எம்.ஜி. சுரேஷ் ஆர். கோவர்த்தனம்
|
|
மேலாண்மை பொன்னுச்சாமி |
|
- |நவம்பர் 2017| |
|
|
|
|
முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி (67) காலமானார். இவர், விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் செல்லச்சாமி - அன்னபாக்கியம் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். ஏழை விவசாயக் குடும்பம். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தந்தையை இழந்தார். கல்வி தடைப்பட்டது. தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சில வருடங்களில் தாயையும் இழந்தார். சகோதரருடன் இணைந்து ஒரு சிறு மளிகைக்கடை நடத்திவந்தார். படிக்க இயலாத ஏக்கத்தில் பத்திரிகைகளை வாசித்தும், கிடைத்த நூல்களைப் படித்தும் தன் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ஜெயகாந்தனின் யுகசந்தி இவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்க்சிய நெறியில் ஈடுபாடு ஏற்பட்டது.
தன்னைப் பாதித்த சம்பவங்களை, வாழ்வியல் அனுபவங்களைச் சிறு சிறு கதைகளாக எழுத ஆரம்பித்தார். முதல் சிறுகதை 1972ல் செம்மலரில் வெளியானது. இவரது எழுத்துப் பயணம் தீவிரமானது. 'மானுடம் வெல்லும்' என்ற தொகுப்பை இவரே 1981ல் வெளியிட்டார். அது இவருக்குப் பரவலான அறிமுகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல இதழ்களில் எழுதினார். கிராமத்து வாழ்க்கையை உயிர்ப்போடு சித்திரிப்பதில் இவர் தேர்ந்தவர். செம்மலர் மாத இதழின் துணையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 'தீக்கதிர்' இதழிலும் பணிபுரிந்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். அதன் மாநிலப் பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறார். |
|
சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை என்று இதுவரை கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். இவரது 'மின்சாரப் பூ' என்ற சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாதமி பரிசு வென்றது. லில்லி தேவசிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, அனாந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது, பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது, தமிழக அரசின் சிறப்பு விருது, ஃபெட்னா வழங்கிய மாட்சிமைப் பரிசு உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் பல்கலைகள், கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இவரது படைப்புகளை ஆராய்ந்து எம்.ஃபில், பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளனர்.
இவரது மனைவி பொன்னுத்தாய்; வைகறைச்செல்வி, தென்றல், வெண்மணிச் செல்வன் ஆகியோர் குழந்தைகள். (மேலும் வாசிக்க) |
|
|
More
எம்.ஜி. சுரேஷ் ஆர். கோவர்த்தனம்
|
|
|
|
|
|
|