ஆழ்ந்து கல்வி கற்றாலும்
அடக்கம் குறையா திருப்பவளே
சூழ்ந்து வம்பு சொன்னாலும்
சூழ்ச்சி கல்லா திருப்பவளே
தாழ்ந்து கிடக்கும் தரையாக
தீராப் பொறுமை கொண்டவளே
வீழ்ந்து விடுவது போலிருந்தால்
வீரம் சொல்லித் தருபவளே
மென்மை மொழிகள் அதைத்தவிர
மேலே உன்சொல் வேறறியேன்
உண்மை மொழிகள் அவையாவும்
ஒருநாள் அதிலே பொய்யறியேன்
பன்மை மடங்கு மிகைப்படுத்திப்
பேசி நானும் கேட்டறியேன்
நன்மைச் செயல்கள் பலபுரிந்தும்
நின்னை நீயே புகழ்ந்தறியேன்
ஒழுக்கம் என்றால் என்னவென
உன்னைக் கேட்டேன்; இதுசெய்தால்
புழுக்கம் பெற்றோர் அடைவரெனப்
பண்ணா திருத்தலே என்றாய்!
தழையும் முல்லை மல்லிமணம்
தன்னில் விருப்பம் எதுவென்றேன்?
பழைய புத்தக வாசம்போல்
பிடித்தது வேறொன் றில்லையென்றாய்!
சுற்றச் செய்து பம்பரத்தை,
சாட்டை விலகி ரசித்தல்போல்
வெற்றி என்னைப் பெறச்செய்து
விலகி ரசிப்பாய், சொல்லிடவோ?
எந்த விருது பெற்றாலும்
எந்தன் உள்ளம் நிறைவதில்லை!
உந்தன் கையால் தரும்காப்பி
எந்தன் உயிரை நிறைக்குதடி!
இந்த ஜென்மம் முடியும்முன்
எனக்கோர் ஆசை உள்ளதடி
நெஞ்சை அடைக்கும் வேளையிலுன்
நாமம் சொல்லிக் கண்மூட!