Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
சுகி சுப்பிரமணியன்
- அரவிந்த்|ஜூலை 2017|
Share:
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என படைப்பிலக்கியத்தின் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர் சுகி சுப்பிரமணியன். இவர், மார்ச் 22, 1917 அன்று, திருநெல்வேலி, மானூர் அருகே உள்ள மாதவக்குறிச்சி என்ற கிராமத்தில், நல்லபெருமாள் - முத்தம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். பள்ளிக்காலத்தில் கிடைத்த நூல்கள் வாசிப்பார்வத்தை விதைத்தன. வார இதழ்கள் இவரது ஆர்வத்திற்குத் தீனிபோட்டன. பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்தார். சுப்பிரமணிய பாரதி மிகவும் கவர்ந்த கவிஞர் என்பதால் அவரது பெயரின் முதலெழுத்தான 'சு' என்பதையும், கல்கி என்ற பெயரின் இறுதியிலுள்ள 'கி' என்பதையும் சேர்த்து, 'சுகி' ஆக அவதாரம் எடுத்தார். கல்கி அவர்கள் ஆசிரியராக இருந்த ஆனந்த விகடனுக்கு 'ஏழைகளின் தோணி' என்ற முதல்கதையை, பத்தொன்பதாம் வயதில் எழுதியனுப்ப, 1936ம் ஆண்டில் அது பிரசுரமானது. அந்தச் சிறுகதையில், திருநெல்வேலியில் உள்ள சுலோசன முதலியார் பாலத்தின் அருகே இருக்கும் தைப்பூச மண்டபத்தில் தினந்தோறும் படுத்துறங்கும் ஏழை எளிய மக்கள், திடீரெனப் பெருகிவந்த தாமிரபரணியின் வெள்ளத்தால் படும் அவலத்தை எழுதியிருந்தார். ஏழைகளைக் காப்பாற்ற ஒரு தோணியை வாங்க முனிசிபாலிடியார் முடிவெடுக்கிறார்கள். தோணி ஒன்றை விலைக்கு வாங்கி, அதைப் பராமரிக்க தோணி ஓட்டி ஒருவனையும் நியமிக்கிறார்கள். கடைசியில் என்ன ஆனது என்பது அவலச்சுவை தொனிக்க அதில் சொல்லியிருந்தார். தோணி வாங்கியபின் ஆற்றில் வெள்ளம் வராது போகவே, தோணி ஓட்டிக்கு வேலை இல்லாமல் போகின்றது. அதனால் அவனை வேலையிலிருந்து நீக்குகின்றனர். திடீரென்று ஒருநாள் வெள்ளம் பெருகிவர, காப்பதற்குத் தோணி ஓட்டி இல்லாமல் பலர் மடிகின்றனர். தோணி இறுதியில் கரையானுக்கு இரையாகிப் போகிறது. அரசாங்கத் திட்டங்கள் பலவும் இப்படித்தான், அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையால், அனுபவமின்மையால் 'பிழையாய் முற்று'வதை முதல் கதையிலேயே விவரித்திருந்தார் சுகி. இவர் எழுதியிருப்பதை அறிந்த முனிசிபாலிடியார், அந்தத் தோணியைத் தரை மட்டத்திலிருந்து கரையான் அரிக்காதபடி உயர்த்தி வைத்து, பெயிண்டும் அடித்து வைத்தனர். தனது எழுத்துக்கு மதிப்பிருக்கிறது என்பதை சுகி சுப்பிரமணியம் நேரடியாக உணர்ந்த தருணம் அது. டி.கே. சிதம்பரநாத முதலியாரும், கல்கியும் அவரது கதையை வெகுவாகப் பாராட்டினர்.

திருநெல்வேலியில் அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்த டி.கே.சி.யின் 'வட்டத்தொட்டி' அமைப்பு சுகியை ஈர்த்தது. டி.கே.சி.யின் மகன் திலீபன் இவரது நெருங்கிய நண்பரானார். பெரும்பாலான நேரத்தை வட்டத்தொட்டியிலேயே கழித்தார். இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் அறிமுகமும் கிடைத்தது. புதுமைப்பித்தனும் இவரைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவரானார். டி.கே.சி.யை ஆசானாகவும், கல்கியை ஆதர்ச எழுத்தாளராகவும் வரித்துக்கொண்ட சுகி சுப்பிரமணியம், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, நாடகங்கள் என்று எழுதினார். புகழ்பெற்ற 'ஹநுமான்' இதழில் சிலகாலம் வேலை பார்த்தார். கோமதியுடன் திருமணம் நிகழ்ந்தது, மகப்பேறும் வாய்த்தது. இந்நிலையில் திருச்சி வானொலியில் ஸ்கிரிப்ட் எழுத்தாளராக வேலை கிடைத்தது. குடும்பம் திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. விரைவிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளராக உயர்ந்தார் சுகி. பல வானொலி நாடகங்களை எழுதி, இயக்கி ஒலிபரப்பினார். ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரைகளும் நிறைய எழுதினார். இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'பூப்பொருத்தம்' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து, 'நமஸ்காரம்', 'யுத்தகால இலக்கியம்', 'சாம்பார் சாதம்', 'கற்பகக் கனிகள்' போன்றவை வெளியாகின. 30 வயதுக்குள்ளேயே நாடறிந்த எழுத்தாளராகி விட்டார் சுகி. இவரது 'கற்பகக் கனிகள்' தொகுப்பை, ஆங்கிலக் கட்டுரையாளர் லிண்டின் (Lynd) எழுத்தைப் போலவே நகைச்சுவையும், கருத்தும், சிறப்பும் செறிந்திருப்பதாக வி.ஆர்.எம். செட்டியார் பாராட்டி ஊக்குவித்தார்.

Click Here Enlargeதொடர்ந்து நகைச்சுவை மிளிரும் பல கட்டுரைகளை எழுதினார். 'டாக்டர் மியாவ் மியாவ்', 'சுண்டெலி' போன்ற கட்டுரைகள் அக்காலத்தில் மிகவும் ரசிக்கப்பட்டவை. "கட்டுரை இலக்கியம் தமிழில் நிறைய வரவேண்டும் என்பது எனது ஆசை. தமிழில் சிறுகதைகள் ஒப்புயர்வற்ற வகையில் ஏராளமாக வந்துவிட்டன. கவிதையில் நமது மொழியில் இருப்பதுபோல எந்த மொழியிலும் இருக்க முடியாது. கவிதையும், கதையும் சிறப்படைந்தது போல கட்டுரை - அதுதானே வசனத்தின் சிறப்பான பகுதி - வளம்பெற வேண்டும்" என்ற தனது ஆவலை அவர் தெரிவித்திருக்கிறார். கட்டுரை மட்டுமல்ல; நகைச்சுவையாக, கிண்டலாகக் கவிதைகள் எழுதுவதிலும் சுகி தேர்ந்தவர். இவற்றைப் பாருங்கள்:

ஆரஞ்சைக் கண்டாலும் இனிதே பேரஞ்செய்து
ஆறஞ்சை வாங்குதலும் இனிதே - அதனிலும்
உரையை உரித்துச் சுளைகாண்டல் இனிதே
விரையைத் தெரித்து விழுங்கலும் இனிதே

பார்த்தாலும் நினைத்தாலும் பசிதீரக் குடிப்போர்
பக்கநின்று நோற்றாலும் பாழ்வயிற்றுள் பட்டாலும்
வேர்த்தாலும் குளிர்ந்தாலும் வேறொருவர் தந்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் காப்பியே


