Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி - அத்தியாயம் 14
- சந்திரமௌலி|ஜூன் 2015|
Share:
Click Here Enlargeஅடிமேல் அடி

கேந்திரா, வாணியோடும் கதிரேசனோடும் பரத் வீட்டுக்கு வந்துவிட்டாள். டிவியிலும், பத்திரிகைகளிலும் இந்தச் சம்பவம் பிரதானமாக விவரிக்கப்பட்டது. இதனால் பரத் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறானா என்று விசாரிக்கவே அவர்கள் வந்தார்கள். பரத், கனகராஜ் குடும்பத்துக்கு எவ்வளவு நெருக்கம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். காரியங்கள் மும்முரமாக நடந்து கொண்டிருந்ததால் பரத்தை உடனே பார்க்கமுடியவில்லை, வெளியே ஷாமியானா அடியில் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் சேர்களின் நுனியில் உட்கார்ந்துகொண்டனர். கதிரேசன் மட்டும் சற்று விலகி பராக்கு பார்த்துக்கொண்டிருந்தார் அப்போது அவர் தோளில் டீசல் வாடையோடு ஒரு கை விழுந்தது. "அண்ணே பாத்து ரொம்ப நாளாச்சு, எங்க இந்த பக்கம்?"

உரிமையோடு கைபோட்டவன் முன்தினம் பரத்தையும், கனகராஜையும் தன் ஆட்டோவில் ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர். கனகராஜ் சட்டென்று யாரென்று புரியாமல் திகைத்தபோது, "என்னண்ணே இதுக்குள்ள மறந்துட்டீங்களா? இந்த டோல்கேட் சம்பவத்தை மறந்துட்டீங்களா? அதுசரி பாத்து பத்துவருஷமாவது இருக்கும்."

கதிரேசன் சுதாரித்து, "ஏய் சம்பத்து மன்னிச்சுக்கப்பா நைட் டூட்டி, இப்ப உடனே காலைல இங்க வராப்பல ஆயிடுச்சு. மூளை ஒரு நிலைல இல்லை."

"வுடுங்கண்ணே சும்மா உங்களை வாரினேன். எனக்கு தெரியாதா உங்களப்பத்தி, விட்ல எல்லாம் சௌக்கியமா?"

"இன்னும் நீ மாறவே இல்லப்பா. எளவு வூட்டுக்கு வந்துட்டு என் சவுக்கியத்தை கேக்குற. சரி, போவட்டும். என் பொண்டாட்டி சுமங்கலியா போய்ச் சேந்துட்டா. பொண்ணு வாணி பெரியபடிப்பு முடிச்சுட்டு நல்ல உத்தியோகத்துல இருக்கா. அதோ உக்காந்துருக்கா பாரு" என்று வாணி உட்கார்ந்திருந்த திசையைக் காட்டினார்.

சம்பத்துக்கு இப்போது "தம்தன தம்தன" என்று ரீங்காரமும், சுற்றி வெள்ளுடை தேவதைகளும் தெளிவாகத் தெரிய, கதிரேசன் காட்டிய திசையை நோக்கிய அரை நொடிக்குள், சிறுவயதில் எப்போதோ வாணியும் அவனும் அம்மா, அப்பா விளையாட்டு விளையாடியது, பெரியவர்கள் இவர்கள் வளர்ந்ததும் ஜோடியானால் நன்றாயிருக்கும் என்று வெற்றிலைபாக்கோடு மென்றது எல்லாம் கலரில் ஜாலமடித்தது. சம்பத் பளிங்குபோல் அங்கு அமர்ந்திருந்த கேந்திராவைப் பார்த்து, 'அய்யோ வாணி இப்படி அடையாளம் தெரியாம சினிமா ஸ்டார் கணக்கா இருக்குதே, நமக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா!' என்று வியந்து, "அண்ணே, சம்மந்தமே இல்லாம வளந்துடுச்சு வாணி. தெனம் பால்லேயே குளிக்கும்போல" என்றான். கனகராஜ் அவன் தவறை உணர்ந்து, "ஏய் பாத்துப்பா, அந்த செகப்பு சுடிதார்ல இருக்கிறதுதான் வாணி. பக்கத்துல இருக்கிறது எங்க மொதலாளியம்மா" என்று சரிப்படுத்தினார். சம்பத் சற்றே சுருதி குறைந்தாலும், வாணியை சரியாக ஒருமுறை பார்த்து பெரும்திருப்தி கொண்டவனாக, "அப்புறம் அண்ணே, கல்யாணம் பண்ணலயா?" என்றான்.

"இந்த வயசுக்குமேலே இன்னொரு கல்யாணமெல்லாம் தேவையான்னு பண்ணலை."

