Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
பேராசிரியர். மதுரம் சந்தோஷம்
Dr. சியாமா
- அரவிந்த் சுவாமிநாதன், சிரிப்பானந்தா|நவம்பர் 2015|
Share:
எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், சமூகசேவகி என்று பல திசைகளில் செயல்படும் Dr. சியாமா (சியாமளா சுவாமிநாதன்), K.K.Birla Foundation Fellowship பெற்ற முதல் தமிழ் பெண்பத்திரிகையாளர். தமிழகத்தில் பெண்சிசுக் கொலைகளை எப்படித் தடுக்கலாம் என்பதுபற்றி 60 கிராமங்களுக்கும் மேலாக நேரில் சென்று களஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்தவர். இதுபற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தியவர். மதுரை காமராஜர் பல்கலையில் M.Phil மற்றும், மாநிலக் கல்லூரியில் Ph.D பட்டங்களைப் பெற்றவர், C.A.N. Jain Academy For Women அமைப்பில் ஐந்தாண்டுகள் இயக்குநராகப் பணியாற்றி, பல பெண்களின் வாழ்வுயரக் காரணமானவர். Excellence in Journalism விருது பெற்றவர். 'தமிழகக் கிராமங்களில் பெண்சிசுக் கொலைகள் - தீர்வுகள்' என்ற நூலுக்காகத் தமிழக அரசின் விருது பெற்றிருக்கிறார். புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் 'பெண்ணியச் செம்மல்' விருதாளர். 'காதல் பொம்மைகள்', 'நெஞ்சுக்குள் நெருஞ்சிமுள்', 'சாவியில் சில நாட்கள்', 'ஜெயிப்பது நிஜம்' (ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு) போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 'காஞ்சி மகானின் கருணை அலைகள்' என்ற இவரது சமீபத்திய நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது தனது DSVS Trust மூலம் கைவிடப்பட்ட பெண்குழந்தைகளைப் பேணி வளைர்ப்பதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...

*****


தென்றல்: சமூக சேவையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?
சியாமா: புதுக்கோட்டையின் புகழ் பெற்ற வக்கீல் டி. சீனிவாச ஐயர் மற்றும் வாலாம்பாள் தம்பதியினரின் பேத்தி நான். இருவருமே ஆன்மீகம், சமூகசேவை இரண்டுக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பாட்டி, தாத்தா வீட்டில்தான் 25 வயதுவரை வளர்ந்தேன். பாட்டி மிக ஆசாரமானவர். ஆனால் கர்ப்பிணியைப் பார்த்தால் மடி, ஆசாரம் எல்லாம் உதறிவிட்டுச் சென்று உதவுவார். ஜாதி வித்தியாசம் பார்க்காமல் தேவையான பணம், பால், காய்கறி, சத்தான ஆகாரம் எல்லாம் கொடுப்பார். பிரசவமானவர் பூண்டு சாப்பிட்டால் பால் நிறையச் சுரக்கும் என்பதால் நிறைய பூண்டை மொத்தமாக வாங்கிக் கொடுத்தனுப்புவார். பிரசவம் பார்க்கவும் பாட்டி போவார். அவர் மருத்துவம் படித்ததில்லை. ஆனால் கைராசி என்று கூப்பிடுவார்கள். குடிசையோ, ஓட்டுவீடோ, பங்களாவோ அவர் வேறுபாடு பார்த்ததில்லை. காய்கறிகள், அரிசி, மளிகை, பூண்டு, பிறந்த குழந்தைகளுக்கான கஸ்தூரி, கோரோஜனை மருந்து என்று எல்லாவற்றையும் கொடுக்கச்சொல்லி எங்களை அனுப்புவார். இதனால் சமூகசேவை இயல்பாகவே எங்களுக்குள் பதிந்துவிட்டது.

பாட்டி தைரியமானவர். ஊரில் ஏதாவது சரியில்லாவிட்டால் மனு எழுதிப் போட்டுவிடுவார். கல்யாண வயதிலுள்ள பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில் ஆரம்பித்து, திருமணம்வரை பல உதவிகளைச் செய்வார். சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவவேண்டும், நம்மால் முடிந்ததைப் பிறருக்குச் செய்யவேண்டும் என்பதை வாழ்ந்துகாட்டி எங்களுக்குப் போதித்தார். அதேசமயம் குடும்பக் கடமைகள், பூஜை, புனஸ்காரம் எதையும் அவர் விட்டு வைக்கவில்லை.

தாத்தா பிரபல வக்கீல். அவர் தேள்கடிக்கு மருந்து தயாரித்துக் கொடுப்பார். நூற்றுக்கணக்கான பேருக்குக் கொடுத்திருக்கிறார். வடக்கு ராஜவீதியில் இருந்த எங்களது வீடே திருவிழா மண்டபம்போல இருக்கும். தினமும் இரவு தவறாமல் பிரவசனம் நடக்கும். புகழ்பெற்ற உபன்யாசகர்களான ராஜகோபால் சர்மா, உடையாளூர், அனந்தராம தீக்ஷிதர் எல்லோரும் வந்து பிரவசனம் செய்திருக்கின்றனர். இசைக்கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், சொற்பொழிவாளர்கள் என்று பலரை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் புதுக்கோட்டைக்கு பிரபலஸ்தர் யார் வந்தாலும் தங்குவது டி. சீனிவாச ஐயர் வீட்டில்தான். காஞ்சி மஹாபெரியவர், சுவாமி சிவானந்தர், சகடபுரம் சுவாமிகள் எனப் பலர் வந்திருக்கின்றனர். தெய்வீக வாழ்க்கைச் சங்கத்துக்கு (Divine Life Society) மகளிர் பிரிவு என்று முதன்முதலில் ஆரம்பித்தது புதுக்கோட்டையில்தான். பாட்டிதான் அதன் பிரசிடெண்ட்.

வரதட்சணை ஒழிப்பிற்காக தாத்தா-பாட்டி இருவரும் பாடுபட்டார்கள். 500 ரூபாய்க்குள் திருமணம் என்ற திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்தினார்கள். 'விவாஹ நலச் சங்கம்' ஏற்படுத்தி, அதன்மூலம் 60க்கும் மேற்பட்ட எளிய திருமணங்களை வீட்டிலேயே நடத்தியிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் நான் வளர்ந்தேன்.

கே: முதல் சமூகசேவைப் பணி என்று எதைச் சொல்வீர்கள்?
ப: சென்னையில் நாளிதழ் ஒன்றில் முஸ்லிம் ஆதரவற்றோர் பள்ளி ஒன்றில் பகுதிநேர ஆசிரியருக்கான விளம்பரம் வந்திருந்தது. "அதைச் சேவையாகச் செய். உனக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்" என்று கணவர் சொன்னார். அதுதான் எனது முதல் சமூகசேவை. நான் ஆசிரியரானாலும் அந்தக் குழந்தைகள் என்னைத் தாயாக பாவித்தனர். என் மடியில் ஏறி உட்கார்ந்துகொள்வதும், அம்மா, அம்மா என்று கொஞ்சுவதும், முத்தம் கொடுப்பதும் என அதுவொரு தனி அனுபவமாக இருந்தது. தாயன்பிற்கு குழந்தைகள் எந்த அளவு ஏங்கும் என்பதை அங்குதான் பார்த்தேன். நானும் அவர்களை எனது குழந்தைகளாகவே பாவித்துப் பாடம் சொல்லிக்கொடுத்தேன். மக்களுக்கு எத்தனை விதத்தில் கஷ்டங்கள் வரும் என்பதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பாக அது அமைந்தது. மூன்று வருடம் அங்கே பணி புரிந்தேன். பின்னர் சிறப்புக் குழந்தைகளுக்கான (special children) பள்ளியில் சிலகாலம் வேலை பார்த்தேன்.



கே: நீங்கள் எப்படிப் பத்திரிகையாளர் ஆனீர்கள்?
ப: சாவியில் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டேன். சாவி அவர்களின் மிலிடிரி டிரெயினிங்கில் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. கடுமையான பயிற்சி. நாலுபக்கம் எழுதி அனுப்பினால் நாலுவரி வரும். மூலையில் குட்டியாக 'சியாமா' என்று இருக்கும். இரண்டு வருடம் உதவியாளராகச் சாவியில் பணிபுரிந்தபோது ஒரு பத்திரிகை குறித்த எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடிந்தது. 'சாவி சியாமா' என்று இன்றைக்கும் பேசப்படும் அளவிற்கு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

