Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கோவை ஞானி
- அரவிந்த்|செப்டம்பர் 2015|
Share:
எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், பள்ளியாசிரியர் எனப் பலவற்றைத் திறம்படச் செய்தவர் கோவை ஞானி. இயற்பெயர் பழனிசாமி. கோவை, பல்லடத்தை அடுத்துள்ள சோமனூரில் 1935 ஜூலை 1 அன்று, கிருஷ்ணசாமி - மாரியம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். ஞானிக்கு மூன்று வயதானபோது குடும்பம் அவிநாசியில் உள்ள கள்ளிப்பாளையத்திற்குக் குடிபெயர்ந்தது. ஐந்தாம் வகுப்பு வரையில் ஞானி அங்கு படித்தார். தந்தை தானிய வியாபாரி. மிக வறுமையான சூழல். கற்றாழையையும், புழுத்த மக்காச்சோளத்தையும் உண்ணும் சூழலிலும் கல்வியைத் தொடர்ந்தார். கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர், தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழிலக்கியம் கற்றார். அங்கு நிலவிய தமிழ்ச் சூழலாலும் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, முத்து சண்முகம் போன்ற தமிழறிஞர்களாலும் ஞானியின் தமிழார்வம் விரிவடைந்தது. பல்கலைக்கழகம் இவருக்கு பல வாசல்களைத் திறந்துவிட்டது. கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம், மெய்யியல், அறிவியல் எனப் பல்துறை நூல்களை வாசித்தார். அது இவரது பார்வையை விசாலமாக்கியது.

படிப்பை முடித்தபின் தமிழாசிரியர் பணி கிடைத்தது. தன்னுடன் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய இந்திராணியை திருமணம் செய்துகொண்டார். ஓய்வு நேரத்தை வாசிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டார். மார்க்சியம் இவரை ஈர்த்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், திறனாய்வு எனப் பல களங்களில் மார்க்சிய சித்தாந்தத்தின் வழியே ஆய்வுகளை மேற்கொண்டார். நண்பர்களுடன் கோவையில் 'சிந்தனை மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கியவர், 'புதிய தலைமுறை' என்ற இதழை வெளியிட்டார். அதில் காத்திரமான பல கட்டுரைகள் வெளியாகின. 'இராவணன்' என்ற புனைபெயரில் கவிதைகளை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினார். மணிவாசகன், கபிலன், கதிரவன், தமிழ்மாறன் என்று பல புனைபெயர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நா.பா.வின் நாவல்களை விமர்சித்து இவர் எழுதிய கடிதம் முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே 'புதிய தலைமுறை' வெளிவந்தது. தொடர்ந்து 'வானம்பாடி' கவிதை இதழிலும் முக்கியப் பங்காற்றிய ஞானி அதிலிருந்து வெளியேறினார். 'வேள்வி', 'பரிமாணம்', 'நிகழ்', 'தமிழ்நேயம்' போன்ற இதழ்களில் வெவ்வேறு பொறுப்புகளில் பங்காற்றினார். எழுத்தாளர் ஜெயமோகனை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஞானிதான். ஜெயமோகனின் முதல் சிறுகதையான 'படுகை' நிகழில் வெளிவந்ததன் மூலம் ஜெயமோகனின் கலை, இலக்கியப் பயணம் தொடங்கியது. தொடர்ந்து 'நிகழ்' இதழில் ஜெயமோகனின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார்.

