|
|
|
தமிழிலக்கிய உலகில் அறிவியல் தகவல்களைக் கட்டுரைகளாகத் தந்து அறிமுகப்படுத்தியவர் பெ.நா. அப்புஸ்வாமி என்றால் பிற்காலத்தில் கதைகளாகவும், சுவராஸ்யமான கட்டுரைகளாகவும் அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் சுஜாதா, இரா. முருகன் போன்றோர். இவர்கள் வரிசையில் இடம்பெறத் தக்கவர் சுதாகர் கஸ்தூரி. இவர், தூத்துக்குடியில், கஸ்தூரி ஐயங்கார், திருவேங்கடம் அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இளமைப்பருவம் தூத்துக்குடியிலும் அம்பாசமுத்திரத்திலும் கழிந்தது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இயற்பியலில் இளநிலைக்கல்வி பயின்றார். கொச்சியில் Cochin University of Science & Technology பல்கலையில் முதுநிலைக்கல்வி. சிறுவயதில் அறிமுகமான புத்தகங்களும், நூலக வாசிப்பும், சகோதர, சகோதரிகளின் ஊக்குவிப்பும் வாசிப்பார்வம் அதிகரிக்கக் காரணமாயின.
1992ல் பணி நிமித்தம் மும்பை சென்றார். அறிவியல் கருவிகள், மென்பொருட்கள் விற்பனை, சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பணியாற்றினார். பலமொழி பேசும் மக்களிடையே பழகிய அனுபவங்கள் இவரை எழுதத் தூண்டின. முதல் சிறுகதை 'செங்கால்நாரை' 2001ல் 'சௌந்தர்யசுகன்' சிற்றிதழில் வெளியானது. தனது மாமா தோதாத்திரி அவர்களைப் பற்றிய கதையை அவரது இறப்பின் தாக்கத்தினால் எழுதியிருந்தார். அதற்கு வந்த வாசகர் கடிதங்கள் மேலும் எழுத ஊக்குவித்தன. அச்சிறுகதை வெளியாகும் முன்பேயே சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளாலும், ஆங்கில அறிவியல் புதினங்களாலும் ஈர்க்கப்பட்டு 'HIV' என்றொரு சமூக அறிவியல் நாவலை எழுதியிருந்தார். அதனை சுஜாதாவுக்கு அனுப்பவேண்டுமென்று நினைத்து, அவர் ஏதேனும் சொல்லிவிடுவாரோ என்று தயங்கி கையெழுத்துப் பிரதியாகவே வைத்துவிட்டார்.
மனைவி ஸ்ரீவரமங்கை மற்றும் மாமனார் பேராசிரியர் சே. ராமானுஜம் ஆகியோர் அளித்த ஊக்கம் தொடர்ந்து எழுதக் காரணமானது. தனக்கு மிகவும் பிடித்த அறிவியல் துறை சார்ந்து ஒரு நாவலை எழுதும் என்ற எண்ணம் வலுப்பட்டது. பல்லாண்டுகள் உழைத்து '6174' நாவலை எழுதினார். வம்சி பதிப்பகம் வெளியிட்ட அந்நாவல் இவருக்கு மிகப்பரவலான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. விஞ்ஞானக் கதை என்றாலே கம்ப்யூட்டர், ரோபோ, வேற்றுக்கிரக மனிதர்கள் என்று பலரும் எழுதி வந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறாக, புதிய களத்தில், காப்ரேகர் மாறிலியான 6174 என்பதை அடிப்படையாக வைத்தும், தமிழ்ப்புதிர்கள், வானியல் சாஸ்திரம், பிரமிடு, லெமூரியர் என்ற பல விஷயங்களின் கலவையாகயும் அந்நாவலைப் படைத்திருந்தார். இந்நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 2012ன் சிறந்த நாவல் விருதையும் பெற்றது. இதே நாவலுக்கு 'கலகம்' அமைப்பினரின் 'சிறந்த நாவல்' விருதும் கிடைத்தது. "லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு இருந்துவருகிறது. அந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றி மெக்ஸிகோ நகரத்தில் முடிகிறது. இடையில் பிரமிடுகள், சீலகந்த் மீன்கள், மர்மங்கள் பலவற்றின் முடிச்சு அவிழ்தல். படித்ததும் மறுபடியும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும். தமிழின் நல்ல அறிவியல் நாவல்களின் வரிசை ஒன்று தொடங்குவதற்கு சுதாகரின் இந்த முயற்சி தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறேன்." என்று எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் பாராட்டியிருந்தார்.
மிகநீண்ட உழைப்பிற்கும் கள ஆய்வுகளுக்கும் பின்னர் இவர் எழுதிய இரண்டாவது நாவலான '7.83 ஹெர்ட்ஸ்' இவருக்கு மேலும் புகழைச் சேர்த்தது. இந்நாவல் பற்றி இரா. முருகன், "அறிவியல், அதுவும் போகிறபோக்கில் மட்டும் கம்ப்யூட்டர் வர, வேதியியலும், உயிர்பியலும் முக்கியமாகக் கலந்து களன் அமைத்துத் தர, சீரான வேகத்தில் ஏவுகணைபோல் முன்னேறுகிற அறிவியல் கதை. அறிவியலைத் தொட்டுக் கோடி காட்டியபடி கதையை முன்னேற்றிக் கொண்டுபோகும் மொழிநடை, லாகவம் - எல்லாம் கை வந்திருக்கிறது சுதாகருக்கு" என்று பாராட்டுகிறார். இந்நாவலுக்கு வாசகசாலை அமைப்பின் சிறந்த நாவலுக்கான விருது கிடைத்தது. சங்க இலக்கியங்களிலிருந்தும் கம்பராமாயணத்திலிருந்தும் சுவையான சில வரிகளை மையமாக வைத்து இவர் எழுதியிருக்கும் கதைகளின் தொகுப்புதான் இவரது மூன்றாவது படைப்பான 'நிறக்குருடு'. சாதாரண மத்தியதர மாந்தர்களையும் அவர்களது உணர்ச்சிபூர்வமான வாழ்க்கையையும் இலக்கியத்தோடு தொடர்புபடுத்திக் காட்டி இச்சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கதைகளில் இடம்பெற்றிருக்கும் இலக்கியப் பின்னணியும் நகைச்சுவையும் படைப்பிற்குக் கூடுதல் பலம்.
தனது எழுத்துலகப் பயணம் பற்றி சுதாகர், "லா.ச.ரா.வின் எழுத்தில் மயங்கிப் போயிருக்கிறேன். 'நெருப்பென்றால் சுடணும்' என்ற உத்வேகம், உள்கனல், அந்த சத்திய ஆவேசத்தை அவர் எழுத்தில் பார்க்கமுடியும்" என்கிறார். தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போது, "தற்கால எழுத்தாளர்கள் பி.ஏ. கிருஷ்ணன், இரா. முருகன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என நீளும் பெரிய பட்டியல் அது" என்கிறார். தனக்கு மிகவும் பிடித்த, தன்னை பாதித்த படைப்புகளைப் பற்றிச் சொல்லும்போது, லா.ச.ரா.வின் 'புத்ர,' 'அபிதா', சி.சு. செல்லப்பாவின் 'வாடிவாசல்', க.நா.சு.வின் 'பொய்த்தேவு', சுஜாதாவின் பலநாவல்கள், ஜெயமோகனின் 'விசும்பு', இரா. முருகனின் 'அரசூர் வம்சம்', பி.ஏ.கிருஷ்ணனின் 'புலிநகக்கொன்றை' என்று பட்டியலிடுகிறார். மிகவும் பாதித்தது கம்பராமாயணமாம். "சுஜாதா இருந்திருந்தால் ரசித்திருப்பார்" என்ற இரா.முருகனின் பாராட்டைத் தன்னால் மறக்க முடியாததாகக் கூறும் சுதாகர், பாசுரங்களிலும், சங்க இலக்கியங்களிலும் தேர்ந்தவர். அதுபற்றிக் கூறும்போது, "பாசுரங்களில் ஈடுபாடு வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் என் பள்ளித் தமிழாசிரியர் சலைஸ் அய்யா அவர்கள். உணர்ச்சிகளை அழகாக, அழுத்தமாகச் சொல்வதில் கம்பனை மிஞ்ச ஆளில்லை என்பதை அன்றே உணர வைத்தார் அவர். பாசுரத்தில் ஈடுபாடு வர என் அப்பாவும், மாமனார் சே. இராமானுஜம் அவர்களும்தான் காரணம். ஜே.கே.யின் புத்தகங்களை வாசித்துச் சற்றே குழம்பி இருந்தவனை, 'திருவாய்மொழி படிச்சுப் பாரு' என்றார் அப்பா. இன்றும் திருவாய்மொழியின் ஆழத்திலும், கம்பனின் மொழியழகிலும் மயங்காத நாட்கள் இல்லை" என்கிறார். |
|
|
இலக்கியம் பற்றிச் சொல்லும்போது, 'பருப்பொருட்களில் சில நொடிகள் ஒளிர்வதைத் தாண்டி, பிற ஒளிபடும்வரை, தான் ஒளிரும் தன்மையைத் தாண்டி, தானே நின்றொளிரும் தன்மையைத் தாண்டிச் சில ஒளிமூலங்கள், கால காலமாகப் பிரகாசிக்கின்றன. இதுபோன்று எழுத்துலகில் இருக்கும் படைப்பாக்கங்கள் இலக்கியமாகின்றன. உண்மை எதுவோ, எது படிப்பவனை அசைக்கின்றதோ, அது இலக்கியமென்பது என் கருத்து. இதற்கு சிந்தனையும், முயற்சியும், கதையும் ஒருங்கே உண்மை சார்ந்ததாக இருத்தல் வேண்டும்" என்கிறார்.
சுதாகர் கஸ்தூரியின் பலம் விஞ்ஞான விவரணைகளை மிகத் தெளிவாக, திருத்தமாக, வாசகன் எவ்விதத்திலும் குழம்பாத வகையில் விளக்கி எழுதுவது. நெல்லைத் தமிழை உயிர்ப்போடு எழுதிவரும் எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர். இணையத்திலும், ஃபேஸ்புக்கிலும் இவர் எழுதிவரும் கட்டுரைகள், குறுங்கதைகள் மிகச் செறிவானவை. வாசகனை ஈர்த்துக் கட்டிப்போட்டு விடுபவை. தன் பயண அனுபவங்களையும், வேலை, தொழில் சார்ந்த அனுபவங்களையும் நுணுக்கமான விவரணைகளுடன் நகைச்சுவையாக எழுதுவதில் தேர்ந்தவர்.
'டர்மரின் 384' இவரது சமீபத்திய நாவல். 'ஜன்னல்' இதழில் தொடராக எழுதியதன் நூல் வடிவமே இது. இதுவும் அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்த புதினம்தான். மஞ்சளை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து கண்டுபிடிக்கப்படும் மருந்திற்கு பேடண்ட் கோரும் சம்பவங்களையும், உலக அளவில் அதற்காகச் செய்யப்படும் சதி முயற்சிகளையும் பின்னணியாக வைத்து இந்நாவலை எழுதியிருக்கிறார். 'வலவன் கதைகள்' இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. இது ஓட்டுநர்களைப் பற்றியது. ஓடிக்கொண்டே இருக்கும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் சுவாரஸ்யங்களையும், அவலங்களையும், சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் தனக்கேயுரிய சுவாரஸ்யமான துள்ளல் நடையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பலவிதமான வாழ்க்கைப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்கள், அவர்களின் பயணங்கள் என்று சுருக்கமாக ஆனால் சுவாரஸ்யமாகச் செல்கிறது இப்படைப்பு. இவரது கட்டுரைகள், சிறுகதைகள் ஆனந்தவிகடன், தினமலர், தினமணி, தமிழ்ஹிந்து.காம், சொல்வனம்.காம் போன்ற ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. 'ஐந்துகுண்டுகள்' என்ற தொடர்நாவல் தினமணி.காம் வலைத்தளத்தில் 44 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்து, சமீபத்தில் நிறைவுற்று, விரைவில் நூலாக வெளியாக உள்ளது. தற்போது அறிவியல்புலம் சார்ந்த இரண்டு நாவல்களை எழுதி வருகிறார். "அதற்குத் தகவல் திரட்டும் பணி சவாலாக இருக்கிறது" என்கிறார்.
மும்பையில் தனியார் நிறுவனமொன்றில் ஆய்வக மென்பொருள் விற்பன்னர் பதவியில் இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. மனைவி ஸ்ரீவரமங்கை, மும்பைப் பல்கலைக்கழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பேராசிரியர். மகன் அபிஜீத் மும்பையில் பொறியியல் கல்வி படிக்கிறார். இவர்கள் ஊக்குவிப்பும் அனுசரிப்புமே தன்னை எழுத வைப்பதாகக் கூறும் இவர், தனிநபர் வாழ்வு மற்றும் சமூக முன்னேற்றம் சார்ந்த, வாழ்விற்குப் பயன்படுகின்ற அறிவியல் கூறுகள் செறிந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் உண்டு என்கிறார். சிறுசிறு கட்டுரைகளாகவோ, கதைகளாகவோ, இக்கால இளைஞர்கள் படித்துப் பயனடைய வேண்டிய தரத்தில் இவற்றைக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது" என்கிறார். சுதாகர் கஸ்தூரி அறிவியல் இலக்கியத்தின் நம்பிக்கை முகம்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|