|
|
|
கவிஞராக அறிமுகமாகி, சிறுகதையாளராக வளர்ந்து, கட்டுரைகள் எழுதி, நாவலாசிரியாக முத்திரை பதித்தவர் சூர்யகாந்தன். இவர் கோவையைச் சேர்ந்த ராமசெட்டிபாளையத்தில், ஜுலை 17, 1955 அன்று மாரப்ப கவுண்டர் - சின்னம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். இயற்பெயர் மருதாசலம். விவசாயக் குடும்பம். கிராமத்தில் துவக்கக் கல்வி கற்றார். உயர்கல்வியை பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் பயின்றார். அப்பள்ளிச் சூழல் தமிழின் மீதான ஆர்வத்திற்குக் காரணமானது. கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பயின்றார். அதன் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்திய தீபம், தாமரை, வானம்பாடி போன்ற இதழ்கள் இவரது தமிழார்வத்தை வளர்த்தன. கவிதைகளின் மீது ஈர்ப்பு உண்டானது. பாரதி, பாரதிதாசன் கவிதைகள் இவருள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. இவர் எழுதிய 'கனல் மணக்கும் பூக்கள்' என்ற கவிதை, 1973 அக்டோபரில் 'மனிதன்' இதழில் வெளியானது. கோவை பெருமாநல்லூர் பகுதியில் நிகழ்ந்த விவசாயப் போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவாக அந்தக் கவிதையை அவர் எழுதியிருந்தார். அது பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து தீவிரமாகக் கவிதையெழுத ஆரம்பித்தார்.
வாழ்க்கையில் கசப்புக்களை இதயம் முட்டக் குடிக்கிறோம்; இதயம் முட்டக் குடிப்பதால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்; தலைநிமிர்ந்து நிற்கும் நம் தேக்குமரத் தேகங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கிற நாள் வரும்
இது சூர்யகாந்தனின் தன்னம்பிக்கைக் கவிதை.
தொடர்ந்து தாமரை, வானம்பாடி, தீபம், நீலக்குயில், மகாநதி, சிவந்த சிந்தனை, புதிய பொன்னி, மலர்ச்சி, வேள்வி போன்ற இதழ்களில் கவிதைகள் வெளியாகி இவருக்குப் புகழ்சேர்த்தன. 'வானம்பாடி'க் கவிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவரானார். கவிஞர் மு. மேத்தாவின் ஊக்குவிப்பில் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு 'சிவப்புநிலா' என்ற நூலாக வெளியானது.
வாழ்க்கை அனுபவங்களும், சகமனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், துயரங்களும் இவரை எழுதத் தூண்டின. சிறுகதையின்மீது கவனம் சென்றது. முதல் சிறுகதை 'தண்டிக்கப்படாத குற்றவாளிகள்' 1974ல், 'தாமரை'யில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகளும் கவிதைகளும் நிறைய எழுதினார். இளங்கலைப் படிப்பை முடித்தவுடன் 'தாய்' வார இதழின் ஆசிரியர் குழுவில் சிலகாலம் பணியாற்றினார். கவிதை, சிறுகதை, பேட்டிக் கட்டுரை எனப் பல படைப்புகளைத் தந்து தனது எழுத்துத் திறனைக் கூராக்கிக் கொண்டார். 'சூர்யகாந்தன்' என்ற பெயர் பிரபலமாக அவ்விதழ் காரணமானது. சில ஆண்டுகளுக்குப் பின் பணிவிலகி மேற்கல்வியைத் தொடர்ந்தார். முதுகலை பயின்றபின் கவிதைகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு 'ஆய்வியல் நிறைஞர்' (எம்.ஃபில்) பட்டம் பெற்றார். பின்னர் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே "தற்கால இலக்கியத்தில் நாவல்கள்" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
கிடைத்த ஓய்வுநேரத்தில் தொடர்ந்து சிறுகதை நாவல் என எழுதினார். அமுதசுரபி, குங்குமம், கல்கி, சுபமங்களா, புதிய பார்வை, தினமணி எனப் பல இதழ்கள் இவரது எழுத்துக்களை வெளியிட்டன. 'சிவப்புநிலா', 'இவர்கள் காத்திருக்கிறார்கள்', 'வீரவம்சம்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'இனி பொறுப்பதில்லை', 'தோட்டத்தில் ஒரு வீடு', 'விடுதலைக் கிளிகள்', 'உறவுச் சிறகுகள்', 'பால்மனது', 'மண்ணின் மடியில்', 'வேட்கை', 'ரத்தப்பொழுதுகள்', 'முத்துக்கள் பத்து', 'பயணங்கள்' போன்றவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புக்கள். 'அம்மன் பூவோடு', 'பூர்வீக பூமி', 'கிழக்குவானம்', 'கல்வாழை', 'அழியாச்சுவடு', 'எதிரெதிர் கோணங்கள்', 'ஒரு வயல்வெளியின் கதை', 'மானாவாரி மனிதர்கள்', 'முள்மலர்வேலி', 'பிரதிபிம்பங்கள்' போன்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. கட்டுரை நூல்களில் 'கோவை மாவட்டக் கோவில்கள்', 'விருட்சமும் விழுதும்', 'திரைவானில் இலக்கிய முத்திரைகள்', 'மனங்களை வருடும் மயிலிறகு' போன்றவை முக்கியமானவை. |
