|
|
|
புரொபஸர் பூவராகன், அஜ்மீர் (டெல்லியிலிருந்து தென்மேற்கே இருநூற்று இருபத்தைந்து மைல் தொலைவில் உள்ளது. ஆரவல்லிமலைகளின் வடமேற்குக் கோடியில் உள்ள இந்த ஊர் பன்னிரண்டாவது நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. மொகலாய ராணுவத் தளமாகவும், மொகலாய அரசர்களின் விடுமுறை வாசஸ்தலமாகவும் விளங்கியது. முதலாவது ஜேம்ஸின் தூதுவரான ஸர். தாமஸ் ரோவை ஜஹாங்கீர் இங்கேதான் வரவேற்றார். ஊருக்கருகில் அனாசாகர் என்ற பெரிய செயற்கை ஏரி உள்ளது. ராஜஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த அஜ்மீர், ஒரு வியாபார ஸ்தலம். உப்பு வியாபாரம், பருத்தித் துணிகள் நெசவு, சாயம் போடுதல் முக்கியமான தொழில்கள். ரயில்வே தொழிற்சாலைகளும் உள்ளன. அகன்ற தெருக்கள், கல்விக்கூடங்கள் இவற்றுக்குப் பெயர்போனது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் வருஷத்திய ஜனத்தொகை இரண்டு லட்சத்து முப்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது.) ஆண்கள் கல்லூரியில் இங்கிலீஷ் லெக்சரர். லெக்சரர் உத்தியோகம் தான் எனினும், உள்ளூர்த் தமிழர்கள் அவரைப் புரொபஸர் என்றே அழைத்தார்கள்.
பூவராகன், வாரத்தில் நான்கு நாட்கள் மாலை வேளைகளில் தமிழ் வகுப்பு நடத்திவந்தார். மொத்தம் பத்துப்பேர் படிக்க வந்தார்கள். அவர்களில் நான்கு பெண்கள், பூவராகன் மனைவி பூமா உள்பட. மற்றப் பெண்களின் கற்பின் நிமித்தமும், புரொபஸரின் தமிழ்ப் பண்பாடு நிமித்தமும் பூமா நாள் தவறாமல் அவர் நடத்துகிற வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்தாள்.
"இவர்தான் எம்.எஃப். ஹுசேன். ரொம்ப நல்ல ஓவியர். என் பழைய நண்பரும் கூட" என்று நிஜமான புரொபஸர் ரூப்சந்த் கன்னா, மாலை நான்கு மணிக்கு பூவராகன், தன் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது அறிமுகப்படுத்தினார்.
"இல்லஸ்டிரேடட் வீக்லியில் பார்த்திருக்கிறேன்" என்றார் பூவராகன்.
"ஒரு டாக்குமெண்டரி எடுப்பதற்காக அஜ்மீர் வந்திருக்கிறார். அது கானெ திரைப்பட விழாவிற்குப் போகிறது" என்றார் கன்னா.
ஹுசேனைத் தேநீர் சாப்பிடுவதற்காகத் தன் வீட்டிற்கு அழைத்தார் பூவராகன். பூமாவைப் பார்த்ததும் "A face to be painted" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் ஹுசேன்.
"நீங்கள் கவிதை எழுதுவதுண்டா?" ஹுசேன், பூவராகனைக் கேட்டார்.
"இல்லையே, ஏன்?"
"கிட்டத்தட்ட எல்லா இங்கிலிஷ் வாத்தியார்களுமே எழுதுகிறார்களே?"
"அதைச் சொல்கிறீர்களா? நான் இங்கிலீஷில் எழுதுவதில்லை."
அதற்குள் பூமா குறுக்கிட்டாள்.
அவர் தமிழ் எழுத்தாளர். நிறையச் சிறுகதைகளும், ஒரு நாவலும் எழுதியிருக்கிறார்.
"நாவல் பெயர் என்ன?"
"அச்சு வெல்லம்."
"அப்படி என்றால்?"
பூமா புரொபஸரைப் பார்த்தாள்.
"A block of molasses."
"Oh, it is symbolic."
"Yes, of human existence."
ஹுசேன் டயரியில் குறித்துக் கொண்டார். தன் அறைக்குத் திரும்பியதும், "Booma, A face to be painted' என்றும் மறக்காமல் குறித்துக் கொண்டார்.
கானெ விழாவில், டாக்குமென்டரி பிரிவில் ஹுசேனுக்கு வெள்ளிப் பதக்கம் இடைத்தது. இரவு ஒன்பது மணிக்குமேல் அவர் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பாரிஸ் நிருபர் ஒருவர் பேட்டி காண வந்தார். அப்பொழுது பாரிஸில் இலக்கிய விமர்சகர்கள் நீள நீளமாய்க் கொட்டாவி விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
பேட்டி முடிகிற தருவாயில் நிருபர் கேட்டார்:
"இந்திய இலக்கியம் பற்றி ஏதாவது.... கவிதை, நாவல் பற்றி?"
ஹுசேன் நிறையவே சாம்பெய்ன் சாப்பிட்டிருந்தார்.
"புரொபஸர் பூவராகன்.... A novel by name அச்சுவெல்லம்... It is symbolic, you know, of human existence." |
|
"எந்த மொழி?" நிருபருக்கு இந்தியா பற்றி கொஞ்சம் தெரியும்.
"தமிழ்."
அந்த வாரக் கடைசியில் ஹுசேன் பேட்டி வெளியிட்ட பத்திரிகை, வேறொரு பக்கத்தில் சிறிய விளம்பரம் ஒன்றும் வெளியிட்டது.
"தமிழ்மொழி தெரிந்த ஐரோப்பியர் ஒருவர் தேவை, மொழிபெயர்ப்புக்கு."
மிலான் நகரத்திலிருந்து, டானியல் காஸ்டில்லோ விளம்பரத்திற்குப் பதில் போட்டிருந்தான். தான் கத்தோலிக்கப் பாதிரி ஒருவரிடமிருந்து ஆறு வருட காலம் தமிழ் கற்றுக் கொண்டதாகவும், தனக்கு நாவல் பிரதி அனுப்பி வைக்கும் படியாகவும் எழுதி இருந்தான். பாரிஸ் பத்திரிகை ஆசிரியர் டெல்லி பிரெஞ்சு தூதருக்குக் கடிதம் எழுதினார்.
டெல்லியில், தான் சந்திக்க நேர்கிற அரசாங்க உத்தியோகஸ்தர்களில் தமிழர்களை எல்லாம் விசாரித்தார் தூதர். அவர்களோ தாங்கள் (1) இங்கிலீஷ் (2) அமெரிக்கன் (3) பிரெஞ்சு நாவல்களைத்தான் படிப்பதாகவும், தங்கள் வீடுகளில் வேண்டுமானால் விசாரித்துச் சொல்வதாகவும் பதிலளித்தார்கள்.
அர்ஜென்டினா கவிஞர் ஒருவருக்கு அந்த தேசத்து தூதரகம் அளித்த வரவேற்பு விருந்துக்கு, பிரெஞ்சு தூதர் இந்த நினைவுகளையெல்லாம் மறந்துதான் போனார். ஆனால் அங்கே, இவர்தான் "சிதம்பரம் ஸஞ்ஜயன். தமிழில் சிறந்த விமர்சகர்" என்று யாரோ அறிமுகப்படுத்தினார்கள்.
தூதருக்கு சின்ன சபலம். விமர்சகர் என்றதும் அவரிடத்தில் நேரடியாக அந்தப் புஸ்தகம் பற்றி கேட்காமல், அவர் வாயிலிருந்தே அதைப் பற்றிய அபிப்பிராயத்தை வரவழைக்க வேண்டும் என்பதுதான். மேலும், அந்தச் சமயத்தில் ஆசிரியர் பெயரோ, புஸ்தகத்தின் பெயரோ அவர் நினைவிலும் இல்லை; கோட் பாக்கெட்டில் இருந்த டயரியிலும் இல்லை.
"தமிழில் நல்ல நாவலாசிரியர்கள் யார்?"
ஸஞ்ஜயன் பிரெஞ்சிலேயே பதில் சொன்னார்.
"தமிழில் அப்படியெல்லாம் கேட்காதீர்கள். எழுத்தாளர்கள் என்று கேளுங்கள். மொத்தம் நாலுபேர்தான். நான் ஒருத்தன். விருத்தாசலம் விதுரன் - இவன் முப்பத்திரண்டு வயசிலேயே செத்துப் போய்விட்டான். பதினாறு சிறுகதைகள் தான் மொத்தமாய் எழுதினான் - அதிலே இரண்டு கதைகள் தேறும். அப்புறம் பித்தாபுரம் பீஷ்மன் - இப்பொழுது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான். நூறு கதைகள், நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறான். இவனிடம் பத்து கதை தேறும். இன்னும் கொஞ்சம் குறைவாய் எழுதியிருந்தால் இன்னும் நிறைய தேறி இருக்கும். கடைசியாய் திருவல்லிக்கேணி திருதராஷ்டிரன். இவனை எங்களோடு சேர்ப்பதில் அர்த்தமேயில்லை. நாலாவதாக இருக்கட்டும் என்று சேர்க்கிறேன். இவன் நிறைய எழுதிவிட்டான். என்னால் கணக்கு வைத்துக்கொள்ள முடியவில்லை.
பிரெஞ்சு தூதருக்கு தூக்கம் வந்தது. பிறகு பார்ப்பதாகச் சொல்லி, ஸஞ்ஜயன் விலாசத்தை வாங்கிக்கொண்டு விடைபெற்றுக் கொண்டார்.
