|
|
|
"புல்லாங்குழல் என்றால் ரமணி; ரமணி என்றால் புல்லாங்குழல்" என்று போற்றப்படும் திரு. என். ரமணி, 'சங்கீத கலாநிதி', 'சங்கீத கலாசிகாமணி', 'சங்கீத கலாரத்ன', 'சங்கீதா ஆச்சார்யா', 'சங்கீத சூடாமணி', 'கலைமாமணி', 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட பல பட்டங்களையும், சிறப்புக்களையும் பெற்றவர். அக்டோபர் 15, 1934 அன்று திருவாரூரில் நடேச ஐயர் - சாரதாம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பாரம்பரியமான இசைக்குடும்பம் இவருடையது. தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயர் அக்காலத்தின் புகழ்பெற்ற வாய்பாட்டு மற்றும் புல்லாங்குழல் வித்வான். தாயார் சாரதாம்பாள் வாய்பாட்டு மற்றும் வயலின் கலைஞர். இசைக்குப் புகழ்பெற்ற திருவாரூரில் இசைச்சூழலில் வளர்ந்தார் ரமணி. தாத்தாவிடமிருந்து வாய்பாட்டு, புல்லாங்குழல், வயலின் எல்லாம் கற்க ஆரம்பித்தபோது வயது ஐந்து. செம்மங்குடி சீனிவாச ஐயர் உள்ளிட்ட பலர் தாத்தாவிடம் இசைக் கற்க வருவார்கள். அவர்கள் கற்பதை உன்னிப்பாக கவனிப்பார் ரமணி.
மாலி என்ற டி.ஆர். மகாலிங்கம் இவருடைய மாமா. அவரது அபாரமான வாசிப்பு ரமணியைக் கவர்ந்தது. திருவாரூரில் நடந்த மாலியின் கச்சேரிக்குச் சென்ற ரமணி, மறுநாள் மாமா வீட்டுக்கு வந்தபோது முந்தையநாள் வாசித்த அதே பாடல்களை அதே பாணியில் புல்லாங்குழலில் வாசித்துக் காண்பித்தார். அசந்துபோன மாலி, தன்னிடம் கற்க வருமாறு ரமணியைப் பணித்தார். பள்ளியில் படித்துக்கொண்டே மாலியிடம் இசை கற்றார். அது ரமணியின் வாழ்வில் திருப்புமுனை ஆனது. மாலி பாடப்பாட அதைக் கூர்ந்து கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு குழல் நுணுக்கங்கள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார். கூடவே மதுரை மணி ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், ஜி.என். பாலசுப்பிரமணியன் போன்றோரது கச்சேரிகளுக்குச் சென்றும் இசைஞானத்தை வளர்த்துக்கொண்டார். ரமணியின் முதல் கச்சேரி எட்டு வயதில் சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில் நிகழ்ந்தது.
இந்நிலையில் மாலி சென்னைக்குக் குடிபெயர்ந்தார். ரமணியையும் உடனழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் ரமணியின் கல்வி தடைப்படும் என்பதால் தந்தை மறுத்துவிட்டார். அதனால் பள்ளி விடுமுறைக் காலங்களில் சென்னைக்குச் சென்று மாலியிடம் கற்றார். சென்னைக்கு வருமாறு மாலி தொடர்ந்து வற்புறுத்தவே சில வருடங்களுக்குப் பின் ரமணியின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. மாலியுடன் இணைந்து சென்னை ரசிகரஞ்சனி சபாவில் இவர் கச்சேரி நடத்தினார். அதே வருடத்தில் ரமணியின் முதல் வானொலிக் கச்சேரியும் ஒலிபரப்பானது. தொடர்ந்து மாலியுடன் இணைந்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். ரமணியின் முதல் தனிக் கச்சேரி சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்ந்தபோது அவருக்கு வயது 22. அதுமுதல் கச்சேரி வாய்ப்புகள் பெருகின. பல்லடம் சஞ்சீவ ராவ், செம்பை வைத்தியநாத பாகவதர், ஆலத்தூர் சகோதரர்கள், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் எனப் பலர் ரமணியின் மேதைமையைப் பாராட்டி ஊக்குவித்தனர். அதே சமயத்தில் திருமணமும் நிகழ்ந்தது.
இயல்பாகவே ரமணிக்கு இருந்த தனித்திறமையும், கூர்த்த அவதானிப்பும், புதுமைகளைச் செய்யும் ஆர்வமும் அவரை ஒரு வெற்றிகரமான இசைக் கலைஞராக்கின. பிசிறில்லாமல் அநாயசமாக மேலே, கீழே சஞ்சரிக்கும் திறன், கிருதி தெளிவாகப் புரியும் வண்ணம் வாசிப்பது போன்றவை ரமணியின் தனித்துவமாக இருந்தன. பல்லாண்டு இசையனுபவமும், முறையாகக் கற்ற வாய்பாட்டுப் பயிற்சியும் அதற்கு உதவின. அதுவரை பக்கவாத்தியமாக இருந்த புல்லாங்குழலில் தனி இசைகச்சேரி நடத்தி, அதற்குத் தனி அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தவர்களுள் மாலியைத் தொடர்ந்து ரமணியும் மிக முக்கியமானவர். ரமணியின் கச்சேரியில் லால்குடி ஜயராமன், டி.என். கிருஷ்ணன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், பாலக்காடு மணி ஐயர் எனப் பலர் பக்கம் வாசித்துள்ளனர். கச்சேரி வாய்ப்புகள் பெருகப்பெருக தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று கச்சேரி செய்தார். இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் பெருகினர். தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, கனடா என்று உலகின் பல நாடுகளுக்கும் சென்று கச்சேரி செய்தார்.
