Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 19)
- சந்திரமௌலி|நவம்பர் 2015|
Share:
Click Here Enlargeகேந்திராவைத் தொடரும் ஆபத்து

சக்கரவர்த்தியின் கையில் சிக்கக்கூடாது, சிக்கினாலும் தன் செல்ஃபோனை எப்படியாவது பாதுகாத்து தனக்குக் கிடைத்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும் பரபரப்பாக ஓடினாள். ஐந்தாவது மாடியில் லிஃப்ட் தயாராயிருக்கவே, இனி படிகளின் வழியே ஓடாமல் லிஃப்டில் தப்பிவிட நினைத்து டிவி சேனலை மாற்றும் வினாடி நேரத்தில் அந்த ஓட்டை லிஃப்டில் தன்னைப் புகுத்திக்கொண்டு கீழே செல்லும் பொத்தானை அழுத்தினாள். லிஃப்ட் ஒரு காதலனைப்போல் கேந்திராவை படக்கென தனக்குள் அணைத்துக்கொண்டு விரைந்தது. அதே நேரம் லிஃப்டை சரிசெய்வதற்கு அந்த இருண்ட மாடிகளின் வழியே ஒர் மெகானிக் வேகுவேகு என்று ஏறிவந்தவன் ஐந்தாவது மாடியருகே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

கேந்திராவின் செல்ஃபோன் சப்தம் வந்த திசையை நோக்கி ஏழாவது மாடியிலிருந்து கீழே ஓடிவந்த சக்கரவர்த்தியும் கைலாஷும் அந்த ஆஜானுபாகுவான மெக்கானிக்மீது மோதி நின்றனர். அப்போது அந்த மெக்கானிக்கின் செல்ஃபோன் அலறவே, அவன் தன்மீது மோதிய அந்த இரண்டு உருவங்களையும் தள்ளிவிட்டு, "ஹலோ.. வந்துட்டேயிருக்கேன். ஆமா சொம்மா ஃபோன் பண்ணிட்டேயிருக்காதீங்க. அதான் டீ சாப்டுட்டு வரேன்னு ஒருமணி நேரம் முன்ன சொன்னனில்ல. வராத எங்க பூடுவேன்" என்று எரிச்சலோடு செல்லை அணைத்து, தனக்குள்ளே "டூட்டி நேரம் முடிஞ்சு இங்க இருந்தது என் தப்பு, வீட்டுக்கு போற நேரத்துல வேலை சொல்றாங்க" என்று சலித்துக்கொண்டான்.

அந்த மெக்கானிக்கின் செல்ஃபோன் ரிங்டோன் கேந்திராவின் ரிங்டோனை ஒத்திருந்ததால் சக்கரவர்த்தி தாங்கள் துரத்தி வந்தது மெக்கானிக்கைத் தான் என்று நினைத்து விட்டார். அவனது பதட்டமில்லாத முகத்தோற்றத்திலிருந்து அவன் தங்கள் பேச்சைக் கேட்டிருக்கமுடியாது என்று தீர்மானித்து, தாமாகவே அவனிடம் வேறு எதையும் கேட்டு வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்து, "கைலாஷ், வா ஆபீசுக்கு போயிரலாம்" என்றார். அந்த மெக்கானிக் இவர்களைத் தள்ளிக்கொண்டு மேல்மாடிக்குப் போக, அவனைத் தொடர்ந்து சக்கரவர்த்தியும், கைலாஷும் தங்கள் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். மனோகரின் அறையைக் கடக்கும்போது, சக்கரவர்த்தி தன் தலையை உள்ளே நீட்டி "என்ன மனோ வீட்டுக்கு கெளம்பலையா?" என்று இயல்பாகக் கேட்டார். அவரை அந்த நேரத்தில் எதிர்பாராத மனோகர், சீட்டிலிருந்து தடாலென எழுந்து நின்று, "குட் ஈவினிங் சார். இல்லை, கெளம்ப வேண்டியதுதான். ஒரு விசிட்டர் எதிர்பார்த்துட்டிருந்தேன். அவசரமான வேலை, வெயிட் பண்ணுனு சொன்னாங்க. ஏன்னு தெரியலை, வரலை. இன்னும் பத்துநிமிஷம் பாத்துட்டு கெளம்ப வேண்டியதுதான்" என்றான்.

"ஓகே. சரி, உன் ஃப்ரெண்ட் பரத் பத்தி ஏதாவது விவரம் தெரிஞ்சதா?"

"இல்லை சார். அவன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு. வீட்டிலயும் எந்த தகவலும் கொடுக்காம போயிட்டான். அடுத்த வாரத்துக்குள்ள ஒரு தகவலும் கிடைக்கலைனா போலிசுக்கு போயிடலாம்னு இருக்கோம். தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்."

"பரவாயில்லைப்பா, ஐ எம் ஆல்வேஸ் யுவர் வெல்விஷர். யூ டேக் கேர்" என்று ஒரு வலிய ஒட்டவைத்த புன்னகையோடு, கைலாஷின் பக்கம் திரும்பி, "என்ன கைலாஷ் பங்சுவாலிட்டி இல்லாத கஸ்டமரையெல்லாம் ஏன் எண்டர்டெயின் பண்றீங்க. பாருங்க மனோகர் இதற்காக அனாவசியமா வெயிட் பண்ண வேண்டியிருக்கு" என்றார்.

அவர் இதைச் சொல்லி முடிப்பதற்குள் மனோகர், "சார், சார், நான் நம்ம கம்பெனி கஸ்டமருக்காக வெயிட் பண்ணலை. பரத் விஷயமா என்னை அவசரமா பாக்கணும்னு அவனோட ஃப்ரெண்ட் பாக்க வரேனு சொல்லியிருந்தாங்க. வர டைம் ஆகுதேனு, கொஞ்சநேரம் முன்ன நான் கால்கூட பண்ணிட்டேன். காலை கட் பண்ணிட்டு, இப்ப செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க" என்றான்.

இதுவரை அசுவாரசியமாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சக்கரவர்த்தி, இப்போது புருவங்களை இறுக்கி, உயர்த்தி தீர்க்கமாக அவனைக் கவனித்தார். "யார் அந்த விசிட்டர்னு தெரிஞ்சுக்கலாமா?"

"உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார், உங்களுக்கும் தெரிஞ்சவங்கதான். கேந்திரா மோட்டார்ஸ் விஷ்வனாத்தோட பொண்ணு கேந்திராதான்."

"சரி, ரொம்ப நேரம் காத்திருக்காம வீட்டுக்குக் கெளம்பு. நாளைக்கு பேசிக்கலாம்" என்று சொல்லி, அவன் அறைக்கதவை சாத்திவிட்டு விறுவிறுவென தன் பிரத்யேக கேபினுக்குச் சென்றார். உள்ளே கைலாஷோடு நுழைந்ததும், கதவை இறுக்க சாத்திவிட்டு, "வீ ஆர் டூம்ட், டாமிட்" என்று ஆக்ரோஷமாக மேசையைக் குத்தினார். அந்த வேகத்தில் மேசையிலிருந்த காபி பீங்கான் கோப்பைகள் ஒரு குதிகுதித்து அதிர்ந்தன.

"என்ன சக்கி, ஒண்ணும் புரியலையே, கொஞ்சம் விவரமா சொல்லு."

"டோண்ட் யூ கெட் இட். அந்த கேந்திரா இவனைப் பாக்க இங்க வந்திருக்கா. வெரி லைக்லி நாம பேசுனதைக் கேட்டது அவளாதான் இருக்கணும். மனோகர் அவளுக்கு ஃபோன் பண்ணவே, நாம அந்த சப்தத்தைக் கேட்டு அவளைத் துரத்தியிருக்கோம். இருட்டானதாலே நமக்கு யாரைத் துரத்தினோம்னு தெரியலை. அவள் லிஃப்ட் எடுத்து கீழே போயிருக்கணும். அப்ப அங்க வந்த மெக்கானிக்கைப் பாத்து நாம ஏமாந்துட்டோம்."

