறு சில குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்திருக்கிறார் கோமல். தன் வாழ்நாளில் மொத்தம் 33 நாடகங்கள் எழுதியிருக்கிறார். 'பெருமாளே சாட்சி', 'ஆட்சி மாற்றம்', 'செக்கு மாடுகள்', 'மந்திரி குமாரி', 'பட்டணம் பறிபோகிறது', 'வாழ்வின் வாசல்', 'கோடு இல்லாக் கோலங்கள்', 'அசோகவனம்', 'நள்ளிரவில் பெற்றோம்', 'இருட்டிலே தேடாதீங்க' போன்ற பல நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தனவாகும். மனோரமா, எம்.என். நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன் போன்றோரது நாடகக் குழுக்களுக்கும் இவர் நாடகங்களை எழுதியிருக்கிறார் நாடக உலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் சாதனை படைத்தவர் கோமல் சுவாமிநாதன். 'தீபம்' இலக்கிய இதழ் இவரை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. திடீரென நா.பா. காலமாகிவிடவே, தீபம் நின்று போனது. அதனை மீண்டும் நடத்த விரும்பினார் கோமல். இந்நிலையில்தான் 'சுபமங்களா' இதழை ஆசிரியராக இருந்து பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு வந்தது. அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். வெகுஜன இதழாக அதுவரை வெளிவந்து கொண்டிருந்த இதழை, இலக்கிய இதழாக மாற்றினார். தமிழில் அனைவருக்கும் போதுவான ஓர் இலக்கிய இதழ் இல்லை என்ற எண்ணம் அன்று தகர்ந்தது. தான் கண்ட கனவுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அதில் நிறைவேற்ற ஆரம்பித்தார். பல இளம் எழுத்தாளர்களை அதில் அறிமுகம் செய்தார். மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின. மொழிபெயர்ப்பிற்கும், கவிதைக்கும் இதழ்தோறும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஈழ எழுத்தாளர்களின் படைப்புகளும் அதில் தொடர்ந்து வெளியாகின. நூல் விமர்சனப் பகுதி முக்கியமானதாக இருந்தது. சுபமங்களா நேர்காணல்கள் பரவலான வாசக கவனத்தைப் பெற்றன. துறை சார்ந்தவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்கள், அனுபவப் பகிர்தல், வெளிப்படையான கருத்துக்கள் கொண்டு அவை அமைந்திருந்தன. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சினிமா வசன ஆசிரியர், நடனத்துறை சார்ந்தவர்கள் என்று பலரது நேர்காணல்களைத் தாங்கி சுபமங்களா இதழ் வெளிவந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டு "கலைஞர் முதல் கலாப்ரியா வரை" என்ற நூலாகவும் வெளியானது. தொண்ணூறுகளில் நவீன இலக்கியத்தை இளைஞர்களிடையே கொண்டு சென்ற பெருமை சுபமங்களாவையே சாரும். "சுபமங்களா வாசகர் வட்டம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இலக்கியக் கூட்டங்களையும், எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தினார் கோமல். தமிழின் முக்கிய இலக்கிய இதழாக சுபமங்களாவை வளர்த்தெடுத்தார். அவர் எழுதிய "பறந்துபோன பக்கங்கள்" பகுதியும், வட இந்தியப் பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தனவாகும். ஆரம்பத்தில் காமராஜ் மற்றும் நேரு மீது பற்றுக் கொண்டிருந்தவர், பின்னாளில் தீவிர இடதுசாரியானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்படப் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றிருக்கிறார். ஆண்டின் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பலமுறை அங்கம் வகித்திருக்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இலக்கிய, நாடக உலக மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உழைத்த கோமல் சுவாமிநாதன், முதுகெலும்புப் புற்றுநோயினால் 1995ம் ஆண்டு காலமானார். அவரது மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த 'சுபமங்களா' இதழ்களை அனைவரும் இலவசமாகப் படிக்கும்படி வலையேற்றி நினைவாஞ்சலி செய்திருக்கிறார் அவர் மகள் தாரிணி. அத்துடன் கோமலின் நாடகங்கள் பலவற்றை மேடையேற்றும் பணியையும் அவர் செய்து வருகிறார். எழுத்து, நாடகம், திரைப்படம், பத்திரிகை என இலக்கியத்தின் பல தளங்களிலும் முக்கிய பங்களிப்புகளைத் தந்த கோமல் சுவாமிநாதன், இலக்கிய உலகம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஓர் ஆசான்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|