திருச்சியில் எழுத்தாளர் சங்கம் உருவாக உழைத்தோரில் சுகியும் ஒருவர். பின்னர் சென்னைக்குப் பணிமாற்றம் நிகழ்ந்தது. சென்னை வானொலியில் பணியாற்றும் காலத்தில் புகழ்மிக்க பல நாடகாசிரியர்களை இவர் உருவாக்கினார். கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை நாடகங்கள் எழுதும்படி ஊக்குவித்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. பதினைந்து நிமிடக் குறுநாடகங்கள், அரைமணி நேரச் சிறுநாடகங்கள், ஒருமணி நேர முழுநீள நாடகங்கள் என வானொலியில் விதவிதமான பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு வெற்றிபெற்றார். 'புதிய படிக்கற்கள்', 'காப்புக்கட்டிச் சத்திரம்', 'துபாஷ் வீடு', 'ஸதிபதி' போன்ற வானொலி நாடகங்கள் இவருக்கு மிகவும் புகழ் சேர்த்தவை. 'காப்புக்கட்டிச் சத்திரம்', 'துபாஷ் வீடு' ஆகியவை, நாகேஷை நல்ல நாடகக் கலைஞராக அடையாளம் காட்டியவையாகும். தமிழில் நாடக வளர்ச்சிக்கு வானொலி மூலம் பங்காற்றியவர்களில் சுகி முக்கியமானவர். 1940முதல் 1977வரை முப்பத்தியேழு ஆண்டுகள் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான நாடகங்களை ஒலிபரப்பியிருக்கிறார். நாடக நடிகர்கள் பலரை உருவாக்கியிருக்கிறார்; வழி நடத்தியிருக்கிறார். 'மேடை நாடகங்களுக்கும் வானொலி நாடகங்களுக்கும் வேறுபாடு உண்டு. வானொலி நாடகங்களில் வேடமேற்பது குரல். உணர்ச்சிக் குவியல்கள், கோபதாபங்கள், இன்ப, துன்பங்கள், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி என அனைத்தையும் குரலினாலேயே அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். நடிப்பு இங்கே நடிகரின் குரல் மூலமே வெளிப்படுகிறது. ஆகவே நடிகர்கள் தங்கள் குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்' என்பதை அடிக்கடி வலியுறுத்துவார் சுகி. "எனக்கு நாடக நுணுக்கங்களை, குரல் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர். எனது குரு. எனக்கு துரோணாசாரியாராக இருந்தவர் சுகி சுப்பிரமணியம்" என்கிறார், நாடக, திரைப்பட நடிகரும், உதவி இயக்குநருமான நாயர் ராமன்.
சுகியின் நாவல்களும் முக்கியமானவையே. 'சிப்பாய் ஹிருதயம்', 'விதி வழியே', 'துணைப்பறவை', 'ஆசைவலை', 'காதல் கண்கள்', 'கடற்கன்னி' போன்றவை குறிப்பிடத்தக்கன. இவரது சிறுகதைகளும் முக்கியமானவையே! சான்றாக 'இலக்கிய வியாபாரம்' என்ற சிறுகதையைச் சொல்லலாம். வறுமையில் வாழும் எழுத்தாளர் ஒருவருக்கு நேரும் அவலத்தை, அவமானத்தை உள்ளத்தைத் தைக்கும்படி அதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். வீட்டில் அரிசி வாங்கக்கூடக் காசில்லாத நிலையில் எழுத்தாளர் ஒருவர் தான் ஆசை ஆசையாய் வாங்கிய புத்தகங்களை வேறு வழியில்லாமல் எடைக்குப் போடச் செல்கிறார். அங்கே அவர் நடத்தப்படும் விதம், கடைக்காரரால் அவருக்கு நேரும் அவமானம், புத்தகங்களுக்குக் கிடைக்கும் அவமரியாதை இவற்றால் மனம்நொந்த அவர் எடுக்கும் முடிவை, மனம் நெகிழும்படி எழுதியிருக்கிறார் சுகி. இவரது கதை, கட்டுரை, நாடகங்கள் யாவுமே சமூக அக்கறை கொண்டிருந்தன. 'சுதேசமித்திரன்', 'பாரிஜாதம்', 'உமா', 'சக்தி', 'காதல்', 'தமிழ்நாடு', 'தேனீ', 'வெள்ளிமணி' என பல இதழ்களில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தனது படைப்புமுறைகளைப் பற்றிக் கூறும்போது, "நான் எழுதும் கதைகள், நாடகங்கள் தங்களைக் குறிப்பதாக என் உறவினர்கள், நண்பர்கள் ஒரு சிலர் சொல்ல வந்ததால், வெளிப்படையாகத் துலாம்பாரமாக பிரசாரம் எழுதக்கூடாது என்று மூடி மறைத்து, கலையம்சம் நிறைந்ததாக எழுதிவிட்டு, தப்பிக் கொள்வதே இலக்கியத்தைத் தொடர்ந்து எழுதுகிறவன் செய்யும் வழியென்று வகுத்துக் கொண்டேன். மறைத்துக்கொண்டு இன்றும் கதை, கட்டுரை, நாடகங்கள் எழுதுகிறேன்" என்று வேடிக்கையாகக் கூறுகிறார். 'நெஞ்சம் கவர் நேருஜி', 'காக்கை குருவி எங்கள் ஜாதி', 'குட்டிக் கதைகள்' என குழந்தைகளுக்காகவும் பல படைப்புகளைத் தந்திருக்கிறார்.

'இரு துருவங்கள்', 'புதிய ஒளி' போன்றவை டி.என். சுகி சுப்பிரமணியன் எழுதிய வானொலி நாடகங்களின் தொகுப்பாகும். நேஷனல் புக் ட்ரஸ்ட்டிற்காக 'ஓரங்க நாடகங்கள்' என்னும் நூலைத் தந்துள்ளார். வாழ்க்கை வரலாறுகளும் பல எழுதியுள்ளார். 'ராமாநுஜர்' பற்றி இவர் எழுதியிருக்கும் நூல் சிறப்பானது. 'சிந்தனையாளர் மாண்டெயின்' என்ற நூல் முக்கியமானது. சுகி, சிறந்த திறனாய்வாளரும்கூட. பாரதியைப்பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கும் 'புதுமைப் புலவன் பாரதி', 'பாரதியும் பாவேந்தரும்' போன்ற நூல்கள் முக்கியமானவை. 'நெஞ்சே நினை', 'லட்சியம் வென்றது', 'புது நிழல்', 'தர்மத்தின் குரல்', 'சிதையாத சித்தங்கள்', 'கடல் மணக்கும் பூக்கள்', 'உழைக்கும் கரங்கள்', 'குடும்பக் கோயில்', 'ஆசை வெள்ளம்', 'இன்பவேலி', 'கனவுப்பெண்', 'வாழ்க்கைப் புயல்', 'மனக்கொழுந்துகள்', 'ஜன்னலே சாட்சி', 'பிள்ளைக்கனியமுது', 'கிரகப்பிரவேசம்', 'திலகா' என எண்ணற்ற படைப்புகளைத் தந்துள்ளார். 'நெஞ்சே நினை' நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறையின் இரண்டாம் பரிசு கிடைத்தது. 'பன்னீர்ச் செம்பு' என்பது திருமணப் பரிசு நூலாகும். ஆங்கிலத்திலிருந்தும் சில படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான Thornton Niven Wilder எழுதிய The Happy Journey to Trenton and Camden என்ற நாடகத்தை 'நியூயார்க்கில் திருமணம்' என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்துள்ளார். அவர் எழுதிய 'Our Town' என்பதை 'நமது நகரம்' என்ற பெயரில் தந்துள்ளார். Tennessee Williams எழுதிய 'The glass menagerie' என்பதை 'கண்ணாடிச் சிற்பங்கள்' ஆகத் தந்திருக்கிறார். Nathaniel Hawthorne எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'Selected Short Stories Of Nathaniel Hawthorne' என்பதை 'சீரஞ்சீவி மனிதன்' என்ற பெயரில் அளித்திருக்கிறார். இவரது சிறுகதைகள் சில தொகுக்கப்பட்டு 'சுகி சுப்பிரமணியன் சிறுகதைகள்' என்ற பெயரில் நூலாகியுள்ளன. அதுபோல இவரது கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'எழுத்து வேந்தர் சுகி சுப்பிரமணியன் கட்டுரைகள்' என்ற தலைப்பில் நூலாகியுள்ளன.

32 நாவல்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள், எட்டு நாடக நூல்கள், மூன்று சிறுவர்களுக்கான நூல்கள், எண்ணிலடங்காக் கட்டுரை நூல்கள் என்று எழுதிக் குவித்துள்ளார் சுகி. இவரது கலைச் சேவையைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு 'கலைமாமணி' விருது வழங்கி் கௌரவித்தது. 'எழுத்துலக வேந்தர்' என்றும் இவர் அழைக்கப்பட்டார். பிப்ரவரி 18, 1986ல் இவர் காலமானார். பிரபல பேச்சாளர் சுகி சிவமும் பிரபல எழுத்தாளர் கோமதி சுப்பிரமணியமும் (எம்.எஸ். பெருமாள்) இவரது மகன்கள். இவ்வாண்டு, சுகி சுப்பிரமணியம் அவர்களது நூற்றாண்டு. அதை நினைவுகூரும் வகையில் இலக்கிய வீதி அமைப்பு 'மறுவாசிப்பில் சுகி சுப்பிரமணியன்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நிகழ்த்தி கவனப்படுத்தியது. சுகியின் வழித்தோன்றல்கள் அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகச் சமீபத்தில் கொண்டாடினர். சென்னை வானொலி நிலையமும் இவரது நூற்றாண்டு நினைவை ஒட்டி இவரது நாடகங்களை மாதந்தோறும் ஒளிபரப்பி வருகிறது.

தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவர் சுகி சுப்பிரமணியன்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline