|
தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை |
|
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2015| |
|
|
|
|
|
ஸ்ரீமான், ஸ்ரீமதி, வி.பி.பி., சந்தா என்றெல்லாம் எழுதப்பட்ட காலத்தில் "இவை தூய தமிழ்ச்சொற்கள் அல்ல; இவற்றுக்கு மாற்றாகத் திருவாளர், திருமதி, விலைகொடு அஞ்சல், கையொப்பத் தொகை போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்" என்று அறிவித்து, அவற்றைப் புழக்கத்திலும் கொண்டுவரச் செய்தவர் உமாமகேசுவரன் பிள்ளை. இவர், தஞ்சாவூரை அடுத்துள்ள கரந்தட்டான்குடியில் வேம்பப்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதிக்கு, மே 07, 1883 நாளன்று மகனாகப் பிறந்தார். தந்தை அம்பாள் மற்றும் சிவபக்தர் என்பதால் மகனுக்கு உமாமகேசுவரன் என்ற பெயரைச் சூட்டினார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக்கல்வி பயின்ற இவர், மூன்றாம் படிவம் படித்துக் கொண்டிருந்தபோது தாயை இழந்தார். சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். சில ஆண்டுகளிலேயே தந்தையையும் இழந்தார். சிற்றன்னை இவரைத் தன் மகனாகவே கருதி வளர்த்தார். அவரது அரவணைப்பில் முயன்று பயின்ற பிள்ளை பி.ஏ., பி.எல். பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பணி தொடங்கினார். உலகநாயகி அம்மையுடன் திருமணம் நிகழ்ந்தது. பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என மூன்று மகவுகள் வாய்த்தன. சிங்காரவேலு குழந்தையாக இருந்தபோதே உலகநாயகி காலமானார். அதுமுதல் தூய தவநெறியராக வாழ்வைத் தொடர்ந்தார்.
உறவினர்கள், குழந்தைகளின் எதிர்காலம் கருதி மறுமணம் செய்துகொள்ள முயற்சிகள் எடுத்தபோதும் பிள்ளை அவற்றை ஏற்கவில்லை. சைவத்தின்பாலும் தமிழின்பாலும் கவனத்தைத் திருப்பினார். தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று பல்வேறு சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். கூட்டுறவு இயக்கத்தின்மீது ஈர்ப்புக்கொண்ட பிள்ளை, அதன் வளர்ச்சிக்கு உழைத்தார். தமிழ்மீது கொண்ட பற்றுக் காரணமாக தமது சகோதரர் ராதாகிருஷ்ணப் பிள்ளையுடன் இணைந்து, மே 14, 1911 அன்று கரந்தை தமிழ்ச்சங்கத்தை உருவாக்கினார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் சங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். உமாமகேசுவரன் பிள்ளை தலைவர் பொறுப்பேற்று பல்வேறு தமிழ்ப் பணிகளை மேற்கொண்டார். ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று இச்சங்கம் சான்றோர்களால் போற்றப்பட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மிகவும் மதிப்பிருந்தது. புலவர்களாக அவர்கள் மதிக்கப்பட்டனர். கல்லூரிக் கல்வியோடு கூடவே கைத்தொழில் ஒன்றையும் கற்றுக்கொள்வது சொந்தக் காலில் நிற்க உதவும் என்பதை உணர்ந்து செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கி நடத்தினார்.
அக்காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதும், வடசொல் கலந்து எழுதுவதும் வழக்கமாக இருந்தது. அதுகண்டு மனம் வருந்திய பிள்ளை, தமிழிலேயே அனைவரும் பேசவும், எழுதவும் வேண்டும் என்று விரும்பினார். மாணவர்களைத் தமிழில் பேச ஊக்குவித்தார். வடசொற்களுக்கு மாறாகப் புதிய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தினார். அதுவரை திருவையாறு கல்லூரியில் வடமொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. பிள்ளை அதனை மாற்றி, அங்கே தமிழை முதன்மை மொழியாகச் செய்தார். ஆங்காங்கே இருந்த புலவர்களைத் திரட்டி, தமிழ் விழாக்கள், சொற்பொழிவுகள், கவியரங்குகள் நிகழ்த்தினார். நூலாராய்ச்சியில் பெருவிருப்பம் கொண்டிருந்த பிள்ளை, பண்டைத் தமிழ்நூல்கள் பலவற்றை ஆராய்ந்து நூல்கள் வெளியிட்டார். "யாழ்நூல்", "பரத சாஸ்திரம்", "நெல்லை வருக்கக் கோவை", "தமிழரசிக் குறவஞ்சி", "சிலப்பதிகாரப் புகார்க் காண்டம்", "நக்கீரர்", "கபிலர்", "தொல்காப்பிய உரை", "சிவமும் செந்தமிழும்" போன்ற நூல்கள் உமாமகேசுவரன் பிள்ளையின் அரிய முயற்சியால் பதிப்புக்கண்டன. தமிழாய்வுக்கு வலுசேர்க்கும் வகையில் "தமிழ்ப்பொழில்" என்னும் இதழை உருவாக்கி ஆசிரியராகப் பணியாற்றினார். அதில் உமாமகேசுவரன் பிள்ளை எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகளும், விளக்கங்களும், தலையங்கங்களும் அவரது மேதைமையைப் பறைசாற்றுவன. வரலாற்றறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரின் கட்டுரைகளை அவ்விதழில் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார். அச்சுக் கோர்ப்பவர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காக பத்திரிகை ஆசிரியர்கள் சிலர் தமிழ் எழுத்துகள் சிலவற்றில் மாற்றம் செய்யத் துணிந்ததை பிள்ளை வன்மையாகக் கண்டித்தார். நெல்லை இந்துக்கல்லூரியில் நடந்த தமிழ்மாநாட்டில் அது குறித்து உரையாற்றினார். "ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய நிரம்ப இடமிருந்தும் அவற்றைத் திருத்தத் துணியாதபோது, தமிழ்மொழியை திருத்தலாமென்பது பேதைமையாகும்" என்று அவர் உறுதியாகக் கூறினார். |
|
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டபோது "கரந்தை தமிழ்க் கல்லூரி" துவங்கப்பட்டது. அது தமிழாராய்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. சங்கத்திற்காகப் பெருமன்றம் ஒன்றைக் கட்டினார். நூலகம் ஒன்றை உருவாக்கி அதில் பண்டைய தமிழ் நூல்கள், சுவடிகளை அதில் சேகரித்து வைத்தார். "தமிழை உயர்தனிச் செம்மொழியாக அரசு அறிவிக்க வேண்டும்; தமிழுக்கென்று தனித்த ஓர் பல்கலைக்கழகம் உருவாதல் வேண்டும்" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து அரசினை வலியுறுத்தி வந்தார் பிள்ளை. "நீராருங் கடலுடுத்த" எனத் தொடங்கும் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளையின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக முன்வைத்தது உமாமகேசுவரன் பிள்ளைதான். திருவையாறு கல்லூரியின் பெயர், அரசர் கல்லூரி என்று மாற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்ததும் அவரே! 1937லேயே ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியதுடன், ஹிந்தியை எதிர்த்துப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டார். கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்குக் "கவிமணி" என்ற பட்டம் சூட்டிப் பெருமைப்படுத்தியவர் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்கள்தான்.
இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி அரசாங்கம் இவருக்கு "ராவ்பகதூர்" என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தமிழறிஞர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள் பிள்ளைக்கு "செந்தமிழ்ப் புரவலர்" என்ற பட்டம் வழங்கிப் பாராட்டினார். இவரது தமிழ்ச் சேவைக்காகத் "தமிழவேள்" என்ற சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டது. நீதிக்கட்சிமீது அபிமானம் கொண்டிருந்த பிள்ளை, அக்கட்சியின் சார்பாக, காந்தியடிகள் தஞ்சைக்கு வந்திருந்தபோது சந்தித்து உரையாடியிருக்கிறார். "சைவத்தின் மீது பிள்ளைக்குப் பற்று அதிகம். வாலையானந்த அடிகளிடம் சித்தாந்த நூல்களை முறையாகப் பயின்ற பிள்ளை, பல தலங்களுக்கும் கால்நடையாகவே சென்று திருத்தல தரிசனம் செய்திருக்கிறார்" என்று தமது இணையற்ற சாதனையாளர்கள் நூலில் பதிவு செய்திருக்கிறார், திரு. முக்தா சீனிவாசன்.
கரந்தை தமிழ்க்கல்லூரியை உலக அளவில் சிறந்த கல்லூரியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த பிள்ளை, நண்பர் ஒருவருடன் வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பல கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். சாந்தி நிகேதன் கல்லூரியைக் கண்டு வியந்தவர், காசி இந்துப் பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். தொடர்ந்து ஹரித்துவார் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், அயோத்தி அருகே ஃபைசாபாத் என்ற ஊரில் அவரது உடல்நலம் குன்றியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்காமல் மே 09, 1941 அன்று காலமானார். இவரது நினைவைப் போற்றும் வகையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் முன் இவரது சிலை எழுப்பப்பட்டுள்ளது. கரந்தையில் அவரது பெயரில் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் இயங்கிவருகிறது. தமிழுக்கும், தமிழ்க் கல்விக்கும் சேவை செய்த முன்னோடிகளுள் தலையானவர் உமாமகேசுவரன் பிள்ளை.
பா.சு.ரமணன் |
|
|
|
|
|
|
|