Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
நேர்காணல்
ராஜா கிருஷ்ணமூர்த்தி
R. மாதவன் - விவசாய விஞ்ஞானி
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2016||(1 Comment)
Share:
திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசிக்கு அருகே இருக்கும் உளுந்தை கிராமத்தில் இருக்கிறது அந்தத் தோட்டம். சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று, மண்ணின் மணம். தூரத்தே துவரைச் செடிகளின்மீது கிளிகள் கீச்கீச்சென்று குரல் எழுப்புகின்றன. 'இதுதான் நம்ம ஸ்பெஷல் கத்திரிக்காய்' என்று சொல்லி அவர் காய் ஒன்றைப் பறித்துக் காண்பிக்கிறார். கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவிற்கு அது பிரம்மாண்டமாக இருக்கிறது. பிரமிப்புடன் "ஒரு கிலோ என்ன விலைக்கு இதைக் கொடுக்கறீங்க" என்கிறோம். "இது பீஸ் ரேட்ல போகும். ஒரு பீஸ் 60, 70 போகும். பீட்சாவிலே யூஸ் ஆகுங்கறதுனால சமயத்துல 100 ரூபாய்க்குக் கூட வாங்குவாங்க" என்கிறார். ஒரு காய்க்கான உற்பத்திச்செலவு ரூ.2.85 ஆகுமாம். "ஒரு செடியில் ஏழெட்டு காய்க்குமேல காய்க்கும். ஒரு ஏக்கர்ல 25000 செடி வைக்கலாம்" என்கிறார். கூட்டிக் கழித்துப் பார்த்ததும் நம் பிரமிப்பு அதிகமாகிறது.

"இந்தச் செடிங்க எல்லாம் சமீபத்துல பெஞ்ச பெருமழைல கிட்டத்தட்ட பத்து நாளைக்குமேல தண்ணீல மூழ்கி இருந்தது. 100 வருஷ மழையத் தாக்குப் பிடிச்சு நின்ன பயிருங்க இது," சொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் மாதவன். "விவசாயத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்" என்று அடித்துச் சொல்கிறார். இயற்கை வேளாண்மை, ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பற்றியெல்லாம் மிக வித்தியாசமான கருத்துக்களைச் சொல்கிறார். IIT படித்துவிட்டு, விவசாயத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டு அதில் சாதித்து வருபவர். "நம் நாட்டுக்கு நிறைய மாதவன்கள் தேவை" என்று டாக்டர். அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவர். ஒரு காலைப்பொழுதில், மாதவனை அவருடைய தோட்டத்தில் சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து....

*****


தென்றல்: விவசாயத்தின் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
மாதவன்: பள்ளியில் படிக்கும்போதே விவசாயத்தில் ஆர்வம் இருந்தது. மைலாப்பூரில் என்னோட வீட்டில சின்னச்சின்ன தொட்டிகளில் நிறையச் செடிகளை வளர்ப்பேன். அது 1979-80 காலகட்டம். மொட்டைமாடி கல்டிவேஷன் எல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது. அப்போதே நான் குடைமிளகாய், முட்டைக்கோஸ் எல்லாம் டெரஸில் விளைவித்திருக்கிறேன். விவசாயம் என்பது அப்போதே எனக்கு ஒரு ஹாபி. நிறையப் பரிசோதனைகள் பண்ணிப் பார்ப்பேன். அக்காலகட்டத்தில் பலரும் அறிந்திராத ப்ராக்கொலி (broccoli) போன்ற காய்கறிகளை விளைவித்திருக்கிறேன். ஐ.ஐ.டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கை முடித்ததும் எனக்கு ONGCயில் வேலை கிடைத்தது. அங்கே 14 நாள் வேலை; மீதி 14 நாள் விடுமுறை. அதனால் நிறைய நேரம் கிடைத்தது. ஓ.என்.ஜி.சி சைட்டுகள் எல்லாமே நதிக்கரைகளின் ஓரமாகவே இருக்கும். நரிமணம், நன்னிலம், அரியாத்தமங்கலம், கோதாவரி புராஜெக்ட், குஜராத், அஸ்ஸாம் என்று பல இடங்களில் வேலைசெய்தேன். எல்லாம் கிராமப்பகுதிகள். ஓய்வுநேரத்தில் விவசாய நிலங்களுக்குச் செல்வேன். அவர்கள் அதிக வேலைப்பளுவில் கஷ்டப்படுவதைப் பார்த்து மனம் வருந்தினேன்.

தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறி இருக்க விவசாயம் மட்டும் ஏன் இன்னும் அப்படியே பழைய முறைகளில் இருக்கிறது என்று யோசித்தேன். இதை மாற்ற என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தேன். செங்கல்பட்டு அருகே ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன். எனக்கு விவசாயம் பற்றி முழுமையாக அப்போது எதுவும் தெரியாதென்றாலும் ஆர்வத்தாலும், விவசாயிகளின் சுமையை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தாலும் விவசாயத்தில் இறங்கினேன். எனது பரிசோதனை முயற்சிகளை என் சொந்தநிலத்தில் செய்ய ஆரம்பித்தேன். அதுதான் தொடக்கம்.கே: ஆரம்பத்தில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன?
ப: நம்முடையது மாதிரி உலகத்தில் எந்த நாட்டிலும் சீதோஷ்ண நிலை கிடையாது. ஆனால், உலகிலேயே நாம்தான் மிகவும் குறைவாக உணவு உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். காரணம், புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் இல்லை. அதற்கான கருவிகளும் இல்லை. விவசாய வேலைகளை எளிதாக்க முதலில் அதற்கான கருவிகளை உருவாக்குவதில் நான் கவனம் செலுத்தினேன். நான் சம்பாதித்த எல்லாப் பணத்தையும் நிலத்திலேயே முதலீடு செய்தேன். மண் பரிசோதனை, நிலத்தைச் சீர்படுத்துவது எல்லாம் செய்தேன்.