ஞானி சிறந்த கவிஞரும்கூட. அகலிகையின் கதையை 'கல்லிகை' என்ற நீள்கவிதையாக வெளியிட்டிருக்கிறார். அகலிகையை மார்க்சிய கோணத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக அவர் பார்க்கிறார். 'கல்லும் முள்ளும் கவிதைகளும்', 'தொலைவிலிருந்து' போன்றன இவரது கவிதைத் தொகுப்புகளாகும். தாகூரின் 'சண்டாளிகா' நாடகத்தை 'தீண்டாதவள்' என்று இவர் வடித்துள்ளது முக்கியமானது. சமயம் குறித்தும் விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டவர் ஞானி. இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு என்பதே ஞானியின் ஆய்வு முடிவு. அதே சமயம் ஞானியை நாத்திகர் என்றும் மதிப்பிட்டுவிட முடியாது. சமயம்பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒரு நேர்காணலில், "அண்ணாமலையில் நான் படிக்கிறபொழுதே தியானம் செய்வதில் ஈடுபட்டு இறுதியில் நானே பிரம்மம் என்ற பேருணர்வைப் பெற்றேன். 'அத்வைதம்' என்ற பேருணர்வுக்கான பொருண்மைத் தெளிவை நாளடைவில் விவேகானந்தர், தாகூர், பாரதி முதலியவர்களைப் பற்றிய படிப்பறிவின் மூலம் பெற்றேன். இந்தப் பார்வை மார்க்சியத்தின் மீதான எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது" என்கிறார்.
தனது தியான அனுபவம் பற்றி ஞானி, "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, தனியறையில் காலை நேரத்தில் அரைமணி நேர தியானமென்று தொடங்கி நாளடைவில் மிக வித்தியாசமான அனுபவங்களை அடைந்தேன். தியானத்திலிருக்கும்போது கண்ணுக்குள் ஒரு நீலநிற ஆகாயம். அதன் மத்தியில் நீலநிறம் விலகி மையத்தில் ஒரு மேகம். சிறிது நேரம் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மேகம் விலகிக் கண்ணைக் கூசச்செய்கிற மாதிரி சூரியன்.... திடீரென்று மேலே உச்சந்தலையிலிருந்து குளிர்ந்த நீர் அப்படியே மெல்லக் கீிழிறங்கும். அதனுடைய ஆனந்தமும் பரவசமும் அளவில்லாதது... ஒரு கட்டத்தில் வேறுமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டன. விடுதியில் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறேன். நான்கைந்து நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நான் உற்றுப்பார்த்தபோது நாய்களோடு நான் இருக்கிறேன். ஒருமுறை ரயிலில் பயணம் செய்யும்போது எனக்கெதிரே ஒரு அம்மா குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நிமிடம் உற்றுப் பார்த்ததில் நான் குழந்தையாகி விடுகிறேன்." என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ் நாவல்கள் குறித்து இவரது திறனாய்வுகள் மிக முக்கியமானவை. கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், நீல. பத்மனாபன், பொன்னீலன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோரது படைப்புகள் மட்டுமல்லாமல் ஜெயமோகன், சு.வேணுகோபால், பாலகுமாரன். ம.வே.சிவகுமார், சு.சமுத்திரம், ராஜம் கிருஷ்ணன் எனப் பலரது படைப்புகள் குறித்து இவர் எழுதியிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகள் கூர்ந்து வாசிக்கத்தக்கன. ஞானியின் ஆய்வுப்போக்கு குறித்து ஜெயமோகன் "நவீன விமரிசனக் கோட்பாடுகளுடன் மார்க்சியத்தை உரையாட வைத்தலிலும் அழகியல் நீதியாக இலக்கியத்தை அணுகும்படி மார்க்சியத்தை மாற்றி அமைத்தலிலும் ஞானியின் பங்கு முக்கியமானதாகும்" என்கிறார். ஞானியின் நடை மிக எளிமையானது. தெளிவானது. குழப்பமான சிந்தனைப் போக்குகளோ, பரபரப்பான வார்த்தைச் சொல்லாடல்களோ, வாசகரை மயக்கும் உத்திகளோ இல்லாமல் நேரடியாக உரையாடலாக எழுதுபவர் ஞானி. அதுவே அவரது பலம்.

சிறந்த தமிழ் பெண்ணெழுத்தாளர் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். 'மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்', 'தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள்', 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்', 'படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்', 'தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம்', 'நானும் என் தமிழும்', 'தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்', 'நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும்', 'செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம்', 'தமிழிலக்கியம் இன்றும் இனியும்' போன்ற இவரது திறனாய்வு நூல்கள் முக்கியமானவை. மெய்யியல் சார்ந்து இவர் எழுதியிருக்கும், 'மணல்மேட்டில் ஓர் அழகிய வீடு', 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை', 'நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்', 'மெய்யியல்' போன்ற நூல்கள் சமயம், கடவுள், தத்துவம் தொடர்பானவை. இவை தவிர்த்து, 'பெண்கள் வாழ்வியலும் படைப்பும்', 'மார்க்சியத்தின் எதிர்காலம்', 'படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும்', 'விடுதலை இறையியல்', 'இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்', 'அறிவியல் அதிகாரம் ஆன்மீகம்' போன்ற தொகுப்பு நூல்கள் முக்கியமானவை. 'மணல்மேட்டில் ஒர் அழகிய வீடு' ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை ஆராய்கிறது. 'எண்பதுகளில் தமிழ் நாவல்கள்' என்ற ஆய்வு நூல் 1980களில் வெளிவந்த சுமார் 30 எழுத்தாளர்களின் 65 நாவல்களை ஆராய்கிறது. 'தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்' என்ற நூல், நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் நாவலாசிரியர்களின் படைப்புகள் குறித்து விளக்குகிறது. 28 திறனாய்வு நூல்கள் உள்ளிட்ட 48 நூல்களை எழுதியிருக்கிறார் ஞானி. அவரது வாழ்வுக்கும் சிந்தனைக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏதுமில்லை என்பதையும், 'ஞானி' பெயருக்கேற்றாற் போல் ஓர் உண்மையான பக்குவநிலையில்தான் வாழ்ந்து வருகிறார் என்பதையும் அவரது படைப்புகளைக் கூர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

1988ல் ஞானிக்குக் பார்வைக்குறைவு ஏற்பட்டது. அதனால் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் என்றாலும் வாசிப்பை விட்டுவிடவில்லை. உதவியாளர்கள் மூலம் வாசித்தலும், எழுதுதலும், பத்திரிகை வெளியீடும் தொடர்ந்தது. 27 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வைத்திறன் இல்லாதபோதும் உதவியாளரின் ஒத்துழைப்புடன் இவர் ஆற்றிவரும் தமிழ்ப்பணி குறிப்பிடத் தகுந்தது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலம்பு, குறள், கம்ப ராமாயணம் எனப் பண்டை இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சி உடையவர். தமிழாசிரியர் பணி அதற்கு உறுதுணையாக இருந்தது. பாரதியைத் தன் ஆசானாகக் கருதியவர். முனைவர் பட்டம் பெறாவிடினும் பல முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கியிருக்கிறார். பல பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன. பல கருத்தரங்களில் பங்கேற்றுச் சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளார். ஞானியின் 'மார்க்சியம் பெரியாரியம்' எனும் நூலுக்குத் தமிழக அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 'செம்மொழி ஞாயிறு' என்னும் பட்டத்தை வழங்கியது. கனடாவின் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான 'இயல் விருது' வழங்கியது. 'விளக்கு' விருதும் பெற்றவர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் 'பரிதிமாற் கலைஞர்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

தமிழகத்தின் மார்க்சியத் திறனாய்வாளர்களுள் முக்கியமானவரான ஞானி, தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர். மனைவி புற்றுநோயால் 2012ல் காலமானார். தற்போது கோவையில் வசித்து வருகிறார். 80 வயதாகும் இவருக்குப் பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். விளம்பரமின்றி அமைதியாக வாழ்ந்துவரும் ஞானியின் படைப்புகளைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. kovaignani.org என்ற அவரது இணைய தளத்தில் ஞானியின் நூல்கள் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. 55 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டிருக்கும் 'இலக்கியப் பிதாமகர்' ஞானி, தமிழுக்குச் செய்திருக்கும் பங்களிப்பு என்றும் எண்ணிப் போற்றத்தக்கது.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline