உலக அழகி
|
|
குற்றம் புரிந்தவன் வாழ்…. |
|
- கோகிரா|நவம்பர் 2017| |
|
|
|
|
"இங்க யாருப்பா பாடியை பார்த்தது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார். திருவான்மியூர் எம்ஆர்டிஎஸ்ஸில் நள்ளிரவு சொற்ப கூட்டம். "நான்தாங்க" நியூஸ் ஸ்டாலில் இருந்த இளைஞன் வெளிவந்தான்.
"நீ திருவான்மியூர் ரயில்வே போலீசை இல்ல கூப்பிட்டிருக்கணும்?" சப் இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன் கேட்டார். "கால் போட்டேன். யாரும் எடுக்கல." "அதுக்காக நேரா கமிஷனருக்கு கால் போடுவியா? படிச்சவன்தானே நீ. நெட்டுல எல்லாரோட நம்பரையும் போட்டது தப்பா போச்சு." "நான் இல்லை. வேற யாராவது இருக்கும்"
"உயிரை வாங்கறதுக்குன்னே இருக்கானுங்க." நள்ளிரவு வேலையினால் எரிச்சலின் உச்சத்தில் நகர்ந்து சென்று செல் பேசினார். "சார் நான் எஸ்.ஐ. ஜவஹர் பேசுறேன்... இல்ல திருவான்மியூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து. என்ன பண்ணறது சார். எவனோ ஒருத்தன் கமிஷனருக்கு பேசிட்டு @#$!ரே போச்சுன்னு போயிட்டான். பிக் பாஸ் பார்த்திட்டு இருந்தேன். ராத்திரி பூரா ஃபோன் மேல ஃபோன் சார்… ஒண்ணுக்கு ரெண்டுக்குகூட போக முடியல. ஏதோ பெரிய இடம்போல இருக்கு சார். நீங்க எப்ப வருவீங்க? அப்பிடியா சீக்கிரம் வாங்க. வாட்சப்பு ப்ரெஸ்னு போயிடப்போவுது. நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் கொலைக்கு அப்புறம் ரொம்ப ப்ரெஷர் சார்" செல் ஆஃப் செய்தபோது மணி 3:45AM என்று காட்டியது.
15 நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் யுண்டாய் காரில் வந்து இறங்கினார். இளமைத் துடிப்புடன் மாடிப் படிகளை இரண்டு இரண்டாக ஏறி வந்து ஜவஹரிடம் மூச்சிரைப்பின்றி "எங்க?" என்றார்.
நியூஸ் ஸ்டால்களைக் கடந்து வெளிச்சம் குறைவான இடத்தில் பெண் சடலம். கை இல்லா டி சர்ட், கிழிந்த ஜீன்ஸ், ஆண் சிகை அலங்காரத்துடன் மேல்குடியாக இருந்தாள். அருகில் போனால் அவள் போட்டிருந்த டியோ இன்னும் மணத்தது. காதில் கழுத்தில் நகை இல்லை. அணியமாட்டாளா இல்லை திருட்டா. மார்பில், கையில், முதுகில் தாராளமாக பச்சை குத்திருந்தாள். கழுத்தில் மாலையாய் ஐடி கார்டு.
தொல்காப்பியன் செல்லை எடுத்துப் படம் பிடித்தார்.
"ஜவஹர். பாடில இருந்து பிலாங்கிங்ஸ் பேக் பண்ணிடுங்க. பாடி மார்க் பண்ணிட்டு, டேப் போட்டு ஏரியாவை செக்யூர் பண்ணுங்க."
"இந்திரா நகர் ஸ்டேஷன்ல இன்னொரு பாடி இருக்குன்னு கால் வருது சார்." மாடிப்படி வளைவின் சந்தின் கீழே ஜவஹர் கை காண்பித்தார்.
15 நிமிடப் பயணத்தில் இந்திரா நகர் வந்தனர்.
ஓர் இளைஞன் உயிர் நீத்திருந்தான். கட்டம்போட்ட சட்டை, லெதர் பெல்ட், பேண்ட், செருப்புடன் ஆண்சடலம். கழுத்தில் அதே கம்பெனியின் ஐடி கார்டு. "இரண்டு பேரோட ஐ.டி கார்ட்ஸ் கொடுங்க," தொல்காப்பியன் சோதித்தார். ரத்தினம் ராஜா தீப்ஷிதா பண்டாரி
"நீங்க ரத்தினத்துக்கு என்ன முறை?" தொல்காப்பியன் எதிரிலிருந்த பெண்ணிடம் கேட்டார்
"அண்ணி"
"உங்க பேரு?"
"தங்கம்" விசும்பினாள்
"அண்ணன் பேரு?"
"நான் ஒரே பொண்ணுங்க. அண்ணன் கிடையாது "
"அட. ரத்தினத்தோட அண்ணன், உங்க புருஷன், பேரு என்ன?" "மாணிக்கம். துபாயில வேலைங்க. ஒரே மவன். எட்டாப்பு படிக்குது." "டீ குடிங்க. வேற யாராவது கூடப் பிறந்தவங்க?. அதாவது ரத்தினத்தோட பிறந்தவங்க?" "இன்னொரு அண்ணன். மயூரவண்ணன். சித்த வைத்தியர். நானும் வூட்டுக்காரரும் ஜாதிவிட்டு கல்யாணம் கட்டினோம். எங்ககூட பேச்சு வார்த்தை இல்லைங்க" டீ கோப்பையை கையால் சுழற்றி ஊதிக் குடித்தாள்.
"மயூரவண்ணன் எங்க இருக்கார்?"
"ராயபுரம். இப்படி கொன்னுட்டாங்களே. அந்த நாயிக்கு நல்ல சாவே வராது." "யாரை சொல்றீங்க?"
"அந்த பொண்ணோட அப்பன். எங்க வூட்டுப் பையன் உசிரையே வெச்சிருந்தான்."
"நீங்க அந்தப் பொண்ண பாத்திருக்கீங்களா?"
"இல்லை. தம்பி தெனமும் கீதா கீதான்னு அவ பேரையே சொல்லிக்கிட்டு திரிவான்." "அவங்க பேரு கீதாவா?"
சற்றே திணறிப்போன தங்கம் "அப்படிதான் நினைக்கிறேன். இந்திக்காரங்க பேரு யாருக்கு வாயில வருது?"
***** |
|
அன்று மாலை வந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் காஸ் ஆப் டெத் பகுதியை தொல்காப்பியன் பார்த்தார்: Rathinam Raja: Fentanyl measured excessive of 20.2 mg/ml. In addition, 6-monacetylmorphine has been found in the body.
Deepshita Bhandari: Asphyxia caused by constriction of neck possibly due to strangulation. No evidence of poison ingestion revealed during viscera examination. "போதை யுவன். பேதை யுவதி." அவசர கவிதை முயற்சியைக் கைவிட்டு செல் பேசினார்.
"மே ஐ? இட் ஈஸ் ரியலி ஹாட் இன் ஹியர்" எனக் கோட்டை கழட்டினார் துருவ் பண்டாரி. மகள் மரணித்த சோகத்தை வெளிக்காட்டவில்லை. "ஷுர். கொடுங்க" தொல்காப்பியன் கை நீட்டினார். கோட்டின் உள்பாகம் நாற்காலியில் மாட்டியபோது BRIONI என்ற அதன் பெயர் வந்தவன் சாதாரணன் இல்லை என்றது. "அவள் மிக்க தன்னம்பிக்கை கொண்டவள். அவள் யாரை விரும்பினாலும் நான் எதிர்க்க மாட்டேன் என்று அவளுக்கு நன்கு தெரியும்."
"உங்களுடன் கடைசியாக எப்பொழுது பேசினார்?"
"சென்ற வாரம் புதன் இரவு. நான் பிரசல்ஸில் இருந்தேன். தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்துவிட்டேன் என்றும் நேரில் விவரங்களைச் சொல்வதாகவும் சொன்னாள்."
"டிரக்ஸ்?"
"எனக்குத் தெரிந்து இல்லை."
"அவருடைய அம்மா?"
"வி ஆர் டிவோர்ஸ்ட். அவள் லண்டனில் வசிக்கிறாள் இரண்டாம் கணவனுடன்."
"அவரும் உங்கள் மகளும் அன்னியோன்யம் ஆனவர்களா?"
"அன்னையர் தினத்தன்று பேச்சோடு சரி." "உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உண்டா?" தொல்காப்பியன் வினவினார். "வெல். ஐ அம் எ ஸெல்ஃப் மேட் பில்லியனர். தொழில் எதிரிகள் உண்டு. கொலைவரை போவது சந்தேகமே."
"உங்களுடன் பணிபுரிபவர்கள் யாரவது?"
