போட்டி புதிரான மனைவி
|
|
|
|
இரவு மணி 10. ஜெய்பால் பேயனூர் கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அந்தச் சுடுகாடு இடைப்பட்டது. ஆளரவமில்லாத அந்தப் பகுதியைக் கடந்துசெல்ல 20 நிமிடம் ஆகலாம். ஒரு நிமிடம் தயங்கி நின்றான், சுற்றுமுற்றும் பார்த்தான். பயத்தாலல்ல. பேச்சுத்துணைக்கு யாரேனும் கிடைத்தால் பயணம் சுலபமாகுமென்றுதான். அவன் நினைத்ததுபோலவே, இல்லையில்லை... அதற்கும்மேல், மிக அழகான ஒரு பெண் தென்பட்டாள். பளீரென ஆடை, தெளிவான முகம், மெலிதான கொலுசு, பெரிய கண்கள், கரிய நீண்ட கூந்தல்... குனிந்ததலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள்.
அருகில் வந்ததும் அவளை நிறுத்தி, "மன்னிக்கணும், நீங்களும் பேயனூர்தானே போறீங்க?" என்று கேட்டான்.
அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து "ஆமாம்" என்றாள் தயங்கியபடி மெல்லிய குரலில்.
"நீங்க தப்பா நினைக்கலேனா நாம ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சுத் துணையா பேசிட்டே போகலாமே" அவன்.
"நான்கூட இந்த இடத்தைத் தனியா எப்படி கடக்குறதுன்னு பயந்துகிட்டேதான் வந்தேன். நல்லவேளையா உங்களப் பாத்தேன்" அவள்.
பயந்துகிட்டேதான் வந்தேன் என்று சொன்னாலும், பார்த்தால் பயந்தவளாகத் தோன்றவில்லை. நடக்க ஆரம்பித்தார்கள்.
"எப்படி நீங்க இந்த நேரத்துல தனியா?" அவன்.
சிறிது யோசித்துவிட்டு அவள் "நான் வழக்கமா வர்ற பேருந்து இடையில பழுதானதால ஒரு மணிநேரம் தாமதம். அதான்" என்றாள்.
பேசிக்கொண்டே சென்றார்கள். ஜெய்பால் வெகு நாகரிகமாக நடந்து கொண்டான். கண்ணியமாகப் பேசினான். சற்று இடைவெளி விட்டே நடந்தான். இருபது நிமிடத்தில் 'பேயனூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற பலகை தெரிந்தது. |
|
அங்கே இடம், வலமாகச் சாலை பிரிந்தது.
"நீங்க எந்தப் பாதையில போகணும்?" கேட்டாள் அவள்.
"நான் வலதுபாதைங்க. நீங்க?"
"இடதுபாதை."
விடை பெற்றுக்கொண்டு அவள் தன் பாதையில் செல்லலானாள்.
பத்துப் பதினைந்து அடி நடந்த ஜெய்பால் அவள் போன பாதையைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்களிலிருந்து மறைந்திருந்தாள். அதற்குள் எப்படி அந்தச் சாலை திருப்பத்தை அடைந்திருக்க முடியும் என்று துணுக்குற்றான். ஆயினும் தன் பாதையில் போகலானான்.
"ச்சே. நீங்க எந்தப் பாதையில போறீங்கன்னு முதல்லயே கேட்டிருந்தா அவள் சொல்றதையே நாமும் சொல்லியிருக்கலாம். கூட பத்து நிமிடமாவது அவளோடு பேசிட்டிருந்திருக்கலாம். நமக்கென்ன வேலையா, வெட்டியா! நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோமே. உயிர் போய்ட்டா இப்படித்தான் புத்தி மந்தமாய்டும்போல" என்று வருத்தப்பட்டுக்கொண்டது 'அது'!
விருதை ஸ்ரீபிரியன், அட்லாண்டா |
|
|
More
போட்டி புதிரான மனைவி
|
|
|
|
|
|
|