Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
தாளமுடியாத மன்னிப்பு
- மேலாண்மை பொன்னுச்சாமி|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlargeபுஞ்சைக்கு வந்து சேருகிற வரைக்கும் சுப்புத்தாய்க்கு கோபம் கோபமாய் வந்தது. புஞ்சைக்காரி வேறு வீடு தேடி வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனாள்.

'வேலை சோலி இல்லாத நேரம். 'வாரேன் வாரேன்'னு வர்றீக வெள்ளெனத்துலே கெளம்புனாத்தானே வேலை நடக்கும்? வீட்லேயே பொழுதைத் தேய்ச்சுக்கிட்டிருந்தா.. எப்படி?'

அவள் சொன்ன தோரணையே சரியில்லை. குத்திக் கிழிக்கிற இளக்காரம். அதிகாரம் அடிபட்ட வேதனையோடு நிமிர்ந்த சுப்புத் தாய்க்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. தொண்டை வரைக்கும் வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டாள்.

பொய்யாகச் சிரித்தாள். வேதனைக்கு உறைபோட்டுக் கொண்ட சிரிப்பு. சிரிப்பில்லாத சிரிப்பு.

'இல்லேத்தா... இந்தா கெளம்பிட்டேன்'

'சாப்ட்டீயா?'

'இந்தா...ஒரு வாய் அள்ளிப் போட்டுருவேன்''

'சரியாப்போச்சு! இனிமேதான் சாப்பிடணுமா? நேரம் ஒசக்கே வந்துரும்'

'இல்லேக்கா.. இதே... ஒரு நொடியிலே'

புஞ்சைக்காரி போனவுடன் துரிதமாகச் செயல்பட்டாள். மனசு கிடந்து கமறியது. புஞ்சைக்காரி 'விரட்டி'ப் பேசியதை நினைக்க நினைக்க வருகிற கோபம்.

'ரெண்டு மழை பேய்ஞ்சிருந்தா... இப்படியா பேசுவே? காடுகரைகள்லே வேலை ரொம்ப நடக்கும். கூலி கவலைக்கு ஆளுக கெடைக்குறதே பெரும்பாடாகயிருக்கும். அப்பிடி இருந்துச்சுன்னா... 'அம்மா.. தாயே'ன்னு நாடியைப் பிடிச்சுக் கெஞ்சுவே?... மழை தண்ணியில்லாமப் போகப்போய் - கூலிக்காரிகன்னா... ஒனக்கு அம்புட்டு எளக்காரமாப் போச்சு? ம்..ம்..'

ஏதோ அவளே இன்னும் இவள் எதிரில் நிற்பது போல... சுப்புத்தாய் கொதிக்கிற மனசோடு முணங்கிக் கொண்டிருந்தாள்.

சட்டுபுட்டுனு சாப்பிட்டு முடித்தாள். தூக்குச் சட்டியில் மிச்சமுள்ளதைக் கொட்டிக் கொண்டாள். மகளுக்கு மதியத்திற்குக் குழம்பு வேண்டுமே! அது இருக்கிறதா என்று சட்டியைத் திறந்து பார்த்துக் கொண்டாள்.

மகள் சுந்தரி இப்போதுதான் பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். அஞ்சாங் கிளாஸ். மதியம் சத்துணவில் சாப்பிட்டுக் கொள்வாள். சத்துணவில் ஊற்றுகிற சாம்பார் நன்றாக இருக்காது. மஞ்சள் கலந்த பச்சைத் தண்ணீராக இருக்கும். சோறை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து, சுந்தரி வீட்டில் தான் சாப்பிடுவாள்.

அவளுக்கு ரொம்ப அறிவு. போட்டதைத் தின்னோம் என்றிருக்காது. ருசி பார்ப்பாள். காரம் சரியாக இருக்கிறதா இல்லையா என்பாள். பெரிய மனுஷி போல் பேசுவாள். ''உப்பு கொஞ்சம் கொறைச்சலா இருக்கு.''

சுப்புத்தாய்க்கு ரொம்பப் பெருமையாக இருக்கும். ''எங்க அய்யா அப்படியே வந்து பெறந்துருக்காரே" என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள். குணம், பேச்சு, சுபாவம் எல்லாம் அப்படித்தான். சுப்புத் தாயின் அய்யா அச்சுத்தான்.

கதவைச் சாத்திவிட்டுக் கிளம்பினாள். மகள் வேகுவேகென்று ஓடி வந்தாள். ப்ளு கலர் பாவாடை. வெள்ளைச் சட்டை. ரெட்டைச்சடை. வலது கையில் பென்சில், 'என்ன இது? ஓடியார்றா...?'' பதறிப்போய் கேட்டாள் சுப்புத்தாய்.

''எதுக்கடி இப்ப வாரே''

''அம்பது பைசா வேணும்''

அவளுக்குள் பகீர் என்றது. ஒரு சல்லிக்காசு கூட கையில் இல்லை. என்ன செய்ய?

''எதுக்கடி?''

''நேத்து ஒன்னாலேதானே... நா பள்ளிக் கோடத்துக்கு லேட்டாய்ப் போனேன்? அதுக்கு அபராதம் அம்பது பைசா.''

''இப்ப இல்லியே...டி''

''ஐயய்யோ... எங்க வாத்யாரு ரொம்பக் கண்டிப்பு. அடிப்பாரு..''

''சரி... இப்ப கையிலே துட்டு இல்லியே''

''அது என்னமோ எனக்குத்தெரியாது. துட்டு வேணும்''

கூலி வேலைக்குப் போனால் சாயங்காலம் கையில் பன்னிரண்டு ரூபாய் கிடைக்கும். நாலுமாதத்துக்கு முந்தி வரைக்கும் அரிசி ஒரு கிலோ நாலரை ரூபாய். இப்போது ஏழு ரூபாய். எல்லாச் சாமான்களும் ரெக்கைக் கட்டிக் கொண்டு பறக்கிறது.

முந்தியென்றால்.. தாயும் மகளும் சாப்பிட்டது போக... எப்படியும் ரெண்டு ரூபாயாவது மிஞ்சும். சீட்டு கட்டுவாள். இப்ப உள்ள விலைவாசியில் கைச்செலவுக்கே பற்றாமல் போய்விடுகிறது. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டவில்லை. ராத்திரியிலே முந்தியில் முடிவதற்கு ஒன்றுமில்லை. இப்ப துட்டுக்கு எங்கே போறது?

சுப்புத்தாய் மருகித் தவித்தாள். மனசுக்குள் கையைப் பிசைந்தாள்.

''சாயங்காலமா... தாரேண்டி''

''அதெல்லாம் முடியாது. எங்க சார் அடி கொன்னுருவாரு. வெளியே வெயில்லே நிறுத்திருவாரு.''

''ஏங்கிட்டே இல்லையே.''

''வேணும்... எப்படியும் வேணும்'' என்று கையை உயர்த்தினாள். சிணுங்கி அழுதாள். கால்களை மாற்றி மாற்றித் தூக்கி வைத்து பூமியை உதைத்தாள்.

அவளுக்குள் புஞ்சைக்காரி வீசிச்சென்ற வார்த்தைச் சாட்டைகள். சுரீரிடுகின்ற வார்த்தைகள்.

கால்கள் துறுதுறுக்கின்றன. மறித்துக் கொண்டு மகள், பார்க்கப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது. இல்லாமையின் அவலம் கோபமாய் நிறம் மாற...

''எப்படியும் புலம்பிக்கிட்டு கிட''

கிளம்பினாள். ஒரு எட்டு எடுத்து வைத்தாள். ஓடி வந்து சுந்தரி காலைக் கட்டிக் கொண்டாள்.

''அம்மா... அம்பது பைசாம்மா... குடும்மா... இல்லேன்னா... அடிப்பாரும்மா...''

சொன்னதையே சொல்லுகிற சனியன். நிலைமை புரியாமல் நச்சரிக்கிற தொல்லை. ஆத்தாள் பிழைப்பு அறியாமல், அதிக நேரம் பல்லக்கில் இருக்க ஆசைப்படுகிற நாய். காலம் தெரியாமல் வந்து ஆடுகிற கூத்து...

கையில் பிடித்து சுந்தரியை சுண்டி இழுத்தாள். எல்லாவகை அவலங்களும் நெஞ்சில் கொதிக்க அந்தக் கொதிப்பு கையில் இறங்க...

சுந்தரி முதுகில் நாலு சாத்து! அவள் புழுவாய் துடித்து அலறினாள். சத்தம் போட்டு அழுதாள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்குப் பொழுதில்லை.

மனசுக்குள் புஞ்சைக்காரியின் இளக்காரம். வயிற்றுப் பாட்டுக்கு வழி பார்த்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.

சுவரோடு ஒண்டிக்கொண்டு அழுது கதறுகிற மகளை எரிச்சலோடு பார்த்துவிட்டு நடந்தாள்.

''புள்ளையா..இது? சனியன், வந்து பொறந்து தொலைச்சிருக்கு.. படிச்சு பெரீய்ய கலெக்டராகப் போகுதாக்கும்! வக்கத்தவ வயித்துலே பொறந்த கழுதைக்கு, வந்துருக்குற ஆசையைப் பாரு..''

மகளை வைதுகொண்டே தெருவில் நடந்தாள். அதே கோபத்துடன் புஞ்சைக்குள் வந்துவிட்டாள்.

வீட்டுக்குத் தெற்கில் புஞ்சை, தோலுரித்த எலும்பாகக் கிடந்தது. ஓடை மணலைப் பறிகொடுத்துவிட்டு பாறையாய்ப் பல்லிளித்த ஓடையைக் கடந்து, ஊருணிக் கரையேறி வண்டிப் பாதையில் நடந்து...

எங்கேயும் ஒரு பச்சை கிடையாது. காய்ந்து கனல் பறந்து கிடந்தது காடு. தீப்பிடித்த மாதிரி இருந்தது. புல்கூட காய்ந்து போய் தேன்நிறச் சருகுகளாய்...

மழை தண்ணீர் இல்லாமல் மானாவரிக் காடு முழுக்க சும்மா கிடந்தது. ஒரு வெள்ளாமைகூட இல்லை. இறவைக் கிணறுகளிலும் தண்ணீர் வரட்டிழுப்புதான். மிளகாச் செடிகள், தாயற்ற பிள்ளைகளாய் காய்ந்து வாடிச் சுருங்கிக் கிடந்தன.

காலை வெயிலே வறண்ட அனலாய் வீசியது. துணுக்கு மேகங்கள்கூட இல்லை. கழுவிப் போட்ட பாத்திரமாய், ஆகாயம்.

அகத்தியில் தூக்குச்சட்டியை மாட்டினாள். ஏற்கனவே மூன்று பேர் நிறைபிடித்து விட்டார்கள். இவளும் மடியை கட்டிக் கொண்டாள். மிளகாய்ப் பழம் பொறுக்கினாள். பழுத்துக் கிடந்த இலைகள், வளரத் தவறிப் போன நோய்ச்செடிகள், செடிகளின் இலைகளுக்குள் ரத்தச் சொட்டுகளாய் மிளகாய்ப் பழங்கள்.

பொடுபொடுவென்று பொறுக்கினாள். முந்திக்குனிந்து விட்ட அந்தப் பெண்களை எட்டிப்பிடிக்கிற வேகத்தில் பரபரபத்தாள். மனசுக்குள் அதே கோபம். அடர்த்தியான கோபம்.

முகமே இறுகிப் போயிருந்தது. சிடுசிடுப்பாக இருந்தது. அடைக்கோழி மாதிரி சீறிச் சினக்கிற சிடுசிடுப்பு.

அவள் முகலட்சணத்தைப் பார்த்துவிட்டு யாரும் பேச்சு கொடுக்கவில்லை. இவளும் யாரிடமும் எதுவும் வாய் விடவில்லை. கனத்த மெளனம். மெளனத்தின் அடர்த்தியில் மைனாக்களின் 'கிச்சட்டி'ச் சத்தம். வேலிக்காட்டுக்குள் செம்போத்துப் பறவையின் கூவல். குயிலின் சாயலான கூவல்.

வேலைத்தளத்தில் இம்மாதிரி மெளனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது. காலை எட்டுமணியிலிருந்து மூன்று மணிவரைக்கும் உயிரைக் கொடுத்தாக வேண்டும். வாயைப் பொத்திக் கொண்டு எத்தனை நேரம் இருப்பது? இதுவே ஒரு பாரமாக அழுத்துமே!

ஆனாலும்... சுப்புத்தாயை ஒதுக்கிவிட்டு அவர்கள் மட்டும் அப்படிப் பேசிக் கொள்ள? அது நல்லாயிருக்காதே.

ஆனாலும்... வேலைச்சுமை தெரியாமல் இருக்க வேண்டும் என்றால்... கேலி கிண்டல் பேச வேண்டும். சிரித்துக் கும்மாளம் போட வேண்டும். மனசையும் உடம்பையும் லேசாக பஞ்சாக மாற்ற வேண்டும்.

'கம்..கம்' என்று எத்தனை நேரத்துக்கு இருப்பது?

சுப்புத்தாயிக்கு மனம் பூராவும் மறித்துக் கொண்டு நின்ற மகள். காலைக் கட்டிக் கொண்டு அடம்பிடித்த மகள். நிலைமை புரியாமல தொல்லை செய்த மகள்...

அதே கோப அடர்த்தியில் அவள் உள்ளுக்குள் கொதித்துக் கொதித்து தளதளக்கிற உஷ்ண நினைவுகள் மனசு கனத்துப் போயிருந்தது மூச்சுத் திணறியது.

அதே மூச்சுத் திணறல், சக வேலைக்காரர்களுக்கும்...

ஒரு நிரை முடிந்தது. மடியில் கிடந்த பழத்தை சாக்கில் தட்டிவிட்டு அடுத்த நிரைக்குள் நுழைகிறபோது...

யார் யார் எந்த நிரையில் நிற்பது என்ற பிரச்னை. நாலு வார்த்தைகள் பேசிக் கொண்டனர். எல்லோருக்கும் ஒரு ஜன்னல் திறந்த மாதிரித்தோன்றியது வாய் கிடைத்து விட்டது. மனசுக்குள் காற்று அடிக்கிறது.

''என்ன சுப்புத்தாயி ஒரு மாதிரியிருக்கே?''

''ஒண்ணுமில்லே''

''வந்ததுலேயிருந்து பாக்கேன், என்னமோ போல் இருக்கீயே... ஏதாச்சும் சண்டை சத்தமா?''

''ம்ச்ச்சூ! என்ன எழுவுச்சண்டை அது ஒண்ணுமில்லே... வவுத்தைக் கழுவ வக்கத்த கழுதைக்கு ரோஷம் மானம் எப்படி இருக்கும்? ரோஷங்கெட்ட ஏழை நாயிக்கு என்ன சண்டைசத்தம் வரப்போவுது?''

''சடைச்சுப் புளிச்சுப்போயி பேசுதீயே... என்ன விஷயம்?''

சுப்புத்தாயிக்கும் மனப்பாரத்தை எங்காவது இறக்கி வைத்தால் தேவலை என்று தோன்றியது. மனத்திணறல் குறையும்.

மெல்ல மனசைத் திறந்தாள்.

''வேலைக்குப் போவணும்னு 'பரபரன்'னு பெறப்புட்டு கிட்டிருந்தேன்னா... அப்பப் பாத்து எம்மக ஓடியாந்தா...''

அவள் மனம் லேசாயிருந்தது. பக்கத்தில் பழம் பொறுக்கியவள் 'உம்' கொட்டிக் கொண்டே வந்தாள். ''அடிப்பாதகத்தி'' என்று சிறீனாள்.

''அப்பவும் அந்த சின்னப்புள்ளைய - பச்சை மண்ணைப் பொட்டு அடிப்பா களாக்கும்? நீயெல்லாம் ஒரு பொம்பளை தானா?''

''என்ன செய்யச் சொல்லுதே...? அன்னாடம் பாடுபட்டு வவுத்தை கழுவதே பெரும்பாடா இருக்கு. ஆத்தாடி அம்மாடின்னு ஆகிப் போகுது. போதாக்குறைக்கு வேற வேற இச்சிலாத்திக... இதுலே பெத்தபுள்ளையும் எதிரியா வந்து நின்னு மறிச்சிக்கிட்டா...?''

''அதுக்காக? அடிச்சிடுறதா? சின்னப்புள்ள அதை அடிச்சுப் போட்டுட்டு வந்துருக்கீயே... நீயெல்லாம் ஒரு மனுசியாக்கும்? ச்சே! அந்தப் புள்ளே அங்க எப்படி தவிச்சுக்கிட்டு கிடக்கோ... பாவம்!''

சுப்புத்தாயின் கோபம் ஒரு மாயம் ஆகிவிட்டது. வெளிச்சத்தில் மறைந்த இருளாகிவிட்டது. அடிவயிற்றுக்குள்ளி லிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த ஏதோ ஒன்று, நெஞ்சுக்குள் விக்கிக் கொள்கிறது.

ஒரு தவிப்பு. குலைநடுக்கம், ரத்தப் பிறப்பு, தன் வடிவம் அய்யாவின் குண அச்சு.

''அந்தப் புள்ளையை கொழுந்தைக் கிள்ளுகிறமாதிரி அடிச்சுப் போட்டுட்டு வந்துட்டேனே... ஏங்கையிலே பத்து பெறப்பட! இப்ப... சுந்தரி எப்படித் தவிச்சுக்கிட்டிருக்காளோ...''

வக்கரித்துக் கிடந்த பிழைப்புக்குள் முடங்கிகிடந்த அம்மா என்கிறவள், இப்போதுதான் மெல்ல எழுந்து வெளியே வந்தாள்.

''நம்ம சங்கடம் நம்மளோட... நம்ம சங்கடம் நமக்கே புரியலை.. அது என்னத்தைக் கண்டது? அதைப்போய் வைஞ்சு பேசுனேனே... என் நாக்குலே அந்நேரம் என்ன சனியன் வந்து உக்காந்துச்சோ...'' என்று உள்ளுக்குள் புலம்பினாள். சத்தமில்லாமல் கதறினாள். அடிபட்டு அலறிய மகள், துடித்துச் சிதறிய பெற்றமகள், மிதிபட்டு ஒடிந்த மிளகாய்ச் செடியாய் வாடிகிடந்த மகள்...

நினைக்க நினைக்க மனசு கிடந்து பதைத்தது. மனம் எதை எதையோ நினைத்து மாய்ந்தது.

எல்லாப் பிள்ளைகளும் பார்க்க... சுந்தரி மட்டும் தலைகுனிந்து கிடக்கிறாள்... வாத்தியார் அதட்டுகிறார். குச்சியை விறைப்பாக நீட்டிக் கொண்டு அதட்டுகிறார். பேந்த பேந்த விழித்துக் கொண்டு சுந்தரி. அவள் கண்ணில் மருட்சி.

குச்சி சுளீர் சுளீரென்று அவள் தலையில் சுத்தமாய் மோத...

சுப்புத்தாய்க்கு உயிரையே பிடுங்கிப் போடுகிற மாதிரியிருந்தது. அடிவயிற்றில் ஒரு சூன்யம் பகீர் என்கிற உணர்வு. மிளகாய்ப் பழம் பொறுக்க முடியாமல் நடுங்குகிற விரல்கள்.

நடுக்கத்தில் ஒரு செடியை ஒடித்து விட்டாள். புஞ்சைக்காரி பார்த்தால் நாற வசவு வைவாளே என்ற பதற்றத்தில் புழுதிக்குள் போட்டு அந்தச் செடியை மறைக்க முயன்றாள்.

மதியத்துக்கு மேலாயிற்று. கேலியும் சிரிப்புமாய் ஒரே பேச்சு. சினிமாப் பேச்சு. தெருப்புரணி. அடுத்த ஊரில் கள்ளச்சாராய வியாபாரிக்கும், ஊர் ஜனங்களுக்கும் வந்த சண்டை. போலீஸ் சுற்றி வளைத்துக் கொண்டு ஊர் ஜனங்களை அடித்த அடிகள்...

இப்படி என்ன என்னவோ பேச்சுகள், எதிலும் ஒட்ட முடியாமல் சுப்புத்தாய்.

சாப்பிட உட்கார்ந்தனர். மஞ்சனத்தி மரத்தின் கஞ்சத்தனமான நிழல். கோடை வெயிலை உக்கிரமமாக்குகிற வறண்ட காற்று. மரத்தடியில் பொட்டு பொட்டாய் பறவை எச்சங்கள்.

சுப்புத்தாயும் தூக்குச் சட்டியைத் திறந்து கொண்டு உட்கார்ந்தாள். நினைவெல்லாம் சுந்தரி, மகளின் வாடிச் சுருங்கிய முகம்.

சோறு வாங்கி கொண்டு குழம்புக்கு வீடு வந்திருப்பாளோ? அம்மா மேலுள்ள கோபத்தில் வராமல் இருந்திருப்பாளோ? சத்துணவில் மஞ்சள் தண்ணிச் சாம்பாரை பிடிக்காமல் சோற்றை வேறு பிள்ளை வட்டிலில் கொட்டியிருப்பாளோ? வெறும் வயிற்றுடன் காத்து கிடப்பாளோ...

இருக்கும். அப்படித்தான் இருக்கும். ரொம்ப ரோஷக்காரி. அய்யா மாதிரி குணம். சுருக்கென்ற சொல் கேட்க மாட்டாள். ரோஷத்தில் ரொம்ப வீம்பு செலுத்துவாள்.

சுப்புத்தாயிக்கு சோறு இறங்க மறுத்தது. ஒரு மனசாக இல்லை. அலை பாய்ந்து வந்தது. எங்கோ வெறித்துப் பார்த்தாள். அவள் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்த சகவேலைக்காரிகள், கடிச்சிக்கிடையை நீட்டினர்.

''இந்தா... சுப்புத்தாய்... சீனியவரைக்காய் வத்தல்''

''துவையல் வேணும்னா, கொஞ்சந்தரட்டா?''

''இந்தா.. சோத்தையள்ளி உள்ளே தள்ளு. வேலை கிடக்கு வெருசா முடிக்கணும்''

அதற்குள் இன்னொருத்தி அவளை மடக்கினாள்.

''எதுக்கு பறக்கே?''
''எதுக்கா? டி.வி.யிலே சினிமா பாக்க வேண்டாம், இன்னிக்கு?''

''சனிக்கெழுமையிலே ஒனக்கு எந்தப் புருஷன் சினிமா காட்டுதான்?''

''அப்ப... இன்னிக்கு சனிக்கெழுமையா...?''

ஒரு கூட்டுச் சிரிப்பு சத்தம். சுப்புத்தாயிக்கு உயிரெல்லாம் மகளிடம் கிடக்க, கட்டையாக இங்கே கிடந்தாள். உண்ண மனசேயில்லை. சுற்றியுள்ளவர்களின் நிர்ப்பந்தத்தில் நாலு கை அள்ளி உள்ளே போட்டு விட்டு எழுந்தாள்.

ஊருக்குள் ராஜபாளையம் பஸ் மூன்று மணிக்கு வரும். வரும்போதே ஹாரன் சத்தம், காட்டுக்கத்தலாய் ஒலிக்கும்... சுற்றியுள்ள காடுகளுக்கெல்லாம் அது கேட்கும்.

அந்த பஸ் வந்துவிட்டால்... வேலை விடுகிற நேரம்.

பொறுக்கிய மிளகாய்ப் பழங்களை யெல்லாம் சாக்கில் தட்டினர். மூன்று சாக்குகள் திமிரத்திமிர நிரம்பியிருந்தது. கூட்டிப்பிடித்து சணல் கயிற்றால் கட்டிப் போட்டனர். புஞ்சைக்காரி பழச்சரக்குகளை தூக்கிக் கொண்டு போக மாட்டு வண்டியோடு வந்து சேர்ந்தாள்.

சுப்புத்தாய் பரபரத்துக் கிளம்பினாள். மனம் பூராவும் மகளிடம், உயிரைக் பிடிக்கிற ஆவேசத்தில் நடையை எட்டிப் போட்டாள்.

மாசி மாச வெயிலோ... எதுவும் அவளை உறைக்கவில்லை. நிமிர நேரமில்லாமல் குனிந்தே பழம் பொறுக்கியது குறுக்கெல்லாம் வலி எடுக்கிறது. இடுப்பைச் சுற்றி ஒரே குடைச்சல். ஆனால்...

அதையெல்லாம் உணரவோ ஆயாசப் படவோ - நினைப்பில்லை. வெறிபிடித்தவளைப் போல் ஊரை நோக்கி - உயிரைத் தழுவ ஓடிவந்தாள்.

வீட்டுக்கு வந்தால் உஸ்ஸ்ஸென்று உட்கார முடியாது. நேரமிருக்காது. வீடெல்லாம் குப்பையும் கூளமுமமாய்க் கிடக்கும். கோழிப்பீயாக நாறிக் கிடக்கும். இன்றைக்கு மதியக் கரண்டு போய்த்தான் தண்ணீர் எடுக்க வேண்டும்.. சாகணும் போலிருக்கும்.

வேலைகள் தயாராகக் காத்திருக்கும். அப்புறம் கடைக்குப் போகணும். சோறு ஆக்கணும்.

வீட்டுக்கு வந்தாள். சாதித்திக்கிடந்த கதவைத்தள்ளினாள். வீடு சுத்தமாகத் தூத்துக்கிடந்தது. சட்டிபானையெல்லாம் கழுவிச் சுத்தமாக...

தொட்டியெல்லாம் தண்ணீர் எடுத்து.. நிரம்பியிருந்தது.

அவளுக்கு ஒரே ஆச்சரியம் 'என்னடா இது!'

சுந்தரியைக் காணோம். மனசு கிடந்து பரபரத்தது. தவித்தது. வீட்டுவேலைகள் முடிக்கப்பட்டிருந்த நேர்த்தி லட்சணம், அவளுள் ஏதோ நெருடியது.

மகளைத் தேடிக் கொண்டு பார்வை அலைந்தது. தெருவில் வந்து எட்டிப் பார்த்தாள். நாலாவது வீட்டில் அவளுடன் கூடப் படிக்கிற சிறுமி.

அங்கே போய் எட்டிப்பார்த்தாள்.

மண்டி போட்டு படுத்துக் கொண்டு, நோட்டுகளை விரித்துப் போட்டுக் கொண்டு எழுதிக் கொண்டிருந்தால் சுந்தரி.

அரவம் கேட்டு திரும்பினால்... அம்மா.

''வந்துட்டீயா... ம்மா?''

''ம்''

அவள் நோட்டுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அவள் பின்னாலேயே வந்தாள் சுப்புத்தாய்...

''என்னடி.. அதுக்குள்ளேயா பள்ளிக்கோடம் வுட்டுட்டாக?''

''ம்.. இன்னிக்கு மதியவரைக்குத்தானே?''

''சாப்டீயா?''

''ம்''

''இந்த வேலையெல்லாம் நீதான் செய்தீயா?''

''ஆமா...''

''எதுக்குடி?''

''நீ வேலைக்குப் போய்ட்டு அசந்து போய் வருவே... அதான்''

வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள் சுப்புத் தாய். சுந்தரி குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கி 'மடக் டக்'¦ன்று குடித்தாள். நாடியில் வழியும் நீர்க்கோட்டை துடைத்துக் கொண்டே மகள் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். பார்வையில் மனசின் கனிவு. குற்ற உணர்வின் உறுத்தல்.

சுந்தரி இயல்பாக இருந்தாள். சலன மற்றிருந்தாள். காலையில் நடந்த சம்பவத்தின் அடையாளம் எதுவும் முகத்தில் தெரியவில்லை.

சுப்புத்தாயிக்குள் பூரான் ஊர்கிற உணர்வு. ''ஏம்மா கண்ணு, வாத்தியாரு ஒண்ணை அடிச்சாரா...?''

கேட்கும் போதே குரல் நடுங்கியது. சுப்புத்தாயிக்கு. பயத்தின் குளிர்ச்சிப் பரவல்.

சுந்தரி பூப்போல வெடித்துச் சிரித்தாள். குஷியும் கும்மாளமுமாய் குதித்து குதித்து கைதட்டிச் சிரித்தாள்.

''ஐய்ய்.. இன்னைக்கு எங்க சார் வரலைல்லே.. பாடமே நடக்கலேல்லே'' என்று பாட்டு படிக்கிற மாதிரி இசையோடு குதித்தாள். பூச்செண்டாய் குலுங்குகிற மகளைப் பார்க்க பார்க்க சுப்புத்தாயிக்கு என்னவோ போலிருந்தது.

அந்தச் சிறுமி எல்லாவற்றையும் மறந்து விட்டாள். கோபமேயில்லை. விசனமில்லை. முகத்தைத் தூக்கிக் கொண்டு உம்மென்றிருக்கவில்லை. என்றும் போல இயல்பாயிருக்கிறாள்.

அதுவே இவளது குற்ற உணர்வை அதிகமாக்கியது. சொருகியிருந்த முள்ளைப் பிடுங்குகிற மாதிரி வலித்தது.

மகளையே பார்த்துக் கொண்டிருந்த சுப்புத்தாயிக்கு நெஞ்சு கனத்தது. திணறியது. கண்ணெல்லாம் நெறுநெறுக்க நீர் கோர்த்து குபுக்கென்று அழுதுவிட்டாள்.

சிரிப்பையும் குதிப்பையும் நிறுத்தி விட்டு அம்மாவைப் பார்த்தாள் சுந்தரி. குமைந்து குமைந்து சத்தமில்லாமல் அழுகிற அம்மா...

''ஏ... ராசாத்தி... ஏந் தங்கப்பெட்டி.. கெதி கெட்ட இந்தப் பாதகத்தி வவுத்துலே வந்து எதுக்குத்தான் பெறந்தீயோ... '' என்று கதறிக்கொண்டே புலம்ப...

அம்மாவின் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற சுந்தரி, தன்முகத்தையே கனிவுடன் பார்க்கிற அம்மாவின் முகத்தைப் பிஞ்சுகரங்களால் தழுவினாள். சேர்த்த அணைத்துக் கொண்டாள். மகளின் ஸ்பரிசம், நெஞ்சுக்குள் இறங்க..., அவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டாள்.

அம்மாவைச் சுழற்றியடிக்கிற சூறாவளி எதுவென்று புரியாமல் நிற்கிற சிறுமியை தாயாகவும், தாயே பிள்ளையாகவும் இப்போது தெரிகிறது.

மேலாண்மை பொன்னுச்சாமி
Share: 




© Copyright 2020 Tamilonline