|
|
|
மதுரை தமிழ் இலக்கிய வரலாறுகளில் இடம் பெற்றிருக்கும் மிகப் பழமையான நகரம். இங்கிருந்து உலகை ஆட்சி செய்கிறாள் அன்னை மீனாட்சி. இறைவன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோமசுந்தரர், கல்யாண சுந்தரர், ஷண்பக சுந்தரர், ஆட்டவை சேவகன், சொக்கலிங்கம், அடியார்க்கு நல்லான், இறையனார், பேரளாவாயர் எனப் பல பெயர்களில் போற்றப்படுகிறான். அன்னை மீனாட்சி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அங்கயற்கண்ணி, சுந்தரவல்லி, மாணிக்கவல்லி, அரசி, பாண்டிப் பிராட்டி, அபிஷேகவல்லி என்ற திருநாமங்களால் அறியப்படுகிறாள்.
பொற்றாமரைக் குளமும், வைகை நதியும் இத்தலத்தின் மிக முக்கியப் புண்ணிய நதிகளாகும். "மந்திரமாவது நீறு" என்னும் நோய்நீங்கு பதிகம் இங்கு பாடப்பெற்றதுதான். மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் பலவாறாக அன்னையைப் புகழ்ந்துள்ளார். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் அன்னை மீனாட்சியைப் புகழ்ந்து பாடல்கள் பாடியுள்ளார். இங்குள்ள பொற்றாமரைக் குளத்தைத் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நந்தியெம்பெருமான் சிவனின் சூலாயுதத்தால் பூமியைத் தட்டி உருவாக்கினார் என்கிறது தலவரலாறு. இக்குளத்தில் தங்கத்தாமரை மலர்ந்ததாகவும் அதனை தேவேந்திரன் எடுத்துச்சென்று பூஜித்து தனது உடலில் சாபத்தால் ஏற்பட்ட வடுவைப் போக்கிக் கொண்டான் என்றும் ஆலய வரலாறு கூறுகிறது. இறைவன் தன் கையை வைத்து உண்டாக்கிய நதிதான் 'வைகை' நதி.
பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவரும் பொன்னம்பலமாகிய சிதம்பரத் தலத்தில் இறைவனின் திருநடனத்தைக் கண்ட பின்னரே உணவுண்பது வழக்கம். மீனாட்சி - சொக்கநாதர் திருமணத்திற்கு வருகை தந்திருந்த அவர்களுக்கு தரிசனம் தரும் பொருட்டு, இறைவன் வெள்ளியம்பலம் ஏற்படுத்தி ஆனந்தத் திருநடனம் புரிந்தார். அதுகண்டு மகிழ்ந்த அவர்கள் அதன் பின்னரே உணவுண்ணச் சென்றனர். அந்த வகையில் இங்குள்ள வெள்ளியம்பலம் சிறப்புப் பொருந்திய ஒன்றாகும். |
|
|
இத்தலத்தில் இறைவன் ஆடிய 64 திருவிளையாடல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கன. இவ்வாலயம் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் இதன்மீது மிகுந்த அக்கறை செலுத்திப் பராமரித்தனர். இக்கோயில் ஐந்து நுழைவாயில்களுடன் 847 அடி நீளமும், 792 அடி அகலமும் கொண்டு வடக்கு தெற்காக அமைந்துள்ளது. உயர்ந்த மதில் சுவர்கள், நான்கு திசைகளிலும் கோபுரங்கள் மீனாட்சி ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அழகழகான சிற்ப வேலைப்பாடு மிக்க தூண்கள், பழமையான ஓவியங்கள் கொண்ட மண்டபங்கள், 12 கோபுரங்கள் என யாவும் கண்களைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. அஷ்டசக்தி மண்டபம், 110 தூண்களுடன் கூடிய மீனாட்சி நாயக்கர் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம் போன்றவை குறிப்பிடத்தக்கன. வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் தங்கவிக்ரக ஊஞ்சல் விழா மிகவும் சிறப்பானது. கிளிக்கூண்டு மண்டபத்தில் உள்ள கிளிகள் அன்னை மீனாட்சியின் பெயரை திரும்பத் திரும்ப உச்சரித்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.
சுந்தரர் சன்னதி கிளிக்கூண்டு மண்டபத்தின் வடக்கே அமைந்துள்ளது. வழியில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னதியைக் காணலாம். மீனாட்சி கோயில் அருகே குளம் தோண்டுகையில் கிடைத்த விநாயகரே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். ஆயிரங்கால் மண்டபத்துத் தூண்களிலும், அருங்காட்சியகத்திலும் 1200 வருடங்களுக்கு முற்பட்ட பழைய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பல பழைய புகைப்படங்களையும் இங்கே காணமுடிகிறது. கோயிலில் சிறியதும், பெரியதுமாகப் பல மண்டபங்கள் உள்ளன. மண்டபத்தின் வெளியில் உள்ள கல் தூண்களைத் தட்டினால் இசையொலி கேட்பது ஓர் அதிசயம். தெற்குப்புறமுள்ள கல்யாண மண்டபத்தில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. புதுமண்டபத் தூண்களில் மீனாட்சி கல்யாணம், நாயக்க மன்னர்கள், மனைவியரின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
51 சக்தி பீடங்களில் மதுரை ராஜ மாதங்கி பீடமாகும். அன்னை மீனாட்சி முழுக்க முழுக்க மரகதக் கல்லினால் ஆனவள். தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில் முதலில் தோன்றியது இவ்வாலயம் தான். சுந்தரேஸ்வரர் சன்னிதி விமானம் இந்திரனால் அமைக்கப்பட்ட பெருமையை உடையது. சிவபெருமான் தனது முடிமேல் இருக்கும் சந்திரனின் கலைகளைக் கொண்டு மதுரையை நனைத்ததால் இது "த்வாதசாந்த க்ஷேத்ரம்" என்றும் அழைக்கப்படுகிறது. "சங்கப்பலகை" தோன்றி, திருக்குறளை அங்கீகரித்த இலக்கியப் பெருமையை உடையது இங்குள்ள பொற்றாமரைக் குளம்.
மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் இங்கு நடந்தவண்ணம் உள்ளன. சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம், வைகாசி உற்சவம், ஆனித்திருமஞ்சனம், நவராத்திரி, தீபாவளி, பங்குனி உத்திரம், பொங்கல் விழா என அனைத்தும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மீன் தன் கடைக்கண் பார்வையால் தன் குஞ்சுகளைக் காப்பதுபோல அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் கடைக்கண் பார்வையை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர். இங்கு கோயிலைச் சுற்றி அமைந்துள்ள வீதிகள் மிகவும் சிறப்புப் பொருந்தியன. தமிழகத்துக்குப் பெருமை தரும் அற்புதமான கோவில்களில் இதுவும் ஒன்று.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|