நவம்பர் 19, 2017 அன்று உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி, இடைமேற்குத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து அரோரா, இல்லினாய்சு மாநகரத்தின் Hesed House இல்லத்தில் வறியோர்க்கு உணவு வழங்கின. இவ்வாண்டின் 6வது நிகழ்வான இது, நன்றி நவிலல் நாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலான தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் நேகல், சிரீயா, சாமா, பவ்யா, வானவன், ஏரகன், சுபாசு, விக்ரம் அவர்தம் பெற்றோர்கள் கார்த்திகா, பிரியா, நித்தியா, திவ்யா, மைதிலி, கந்தகுமார், பாலா, வெங்கடேசு ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுச் செயலாற்றினர். இவ்வாண்டின் கடைசியில் அமைந்த சிறப்பான நாளென்பதைப் பொருட்படுத்தாது தமது நேரத்தை இந்த புனிதப் பணிக்குச் செலவிட்ட ஆர்வலர்களை அமைப்புக்கள் பாராட்டின. திருக்குறளின் சொல்வன்மை, இடுக்கண்ணழியாமை, ஊக்கமுடைமை, மடியின்மை ஆகிய அதிகாரங்களின் விளக்கமும், 'தமிழர் நன்றிகூறும் நாளான நவம்பர் 27' விவரமும், தமிழ் மண்ணின் பெருமை கூறிச்சென்ற வெளிநாட்டறிஞர்களின் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பும் அளிக்கப்பட்டது.
விருந்தை ரசித்த 150க்கும் மேற்பட்ட வறியோர், சேவை செய்த மாணக்கர் மற்றும் பெற்றோரை வாழ்த்தினர். |