|
|
இவரது 'மானாவாரி மனிதர்கள்', 'Men of the Red soil' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 'பூர்வீக பூமி', 'Parents Land' என்பதாக வெளியாகியுள்ளது. மானாவாரி மனிதர்களும், சில சிறுகதைகளும் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சூரியகாந்தனின் படைப்பிலக்கியம் குறித்த திறனாய்வுக் கட்டுரைகளை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. மூன்று கவிதைத் தொகுதிகள், ஆறு கட்டுரைத் தொகுதிகள், பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், பத்துக்கும் மேற்பட்ட சமூகநாவல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக இவை வைக்கப்பட்டுள்ளன. கோவை 'ரெயின்போ' பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். எம்.ஃபில், முனைவர் பட்ட ஆய்வுகளுக்காக அதிகம் ஆய்வு செய்யப்பட்டவை இவரது நாவல்கள். நாட்டுப்புறப் பாடல்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது படைப்புகளில் அவற்றைப் பெரிதும் கையாண்டுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்த படைப்புகளை முன்வைத்து, 'செம்மண் இலக்கியம்' என்ற வகைமையை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் என்பது இவரைப்பற்றிய விமர்சகர்களின் மதிப்பீடாகும்.
உணர்வின் உயிர்ப்போடு மண்ணின் மணமும், சொல்லின் வீரியமும் கொண்டு எழுதி வருபவராகச் சூர்யகாந்தனைச் சொல்லலாம். காய்ந்துபோன கண்மாய்கள், வறண்ட வயல்கள், மழை பொய்த்ததால் வாழ்க்கை பொய்த்துக் கடனாளியான விவசாயக் குடும்பங்கள் என்று நகரமயமாக்கச் சூழலால் அவலவாழ்க்கை வாழும் எளிய மனிதர்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தன் படைப்புகளில். விவசாயத்தை நம்பி வாழும் எளிய மக்களின் வாழ்க்கை நகரத்தின் புதிய நாகரிக வளர்ச்சிகளால் எந்த விதத்தில் பாதிப்பைச் சந்திக்கிறது, எப்படி இழப்பு உண்டாகிறது என்பதை பிரச்சாரத் தொனி இல்லாமல் பேசுகிறார். 'பேராசிரியர்' சூர்யகாந்தனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், சாதாரண மானுடனாக, விவசாயியாக, இயல்பாகக் காட்சிப்படுத்துவது இவரது எழுத்தின் பலம். கதர்வேட்டியய்யன், காளப்பட்டியய்யன், குப்பனூரய்யன், வேல்லய்யன் என அய்யன்களாகவும், வேம்பன்களாகவும், ராயன்களாகவும், அம்மாக்களாகவும் தனது பாத்திரங்களை உலவ விடுகிறார்.
"மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர், படைப்பாளியாக அமைந்துவிட்டால், அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை! மொழிக்குக் கிடைத்த பரிசு! இலக்கியத்திற்குக் கிடைத்த பேறு! அப்படிப்பட்டவராக இருக்கிறார் சூர்யகாந்தன்" என்று இவரைப் பாராட்டுகிறார் புவியரசு. "நான் அனுபவித்ததும், என்னைச் சார்ந்தவர்கள் அனுபவித்தவைகளும், சகமனிதர்களுக்கு நேர்ந்தவைகளும், சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளும் எல்லாம் சேர்ந்தே என் படைப்பில் பரிமளிக்கின்றன" என்கிறார் சூர்யகாந்தன்.
இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவை கொடுத்த விருதுகள் தவிர, அகிலன் நினைவு விருது, லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது, பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்ச்சான்றோர் விருது, உடுமலை இலக்கியப் பேரவை விருது, சேலம் தமிழ்ச்சங்க விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார் சூர்யகாந்தன்.
கொங்கு வட்டாரத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைக் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பதிவுசெய்து வரும் சூர்யகாந்தன், கோவைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமசெட்டி பாளையத்தில் வசித்து வருகிறார்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|