"வாய்ப்பு மிகவும் குறைவு. அவள் எங்கள் அலுவலத்துக்கு வந்ததே இல்லை. சுய சம்பாத்தியத்தில்தான் வாழ்க்கை. சுற்றம் உற்றார் இல்லாச் சென்னையில் ஸ்டீல் தொழிற்சாலையில் எச்ஆர் துறையில் பணி தொடங்கினாள். யாரிடமும் என் மகள் என்று சொன்னதில்லை." "எப்போது சென்னை வந்தார்?"
"மூன்று வருடங்களுக்கு முன்பு. கொலை செய்யப்படும் வரை இங்குதான் வாசம்."
*****
ராயபுரம் அண்ணா பூங்காவை கடந்து, எண்ணூர் நெடுஞ்சாலை டெர்மினஸ் ரோடு பிரிந்து மரியதாஸ் தெருவில் இருந்தது மயூரவண்ணனின் வைத்தியசாலை. வைத்தியசாலையை விட மூத்திரசாலை என்பது பொருந்தும். கீழே மூலம், பௌத்திரம் ஆண்மை குறைவு அறிவிப்புப் பலகைகள். குறுகிய மாடிப்படிகளில் ஏறினால், மூன்று பெஞ்சுகளில் இரண்டு பேர் காத்திருந்தினர்.
தொல்காப்பியனை "சார். என்ன பிரச்சினை?" என ஒரு பெண்மணி வினவினார். எத்தனை பேர் ஆண்மைக் குறைவை இந்த பெண்மணியிடம் விவரிப்பார்கள் என யோசித்தார்.
"டாக்டரை பார்க்கணும், ஒரு கேஸ் சம்பந்தமா."
உள்ளே சென்று திரும்பியவள் "வெயிட் பண்ணுங்க. கூப்பிடுவார்" என்றாள்.
15 நிமிடங்கள் கழித்து அனுமதி வந்தது.
"உங்களுக்கும் உங்க தம்பி மாணிக்கத்துக்கும் என்ன பிரச்சனை?"
"ஒரு பிரச்னையும் இல்லை. எல்லாப் பிரச்சனையும் அவன் பெண்டாட்டினாலதான்."
"ஏன்."
"வேற ஜாதியா இருந்தாலும் என் சொந்தப் பொண்ணுமாதிரி பார்த்துக்கிட்டேன். ஒருநாள் காலமான என் மனைவி நகைகளைக் களவாடினதைப் பார்த்தேன். ஏம்மா இப்படி பண்ணினேன்னு கேட்டதுக்கு நான் அவ கையைப் பிடிச்சு இழுத்தேன்னு ஊரைக் கூட்டிட்டா."
"ரத்தினம்?"
"அவன் எங்க அப்பாவோட இரண்டாவது மனைவி பையன். புதுக்கோட்டையில இருக்காங்க. இங்க வேலை செய்யிறான்னு கேள்விப்பட்டேன். எங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் தொடர்பே கிடையாது."
"தங்கத்துக்கு?"
"யாருக்குத் தெரியும்? அவளைப் பத்தி பேசாதீங்க. காசுக்கு எதுவும் செய்வா"
*****
மளிகைக் கடையில் சாமான்களை வாங்கிவந்த தங்கத்திடம் தொல்காப்பியன் "எங்ககூட வாங்க. ஒரு சின்ன என்குயரிக்கு" என்றார்.
"இன்னும் என்னங்க வேணும். அதான் எல்லாம் சொல்லியாச்சில்லே."
"பொண்ணோட அப்பா கொலை செஞ்சாருன்னு சொல்றதுக்கு எவ்வளவு கொடுத்தாங்க?"
"என்னங்க அநியாயமா பழிபோடறீங்க" அழத் தொடங்கினாள்
"தங்கம் இவங்களை பார்த்திருக்கீங்களா?"
"இல்லை"
"இவங்க பேரு சௌடேஸ்வரி. என்கூட வேலை செய்யிறாங்க"
"அதுக்கு..."
"இவங்க செவுள்ள ஒரு அறை வுட்டா அஞ்சு நாளைக்கு சோறு இறங்காது."
"யார் கொடுத்தாங்க? எவ்வளவு கொடுத்தாங்க? என்ன சொன்னாங்க?"