ஒரு வாரத்திற்கெல்லாம், பிரெஞ்சு தூதர் ஸஞ்ஜயனுக்கு ஒரு கடிதம் எழுதினார். பூவராகன் பெயரையும், அவர் நாவலையும் குறிப்பிட்டு அநதப் புஸ்தகத்தை வாங்கித் தரும்படிக் கேட்டிருந்தார். ஸஞ்ஜயனும் தபாலில் புஸ்தகத்தை வரவழைத்து ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜோவான்னெ வெர்கா (1840-1922 - இத்தாலிய சிறுகதை, நாவல் ஆசிரியர். பிறப்பு ஸிஸிலி) எழுதுவதின் பொருட்டு சட்டப்படிப்பைக் கைவிட்டார். ஆரம்பத்தில், பிரெஞ்சு பாணியில் உணர்ச்சிக் குவியல்களாக நாகரீக உலகைப்பற்றி நாவல்கள் எழுதினார். இவரது பிந்தைய படைப்புகள் எளிமையாகவும், தத்ரூபமாகவும் அமைந்தவை. ஸிஸிலியின் விவசாய, கிராமிய சூழ்நிலைகளை ஆதாரமாகக் கொண்டவை) எழுதிய நாவல் ஒன்றின் அப்பட்டமான தழுவலாக இருந்தது. கதைக்கு மாத்திரமில்லாமல், நிகழ்ச்சிகளும் அதே வரிசையிலேயே அமைக்கப்பட்டிருந்தன.
புரொபஸர் பூவராகனுக்கு, ஸஞ்ஜயன் விரிவாகவே கடிதம் எழுதினார். தான் ஆரம்ப நாட்களில் கல்கத்தா இம்பீரியல் லைப்ரரியில் வெர்காவின் நாவலைப் படித்ததாகவும், பூவராகனும் அதைப் படிக்கிற வாய்ப்பு எப்படி ஏற்பட்டது என்பதைத் தான் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் எழுதினார்.
பூவராகனின் பதில் நேர்மையாகவே இருந்தது.
"என் பெரியப்பா ஆடுதுறை எஸ். கோபால ஐயங்கார் நிறைய நாவல்கள் படிப்பவர். அவர் அலஹாபாத் ஏ.எச். வீலர் கம்பெனியிலிருந்து 1934ல் வெர்காவின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு நாவல்களை ஒரு தொகுப்பாக வாங்கினார். நான் வீலர் கம்பெனிக்குப் போன வருஷம் ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள் எழுதியிருந்த பதில் சுவாரஸ்யமாயிருந்தது."
"வெர்காவின் இந்த நாவலை இம்பீரியல் லைப்ரரிக்கு ஒரு பிரதி வாங்கிக் கொடுத்தோம். தனிப்பட்ட நபர்கள் இரண்டு பேர்தான் இந்த நாவலை வாங்கினார்கள். குஜராத்தில் ஒருவரும், ஆடுதுறை கோபல ஐயங்காரும். இரண்டாவது யுத்தம் தொடங்கிய பின் இத்தாலிய நூல்கள் யாரும் வாங்கிப் படிக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகோ, ஆல்பர்ட்டோ மொராவியைத் தவிர வேறு எந்த இத்தாலிய நாவல்களையும் நாங்கள் விற்கவில்லை."
"இப்படி வீலர் கம்பெனியிலிருந்து பதில் வந்ததும் எனக்கு தைரியமாயிருந்தது. குஜராத்திக்காரர் அவர் மொழியில் செய்வாரோ என்னவோ? தமிழில் போட்டியில்லை என்றதும் நான் இதைத் தமிழ்ப்படுத்தினேன். இப்படி இம்பீரியல் லைப்ரரியில் வெர்காவைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்து முப்பத்தைந்து வருஷங்களுக்கு அப்புறமும் ஞாபகம் வைத்துக் கொள்கிற தமிழர் இருப்பார் என்று தெரிந்திருந்தால், செய்திருக்க மாட்டேன்."
இரண்டு நாளைக்கெல்லாம் ஸஞ்ஜயன் பிரெஞ்சு தூதருக்கும், பாரிஸ் பத்திரிகை ஆசிரியருக்கும் கடிதம் எழுதினார்.
"அச்சுவெல்லம் இந்திய பாரம்பரியத்தில் ஊறிக் கிடக்கிறது. எனவே, அதனுடைய முழு அழகையும் மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியாது. இத்தோடு நான் எழுதிய 'தேய்மானம்' என்கிற நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு - நானே செய்தது - அனுப்பியிருக்கிறேன்."
(நன்றி: 'மாறுதல்' சிறுகதைத் தொகுப்பு, நவீன விருட்சம் வெளியீடு)
ஐராவதம் |
|
|
|
|
|
|
|