எம்.எஸ். விஸ்வநாதன் அதிபர் ஒபாமா இரங்கற் செய்தி ரிஷிகேசத்தில் அப்துல் கலாம் காலத்தை வென்ற கலாம் எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார் "உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்"
|
|
நந்தா விளக்கே, நாயகனே! |
|
- மதுரபாரதி|ஆகஸ்டு 2015| |
|
|
|
|
ஜூலை 28. சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு. அங்கு ஒரு மேசைமேல் முந்தைய இரவில் உயிர்நீத்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் படம் வைத்து மாலை சூட்டப்பட்டிருக்கிறது. அந்த ஆட்டோக்காரர்கள் முகத்தில் சோகம். ஆண்-பெண், கற்றார்-கல்லார், நகரத்தவர்-கிராமத்தவர், ஏழை-செல்வந்தர், வடவர்-தென்னவர் என்கிற வேறுபாடுகளையெல்லாம் கடந்து மக்கள் மனதில் இடம்பிடித்த தலைவர் உண்டென்றால் டாக்டர் அப்துல் கலாம் ஒருவரைத்தான் சொல்லமுடியும். தமிழ் நாட்டின் கடற்கரையோரத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு வறுமைமிக்க முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, வழக்கமாகச் சொல்லப்படுகிற எல்லாத் தடைகளையும் தமது அறிவாலும், அன்பாலும், லட்சிய வேகத்தாலும், உழைப்பாலும் தாண்டி, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற நிலையை அடைந்தவர் அவர். 'People's President', 'Missile Man' என்றெல்லாம் மக்கள் அவரை அன்போடு அழைத்தார்கள்.
அவருக்கு உலகமே குடும்பமாக இருந்தது. "நான் ராஷ்டிரபதி பவனைவிட்டுச் செல்லும்போது, என்னுடைய உடைமைகளை இந்த இரண்டு சூட்கேஸ்களில் கொண்டுசெல்வேன்" என்று கூறியபடியே செய்தவர். யாரெல்லாம் இந்தியா முன்னேற வேண்டுமென்று நினைத்தார்களோ, யாருக்கெல்லாம் தடைகளைத் தாண்டிச் சிகரங்களைத் தொடும் ஆர்வம் இருந்ததோ அவரெல்லாம் கலாம் எழுதிய 'அக்னிச் சிறகுகள்' நூலைப் படித்திருந்தார்கள். தலைமுறை இடைவெளியைத் தாண்டி அவரால் இளையோரின் இதயத்தோடு பேசமுடிந்தது. அதில் நேர்மை, ஒழுக்கம், அறிவுத்தேடல், விண்ணைத் தொடுதல் இவற்றுக்கான ஆர்வத்தைக் கொளுத்தமுடிந்தது. அவருடைய சொற்களில் வேகமும் ஒளியும் இருந்தன. "எவ்வளவு நாள்தான் வளரும் நாடு என்றே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம்? வளர்ந்த நாடாகிவிடலாம் வாருங்கள்" என்று அறைகூவினார். விழிப்போடு கனவுகாணச் சொன்னார்!
சென்னை MIT கல்லூரியில் வானூர்திப் பொறியியல் பட்டம் (1960) பெற்ற அவர் ISRO தனது ரோஹிணி செயற்கைக்கோளைத் தாங்கிய SLV-III ஏவு வாகனத்துக்குத் திட்ட இயக்குனராகப் பொறுப்பேற்றுச் செய்துமுடித்தார். பின்னர் 1982ல் இந்தியப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான DRDOவில், அக்னி, பிருத்வி ஆகிய ஏவுகணைகள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றினார். மத்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக 1992லிருந்து 7 ஆண்டுகள் பணியாற்றினார். ஏவுகணைகளில் போர்த்தளவாடம் பொருத்துவதிலும், அணுவாற்றல் துறையுடன் இணைந்து செய்த பொக்ரான்-II அணுப் பரிசோதனையிலும் அவரது பங்கு அளவிடற்கரியது. இவற்றின் காரணமாக இந்தியா ஓர் அணுவாயுத நாடானது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோகராக 1999 நவம்பரில் பொறுப்பேற்று முக்கியமான பல பாதுகாப்புக் கோட்பாடுகள், உத்திகள் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுத்தார். "வலிமையைத்தான் வலிமை மதிக்கும்" என்பதில் இவருக்குத் தெளிவிருந்தது. இந்தியா 2020 வல்லரசு ஆகிவிடும், வல்லரசு ஆகவேண்டும் என்பதைச் சொற்பொழிவுகளிலும் எழுதிய நூல்களிலும் இவர் தவறாமல் கூறியதோடு, அதற்கான வழிமுறைகளையும் விவரித்தார். |
|
உண்மையிலேயே 'பத்மபூஷண்' (1981), 'பத்மவிபூஷண்' (1990) மற்றும் இந்தியாவின் மிகவுயர்ந்த படைசாரா விருதான 'பாரதரத்னா' (1997) ஆகியவை மிகச்சிறந்த ஒருவருக்குப் போய்ச்சேர்ந்தன என்று நிறைவடைவதானால், அது டாக்டர். கலாமுக்குக் கொடுக்கப்பட்ட போதுதான் என்பது பரவலான கருத்து. அரசியல் சார்பற்ற, தன் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் எல்லா மதங்கள்மீதும் நேசமும் கொண்ட மனிதநேயர் இவர். அரசியல் காரணங்களால் இரண்டாம் முறை இவர் ஜனாதிபதி ஆகமுடியவில்லை என்றாலும், மக்கள்மனதில் நீங்காத இடம்பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.
'எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப்பெறின்' என்றான் வள்ளுவன். அந்தப் பொய்யாமொழி மெய்யானது அப்துல் கலாமின் மரணத்திலும். "நான் மாணவர்களுடன் இருக்கும்போது என் உயிர் பிரியவேண்டும்" என்று அவர் கூறியிருந்தார். அதேபோலவே ஷில்லாங் IIM-ல் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மேடையிலே சரிந்து விழுந்த அவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.
தமிழ்மகனாகப் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனாகப் பதவியேற்று, உலகக் குடிமகனாகப் பீடுற்ற டாக்டர். அப்துல் கலாம் ஒரு நந்தா விளக்கு! அவர் தரும் ஒளியில் நடந்தால் இந்தியா பிறரை நசுக்காத தலைமைப் பதவியை எட்டி ஒளிரும். அவருக்குத் தென்றல் தனது சிரந்தாழ்ந்த அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறது.
மதுரபாரதி |
|
|
More
எம்.எஸ். விஸ்வநாதன் அதிபர் ஒபாமா இரங்கற் செய்தி ரிஷிகேசத்தில் அப்துல் கலாம் காலத்தை வென்ற கலாம் எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார் "உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்"
|
|
|
|
|
|
|