இந்தியாவில் ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். அதனால் மிகப்பெரிய அளவில் விவசாயம் இந்தியாவில் சாத்தியமில்லை. வானம் பார்த்த பூமி; தண்ணி இல்லை என்பதெல்லாம் விவசாயிகளின் புலம்பலாக இருக்கிறது. ஆனால் தண்ணீரும் இல்லாமல் நிலமும் இல்லாமல் இஸ்ரேலில் விவசாயம் செய்கிறார்கள் என்று அறிந்த நான் அங்கே போனேன். டெல் அவீவில் தங்கி, அங்கிருந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் கிட்டத்தட்ட 20 நாட்கள் விவசாயம் குறித்த தகவல்களைத் திரட்டினேன். மண்ணே இல்லாமல் செயற்கை ஊடகத்தை உருவாக்கி, காய்கறிகளைப் பயிரிடுகின்றனர். நிலம் இல்லை. போதுமான அளவு தண்ணீர் கிடையாது. குளிர் அதிகம். அடிக்கடி போர் நடக்கும் சூழல். இப்படி இருந்தும் அவர்கள் சிறப்பாக விவசாயம் செய்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் டாக்டர். லக்ஷ்மணன் அவர்களைச் சந்தித்தேன். அது எனது வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ஆனது.

கே: ஓ! அவரைப்பற்றிச் சொல்லுங்கள்..
ப: டாக்டர் லக்ஷ்மணன் ஒரு NRI. அவர் அமெரிக்காவில் விவசாயத்துறை கன்சல்டிங் செய்கிறார்! அவரைச் சந்தித்து எனது விருப்பங்கள், ஐடியாக்களை சொன்னேன். அவர் ஓக்லஹாமா யூனிவர்சிடியில் நிலவள விஞ்ஞானி. நாற்பது வருடங்கள் அங்கேயே இருந்தவர். அவரது ஆலோசனையினால் அமெரிக்காவில் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதனால் அவர் அமெரிக்க விவசாயிகளிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறார். விவசாயத்தைப் பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் சொல்லித்தருமாறு அவரைக் கேட்டுக்கொண்டேன்.

அவர் எனக்கு குருவாகக் கிடைத்தது எனக்குக் கிடைத்த கொடுப்பினைதான். அதே மண், அதே விதைதான். நான் செய்தது மண்ணுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களை அதிகப்படுத்தியதுதான். டாக்டர். லக்ஷ்மணன் சோளப் பயிர்களில் மிகப்பெரிய விற்பன்னர். என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும், நான் கேட்பது முட்டாள்தனமாக இருந்தாலும், சகித்துக்கொண்டு பொறுமையாக பதில் தருவார். அவரிடம் நான் கற்றுக்கொண்டதும், அதைச் சரிவரப் பின்பற்றி வருவதும்தான் எனது வெற்றிக்கு முக்கியக் காரணம்.

கே: குறைவான தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்வது சாத்தியம்தானா?
ப: உண்மையில் விவசாயத்திற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. எவ்வளவு தண்ணீரை, எப்படிப் பயிர்களுக்கு அளிப்பது என்ற தொழில்நுட்பம் நமக்குத் தெரியாததுதான் பிரச்சனை. விதை விதைப்பது, பயிர்களைத் தண்ணீரிலேயே வைத்திருப்பது, நாற்றைப் பறித்து வேறிடத்தில் கொண்டுபோய் நடுவது இதெல்லாம் தேவையே இல்லை. ஒரு செடி வளரும்பொழுது, வளர்ச்சியின் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை அறிந்து நீர் பாய்ச்சவேண்டும். ஆனால் வரப்பை வெட்டி, வாய்க்காலைத் திறந்து, ஒரேயடியாகத் தண்ணீரைப் பாய்ச்சி விடுகிறோம். அதிகத் தண்ணீர் பாய்ந்தால் பயிர் தூங்கிவிடும். அப்புறம் எப்படி நல்ல விளைச்சல் கிடைக்கும்? தேவைக்கு மேல் தண்ணீரைக் கொடுத்து செடியின் உற்பத்தித் திறனை நாம் குறைக்கிறோம்.

இஸ்ரேலில் கலிலீக் கடல் (sea of galilee) என்று ஒரு சின்ன ஏரிதான் இருக்கிறது. அந்தத் தண்ணீருக்காக லெபனான், ஜோர்டன், சிரியா என்று எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த தண்ணீரில் அவர்களால் எப்படி அதிக விளைச்சலைக் கொடுக்கமுடிகிறது?. இத்தனைக்கும் அங்குள்ள சீதோஷ்ண நிலையும் விவசாயத்திற்கு ஏற்றதல்ல.

டெல் அவீவுக்கு வெளியே, ஹாய்ஃபா என்ற இடத்தில் ஒரு வாழைத்தோப்பைப் பார்த்தேன். நிலத்தில் நடக்கவே முடியவில்லை, அவ்வளவும் பாறை! மேலே பார்த்தால் பச்சைப்பசேல் என்று வாழைத்தோப்பு. பின்னால் நான் ஆராய்ச்சி செய்தபோதுதான் தெரிந்தது, ஒரு பயிருக்குத் தேவை 40% ஈரப்பதம் மட்டுமே! மீதி 60% அது காற்றிலிருந்து எடுத்துக்கொள்கிறது. எங்கே தண்ணீர் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் வேர்கள் அப்படியே தேங்கி நின்றுவிடும், கீழே பரவிச் செல்லாது. வேர் சரியாகப் பிடிக்கவில்லை என்றால் உற்பத்தி எப்படி அதிகமாக இருக்கும்? இந்திய விவசாயத்தில் நாம் தண்ணீரைப் பாழடித்துக் கொண்டிருக்கிறோம்.

கே: நீங்கள் என்னென்ன பயிரிடுகிறீர்கள், முப்போகமும் விளைவிக்க முடிகிறதா?
ப: மூன்றுபோகமும் நான் விளைவிக்கிறேன். ஆனால் வருடத்தில் இரண்டரை மாதங்கள் எதுவும் செய்யமாட்டேன். அதாவது கோடைக்காலத்தில் கத்திரி வெய்யிலில் எதையும் பயிர் செய்யமாட்டேன். நிலத்தை உழுது வெய்யில்காய விட்டுவிடுவேன். அப்போது பிற பராமரிப்பு வேலைகளைச் செய்வேன். அதுபோல அக்டோபர் இறுதிமுதல் நவம்பர் மூன்றாவது வாரம்வரையான கடுங்குளிர் காலத்திலும் எதுவும் செய்யமாட்டேன். அப்போது கால்வாய்கள், வடிகால்களைச் சீர்படுத்துவேன்.

முதல்போகம் நெல் பயிரிடுவேன். நெல்லுக்கு அதிகம் தண்ணீர் தேவையில்லை. சூரிய வெளிச்சம் இருந்தாலும், குறைந்தாலும் அது சமாளித்துக்கொள்ளும். அதிக ஈரப்பதம் இருந்தாலும் தாங்கிக்கொள்ளும். இரண்டாம் போகம் காய்கறிகள். பிப்ரவரி, மார்ச் வரை அதற்கான நல்ல சீதோஷ்ண நிலை இருக்கும். இப்போது கோஸ், அவரை, வெண்டை, கத்திரி, குடைமிளகாய், முள்ளங்கி போன்றவற்றைப் பயிரிட்டிருக்கிறேன். சில வாரங்களில் அறுவடை ஆகிவிடும். ஆனதும், அதே வயல்களில் சூரியகாந்தி, உளுந்து, பச்சைப்பயறு பயிரிடுவேன். வெயிலைத்தாங்கி வளரக்கூடிய குறுகியகாலப் பயிர்கள் இவை. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல்வாரத்திற்குள் இவை அறுவடை ஆகிவிடும்.கே: பயிர்களுக்கு நிச்சயம் பூச்சிகளால் பாதிப்பு உண்டாகும். எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்?
ப: தாய்ப்பூச்சி தங்குவதற்கு, முட்டையிடுவதற்கு இடம் வேண்டும். பூச்சி தங்குமிடம் செடியாக இருக்காது. ஏனென்றால், செடி வளர்வதற்கு முன்பே பூச்சி முட்டையிட்டால்தான், செடி வளரும்போது அதன் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கும். அதனால் பூச்சிகள் வயலில் இருக்கும் களைகளில்தான் முட்டையிடும். குஞ்சுகள் பொரிந்து, உணவுக்காகப் பயிரை நாடிவரும். பல்கிப் பெருகிப் பயிர்களை நாசம் செய்யும்.

இதனைத் தவிர்ப்பது எப்படியென்றால் பூச்சி முட்டையிடுவதற்கான வழியே இல்லாமல், அதாவது களைகளே இல்லாமல் வயலைச் சுத்தமாக வைக்க வேண்டும். நம்மால் முழுமையாக இப்படிச் செய்யமுடியாது. நான் 75-80% செய்கிறேன். இதனால் அடிக்கடி பூச்சிகொல்லி மருந்து அடிக்கும் தேவை எனக்கு இல்லை. கோஸ் மிகவும் அதிகம் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகும். நானும் ஒரு 15 வருடத்திற்கு முன்னால் மிக அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்துகளை கோஸிற்குப் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால், இப்போது இரண்டு அல்லது மூன்று தடவையோடு நிறுத்திவிடுகிறேன். பூச்சிக்கொல்லியைத் தவிர்க்க முடியாதபோது பயன்படுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

கே: நீங்கள் செய்வது இயற்கை விவசாயமா, இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்தி வருகிறீர்களா?
ப: விவசாயத்தில் இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் போடுவது இயற்கை உரமா செயற்கை உரமா என்று செடிகளுக்குத் தெரியாது. தண்ணீரில் கரையக்கூடிய உரங்களே செடிகளுக்கு உணவு. வேர்மூலம் அந்தச் சத்துக்களை அவை உறிஞ்சிக் கொள்கின்றன. சத்துக்களை எப்படி அளிக்கிறோம் என்பதுதான் முக்கியம். பயிருக்குத் தேவையானபடி முறையாகக் கொடுக்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

கே: பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், செயற்கை உரங்களாலும் நிறையப் பாதிப்புகள் ஏற்படுவதாகச் சொல்கிறார்களே...
ப: பல விவசாயிகள் உரக்கடைக்குச் சென்று அவர்கள் தரும் மருந்துகளை வாங்கி அப்படியே பயிர்மீது தெளித்து விடுகின்றனர். செடிகளுக்கான உணவை ஃபெர்ட்டிலைசர் என்கிறார்கள். தற்போது 'கெமிக்கல்ஸ்' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மனித உடலைப் போன்றதுதான் செடியும். நமக்கு எப்படி கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், அயர்ன் என்று பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகின்றதோ அதுபோலத்தான் செடிகளுக்கும். எப்படி ஒரு குழந்தை வளர ஊட்டச்சத்து அவசியமோ, நோய்த் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் அவசியமோ அதுபோலத்தான் செடிகளுக்கு உரமும், பூச்சி மருந்துகளும். நம்மைப்போலவே செடிகளும் நோய்வாய்ப்படும் போது அதற்குத் தேவையான மருந்துகளை அளித்து குணப்படுத்துகிறோம். நமக்கு infection, செடிகளுக்கு வியாதி. நமக்கு நுண்ணுயிர்க்கொல்லி (antibiotic), செடிகளுக்குப் பூச்சிக்கொல்லி.

மருந்துகளையும், உரங்களையும் சரியாகப் பயிர்களுக்கு அளிக்கத் தெரியாததால்தான் பயிர்கள் பாழாகின்றனவே தவிர, பூச்சிக்கொல்லிகளாலோ, உரங்களினாலோ அல்ல. அதுபோலச் செடிகளுக்கு தவறான முறையில் மருந்து தெளிப்பதனால் பூச்சிகளுக்கு மருந்தெதிர்ப்புச் சக்தி வந்துவிட்டது. அதனால்தான் இன்றைக்கு வீரியமுள்ள பூச்சிமருந்தை அடித்தாலும்கூட பூச்சிகள் அழிவதில்லை.
கே: அப்படியானால் எந்தமுறையில் அவற்றை பயிர்களுக்கு அளிக்க வேண்டும்?
ப: எந்தெந்த பாதிப்பு உள்ளான பயிர்களுக்கு எப்படி எப்படி மருந்து தெளிப்பது என்ற அறிவியல் முறை உள்ளது. சிஸ்டமிக் மருந்து என்றால் செடியே விஷமாகும். கான்டாக்ட் மருந்து என்றால் டார்கெட்டை மட்டுமே அழிக்கும். ரெசிடுவல் என்ற ஒன்று உண்டு. அதாவது பயிர் விளைச்சல் கண்டுவிட்டது என்றால் ரெசிடுவல் டாக்ஸிசிடி கொண்ட பயிர்களுக்கு மருந்து அடிக்கக்கூடாது. அடித்தால் பயிரின் விளைபொருளில் விஷம் ஏறிவிடும். அதுபோல அறுவடை இடைவெளி தேவை. அதெல்லாம் இங்கே முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் மகாராஷ்டிராவிற்குச் சென்றிருந்தேன். ஒரு வயலில் கத்திரிக்காய் பயிரிட்டிருந்தார்கள். அதற்கு மருந்தடித்துக் கொண்டிருந்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு விவசாயி ஒரு காயை எடுத்துக் கொண்டுவந்து காண்பித்தார். அந்தக் கத்திரிக்காயில் ஒரு பக்கம் மட்டும் அழுகி இருந்தது. "இதை விவசாய ஆஃபிஸில் காட்டினேன் சார். பூஞ்சாணக் கொல்லி அடிக்கச் சொன்னார்கள். அடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். உண்மையில் பூஞ்சாணப் பிரச்சனை இரண்டாவதுதான். அடிப்படைப் பிரச்சனை, அந்த மண்ணில் கால்சியம் சத்துக்குறைவால் cell wall collapse ஆகி இருக்கிறது, கத்திரிக்காய் முழுவதாக வடிவெடுக்கும் முன்னால், அந்த இடம் இளகி பாக்டீரியா உள்ளே வந்துவிட்டது. அடிப்படையாக மண்ணில் கால்சியம் சத்தை நிவர்த்தி செய்வதுதான் மிக முக்கியம். பாக்டீரியாவை வளர விட்டுவிட்டு அதற்கு மருந்து அடிப்பதால் பயனில்லை.

அதுபோல இன்றைக்கு உரத்தை வாங்கிக் கொண்டுபோய் நிலத்தில் அல்லது பயிர்களின் மீது தூவி விடுகிறார்கள். இதனால் பயனில்லை. எப்படி உரம் இடவேண்டும் என்பதை எனக்கு டாக்டர் லக்ஷ்மணன் சொல்லிக்கொடுத்தார். ஒரு பயிர் உயிர்வாழ்வது வேர்களின் மூலமாகத் தேவையான சத்துக்களை உறிஞ்சித்தான். மேலே உரத்தைத் தூவினால் சத்துக்கள் செடியின் வாய்க்கு, அதாவது அதன் வேருக்குச் செல்வதில்லை. செடியின் வேருக்கு அருகில் சரியான அளவில் உரங்களை இடவேண்டும். அப்படிச் செய்தால்தான் முழுப்பயன் கிடைக்கும்.கே: மண்வளத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
ப: மண் பரிசோதனை என்பது நமது உடலுக்குச் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மாதிரி. ஆனால் இன்றைக்கு அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்றால், ஒரு ஊருக்குக் கொஞ்சம் மண்ணை சாம்பிளாக எடுத்து டெஸ்ட் செய்துவிட்டு, ரிசல்ட்டை செராக்ஸ் செய்து, அந்த ஊரிலிருந்து வருபவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். இது எப்படிச் சரியாகும்? ஒவ்வொருவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யாமல், ஒரு குடும்பத்திற்கு ஒருவரைப் பரிசோதனை செய்துவிட்டு, ரிசல்ட்டை குடும்பத்தினர் எல்லாருக்கும் கொடுப்பது மாதிரிதான் இது. மண் பரிசோதனை முடிவு சரியில்லாததால், அதை நம்பி விவசாயம் செய்வதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நம் நிலத்தில் மண் பரிசோதனை செய்து, மண்ணில் எந்தச் சத்து அதிகமாக உள்ளது, எது குறைவாக இருக்கிறது, எந்தச் செடிக்கு என்னவிதச் சத்து தேவை, அதை எந்த அளவுக்கு, எப்படிக் கொடுக்க வேண்டும், அந்தச் சத்து செடிக்குக் கிடைக்கக்கூடிய இடத்தில் உள்ளதா, இல்லையா என்று சொல்வதுதான் மண் பரிசோதனை. அது முறையாகச் செய்யப்படுவதில்லை.

