Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது....
- |ஆகஸ்டு 2017||(1 Comment)
Share:
பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்கவேண்டும் என்கிற சிறந்த குறிக்கோளில் 'ஒபாமா கேர்' என்று சொல்லப்படும் 'Patient Protection and Affordable Care Act' கொண்டு வரப்பட்டது. இதில் 'Patient Protection', 'Affordable' என்கிற இரண்டு அம்சங்களும் மிக முக்கியமானவை. மருத்துவத்துக்குச் செலவழித்தே வாழ்நாள் சேமிப்பை இழந்து நடுத்தெருவில் நின்ற குடும்பங்களையும் நிறையப் பார்த்தாகிவிட்ட நிலையில் இந்தச் சட்டம் சராசரி மனிதனின் கையருகே மருத்துவத்தைக் கொண்டுவந்தது. ஆனால், கண்மூடித்தனமான, பிடிவாதமான கருத்துக்களின் காரணமாக அதிபர் ட்ரம்ப் இந்தச் சட்டத்தை உருத்தெரியாமல் மாற்றிவிடப் பாடுபடுகிறார். நல்லவேளையாக, மனச்சாட்சியையும், மக்கள்நலனையும் கருத்தில் கொண்ட உறுப்பினர்கள் இன்னமும் வாஷிங்டனில் இருக்கிற காரணத்தால் ட்ரம்ப்பின் பிடிவாதம் வெற்றியடையவில்லை. மக்கள் நலனுக்கெதிரான நடவடிக்கையை அரசே எடுக்க முன்வந்தவுடனேயே, காப்பீட்டாளர்-மருத்துவமனை-மருந்துக் கம்பெனிக் கூட்டணி மறுபடியும் தமது மிகைலாபப் போக்கில் போகத் துணிச்சல் கொண்டுவிட்டது. ட்ரம்ப்கேர் வந்தாலும் காப்பீட்டுக் கம்பெனிகள் கை கோத்துக்கொண்டு, ப்ரீமியத்தை மட்டின்றி உயர்த்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகரித்துள்ளது. இது துரதிர்ஷ்ட வசமானது.

உணவு, உழைப்பு, ஓய்வு, கேளிக்கை போன்றவற்றில் சரியாக கவனம் செலுத்தினால், நோயற்ற அல்லது குறைவான பிணிகளே கொண்ட வாழ்க்கையை நடத்தமுடியும். இயற்கை உணவு, யோகப்பயிற்சிகள், பிராணாயாமம், உடல் மற்றும் மனக் கட்டுப்பாடு போன்றவற்றை மதித்துக் கைக்கொண்டால் நீண்ட, நலமான வாழ்க்கை சாத்தியம். அன்பு, கருணை, விட்டுக்கொடுத்தல், அமைதி காத்தல் போன்றவை மனதின் ஆரோக்கியத்துக்கு நல்ல ஊட்டம் தரும். ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு அஸ்திவாரமாக அமையும். இவற்றைக் கருத்தில் கொண்டே பாரம்பரிய உடல்நல வழிமுறைகள், இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு வகைகள் என இப்படிப் பலவற்றையும் குறித்துத் தொடர்ந்து தென்றல் பேசி வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பைக் காணமுடிவதில் மகிழ்ச்சியே. இந்த உரையாடலை நாமும் வாசகர்களும் தொடர்வோம். நமது உடல்நலத்தை நாமே பேணிக் காப்பதுதான் ஒரே வழி.

*****


முந்தைய இந்திய அரசுக் காலங்களில் ஊழல் வாடிக்கையாகிப் போன காரணத்தால் சராசரி மனிதனுக்கும் சுரண்டல், வரி ஏய்ப்பு, போலியாக மானியம் பெறுதல் போன்றவற்றைச் செய்யச் சற்றும் தயக்கம் இருக்கவில்லை. கரன்சி மதிப்புக் குறைத்தல், ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குதல், வரி விதிப்பை எளிமைப்படுத்துதல் போன்ற மிகநல்ல நடவடிக்கைகளை, எதிர்ப்புப் பிரசாரத்தையும் மீறி, மோதி அரசு கொண்டுவந்து, நல்லதொரு வளர்ச்சி ஏற்பட வழிசெய்துள்ளது. அண்மையில் 380,000 போலி ஆதார் அட்டைகளை ஆதார் ஆணையம் ரத்து செய்துள்ளது. இது ஏதோ குருட்டாம்போக்கில் செய்யப்பட்டதல்ல. பயோமெட்ரிக் அடையாளங்களை ஒப்பிட்டுப் பார்த்துச் செய்யப்பட்டது. இறந்தவர்களும், போலிகளும், புரட்டர்களும் மூட்டைப்பூச்சிகளைப் போல மக்கள் பணத்தை இதுவரை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட துணிச்சலான செயல்முறைகள் எதிர்க்கப்படும். ஆனாலும் அரசின் வெளிப்படைத் தன்மை, நலத்திட்டங்கள் சேரவேண்டியவர்களைச் சேருதல் போன்றவை இவற்றால் அதிகரிக்கும் என்பதால் அறிவுடையோர் இவற்றை வரவேற்பர். ஏனையோர் தாமதமாகவேனும் புரிந்துகொள்ளக் கூடும்.

*****
தமிழும் சைவமும் மூச்சுக்காற்றாகக் கொண்டு இயங்கிவரும் 'சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. ராமச்சந்திரன் அவர்களின் நேர்காணல் இந்த இதழின் மகுடம். எப்படி இயற்கை சார்ந்த விஷயங்களைச் சங்கப் பாடலோடு விரவி ஒரு சிறுகதைபோலச் சுவைபடச் சொல்லலாம் என்பதற்கு 'ஓர் ஆமையின் ஏக்கம்' நல்ல சான்று. கவிதை, சிறுகதைகள் எனப் பலதரப்பட்ட அம்சங்களோடு ஆகஸ்டுத் தென்றல் உங்களிடம் வந்துள்ளது. உங்களுடைய ஈடுபாடு எங்களுடைய ஆர்வத்துக்குத் தூண்டுகோல்.

இந்திய சுதந்திர நாள், ரட்சா பந்தனம், கிருஷ்ண ஜயந்தி மற்றும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஆகஸ்டு 2017
Share: 


© Copyright 2020 Tamilonline