அப்போது அபூர்வ சகோதரர்கள் வந்திருந்த சமயம். ஒரு வெளிநாட்டு இதழில் முதுகு வளைந்து Z போல் காட்சிதரும் ஒருவரைப் பற்றிய படமும், போட்டோகிராஃபிக் டெக்னிக்கை பயன்படுத்தி எப்படி அதை எடுத்தார்கள் என்ற செய்திக் கட்டுரையும் வெளியாகியிருந்தது. அதைக் கமலிடம் காண்பித்து அவர் என்ன சொல்கிறார் என்பதை வைத்துப் பேட்டிக் கட்டுரையை எழுதும்படி சாவி கூறியிருந்தார். "என் அறிவைச் சோதிக்க இந்தப் பேட்டியா?" என்று கேட்டுவிட்டு, கமல் சரியான விளக்கத்தைச் சொல்லி ஒரு இன்டலெக்சுவல் என்பதை நிரூபித்தார். அது சாவியில் கவர் ஸ்டோரியாக வெளிவந்தது. கமல் எனக்கு ஃபோன் செய்து, "நான் பரீட்சையில் பாஸ் செய்தேனா, சாவி சார் எனக்கு பாஸ்மார்க் போட்டாரா?" என்று கேட்டார்.

பிறகு குமுதம் பால்யூ மூலமாக பாக்கெட் நாவல் அசோகனின் அறிமுகம் கிடைத்தது. அவர் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கென்று "ஜாப் கைடுலைன்ஸ்" என்ற இதழை நடத்தினார். அதில் 5 ஆண்டு பணிபுரிந்தேன்.

கே: கே.கே. பிர்லா ஃபவுண்டேஷன் ஆய்வு உதவித்தொகை பெற்றது குறித்து...
ப: கே.கே. பிர்லா ஃபவுண்டேஷன் ரிசர்ச் நல்கைக்கு விண்ணப்பித்தபோது, என் கணவர், "நிறைய ஃபார்மாலிடிஸ் இருக்கிறது. நமக்கெல்லாம் கிடைக்காது" என்றார். கேட்டிருந்தபடி சுமார் 25 பக்கம் தயாரித்து இணைத்து அனுப்பினேன். அந்த நிதிநல்கை பெற்ற முதல் தமிழ்ப் பெண்பத்திரிகையாளர் நான்தான். அதற்கு ஆய்வுசெய்து கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் லேனா தமிழ்வாணன் அவர்களிடம், ஆய்வுக்கு நல்லதொரு தலைப்பைக் கொடுக்குமாறு கேட்டேன். அவர் சொன்ன தலைப்புதான், "தமிழகக் கிராமங்களில் பெண்சிசுக் கொலைகள் - தீர்வுகள்" 1995-96 காலகட்டத்தில் பெண்சிசுக் கொலை மிக அதிகமாக இருந்தது. அது ஒரு க்ரைம் செய்தியாக, அதாவது இந்த கிராமத்தில் இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டன என்பது போலத்தான் செய்தித்தாளில் வெளியாகிக் கொண்டிருந்ததே தவிர, அதற்கான காரணம் என்ன என்பதுபற்றிச் செய்திகள் பதிவாகவில்லை. எப்படி இதனை மாற்றுவது என்று ஆய்வு செய்யுங்கள் என்று சொன்னார். அந்த ஆய்வு என் வாழ்க்கையின் திருப்புமுனை ஆனது.

கே: அந்த ஆய்வுகுறிந்துச் சொல்லுங்களேன்...
ப: மதுரை, சேலம், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களை ஆய்விற்குத் தேர்ந்தெடுத்தேன். அங்குதான் பெண்சிசுக் கொலை அதிகம். அங்குள்ள குக்கிராமங்களுக்குப் போய்த் தாய்மார்களைச் சந்தித்துப் பேசினேன். அங்குள்ள NGOக்கள் அதற்கு உதவின. அவற்றின் தொண்டர்கள் என்னுடன் வருவார்கள். எங்கெல்லாம் பெண் சிசுக்கொலைகள் நடந்திருக்கிறது அல்லது நடக்கக்கூடும் என்பது அவர்களுக்குத் தெரியும். Risk mothers என்று குறித்து வைத்திருப்பார்கள். போதிய அறிவுரை கொடுத்தும்கூடச் சம்பவங்கள் நடந்துவிடும். ஏனென்றால் 24 மணி நேரமும் தொண்டர்கள் உடனிருக்க முடியாது. அவர்கள் இல்லாதபோது பெண்குழந்தை பிறந்தால் அவர்கள் செய்ய நினைத்ததைச் செய்துவிடுவார்கள். பின்னர் உண்மையை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். திடீரென்று குழந்தைக்கு உடம்புக்கு வந்துவிட்டது, சொந்தக்காரர் வீட்டில் இருக்கிறது, மாமியார் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் என்று ஏதாவது சொல்வார்கள். அப்புறம் NGOக்கள் கேஸை க்ளோஸ் செய்துவிடுவார்கள். இதேதான் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது. நான் அத்தகைய பெண்களிடம் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். கூட்டங்களில் பேசி அக்குழந்தைகளை எப்படி வளர்ப்பது, பராமரிப்பது என்றெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அரசாங்கம் மக்களிடம் எவ்வளவு விழிப்புணர்வை ஊட்டினாலும் அது முழுமையாகப் பயனளிக்கவில்லை. சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.
கே: பெண் சிசுக்கொலைக்கு என்ன காரணம்?
ப: பத்துமாதம் சுமந்துபெற்ற குழந்தையை ஒரு தாய் கொல்லத் துணிவாளா? அதன்மீது அவளுக்கு என்ன குரோதம் இருக்கமுடியும்? ஆனால் நிர்ப்பந்தங்களால்தான் இப்படி நேர்கின்றது. அந்தப் பெண்களே அதைச் சொன்னார்கள். மூன்றாவதாகவும் பெண் பிறந்தால் "பிறந்த வீட்டிலேயே இருந்துரு, இங்கே வராதே!" என்று சொல்லும் மாமியார்கள், பெண் பிறந்தால் வெறுக்கும், கொடுமைப்படுத்தும் கணவன்மார்கள், ஏழ்மையான பொருளாதாரச் சூழல், எதிர்காலம்பற்றிய அச்சம், பெண்ணாகப் பிறந்தால் நிறைய நகை, பணம் எல்லாம் கொடுத்து திருமணம் செய்யவேண்டுமே என்ற கவலை என்று இதன் பின்னணியில் பல காரணங்கள்.

"எங்கள மாதிரி கஷ்டத்தோடும், அவமானத்தோடும், நீங்க வளந்தா, நம்மளமாதிரி இன்னொரு பெண்ணும் பிறந்து இந்தவுலகத்துல கஷ்டப்படக்கூடாதுன்னு நீங்களும் இந்த முடிவைத்தான் எடுப்பீங்க" என்று என்னிடம் சொன்ன பெண்கள் இருக்கிறார்கள். "ஐயாயிரம் ரூபா மட்டும் கொடுங்கம்மா; கொல்லாம இருக்கோம்" என்று சொன்ன பெண்களும் உண்டு. "உங்களால இப்படிப் பேசத்தான்மா முடியும். எங்க நீங்களே எடுத்துக்கிட்டுப் போயி வளருங்க பார்ப்போம்" என்று சொல்லிக் குழந்தையைக் கையில் கொடுத்தவர்களும் உண்டு. அப்போதுதான் நான் முடிவு செய்தேன், இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் போதாது, இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க ஏதாவது செய்யவேண்டும் என்று. அப்படித் தோன்றியதுதான் டி.சீனிவாசன்-வாலாம்பாள் ஸ்ரீவித்யா அறக்கட்டளை.

கே: இன்றைக்கும் பெண் சிசுக்கொலைகள் நடக்கிறதா?
ப: முன்பு அளவுக்கு இல்லை என்றாலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. இப்போது சிசுக்கொலைகளை விட கருக்கலைப்பு அதிகமாயிருக்கிறது.

கே: சீனிவாசன்-வாலாம்பாள் அறக்கட்டளை. என்ன செய்கிறது?
ப: பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், கிராமப்புறப் பெண்குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரவும் எண்ணி, 2004ல் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். ஆனால், நானோ சென்னையில் இருக்கிறேன். பிரச்சனையோ கிராமங்களில் இருக்கின்றது. எப்படி உதவுவது என்று யோசித்தபோதுதான் திரு. கௌதமன் அறிமுகமானார். அவர் ஓசூர் சேவாபாரதியில் இருந்தவர். சிறந்த சமூகப் பணியாளர். நான் பெண்சிசுக் கொலை சம்பந்தமாக பல கட்டுரைகளைத் தொடர்ந்து தினமணியில் எழுதிவந்தேன். அதைப் படித்துவிட்டு என்னுடன் தொடர்பு கொண்டார். தான் வளர்த்து ஆளாக்கிய ஒரு பெண் குழந்தைக்குத் திருமணம் செய்ய இருப்பதாகவும் நான் அதற்குத் தலைமை தாங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அந்தப் பெண் 20 வருடத்திற்கு முன்னால் குடும்பச் சூழ்நிலையால் கைவிடப்பட்ட குழந்தை. இவர் தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி அன்றைக்குத் திருமணம் செய்துவைக்கிறார். சிறப்பாக அந்தத் திருமணம் நடந்தது. நான் ஆச்சரியப்பட்டு கௌதமனிடம் கேட்க, அவர், இதுவரை இம்மாதிரி நான்கைந்து குழந்தைகளுக்குத் திருமணம் செய்திருக்கிறேன் என்று சொன்னார். நானும் உதவ விரும்பினேன்.

என் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன்மூலம் கௌதமனின் பணிகளுக்கு உதவ முடிவுசெய்தோம். கௌதமனிடம் இதைப்பற்றிச் சொன்னோம். அவரும் ஹோசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் 'வாத்சல்யம் அறக்கட்டளை'யை (www.saradamaa.com) ஆரம்பித்தார். நான் சீனிவாசன்-வாலாம்பாள் அறக்கட்டளையை (www.dsvstrust.org) ஆரம்பித்தேன். பெண்சிசுக் கொலைகள் நடக்கும் இடங்களுக்குச் சென்று "குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; எங்களிடம் கொடுங்கள். எங்கள் ஆச்ரமத்தில் நாங்கள் வளர்க்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லலாம்" என்பதைத் தொண்டர்கள்மூலம் எடுத்துச்சொன்னோம்.

ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு மூன்றுவேளை உணவு தருவதே சிரமமாக இருந்தது. பின்னர் அங்கிருந்த தொழிலபதிர்களை, சமூக சிந்தனை கொண்டவர்களை, அரசு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கிய பிறகு படிப்படியாக உதவி கிடைக்க ஆரம்பித்தது. பாரத் பேக்கேஜிங் கோவிந்தராஜன் தான் முதலில் உதவ முன்வந்தார். பின்னர் அவர்மூலம் படிப்படியாக பலரும் உதவ ஆரம்பித்தனர்.

தற்போது அங்கே பெண் குழந்தைகள்தான் என்றில்லாமல் ஆண் குழந்தைகளும் வளர்கின்றனர். பெற்றோர் இல்லாதவர்கள், இருந்தும் புறக்கணிக்கப்பட்டவர்கள், குடியால் உறவுகளை இழந்தவர்கள், தாய் ஓரிடம், தந்தை ஓரிடம் என்பதால் கைவிடப்பட்டவர்கள், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள், வறுமையால் பாதிக்கப்பட்டோர் என்று பலதரப்பட்ட குழந்தைகள் அங்கே இருக்கின்றனர். முன்பெல்லாம் கைக்குழந்தைகள்முதல் மூன்று வயதுவரை உள்ள குழந்தைகள் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அரசாங்கம் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளை அரசுக் காப்பகத்திற்குத்தான் அளிக்கவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்ததால் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளே உள்ளனர். சிறுகுழந்தைகளாக வந்தவர்களுக்கு இன்றைக்கு 12, 13 வயதாகிவிட்டது. வாத்சல்யம் ட்ரஸ்ட் பாதுகாக்கும் குழந்தைகளுக்கு சீனிவாசன்-வாலாம்பாள் ட்ரஸ்ட் உதவுகிறது. நிர்வாகச் செலவு என்று நாங்கள் பணத்தை விரயமாக்குவதில்லை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, இருப்பிடம், தங்குமிடம் என எல்லாவற்றிற்கும் உதவுகிறோம். அன்றைக்கு சேவாபாரதியில் இருந்து மூன்று குழந்தைகளுடன் கௌதமன் வந்தார். இன்றைக்கு 50க்குமேல் குழந்தைகள் உள்ளனர்.



கே: குழந்தைகளுக்கு உதவ என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
ப: முதலாவது ஆயுள்காலப் புரவலர். புதிதாக ஒரு குழந்தை இல்லத்திற்கு வந்தால் அந்தக் குழந்தையின் பெயரில் 50,000 ரூபாய் வங்கியில் வைப்புநிதி போடப்படும். குழந்தையின் பெயரில் எல்.ஐ.சி. காப்பீடு செய்யப்படும். வைப்புநிதிக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியைக் கொண்டு பிரீமியம் செலுத்தப்படும். 18 அல்லது 21 ஆண்டு முடிவில் நல்லதொரு தொகை அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும். மேற்கொண்டு கற்கவோ, தொழில் தொடரவோ, திருமண வாழ்க்கைக்கோ அது உதவும். கொடையாளிக்கு அந்தக் குழந்தையைப் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் அனுப்பிவிடுவேன். தற்போது பொன்மகள் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அது சிறப்பாக இருப்பதால் அதில் முதலீடு செய்கிறோம்.

இரண்டாவது திட்டம் ஸ்ரீவித்யா ஸ்பான்ஸர்ஸ். எங்கள் குழந்தைகள் வாத்சல்யம் நடத்தும் ஸ்ரீ சாரதா வித்யாலயா தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படிக்கின்றனர். மேலே படிக்க தேன்கனிக்கோட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் போகின்றனர். அரசுப்பள்ளி அங்கே இல்லை. ஆண்டு ஒன்றுக்கு ஒருவருக்கு 15,000 ரூபாய் செலவாகிறது. ஒன்பதாம் வகுப்புவரை இந்தக் கட்டணம். பத்தாம் வகுப்புக்கு என்ன செலவாகும் என்பதும் அடுத்த ஆண்டில் மாணவர்களை அவ்வகுப்பில் சேர்க்கும்போதுதான் தெரியும். இந்தக் கட்டணத்தைச் செலுத்துபவர்கள் ஸ்ரீவித்யா புரவலர் பிரிவில் வருகின்றனர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சிலர் ஒருமுறை மட்டுமே 15,000 கொடுத்துவிட்டுப் பின்னர் அனுப்புவதில்லை. அடுத்த வருடம் வேறொருவரைத் தேட வேண்டியிருக்கும்.

மூன்றாவது தங்குமிடப் புரவலர். ஆரம்பத்தில் வாடகை வீட்டில்தான் குழந்தைகள் இருந்தார்கள். பின்னர் ஒருவர் ஒன்றரை ஏக்கர் நிலம் கொடுத்தார். அப்படி ஆரம்பித்ததுதான் "சாரதேஸ்வரம்." 20 சிறுசிறு வீடுகள் கொண்டது இந்தப்பகுதி. SOS கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டு கட்ட ஆரம்பித்தோம். ஒரு வீட்டுக்கு 3 லட்சம் ஆனது. ஒவ்வொரு இல்லத்திலும் ஐந்து பெண் குழந்தைகள், ஒரு பெண் பாதுகாவலர் இருப்பார்கள். ஆதரவற்றோர், ஓய்வுபெற்றோர், சமூக எண்ணம் கொண்டவர்கள் எனப் பலர் இப்பணியில் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு 'அம்மா' என்று ஒருபிடிப்பு, பாதுகாவலருக்கு வாழ்க்கையில் ஒரு பொறுப்பு இதனால் ஏற்படுகிறது.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இருபாலரையும் சேர்ந்து வளர்க்க இயலாது என்பதால் ஆண் குழந்தைகள் ஆறாம் வகுப்பு சேரும் வயது வந்தவுடனேயே ராமகிருஷ்ண மடத்தின் சேவை இல்லம் ஏதாவதொன்றில் சேர்க்கப்பட்டு விடுவர். அவர்களுக்கான செலவை நாம்தான் ஏற்றுக்கொள்கிறோம். தற்போது பெண் குழந்தைகளுக்கான நிதியுதவி மட்டுமே நான் செய்துவருகிறேன். ஆண் குழந்தைகளுக்கான செலவை கௌதமன் பார்த்துக் கொள்கிறார்.

இதுவரை 25 குழந்தைகளுக்கு வாழ்நாள் புரவலர் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் கல்விப்புரவலர் குறைவாகத்தான் கிடைத்துள்ளனர். வருடந்தோறும் 15,000 ரூபாய் கொடுப்பவர் கிடைக்கவில்லை. இந்தப் பத்தாண்டுகளில் எங்கள் டிரஸ்டிற்காக பத்திரிகை, டி.வி. என்று விளம்பரம் எதுவும் செய்ததில்லை. என் நட்பு வட்டாரங்களிலிருந்தும், உறவினர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மூலமும்தான் நிதி திரட்டி வருகிறேன். நானும் எங்களது உறவினர்களும் சேர்ந்து 10 குழந்தைகளுக்கு லைஃப் ஸ்பான்ஸர் செய்திருக்கிறோம். நாங்களே மூன்று வீடுகள் கொடுத்திருக்கிறோம். தற்போது மற்றக் குழந்தைகளுக்கும் வாழ்நாள் மற்றும் கல்விப் புரவலர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: ஒரு டைனிங் ஹால், ஒரு சமையலறை கட்டவேண்டும் என்பதுதான் உடனடித் திட்டம். இதற்கு 30 லட்சம்வரை செலவு ஆகும். இது தவிர சோலார் லைட்டிங், வாட்டர் பியூரிஃபையர் வேண்டும். ஒரு பள்ளிக்கூடம், நூலகம் கட்டவேண்டும் என்பது போன்ற திட்டங்கள் வைத்திருக்கிறோம். சோலார் லைட்டிங், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இவற்றுக்கு உதவி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். அதுபோல ஒன்றரை ஏக்கர் நிலத்தைச் சுற்றி வேலிபோட வேண்டும்; ஏனென்றால், அது யானைகள் அதிகம் நடமாடக்கூடிய இடம்.

தாயுள்ளத்தோடு செயல்படும் அவரது அன்பான வார்த்தைகள் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. நிச்சயம் அவருக்கு உதவ நல்ல உள்ளங்கள் முன்வரும் என்று நம்பிக்கை கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்
உதவி, படங்கள்: சிரிப்பானந்தா

*****


"சாவடிச்சுட்டாங்க டீச்சர்!"
ஒருமுறை நான் நாகராஜன் என்பவருடன் ஊர்ப்புறத்தில் போய் பேசிப்பார்க்கலாம் என்று கிளம்பினேன். ஜீப்பில் போனோம். வழியில் இளநீர் குடிக்க வண்டியை நிறுத்தினோம். பக்கத்தில் ஒரு பள்ளியிலிருந்து சுமார் 100 குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நின்று ஜீப்பை வேடிக்கை பார்த்தனர். அவர்களிடம், சாப்பாடெல்லாம் போதுமான அளவு கிடைக்கிறதா, என்ன சாப்பிடுகிறார்கள் என்று கேட்பது என் எண்ணம். அதெல்லாம் கேட்டுவிட்டு யதேச்சையாக உங்களுக்கு அண்ணன் இருக்கிறானா, அக்கா இருக்கிறாளா, தம்பி இருக்கிறானா என்றெல்லாம் கேட்டதற்கு எல்லாரும் தலையை ஆட்டினர். ஆனால் தங்கச்சிப்பாப்பா இருக்கா என்ற கேள்விக்கு மட்டும் யாருமே தலையை ஆட்டவில்லை. ஒரு குழந்தைக்குக் கூடவா தங்கச்சிப் பாப்பா இல்லாமல் போகும் என்று எனக்கு ஆச்சரியம். "யார் வீட்டில் எல்லாம் தங்கச்சிப்பாப்பா பிறந்து பின் இறந்து போயிருக்கிறது?" என்று கேட்டதற்கு எல்லாக் குழந்தைகளும் கையைத் தூக்கின. இது எப்படி சாத்தியம் என்று நினைத்து, "எப்படி செத்துப்போச்சு" என்று மெள்ள அவர்களிடம் கேட்க, "சாவடிச்சுட்டாங்க டீச்சர்" என்று சொல்லின சில குழந்தைகள். நாங்கள் ஆடிப்போய்விட்டோம். ஏழு, எட்டு வயதுடைய அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தேதான் பெண்சிசுக் கொலைகள் நடந்திருக்கின்றன!

- டாக்டர் சியாமா

*****


உதவ விரும்புவோர் தொடர்புகொள்ள
மின்னஞ்சல்: dr.shyama2000@gmail.com
வலைமனை: www.dsvstrust.org
More

பேராசிரியர். மதுரம் சந்தோஷம்
Share: 




© Copyright 2020 Tamilonline