*****
மெரினா பீச், வாலாஜா சாலையைத் தவிர்த்து பாரதி ரோடு வழியாகக் கேனல் ரோடு வந்து விக்டோரியா ஹாஸ்டலில் பார்க் செய்தார் தொல்காப்பியன். குறைந்த ஓவர் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சப்தம் எங்கும். பல டிரைவர்கள் போனில் ஸ்கோர் பார்த்துக்கொண்டு விவாதித்துக்கொண்டு இருந்தனர். கருநீல வண்ண ஆடி காரின் அருகே தொல்காப்பியன் அமர்ந்தார். இரண்டு மணிநேரம். ஆட்டம் முடிந்தது. கார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. ஆறடி உயரத்தில் நீள முடியுடன் ஒரு காதில் தோடு காற்றில் கார் சாவியை எறிந்து பிடித்தபடி நடந்து வந்தான். ரிமோட்டை அழுத்தினான். கார் கண் சிமிட்டி திறந்தது. அமரும் முன் "கல்யாண்?" "எஸ்."
"நான் திருவான்மியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன்"
கேள்வியில்லை. மறுப்பில்லை. ஆச்சர்யம் இல்லை. உடனே சரணடைந்தான்.
"கல்யாண் வாட் டூ யு டூ"
"பாரத் ஸ்டீல் லிமிட்டட்ல. சீப் ஸ்ட்ரேடெஜிஸ்ட்."
"அப்படின்னா?"
"புரியறது கஷ்டம்."
"பரவாயில்லை சொல்லுங்க"
"நான்தான் என்ன ப்ரொடக்ட் பண்ணணும், என்ன விலை, எவ்வளவு யூனிட், எவ்வளவு பேரை வேலைக்கு வைக்கணும், எல்லாத்தையும் முடிவு செய்வேன். நான் சொல்றதை எங்க சேர்மன் ராகவ் நாராயணன் செய்வார்." "தீப்ஷிதா?"
"ஹெச்.ஆர்ல வேலை செஞ்சா. ஐ ஹேட் ஃபீலிங்ஸ் ஃபார் ஹெர். பட் அவளுக்கு ஒரு இல்லிடரேட் பையனோட லவ். தாங்கமுடியல."
விசாரணை முடிந்தபின் தரமணி ஏஸீபீ தனசெல்வனுக்கு செல் அடித்தார்.
"உடனே கன்ஃபெஸ் பண்ணிட்டான் சார். ஆள் வெச்ச்சு அந்தப் பெண்ணையும் அவ லவ்வரையும் முடிச்சிருக்கான். இல்லை சார் அந்தப் பையனுக்குத்தான் டிரக்ஸ் பழக்கம் இருந்திருக்கு. அவனை பெயில்ல எடுக்கிறதுக்கு ஒரு கருப்பு கோட் ஆர்மி வந்திருக்கு. சம்திங் இஸ் ராங்." ஐந்து நிமிடம் கழித்து ஏஸிபி கால் பேசி "இதுக்கு மேல என்கொயரி பண்ணாதே" என்றார். எச்சரித்தார். கட்டளையிட்டார்
தொல்காப்பியன் சென்ற பின்பு ஒரு கருப்பு கோட் செல்லை கல்யாணிடம் குடுத்து "இந்தாங்க ராகவன் சார் பேசறார்" என்றது.
"ஓகே. கொஞ்சம் ப்ரைவேட்டா பேசணும்" கருப்பு கோட் விலகியது.
"கல்யாண். ஆர் யு ஓகே?"
"யா"
"கிரேட். ஐ ஓ யு பிக் டைம். எல்லா அரேஞ்ச்மெண்ட்டும் பண்ணிட்டேன்."
"தேங்க் யூ. நந்தினிக்கு சொல்லியாச்சா?"
"ஷி ஈஸ் இன் ஏ க்ரூஸ் வித் ஹர் மாம். இன்னும் சொல்லலை. கல்யாண் ஐ காண்ட் ஸ்டேண்ட் மை டாட்டர் ஸ்லீப்பிங் வித் எ கேர்ள்." "ஐ அண்டர்ஸ்டாண்ட் ராகவ்."
"பை த வே, யாரு அந்தப் பையன், அவளோட போனவன்?" "பார்த்தீங்களா. என்மேல உங்களுக்கு சந்தேகம். அவன் ஒரு மெத் சப்ளையர். ஐ வில் நாட் சீட் ஆன் யூ."
"லெட் அஸ் செலிபரேட் இன் அரூபா. ஜஸ்ட் த டூ ஆஃப் அஸ். சரியா?"
"நைஸ்."
"ஐ லவ் யு ஸ்வீட்டி "
"மீ டூ."
கோகிரா, ராபின்ஸ்வில், நியூ ஜெர்சி |
|
|
More
உலக அழகி
|
|
|
|
|
|
|