"வீண் ப்ரமை. அவ ஏன் அந்த இருட்டு படியில வரணும்? அப்படி அவ இந்த ஆபீசுக்கு வந்திருந்தா, மனோகரை கீழே வரசொல்லி பாத்திருப்பா. அனாவசியமா பயப்படறே."

"என் பயம் அனாவசியம்னா, என்னைவிட சந்தோஷப்படறவங்க யாரும் இருக்கமுடியாது. ஆனா, எனக்கு ஒரு ஹன்ச், நிச்சயம் கேந்திரா இங்க வந்திருக்கா. நாம பேசினதெல்லாம் கேட்டிருக்கா!"

"எப்படி இதை கன்ஃபர்ம் பண்றது?"

"இப்ப அவளுக்கு ஃபோன் பண்றேன். அது ஸ்விட்ச் ஆஃப் ஆயிருந்தால், அது ஒரு ஃப்ரூஃப். கீழே செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணு, கடந்த பத்து நிமிஷத்துல இந்த கேட்டைவிட்டுப் போன காரோட மேக், நம்பர் உடனே வாங்கு. கேந்திராவோட கார் எனக்குத் தெரியும்."

அவர் உடனே கேந்திராவுக்கு ஃபோன் செய்ய, கைலாஷ் செக்யூரிட்டியை அடுத்த ஃபோனில் விரட்டினான்.

"ஸ்டில் ஸ்விட்ச்ட் ஆஃப்" என்றார் சக்கரவர்த்தி.

"மூணு வண்டி போயிருக்கு, ரெண்டு டொயொட்டா, ஒரு BMW, டொயட்டா நம்பர்.."

"வேணாம், வேணாம், BMW நம்பரைச் சொல்லு."

அவன் சொன்னதும், "பிங்கோ, கேந்திராவோட வண்டிதான், ஷி ஹாஸ் கம் ஹியர். சே. எப்படி கோட்டைவிட்டேன். இப்ப அவ விஷ்வனாத்துக்கு இதையெல்லாம் சொல்லிட்டா பிரச்சனையாயிடும்."

"ரிலாக்ஸ் சக்கி, குட் திங் நாம விவரமா முப்பது நாளைக்கப்புறம் என்ன பண்ணப் போறோம்கிறதைப் பத்திப் பேசலை. மிஞ்சினா, உன்னை போர்டுலேருந்து நீக்கமுடியும். அப்படி பண்ணினா, ஆதாரமில்லாம அபாண்டமா பேசறாங்கனு மீடியாவுக்குப் போயிருவோம். அவங்களுக்கு இப்ப முக்கியம் அந்த புது எஞ்சினை டெட்லைனுக்குள்ள ரிலீஸ் பண்றது. இப்ப இந்த கார்ப்பரேட் வாருக்கெல்லாம் அவங்களுக்கு நேரம் இருக்காது. அதனாலே திருடனுக்கு தேள் கொட்டினாப்போல சும்மாதான் இருப்பாங்க. எஞ்சினை அவங்க சக்சஸ்ஃபுலா கொண்டுவந்தாலும், வராட்டாலும் நாம ஜெயிக்கிறோம்."
"நீ சொல்றது ஒரு விதத்துல சரிதான். விஷ்வனாத்துக்கும், கேந்திராவுக்கும் என்மேலே என்னிக்கும் ஒரு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. அதனாலே புதுசா அவங்க எதுவும் பண்றதுக்கில்லை. ஆனாலும் இதைக் கொஞ்சம் க்லோசா வாட்ச் பண்ணனும்" என்று சொல்லிவிட்டு "கைலாஷ், எந்த ஆதாரமும் இல்லைன்னா பிரச்சனை இல்லை. ஆனா அந்த கேந்திரா ஒரு தந்திர நரி. நாம பேசுனத செல்ஃபோன்ல ரிகார்ட் பண்ணியிருந்தா, அது டேஞ்சர். இந்த ட்ராஃபிக்ல அவ வீடு போய்ச்சேர எப்படியும் ரெண்டுமணி நேரம் ஆகும். இங்கேயிருந்து அவ வீட்டுக்கு ரெண்டு ரூட் இருக்கு. அந்த வெல்டிங் மணியை எப்படியாவது அவ வீட்டுக்கு போகறதுக்குள்ள அவ செல்ஃபோனை பறிச்சிட்டுவரச் சொல்லு."

"வீடு போகறதுக்குள்ள, அவ அதை வேற யாருக்காவது அனுப்பிட்டா?"

"அவ இப்ப ரொம்ப பயந்துருப்பா. வீடு போறவரை செல்ஃபோனை ஆன் பண்ணமாட்டா. உடனே மணியை அவ வண்டியை வழில மடக்கச் சொல்லு. அவனையே நேர்ல இதுல எறங்க சொல்லு."

*****


படபடப்பு இன்னும் அடங்காமல் மேலும் நெரிசலான மாலை இரவு ட்ராஃபிக்கில் மெதுவாகத் தன் காரைச் செலுத்திக்கொண்டிருந்தாள் கேந்திரா. தற்செயலாகத் தனக்குக் கிடைத்த இந்த பெரிய ஆதாரம் ஏற்படுத்திய தாக்கம் அவளுக்குள் இன்னும் அடங்கவில்லை. அதோடு, சக்கரவர்த்தியும், கைலாஷும் தன்னை அவ்வளவு எளிதில் தப்பவிடுவார்கள் என்று அவள் எதிர்பார்க்காததால், வேறு ஏதாவது முறையில் தன்னை மடக்க முயற்சிப்பார்களோ என்று நினைத்தாள். இந்த நினைப்பு இன்னும் படபடப்பை அதிகரிக்கவே, ரியர்வியூவிலும், பக்கவாட்டிலும் சந்தேகம் தரும் ஏதேனும் வண்டிகள் தொடர்கின்றனவா என்று அடிக்கடி பார்த்தாள். இந்தச் செயல், அவள் வண்டியின் வேகத்தை இன்னும் குறைக்கவே, பின்னாலிருந்து விதவிதமான ஹார்ன் ஒலிகள் அவளுக்குப் பரிசாகக்கிடைத்தன.

என்ன நடந்தாலும், தனக்குக் கிடைத்த ஆதாரத்தைத் தொலைத்துவிடக் கூடாது என்று தீர்மானித்து, செல்ஃபோனை ஆன் செய்து, மீண்டும் ஒருமுறை தான் பதிவுசெய்த காட்சியை ஓட்டிப்பார்த்தாள். இதை இப்போது விஷ்வனாத்திடமோ, இல்லை வேறு யாரிடமோ ஒப்படைத்தால் புதிய எஞ்சின் வெளிவருவதில் தாமதம் நேரும் என்று நினைத்து, ஒரு பெருமூச்சோடு, "அதுதான் சரி, இதை பாத்தா நிச்சயம் பரத் உடனே இங்கே வருவான்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, பரத்துக்கு அந்த வீடியோ காட்சியை அனுப்பினாள். அத்தோடு, "உடனே புறப்பட்டு வரவும். புது எஞ்சின் வெளிவருவது உன் கையில் இருக்கிறது. வேறு எதையும் நீ விரும்பாவிட்டாலும், என் காதலை ஒருமுறை நேரடியாக உன்னிடம் தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் தரவாவது உடனே இங்கு வரவும். யெஸ், ஐ லவ் யூ – கேந்திரா" என்று SMS ஒன்றும் அனுப்பினாள். மீண்டும் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து தன்னருகே கைப்பையில் அதை இருத்தினாள். அடைபட்ட உணர்வு ஏற்படவே, தன் மனதைப்போல தன் மூச்சுக்கும் கொஞ்சம் சுதந்திரம் தர ஜன்னல் கண்ணாடிகளை பாதி இறக்கி, ஜில்லென மணலில் வேர்க்கடலை, மற்றும் சோளம் வறுக்கும் நறுமணத்தோடு வந்த மெரினா கடற்காற்றை ஒரு முறை உள்வாங்கி அனுபவித்தாள்.

அவளுக்குப் பின்னால் நூறு அடிதொலைவில், வெல்டிங் மணி தன் ஆட்டோவிலிருந்து, "சரியான நேரத்துக்குக் கூப்டீங்க. பீச்சாண்டதான் இருந்தோம். பட்சி சுளுவா கண்ணுல மாட்டிருச்சு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல காந்திசிலை சிக்னலாண்ட வண்டியை மடக்கிருவேன். செல்ஃபோன் மட்டும் வேணுமா, இல்லை ஆளையே போடணுமா?" மறுமுனை பதிலைக் கேட்டுவிட்டு, "சரிங்ணா, முடிச்சிடுரேன்" என்றான்.

கனகராஜை இரக்கமின்றி ஒரு நடுராத்திரியில் நட்ட நடுரோட்டில் போட்டுத்தள்ளிய அந்த மிருகம் இப்போது கேந்திராவைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

*****


வள்ளியம்மாளோடு கிராமத்தையும், அவள் அங்கு ஏற்படுத்தியிருந்த கூட்டுப்பண்ணையையும் பார்த்துவிட்டு, மூக்குப்பிடிக்க சாப்பிட்டுவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்தான். அன்று காலை வலவனூர் வந்த கதிரேசன் தன் வீட்டுக்குச் சென்று இளைப்பாறிவிட்டு, வள்ளியம்மாளைப் பார்க்க அவள் வீட்டுக்கு வந்தார்.

"ஆத்தா, நல்லா இருக்கியா?" முகமலர்ச்சியோடு தன்னைப் பெற்ற தாயாகவே அவளை நினைத்து காலில் விழுந்து வணங்கினார்.

"ஏய், கதிரு எந்திரிப்பா, இதெல்லாம் மனசுல இருக்கட்டும். உனக்கும் வயசாகுதில்ல. நல்லாயிருப்பா. இது என்ன நேரம் கெட்ட நேரத்துல இங்க வந்திருக்க? வாணி வந்துருக்கா? ஏதாச்சும் விசேஷமா?"

"இல்லை ஆத்தா, வாணிக்கு விசேஷம் நடக்கணும்னுதான் உன்ன பாத்துட்டு போகலாம்னு வந்தேன். ஒரு எடம் நல்லா அமையும்போல இருந்தது, வாணிக்கும் இஷ்டம்தான். ஆனா, அந்தப் பையன் என்னவோ ஒருத்தருக்கும் சொல்லிக்காம எங்கியோ போயிட்டான். இனி நம்மால வாணிக்கு எந்த நல்லதும் செய்யமுடியாதுனு விரக்தி வந்துடுச்சு."

"மனசு விட்டுறாதே கதிரு, நம்ம வாணிக்கு என்ன கொறை. அழகு, அறிவு எல்லாம் நிறஞ்சவ."

"அதிர்ஷ்டம் இல்லையே!"

"எல்லாம் வரும். சாமிக்கு வேண்டிக்க, பாரத்தை அங்க போடு."

"சாமிகிட்ட உடறதுனு முடிவு பண்ணித்தான் இங்க வந்தேன். எங்க சாமி, கொலதெய்வம் ஆத்தா எல்லாம் நீதானே. அதான் பெரியமனுஷி உன்கிட்ட வாணி கல்யாண பொறுப்பை உட்டுறலாம்னு முடிவுபண்ணி வந்துட்டேன்."

மனசில் இருந்த உண்மையான உணர்வுகளை, வெள்ளந்தியாக கதிரேசன் வெளிப்படுத்தியது வள்ளியம்மாளின் கண்களில் ஈரப்பசையை ஏற்படுத்தியது. நகரத்து அவசரப் பொருள்தேடலில் இன்னும் இந்த கிராமத்தான் பழைய பாசத்தையும் மரியாதையையும் தொலைக்காமல் இருப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது. சட்டென அவளுக்கு, பரத்தின் நியாபகம் வந்தது. வாணிக்கு பரத்தைவிட நல்லபையன் வேறு எங்கு கிடைப்பான்? இதுவும் ஏதோ தெய்வச் செயலால் போடப்படும் முடிச்சு என்று நினைத்தாள்.

"கவலையே படாதே கதிரு. நீ இப்படி வருவேனு தெரிஞ்சோ என்னவோ, எனக்கு ரொம்ப தெரிஞ்ச, தங்கமான பையன் என் கண்ணுல பட்டிருக்கான். நம்ம வாணிக்கு அவனைவிட நல்லபையன் புருஷனா கெடைக்கமுடியாது. கிராமத்து பையன்னு நெனச்சுடாதே, சென்னை பையன்தான்."

"ஆத்தா.. கேட்ட உடனே வரம் கொடுக்கற ஆத்தான்னா அது நீதான்" என்று அவள் இரு கைகளையும் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார். "பையன் விலாசம், விவரமெல்லாம் குடுத்தியானா, நான் இன்னிக்கு ராத்திரியே சென்னை போயி, முடிச்சிடுரேன்." என்றார்.

"அவசரத்தைப் பாரு, பையன் இங்க நம்ம வீட்லதான் இப்ப இருக்கான். களைப்பா படுத்திருக்கான். இரு கூப்பிடறேன். நீயே பாரு, பேசு" என்று தூண்களை நிதானமாகப் பிடித்து எழுந்து உள்ளே போகவும், பரத் சோம்பல் முறித்து அந்த வீட்டின் முற்றத்தைத் தாண்டவும் சரியாயிருந்தது. "நீயே எழுந்திட்டியா, வா, உனக்கு ஒரு நல்ல சமாசாரம் சொல்லணும். வெளியே வா, ஒருத்தரை நான் உனக்கு அறிமுகப்படுத்தணும்" என்று அவன் கைகளைப் பற்றி வெளியே கூட்டிவந்தாள்.

"கதிரு.. இதுதான் நான் சொன்ன பையன். பேரு பரத். பரத்... இது..."

"பரத் தம்பி, நீங்க இங்கேயா இருக்கீங்க? உங்களைத் தேடி அங்க கேந்திரா மோட்டார்ஸே அல்லாடுது. நீங்க வரலைனா, புது எஞ்சின் வராது, கம்பெனியே அந்த வெளிநாட்டு கம்பெனி கேடிகேவுக்கு போயிரும்னு பேசிக்கிறாங்க. இங்க அமைதியா உக்காந்துருக்கீங்க?"

"கதிரேசா, உனக்கு பரத்தை முன்னமே தெரியுமா? பரத் என்ன பிரச்சனையப்பா? உங்க கம்பெனிய வெளிநாட்டு கம்பெனி எடுத்துக்கப்போவுதா? வெவரமா சொல்லு" என்று அதுவரை குழைவாக ஒரு கிராமத்துப் பாட்டியைப்போலப் பேசிவந்த வள்ளியம்மை, கம்பீரமாக ஆணையிடும் தொனியில் தீர்க்கமாகக் கேட்டாள்.

(தொடரும்)

சந்திரமௌலி
ஹூஸ்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline