|
|
காமன் என்னும் மன்மதன் தமிழிலக்கியங்களில் காதலர்களின் காமத்திற்குத் தலைவனாக இருப்பதை அடிக்கடிக் காண்கிறோம். காமனைப் பற்றிய சில செய்திகளை இங்கே காண்போம்.
காமனுக்கு காமவேள், மாரன், மாரவேள், மன்மதன், மதனன், மோகன், வேனிலாளன், வசந்தன், கந்தர்ப்பன், அனங்கன் என்று பல பெயர்கள் உண்டு. ஆனால் பழைய இலக்கியங்களில் காமன் என்ற பெயரே பெரிதும் புழங்கக் காண்கிறோம்.
காமனுடைய பருவம் இளவேனிற் பருவம் என்னும் வசந்த காலம். காமன் காதலரிடையில் காதலைத் தூண்டுபவன் என்றும் அவன் அத்தூண்டலைத் தான் ஏவும் மலரம்பினால் தூண்டுபவன் என்றும் அறிந்ததே. அவன் அந்த அம்புகளை எய்யப் புழங்கும் வில் என்ன வில்? கரும்பு. அம்புகள் ஐந்து வகை மலர்களால் ஆனவை. இதனைப் பிங்கலந்தை நிகண்டு
“கழையே வில்லு; கணைமலர் ஐந்தே” (பிங்கலைந்தை: 55)
[கழை = கரும்புல் கணை = அம்பு]
அதாவது “கரும்பு வில்; அம்புக்கு மலர்கள் ஐந்து” என்று சொல்லுகிறது.
அந்த ஐந்து வகை மலர்கள் என்னென்ன?
“வனசம், சூதம், அசோகம், முல்லை, குவளை காமன் கொலும்ஐங் கணையே” (பிங்கலந்தை: 56)
“தாமரை, மா, அசோகம், முல்லை, குவளை என்று காமனின் கொல்லும் ஐந்து அம்பு” என்கிறது.
காமனுக்குத் தேரும் கொடியும் உண்டு:
“வாகனம் தென்றல்; மகரம் கொடியே” (பிங்கலைந்தை: 54)
அதாவது “தேர் தென்றற் காற்று; தேரின் உச்சியில் பறக்கும் கொடி மகரம் அல்லது சுறா மீன்”! மன்மதனுடைய தேரை இழுக்கும் விலங்கு என்ன? கிளி! இதைச் சிலப்பதிகாரத்தின் வேனிற்காதை உரையில் அடியார்க்குநல்லார் சொல்வதிலிருந்து அறிகிறோம்.
காமன் ஓவியத் தொழிலில் வல்லவன் என்பதும் இலக்கியங்கள் கூறுகின்றன. “மதனற்கும் எழுதவொண்ணாத சீதை” (கம்பன்: மிதிலைக் காட்சி: 5) என்னும் கம்ப இராமாயணச் சொற்கள் இதைத் தெரிவிக்கும்.
இந்தக் காமனின் பெற்றோர் யார்?
முல்லை நிலத்துக் கடவுளராகிய திருமாலும் திருமகளும். இதைக் கலித்தொகையில் காமனை “நெடியோன் மகன்” (கலித்தொகை: நெய்தல்: 30) என்னும் தொடராலும் நச்சினார்க்கினியரும் முல்லைக் கலியின் 9-ம் பாட்டின் உரையில் “காமன் மாயோன் மகனாதலின்” என்று சொல்வதாலும் அறிகிறோம். மேலும் காமனுக்குத் தம்பி சாமன் இருந்ததையும் அறிகிறோம். காமனின் மனைவி இரதி என்பதும் தெரிந்ததே.
காமனுக்குக் கோவில்!
இக்காலத்திலே காமனுக்குக் கோவில் இருப்பதை நாம் கேட்டதில்லை. ஆனால் சங்கக் காலத்தில் காமனுக்குக் கோவில் இருந்ததாக அறிகிறோம். இதைச் சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் அவளுடைய பார்ப்பனத் தோழி கோவலனை மீண்டும் அடைய வழிபடவுரிய கோவில்களும் தீர்த்தங்களும் சொல்லும்பொழுது
“காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர்” (சிலம்பு: கனாத்திறமுரைத்த காதை: 60-61)
என்ற அடிகளால் காமவேளுக்குக் கோட்டம் அதாவது கோவில் இருந்ததை அறிகிறோம். இதைச் சங்க இலக்கியங்களில் பலவிடங்களில் காண்கிறோம். காமத்தைப் போற்றித் தூய்மையோடு வாழ்வது ஓங்கி இருந்த காலத்தில் காமனுக்குக் கோவில் பெருகியிருந்துள்ளது. பின்னர் காமத்தைச் சிறுமைப்படுத்தியும் நெறிபிறழ்ந்தும் வாழ்வது பெருகிய பொழுது காமனுடய கோவில் சிறுகியது தெரிகிறது.
காமன் கோவிலில் காமனுக்கு உரிய பருவமான இளவேனிற் காலத்தில் விழா எடுத்ததும் தெரிகிறது. |
|
காமனின் உள்ளத் தூய்மை!
காமன் காதலரிடையில் காமத்தைத் தூண்டுவதே தொழிலாய் இருப்பதால் அவனை நாம் காமத்தின் வடிவமென்றே கருதி அவனைக் காமுகன் என்றே அழைக்கவும் தோன்றும். ஆனால் காமன் அப்படிப்பட்டவன் அல்லன்! காமன் தன் காதலியாகிய இரதியைத் தவிரப் பிறமகளிரை விரும்பாதவன்!
இதைக் கலித்தொகையில் தலைவி தன் தலைவன் தன்னிடம் இருக்கும்பொழுது காமவிளையாட்டுகள் பல நிகழ்த்த வல்லவன் என்றும் ஆனால் தன்னை விட்டு நீங்கியிருக்கும் பொழுது தலைவனுக்கு இருக்கும் மனவடக்கத்தைப் பற்றிக் கூறுகையில்:
“தன்கையில் சிலைவல்லான் போலும் செறிவினான்; நல்ல பலவல்லான் தோளாள் பவன்” (கலித்தொகை: 143)
[சிலை = வில்; செறிவு = அடக்கம், கட்டுப்பாடு]
“தன் கையில் கரும்பு வில்லை ஏந்திய காமனைப் போல் மனவடக்கம் உள்ளவன்” என்று சிறப்பாகச் சொல்வதைக் காண்கிறோம்.
அதனால்தான் மிக அழகிய பெண்ணை வருணிக்கும் பொழுது காமனும் விரும்பும் காரிகை என்று சொல்லுவார்கள், அதாவது பிறமகளிரை விரும்பாத காமனையும் விருப்பம் தோற்றுவிக்கும் அழகி என்று சொல்வர்.
அந்தத் தூய்மையினாலே தான் தலைவி காமனின் காலைக் கட்டிப்பிடித்துத் தலைவனைத் தன்னுடன் சேர்ப்பிக்குமாறு வேண்டும் காட்சிகளைக் காண்கிறோம். அவன் தூயவன் என்பதால் தலைவி அவனைப் பணிவதிலும் தீண்டுவதிலும் நாணமும் பயிர்ப்பும் காட்டுவதில்லை.
“காமன் கணை இரப்பேன் கால் புல்லிக் கொண்டு” (கலித்தொகை: 147:60)
[புல்லி = கட்டி, தழுவி]
அதாவது “காமனை அவன் அம்புகளை என்னிடம் நேரே கொடுக்குமாறு வேண்டுவேன் அவன் காலைக் கட்டிக் கொண்டு” என்று தலைவி புலம்புகிறாள்.
இதுபோலவே ஆண்டாள் நாய்ச்சியார் திருமொழியிலும் காமனை வேண்டுவதைக் காண்கிறோம்.
இவற்றின் மூலம் நாம் தமிழரின் அரிய பண்பாட்டில் மிக நுணுக்கமானதும் வியக்கத்தக்கதுமான காமனைப்பற்றிய செய்திகளை அறிகிறோம்.
பெரியண்ணன் சந்திரசேகரன் அட்லாண்டா |
|
|
|
|
|
|
|