கடினமான சாவேரி, தோடி, ரஞ்சனி போன்ற ராகங்களை அநாயசமாக வாசிக்கும் திறன் பெற்றவர் ரமணி. அந்தக் காலத்திலேயே வயலின் - புல்லாங்குழல் - வீணை ஜுகல்பந்திக் கச்சேரிகளை நிகழ்த்தியவர். மிகுந்த வரவேற்புக் கிடைக்கவே பல இடங்களிலும் அதே முயற்சியைத் தொடர்ந்தார். இதற்கு லால்குடி ஜயராமன், ஆர். வெங்கடராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றோர் உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து இரட்டைப் புல்லாங்குழல் கச்சேரி (மாலியுடன் இணைந்து), மூன்று புல்லாங்குழல் கச்சேரி (மகன் மற்றும் சீடர்களுடன் இணைந்து) ஐந்து புல்லாங்குழல் கச்சேரி (சீடர்களுடன்) எனப் பல புதுமைகளைச் செய்தார். பிரபல ஹிந்துஸ்தானிக் கலைஞர் ஹரிபிரசாத் சவுராசியா, பண்டிட் விஸ்வமோகன் போன்றோருடன் இணைந்து இவர் செய்த கர்நாடிக்-ஹிந்துஸ்தானி ஜுகல்பந்திக் கச்சேரிகள் உலகப் புகழ்பெற்றவை. திருவனந்தபுரம் வெங்கட்ராமன் (வீணை), லால்குடி ஜெயராமன் (வயலின்) உமையாள்புரம் சிவராமன் (மிருதங்கம்), ஏ.கே.சி.நடராஜன் (கிளாரினெட்) ஆகியோருடன் இணைந்து செய்த கச்சேரிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. கே.வி.நாராயணசாமி, பாலமுரளி கிருஷ்ணா, என். ராஜம், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் எனப் பிரபல இசைக் கலைஞர்களுடன் இணைந்து வாசித்திருக்கிறார். மகன் தியாகராஜன் ரமணியுடன் இவர் சேர்ந்து வாசித்த இணைக் கச்சேரிகள் (Duo Flute) மிகவும் புகழ்பெற்றவை. |
|
|
1972ல், ஜெர்மனியின் மியூனிக் ஒலிம்பிக்ஸில் குழல் வாசித்தார் ரமணி. சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் புல்லாங்குழல் வாசித்த முதல் கர்நாடக இசைக்கலைஞர் ரமணிதான். பேஸ் ஃப்ளூட் எனப்படும் நீண்டவகைப் புல்லாங்குழலை கர்நாடக இசையுலகிற்கு அறிமுகம் செய்தவரும் ரமணிதான். அதனை வாசிப்பதில் மிகவும் தேர்ந்தவர். தன்னையோ தனது கண்டுபிடிப்புகளையோ, தனது பெருமைகளையோ எப்போதுமே விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாதவர். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்த ரமணி, தமிழிசைச் சங்கத்தின் இசைப்பேரறிஞர் விருது பெற்றவர். சங்கீத நாடக அகாதமி விருது, பாபநாசம் சிவன் விருது, நாதநிதி விருது, அகில இந்திய வானொலியின் தேசியக் கலைஞர் விருது எனப் பல உயரிய விருதுகள் இவரைத் தேடிவந்தன. ஒஹையோ (மேரிலாண்ட்) கௌரவக் குடியுரிமையைப் பெற்றவரும்கூட. அரிசோனா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டமும் இவரைத் தேடிவந்தது.
"புல்லாங்குழல் இசையுலகில் ரமணியின் பாதிப்பு இல்லாமல் யாருமே இருக்க முடியாது" என்கிறார் பிரபல சங்கீத வித்வான் நாகை முரளிதரன். "ரமணி முத்தமிழ்ப் பேரவையின் தலைவராக இருந்தவர். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி எந்தக் காலத்திலும் எந்தப் பரிந்துரைக்கும் அவர் அணுகியதே கிடையாது. புல்லாங்குழல் என்றால் ரமணி, ரமணி என்றால் புல்லாங்குழல் என, புல்லாங்குழலில் இருந்து பிரித்து எண்ணப்பட முடியாதவர் ரமணி" என்று ரமணியின் நேர்மைக்கும் திறமைக்கும் புகழாரம் சூட்டுகிறார் கலைஞர் மு. கருணாநிதி.
குழலிசையைக் கற்றுக் கொடுப்பதற்காக 1983ல் சென்னையில் "ரமணி அகாடமி ஆஃப் ஃப்ளூட்" என்ற அமைப்பைத் தொடங்கினார் ரமணி. சென்னை, பங்களூரு, மும்பை மற்றும் உலகின் பல பகுதிகளிலும் கிளை விரித்திருக்கும் அந்நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களை உருவாக்கினார். அமைதியான முறையில் மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்திவந்த ரமணி, இளம் இசைக்கலைஞர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராகவும், அவர்களைப் ஊக்குவிப்பராகவும் இருந்தார். இன்றைக்கு வானொலி நிலையங்களிலும், இசைக்குழுக்களிலும் குழலிசைக் கலைஞராக உள்ள பலர் ரமணியிடம் இசை பயின்றவர்களே. தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரமணி அக்டோபர் 9, 2015 அன்று சென்னையில் காலமானார். ரமணியின் சீடர்கள் இன்று உலகெங்கிலும் அவரது புகழைப் பரப்பி வருகின்றனர். புல்லாங்குழல் இருக்கும்வரை ரமணியின் பெயரும் நிலைத்திருக்கும்.
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|