ஒருதடவை நாம் வயலில் அறுவடை செய்தோமென்றால் அந்த மண்ணிலுள்ள சத்துக்களை வெளியே எடுக்கிறோம். மீண்டும் அந்தச் சத்துக்கள் மண்ணிற்கு எப்படிக் கிடைக்கும்? இப்படியே நாம் 30, 40 வருடங்களாக சுரண்டி எடுத்ததனால் இன்றைக்கு மண் மலடாகிக் கிடக்கிறது. அடுத்து காடுகளை அழிக்க ஆரம்பித்தோம். அங்கு விவசாயம் செய்தோம். அதன் வளமும் குறையக் குறையப் பஞ்சம் வந்தது. அப்புறம் 'பசுமைப் புரட்சி' வந்தது. அதையும் தவறுதலாகப் பயன்படுத்தினோம். தற்போது மண்ணின் வளம் பெருவாரியாகக் குறைந்துவிட்டது. அதனால்தான் இன்றைக்கு விளைச்சல் இல்லை. விளைபொருளில் போதிய சத்துக்கள் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் நம் மண்ணில் இன்றைக்குச் சத்துக்களே இல்லை. சத்துக்களே இல்லாத நிலத்தில் செடி வளர்வதென்றால் பஞ்சத்தில் இருக்கும் ஒரு தாய் பத்துக் குழந்தைகளுக்குப் பாலூட்டுவது மாதிரிதான். தன்னையே காப்பாற்றிக்கொள்ளும் சக்தி இல்லாத தாய், தன் குழந்தைகளுக்குச் சக்தி கொடுப்பது எப்படிக் கஷ்டமானதோ அதுபோலத்தான் வளமே இல்லாத ஒரு நிலத்தில் பயிர் வளர்வதும். செடியின் தாய், மண். அது வளமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

கே: விவசாயம் மேம்பட நாம் செய்ய வேண்டியது என்ன?
ப: முதலில் விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாட்டைக் கொண்டுவர வேண்டும். மனிதனின் வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும். இன்றைக்கும் 30, 40 வருடங்களுக்கு முன்னால் இருந்த முறைகளையே பின்பற்றினால் எப்படி? புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். விவசாயப் பட்டப் படிப்பில் சேரும் மாணவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அந்த ஊரின் வேளாண்மையில் இருக்கும் பிரச்சனைகள் என்ன, எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்ற தீர்வை முன்வைக்க வேண்டும். அதுபோலப் பூச்சிமருந்தின் உபயோகத்தைப் பத்தில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும். அந்தக் கிராமத்தின் உற்பத்தித் திறனைப் பலமடங்கு அதிகரிக்க வேண்டும். படிப்பை முடிப்பதற்கு முன் இவை அனைத்தையும் அவர்கள் செய்துவிட்டால் அவர்களுக்குப் பட்டமளித்துவிடலாம்.

இன்றைக்குக் கல்லூரியில் விவசாயத்தைப் படிப்பதில் எந்தப் பலனுமில்லை. நிலத்திற்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள பிரச்சனைத் தீர்க்க முற்படும் போதுதான் அவனுக்குத் தன்னம்பிக்கை அதிகமாகிறது. திறன் வளர்கிறது. அவர்களால் நாளை விவசாய உலகில் மாற்றங்களைச் செய்யமுடியும். ஆனால், அவர்களுக்கு அனுபவபூர்வமான அறிவே கொடுக்கப்படுவதில்லை. சும்மா கால் சென்ட், அரை சென்ட் நிலத்தைக் கொடுத்து அவர்களை பிராக்டிகல் செய்யச் சொல்வதைவிட ஒரு கிராமத்தையே விவசாயத்தில் மேம்படுத்தச் செய்வது சரியான அனுபவத்தைத் தரும்.கே: விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது, நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
ப: பொதுவாகவே எந்த வேலைக்கும் ஆள் கிடைக்காத நிலைமைதான் இன்றைக்கு உள்ளது. விவசாயத்தில் வேலை நிரந்தரமில்லை என்று நினைத்துச் சிலர் வேறு வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர். ஆனால் என்னுடைய தோட்டங்களில் நான் முப்போகமும் விளைவிக்கிறேன். அதனால் வருடம் முழுவதும் வேலை இருக்கும். மேலும் கருவிகளை அதிகம் பயன்படுத்துவதால் எனக்கு அதிக ஆட்கள் தேவையில்லை. கிடைக்கும் ஆட்களுக்கு நான் பிறரைவிட அதிகக் கூலி தருவதால் எனக்கு ஆள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு ஏக்கருக்கு களைபறிக்க ஒரு நாளைக்கு 18 பெண் ஆட்கள் தேவை. அப்படியே ஆள் கிடைத்துச் செய்தாலும் அது 100% முழுமையாக இருக்கும் என்று சொல்லமுடியாது. அதற்காக நான் ஒரு கருவியைத் தயாரித்திருக்கிறேன். மாடு இழுத்துச்செல்லும் சிறிய கருவி. ஒரு ஜதை மாடும், இந்தக் கருவியும் இருந்தால் ஒரு நாளில் 3 ஏக்கரில் களை பறித்துவிடலாம். எது மலிவு? எனக்கு 18 பேர் கூலி மிச்சம். ஒரே ஒரு வேலையாளுக்கும் மாட்டுக்கும் செலவழித்தால் போதும். மூன்று நாள் வேலை ஒரே நாளில் நடந்துவிடும். கருவியின் விலையும் அதிகமில்லை. மேலும் பல வருடங்களுக்கு அதைப் பயன்படுத்தலாம். இதுமாதிரிக் கருவிகளைக் கொண்டு வேலை செய்யும்போது வேலையும் சீக்கிரம் நடக்கும். செலவும் குறைவு. இதைத்தான் நான் செய்துவருகிறேன். இந்த நுட்பங்களைப் பயன்படுத்தாமல் அதிகச் செலவு செய்துவிட்டு, நஷ்டம் என்கிறார்கள். முறையாகச் செய்தால் விவசாயத்தைப்போல லாபம்தரும் தொழில் வேறெதுவும் இல்லை.

என்னுடைய வேலையாட்கள் குடும்பத்தோடு பண்ணையில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளின் கல்வி முதற்கொண்டு உணவு, உடை என அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். தற்காலிகமாக வேலை செய்ய வருபவர்களுக்கும் கூலியோடு கூடவே காய்கறி, தானியங்கள் என்று கொடுத்துவிடுவதால் எனக்கு ஆள் கிடைப்பதில் பிரச்சனை இருப்பதில்லை.

கே: நீங்கள் உருவாக்கிய கருவிகள் பற்றி..
ப: களைதான் முதல் விரோதி. ஆனால் அதைப் பறிக்க அதிக மனித ஆற்றல் தேவைப்படுகிறது. அதைக் குறைக்க ஒரு கருவியை உருவாக்கினேன். அந்தக் கருவியை மாடுகளைக் கொண்டு பயன்படுத்தலாம். இது சிறிய அளவில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். அதன் மேம்பட்ட வடிவத்தை டிராக்டரில் இணைத்துப் பயன்படுத்தலாம். இது பெருவிவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

இரண்டாவது உரமிடும் கருவி. அதற்குச் செடியின் அருகில் சிறுகுழிகளைத் தோண்ட வேண்டும். அதில் அந்த உரத்தை இட்டால் செடி அதனைத் தன் வேர்கள் மூலம் உறிஞ்சிக் கொண்டு விடும். ஒரு ஏக்கரில் 25000 செடி வைப்பதாக இருந்தால் அதற்கு 50000 பள்ளம் தோண்ட வேண்டும். இது போன்று ஒரு செடியின் ஆயுள்காலத்தில் மூன்றுமுறை செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? நான் இதற்காக ஒரு கருவியை உருவாக்கினேன். அதற்கு முன்னால், நானே பத்து சென்ட் நிலத்தில் என் கையால் தேவையான அளவு குழிகளைத் தோண்டி அதில் உரத்தை இட்டுப் பரிசோதித்தேன். மற்றுமொரு பத்து சென்டில் பொதுவாக உரத்தைப் போட்டுவிட்டேன். வளர்ந்தபின் பார்த்தால் குழி தோண்டி உரங்களை இட்ட செடி மிகச்செழிப்பாக, நன்கு ஊட்டமுள்ளதாக வளர்ந்திருந்தது. அதன் பின்னர்தான், குழி தோண்டி உரமிடுவதை இயந்திரத்தின் மூலம் செய்ய நிச்சயித்து அந்த இயந்திரத்தை வடிவமைத்தேன். அதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆயின. இதையும் மாடு அல்லது டிராக்டருடன் பயன்படுத்தலாம். தேவையான உரத்தை அது குறிப்பிட்ட இடத்தில் இடும். தேவையான அளவுக்குச் செடியருகே குழி பறிக்க இதனை அட்ஜஸ்ட் செய்து கொள்ளமுடியும். உரம் வீணாகாமல் அளவோடு பயன்படுகிறது. இன்றைக்கு இந்தியா முழுவதும் சுமார் 500 பேருக்குமேல் இதைப் பயன்படுத்துகின்றனர்.

நான் இப்போது, செடியை வைப்பதற்கு முன்னாலேயே குழியமைத்து உரத்தைப் போட்டுவிடுகிறேன். ஏனென்றால் மண்ணில் போடப்பட்ட உரம் வேறெங்கும் செல்லாது என்பது டாக்டர் லக்ஷ்மணன் அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஆக, செடி வளர்ந்த பிறகு உரம் போடுவதைவிட நான் அதை முன்னாலேயே போட்டுவிடுகிறேன். ஆனந்த விகடனின் ஆசிரியரும் உரிமையாளருமாக இருந்த திரு எஸ். பாலசுப்பிரமணியன் எனது கருவிகளுக்காக என்னைப் பாராட்டியிருக்கிறார். அவர் விவசாயத்தில் மிகுந்த ஆர்வமுடையவர்.

அடுத்த கருவி ஆழ உழுவதற்கான கருவி. மண்ணின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக இதைச் செய்தேன். மண்ணின் இறுக்கம் தளர்ந்தால்தான் தண்ணீர் நன்கு உறிஞ்சப்படும். வேர்கள் மண்ணில் பரந்து ஓடி செடிகள் நன்கு வளரும். வேர் நன்றாக ஓடினால் செடிகளுக்குச் சத்து நிறையக் கிடைத்து உற்பத்தி பெருகும். இந்தக் கருவி மூன்று அடிவரை ஆழமாக உழுது மண்ணைத் தளர்த்தும். அதுபோல பூச்சி மருந்து தெளிப்பான், தானியங்களைப் பிரிக்க உதவும் கருவி போன்றவற்றையும் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறேன். (பார்க்க: படங்கள்)

கே: விளைந்ததை எப்படிச் சந்தைப்படுத்துகிறீர்கள்?
ப: இன்றைக்கு நம்மிடம் உற்பத்தி குறைவு. தேவை அதிகம். தேவையுள்ளவர்கள் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள். அதுவும் தரமான பொருளாக, நிறைய என்னால் கொடுக்க முடிவதால் விற்பனை ஒரு பிரச்சனையே இல்லை.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: விவசாயத்தைப் பலரும் கேவலமாக நினைக்கிறார்கள். "தோட்ட வேலையா செய்யறே?" என்று கிண்டல் செய்தவர்கள் உண்டு. "தோட்டவேலை செய்பவனை கேவலமாக நினைக்கிறீர்கள்! அப்புறம் ஏன் ஐயா தோட்டத்தில் விளைந்ததைச் சாப்பிடுகிறீர்கள்?" என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லமாட்டார்கள். என்றைக்கு விவசாயத்தைக் கேவலமான தொழிலாக நினைக்க ஆரம்பித்தார்களோ அதுமுதல் விவசாயம் பின்தங்கிப் போய்விட்டது. அதன் பயனை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறி விவசாயத்தை மதிப்புள்ள தொழிலாக மாற்றவேண்டும். இதனைத் தரமற்ற தொழிலாக ஆக்கியதால்தான் இன்றைக்குப் பட்டினிச் சாவுகளும், விவசாயி தற்கொலைகளும் அதிகமாகி இருக்கின்றன. இது மாற வேண்டுமானால் படித்தவர்கள், தொழில் நுட்ப அறிவுள்ள, உழைக்கத் தயாராக உள்ள இளைஞர்கள் இந்தத் தொழிலுக்கு வரவேண்டும். இதன்மூலம் பணமும் சம்பாதிக்கலாம். மனித குலத்துக்கும் சேவை செய்யலாம். உணவுப் பற்றாக்குறை ஒழியும். நல்ல ஆற்றலுள்ள சந்ததிகள் உருவாகும். ஆகவே படித்த இளைஞர்களை நான் விவசாயத்திற்கு வரவேற்கிறேன்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


அப்துல்கலாம் ஒரு தூண்டுகோல்
விவசாயம் பற்றிய கட்டுரைகளை நான் தினமணியில் எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் படித்து, பத்திரிகைகள் மூலம் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்துல்கலாம் அவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினார். அவரது உதவியாளர் என்னுடன் பேசினார். எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அவர் விளக்கமாகச் சொன்னதன் பின்புதான் புரிந்தது. நான் தோட்டத்தில்தான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று சொன்னேன். நான் அப்போது செங்கல்பட்டில் தோட்டம் வைத்திருந்தேன். கலாம் மறுநாளே புறப்பட்டுவந்தார். என்னுடன் டிஃபன், லஞ்ச் எல்லாம் சாப்பிட்டு, ஒருநாள் முழுக்க இருந்தார். எனது விவசாய முறைகள், பரிசோதனை முயற்சிகள் எல்லாம் ஆவலுடன் கேட்டுக் கொண்டார். ஐ.ஐ.டி.யில் படித்தவன், வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்கிறானே என்று அவருக்கு ஒரே சந்தோஷம். அவருடைய அனுபவங்கள், தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டார். நான் அப்போது வயலில் சோளம் போட்டிருந்தேன். அதன் முத்துக்களை எண்ணிப் பார்த்துவிட்டு, "மாதவன். இதன் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும். அளவில் இன்னும் பெரிதாக்க வேண்டும். என்ன செய்யவேண்டுமோ அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள்" என்றார். உற்பத்தித் திறனை அதிகரிக்கச் சொன்னது எனக்கு ஒரு டானிக் போல இருந்தது. அதற்கு என்னென்ன சத்துக்கள் தேவை, அது எனது மண்ணில் இருக்கிறதா, இல்லையென்றால் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு அவர் சொன்னது தூண்டுகோலாக இருந்தது.

நான் ஆராய்ச்சி செய்து சோளத்தின் அளவையும் முத்துக்களின் எண்ணிக்கையையும் அதிகமாக்கினேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பட்சம் 750 கிலோதான் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான்மட்டும் தான் 1 1/2 டன் எடுத்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு ஆறு டன் எடுக்கிறேன். இதற்குத் தூண்டுதலாக இருந்தவர் டாக்டர் கலாம்தான்.

- ஆர். மாதவன்

*****


யாரும் விவசாயம் கற்கலாம்
முன்பெல்லாம் அரசாங்கம் மூலமாக விவசாயிகளைச் சேர்த்து அவர்களுக்கு நவீனமுறை விவசாய உத்திகள் சொல்லித் தந்தேன். ஆனால், அது ஒரு கட்டத்துக்குமேல் நகரவில்லை. அதனால் படித்தவர்களும் விவசாயம் பண்ணலாம்; மற்ற தொழில்களைப்போல இதிலும் நிறையப் பணம் பண்ணமுடியும் என்பதை ஒரு ப்ராஜெக்டாக வடிவமைத்தேன். டாக்டர். லக்ஷ்மணன் அதற்கு மிக உதவினார். அதன்படி படித்த, விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நான் இந்தப் பயிற்சியைத் தருகிறேன். பட்டம் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் என் பயிற்சிக்கு வரலாம், விவசாயக் கல்லூரியில் படித்தவர்களைத் தவிர. ஏன் என்றால் விவசாயம் படித்த அவர்கள் மூளையில் உள்ளதை அழிப்பதற்கே என் வாழ்நாள் போதாது. பயிற்சிகளின்போது பலரும் என்னிடம் சொல்வது நிலத்தின் விலை அதிகம் என்பதுதான். நீங்கள் நிலத்தை வாங்க வேண்டாம். நிலத்தைச் சும்மா போட்டு வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து குத்தகைக்கு எடுங்கள், போதும் என்பதுதான் நான் சொல்வது. இந்தியா முழுவதிலுமிருந்து இதுவரை சுமார் 6000 பேருக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். அதில் சுமார் 70 பேர், என்னைப்போல விவசாயத்தையே முழுநேரத் தொழிலாகச் செய்கின்றனர்.

சில சிறந்த கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள் இந்தியாவெங்கும் சென்று செயல்முறைப் பயிற்சிகள் மூலம் கற்றுக் கொள்ளுமாறு ஒரு யாத்திரையை வடிவமைத்துள்ளன. அவர்களுக்கான பயிற்சிக்களத்தில் எனது பண்ணையும் இடம்பெற்றுள்ளது. அவர்கள் இங்கு வந்து ஒருநாள் முழுவதும் இருந்து உரையாடியும், செய்முறையாகவும் கற்கின்றனர். இதுவரை சுமார் 700-800 மாணவர்கள் வந்துள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி: madhur80@hotmail.com. யூ டியூப் தளம்: www.youtube.com/user/Madhavan65

- ஆர். மாதவன்

*****


அச்சம் தரும் எதிர்காலம்
மக்கள்தொகை அதிகமாகி விட்டது. விளைச்சல் குறைந்துவிட்டது. மக்கள்தொகை பெருகியதால் ரியல் எஸ்டேட் அதிகமாகி விட்டது. ஏற்கனவே காடுகளை நிறைய அழித்தாகிவிட்டது. இனிமேல் அழிக்க ஏதுமில்லை. புதிதாக விவசாய நிலங்களை உருவாக்க முடியாது. அப்படியானால் என்ன செய்வது? இருக்கும் நிலத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுதான் நாம் செய்யவேண்டியது. ஆனால், அது செய்யப்படவில்லை. வெளிநாடுகள் எல்லாம் உணவு உற்பத்தியில் முன்னேறிக் கொண்டிருக்க நாம் நாளுக்குநாள் பின்தங்கி வருகிறோம்! இப்படியே போனால், உணவு உற்பத்தி குறைந்து, சத்தான உணவு அனைவருக்கும் கிடைக்காமல் போகும். எதிர்காலத்தில் மூளைவளர்ச்சி குறைந்தவர்களும், கண்டுபிடிப்பு, புத்தாக்கம் போன்றவற்றில் திறனில்லாதவர்களும் கொண்ட சமூகமாக நம் சமூகம் மாறிவிடும்.

ஆப்பிரிக்க நாடுகளைவிட இந்தியா மிகமோசமாக இருக்கிறது. டான்சானியா, மலாவி எல்லாம் நம்மைவிடப் பரவாயில்லை. இந்தியாவில் 48% குழந்தைகள் சத்துப் பற்றாக்குறையிலும், 30% மக்கள் உணவு கிடைக்காத வறுமையிலும் இருக்கின்றனர். இது பலருக்கும் தெரிவதில்லை. தகவல் தொழில்நுட்பம், ஆடி கார், ஏ.சி., சினிமா இவற்றைப் பார்த்து ஒரு போலிக்கனவில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். உணவுதான் அடிப்படைத் தேவை. அதையே நிறைவேற்ற முடியாமல் கம்ப்யூட்டரும், காரும் வைத்திருந்து என்ன பயன்? இந்த நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டு, உணவில்லாத் திண்டாட்டம் ஏற்படும்.

நம்நாட்டில் மட்டும்தான் விவசாயத்திற்கு உகந்த தட்பவெப்பம் உள்ளது. சூரியன் எப்போது வரும், மண்ணின் வெப்பநிலை எப்போது உயரும் என்று பல நாடுகளில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிக விளைநிலத்தைக் கொண்ட நாடும் இந்தியாதான். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விவசாயத்தையே அழித்துவிட்டோம். இந்த நிலை மாறவேண்டுமென்றால் படித்தவர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். பல துறைகளைச் சேர்ந்தவர்களும் வந்து தமது தொழில்நுட்ப அறிவின் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும். முறையாகச் செய்தால் மிகமிக லாபமான தொழில். இனிமேலாவது விழித்துக்கொண்டால் எதிர்காலத்துக்கு நல்லது.

- ஆர். மாதவன்
More

ராஜா கிருஷ்ணமூர்த்தி
Share: 
© Copyright 2020 Tamilonline