சிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம் திருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா பக்தி இலக்கியங்களும் திருவாசகமும் இளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில... இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும் முதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்... இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு! குற்றம் குற்றமே! பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல தமிழிசை மரபை மெல்ல இழந்து... இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா சிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா திருவாசகம் - ஆங்கிலமொழிபெயர்ப்பு
|
|
திருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு |
|
- மணி மு.மணிவண்ணன்|ஆகஸ்டு 2005| |
|
|
|
சிம்·பொனி இசையில் திருவாசகமா, ஏன், எதற்கு என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருக்கையில் இளையராஜாவின் கனவை நனவாக்கச் சென்னைத் தமிழ் மையத்தோடு இணைந்து செயலாற்றத் தொடங்கியவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். இதற்கு ஆகும் செலவுக்குத் திரைத்துறையினரிடம் செல்லக்கூடாது என்பதில் இளையராஜா கண்டிப்பாக இருந்தார். நிறுவனப் புரவலர்களுக்கோ இதில் அக்கறையில்லை. முதலீடு செய்பவர் களோ இதில் போட்ட முதல் வருமோ என்று பயந்தனர். எனவே நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது தமிழ் மையம்.
நிதி திரட்டுவதில் தலைமை தாங்கியவர் வட கரோலைனாவாசி டாக்டர் சங்கர் குமார். நியூ ஜெர்சி ஸ்ரீதர் சீதாராமன், கலி·போர்னியாவின் ஸ்ரீதர் பாலசுப்ர மணியம் ஆகியோருடன் இளையராஜாவின் ரசிகர்கள் மூலமாக இந்தப் புது முயற்சியில் முழு முனைப்புடன் ஈடுபட்டார் சங்கர் குமார். இவர்களுக்குப் பின்னிருந்து ஆலோசனை வழங்கியவர் கனெக்டிகட்டின் சாக்ரடீஸ்.
இசைக் கச்சேரிகள் மூலம் நிதி திரட்டலாம் என்று இவர்களில் சிலர் நினைத்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்துக் கச்சேரிகள் மூலம் திட்டமிட்ட நிதி திரட்டுவது கடினம் என்று நினைத்தார் சங்கர். அமெரிக்காவில் இருக்கும் நூறாயிரம் தமிழர்களில், முப்பதாயிரம் பேர் ஆளுக்கு 5 டாலர் கொடுத்தால் போதுமே என்றார் சங்கர். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு இந்த எண்ணம் பிடித்திருந்தது. "எல்லாம் இறைவன் அருள்" என்று நிதி திரட்டும் முயற்சிக்குப் பச்சைக் கொடி காட்டினார் இசைஞானி.
ஆங்கிலப் பாடல் வரிகளை எழுதவிருந்த ஸ்டீ·பன் ஸ்வார்ட்ஸைப் பார்க்க நியூயார்க்குக்கு இளையராஜா வந்தபோது ஏறத்தாழ $20,000 திரட்டினார்கள். இரண்டு மாதத்துக்குள் ஆங்கிலப் பாடல் வரிகள் கிடைத்தன. தமிழ்ப் பாடல்களுக்கு அமைக்க வேண்டிய இசையை மனத்தில் வைத்திருந்த இசைஞானிக்கு ஆங்கிலப் பாடல்வரிகளும் அமைந்த பின்னர் சிம்·பொனியின் முழுப் பரிமாணமும் புலப்படத் தொடங்கியது.
ஹங்கேரியின் மிஸ்கோல் சிம்·பொனி ஆர்க்கெஸ்ட்ராவிடம் 2004 இல் ஜூலை 10 முதல் 19 வரை இசையமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திரட்டிய நிதியோ செலவுக்குப் போதவில்லை. முதலில் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஒரு திட்டத்தின் மூலம் நிதி திரட்டிய இந்தக் குழு, பின்னர் செலவுக்குக் கடன் வாங்க நேரிட்டது. ஹங்கேரி இசையமைப்பு வரை மட்டும் நிதி திரட்ட உதவியது தமிழ்நாடு அறக்கட்டளை. மேற்கொண்டு செலவுக்குக் கடன் வாங்கி, கடனை அடைக்க நிதி திரட்டுவது அறக்கட்டளைக்குத் தயக்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அப்போதுதான் சங்கர் குமார் "சிம்·பொனியில் திருவாசகம் அமெரிக்க அறக்கட்டளை" (Thiruvasakam in Symphony Foundation USA) என்ற லாப நோக்கற்ற அமைப்பை உருவாக்கினார். இது உடனடியாகக் கிட்டத்தட்ட $10,000 திரட்டியது. ஆனாலும் திட்டமிடாத செலவுகள் தோன்றின.
இளையராஜா நல்ல தரமான ஒலிப்பதிவுக்காக சோனி ஒலிப்பதிவு நிலையம் செல்லவேண்டும் என்று எண்ணினார். முன் கூட்டியே திட்டமிடப்படாததால், செலவு கூடியது. திருவாசகம் சிம்·பொனி அறக்கட்டளை செலவைச் சமாளிக்க மேலும் கடன் வாங்கியது. சிம்·பொனி தொடர்பான இளையராஜாவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள், இந்திய இசையமைப்புச் செலவு போன்றவற்றைச் சென்னையின் தமிழ் மையம் ஏற்றுக் கொண்டது. தமிழ் மையமும் திட்டத்துக்காகக் கடன் வாங்கியது. ஆனால் திருவாசகம் சிம்·பொனி பற்றிய ஆர்வத்திலும் முயற்சியிலும், அமெரிக்கத் தமிழர்களோ, சென்னைத் தமிழ் மையமோ சற்றும் தளரவில்லை.
அமெரிக்காவில் இளையராஜா தங்கும் செலவுகளை ஆனந்த் கோவிந்தன் பார்த்துக் கொண்டார். தமிழ்நாடு அறக்கட்டளையின் பால் பாண்டியன் ஒரு பெருந்தொகையைக் கொடையளித்தார். தமிழ்நாடு அறக்கட்டளை மாணிக்கம், தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) பாபு, சாக்ரடீஸ், ராமசாமி எல்லோரும் முன்னின்று ஆதரவளித்தனர்.
ஸ்டீ·பன் ஸ்வார்ட்ஸின் பாடல், சோனி ஒலிப்பதிவு, ஆங்கிலப் பாடகர்கள், ஹங்கேரி ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் சேர்த்து $120,000 செலவாயிற்று. இதில் கிட்டத்தட்ட $45,000க்கு மேல் 2000 அமெரிக்கத் தமிழர்களிடமிருந்து கொடையாக நிதி திரண்டது. மேலும் அன்பு நண்பர்கள் மனவுவந்து தந்த வட்டியில்லாக்கடன் $70,000 இன்னும் நிலுவையிலிருக்கிறது. வேறு வழியின்றி இசைத்தட்டு விற்பனை மூலமே கடனை அடைக்கும் பொறுப்புடன் தொடர்ந்தார்கள் சங்கர் குமார் குழுவினர். |
|
நவம்பரில் ஒலிப்பதிவு நிறைவு பெற்றது. டிசம்பரில் சுனாமிப் பேரலைகள் தாக்குத லால் மூல இசைத்தட்டுத் திருத்த முயற்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வெளியிட எண்ணியிருந்த போதிலும் ஜூன் இறுதியில் சென்னையில் வெளியீட்டு விழா நடந்தது.
பொருள், நேரம், உழைப்பு என்று இரண்டு பத்து மாதம் சுமந்து பெற்ற இசைத்தட்டாயிற்றே! சங்கர் குமார் என்ன நினைக்கிறார்? தன் தீவிர ரசிகர்களும் எதிர்பார்த்திராத உச்சத்தைத் தொட்டு விட்டார் இசைஞானி என்ற மலைப்பு! டல்லாஸ் தமிழர் திருவிழாவிலும், வாஷிங்டன் திருக்குறள் மாநாட்டிலும் விறுவிறுப்பாக விற்றதல்லவா இந்த இசைத் தட்டு! வெகு குறுகிய காலத்துக்குள் 4000 இசைத்தட்டுகள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. விளம்பரமே இல்லாமல், 2000 குறுந்தட்டுகள் விற்றுவிட்டன.
திருவாசகம் சிம்·பொனிக்கு உதவியவர்கள் யார்? தமிழ், திருவாசகம், இளையராஜாவின் இசை எல்லாமே ஈர்த்தாலும், பெரும்பாலும் இசைஞானியின் ரசிகர்கள் இதை ஆதரித்தனர் என்கிறார் சங்கர். திருவாசகமே தேன் என்றால், பாமரனுக்கும் அந்தத் தேனைத் தன் தேனிசையால் கொண்டு சேர்த்திருக்கிறார் இசைஞானி என்கிறார். இந்தியா வெங்கும் நிலவும் மேற்கத்திய மோகத்தில் ஆழ்ந்திருக்கும் இளைய தலைமுறை, மாலுமி இல்லாத கப்பல் போல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தலைமுறையிடம் தமிழின் பழமை, பெருமை, இசையின் பெருமை, கடவுளின் பொதுமையைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்க்கிறது இந்த முயற்சி. தமிழ் தெரியாத வெளிநாட்டுத் தமிழர், தமிழ் தெரிந்தும் திருவாசகம் தெரியாத தமிழர்கள் இவர்களும் இதனால் ஈர்க்கப்படுவார்கள் என்கிறார்.
ஏன் சிம்·பொனி இசை? பட்டென்று பதில் வருகிறது "புதுமை ஆவலைத்தூண்டும், இல்லையா?"
மேற்கத்திய பாப் மியூசிக் இல்லாமல், மேற்கத்திய மரபிசை ஏன்? "பாப் மியூசிக் திருவாசகத்தைக் கொச்சைப்படுத்தி மலினமாக்கிவிடும். மேற்கத்திய மரபிசையும் இந்திய மரபிசையும் பின்னிப் பிணைவது புதுமையைத் தரும் அதே நேரத்தில் திருவாசகத்தின் மாட்சிமையையும் மதிக்கும்."
யாராவது உங்களிடம் குறை சொல்லியிருக்கிறார்களா? "தீவிரச் சைவ நண்பர் ஒருவர் இது ஓதுவார்கள் மரபிலிருந்து விலகியிருக்கிறது என்று கோபித்துக் கொண்டார். இது ஓதுவார் பாடல்களைக் கேட்காதவர்களுக்கும், இது வரை கேட்டும் கவனமின்றிச் சென்றவர்களுக்கும் திருவாசகத்தையும், தமிழையும் கொண்டு செல்லுகிறது என்று எடுத்துச் சொன்னோம். தருமபுரம் ஆதீனமே பாராட்டியதையும் குறிப்பிட்டோம்." தென்றல் வாசகர்களுக்கு அவர் செய்தி? "நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாக $15 பூச்செண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக திருவாசகம் சிம்·பொனி இசைத்தட்டை வாங்கிக் கொடுங்கள். பொங்கல் பரிசாக, புத்தாண்டுப் பரிசாக, பிறந்தநாள் பரிசாகக் கொடுங்கள். இது வாடாது, என்றும் இசை மணம், தமிழ் மணம் பரப்பும்."
(சிம்·பொனியில் திருவாசகம் பற்றி மேல் விவரங்களுக்கும் இசைத்தட்டு வாங்கவும் www.tis-usa.org என்ற வலைத்தளத்தை அணுகுங்கள்)
மணி மு. மணிவண்ணன் |
|
|
More
சிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம் திருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா பக்தி இலக்கியங்களும் திருவாசகமும் இளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில... இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும் முதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்... இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு! குற்றம் குற்றமே! பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல தமிழிசை மரபை மெல்ல இழந்து... இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா சிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா திருவாசகம் - ஆங்கிலமொழிபெயர்ப்பு
|
|
|
|
|
|
|