"மொக்க போடாதீங்கண்ணே, வாணிக்கு இன்னும் கல்யாணம் பண்ணலயானு கேட்டேன்."

அவன் கேட்ட தொனியிலிருந்து அவன் உள்மன நோக்கத்தைப் புரிந்துகொண்டு சற்றே விறைப்பாக, "அது பெரிய படிப்பெல்லாம் படிச்சிருச்சு. அதனாலே அதோட தகுதிக்கு ஏத்தாப்பல பாத்துட்டிருக்கேன். கிட்டத்தட்ட அமைஞ்சாப்போலதான். நிச்சயமானா, உன்னையெல்லாம் அழைக்காம கல்யாணம் நடத்திருவேனா? சரி அதுகெடக்கட்டும், உனக்கு எப்படி இந்த வீட்டாளுங்கள பளக்கம்?" என்று அவன் நினைப்புக்கு முற்றுப்புள்ளியும் வைத்துப் பேச்சையும் மாற்றினார்.

"என் எளவுபிடிச்ச நேரம், நான் சாமானிய ஆட்டோக்காரன்தானே. சவாரி இந்த வூட்டு ஆளுங்கள ஏத்தினேன். வெட்டு, குத்து, போலீசுகேசுனு பூடுச்சு. எல்லாம் தலை எளுத்து" வெள்ளுடை தேவதைகள் அவுட்டாஃப் ஃபோகஸ் ஆனதில் கடுப்படித்து தன் வெறுப்பை வார்த்தையில் துப்பினான் சம்பத்.

"பரத்தும், இந்த ஹவுஸ் ஓனரும் உன் வண்டிலதான் சவாரி வந்தாங்களா நேத்து?"

"ஆமாம், சரி நம்ம வண்டில இப்படி ஆயிடுச்சேனு, காரியம் முடியறவரை இருக்கலாம்னு இங்கியே சவாரிலாம் தொலச்சுட்டு உக்காந்துருக்கேன். ஆமாம், உங்களுக்கு இவங்கள எப்படி பளக்கம்?"

இந்த பரத் தம்பி நம்ம வாணிகூட ஒரே எடத்துல வேலை செய்யுது. தவுர, இந்த தம்பியைத்தான் நம்ம வாணிக்கு கட்டிக்குடுக்கலாம்னு ஒரு எண்ணம் ஓடிட்டிருக்கு," சம்பத்தின் சபலத்தை முழுக்க ஒழித்துவிடவேண்டும் என்று கதிரேசன் இதைச்சொன்னார். ஆனால் அதுவரை பரத்துக்கு அனுசரணையாக இருந்த சம்பத்தின் மனதில் இது பொறாமையைத் தூண்டியது.

"அய்யோ என்ன சொல்றீங்க அண்ணே, அந்த பையனுக்கு நம்ம வாணியை குடுக்கப்போறீங்களா? நல்லா யோசிச்சுக்குங்க."

"என்னப்பா சொல்றே, ஏன் பரத் தம்பிக்கு என்ன குறைச்சல்?"

"எதுவும் குறைச்சல் இல்லை, ஆயுசைத்தவிர. புரியலையா? நேத்து தீத்துக்கட்ட நடந்த அட்டம்ப்ட் இந்த ஹவுஸ் ஓனர் கனகராஜை குறிவச்சு நடக்கலை, பரத்தைக் குறிவச்சு நடந்தது. அந்த கனகராஜ் உயிர் பிரியறதுக்குமுன்ன சொன்னது எனக்கு நல்லா கேட்டுச்சு. நம்ம வாணி நல்லா இருக்கணும்னா உங்க நெனப்பை மாத்தி, உங்களுக்கு தெரிஞ்ச பையனா, வம்பு தும்பெல்லாம் இல்லாத எடமா பாருங்க. நேத்து தாக்கினபோது நான் பக்கத்துலதான் இருந்தேன். வந்தவனுங்க, நிச்சயம் இந்த பரத்தை ஒருநாள் இல்ல இன்னொரு நாள் தீக்காம உடமாட்டாங்க."

சங்கு பெரிதாக ஊதப்பட்டு, சேகண்டி அடிக்கப்பட்டது. நெருப்பைச் சட்டியில் ஒருவர் கொட்ட, அதை மனோகர் தூக்கினான். அதேநேரம் வாணி அவரைச் சைகைகாட்டி அழைக்கவே, சம்பத்தை அப்படியே விட்டுவிட்டு கதிரேசன் போனார். போனவர், சம்பத் இருந்த திசையைக்காட்டி ஏதோ சொல்லவே, வாணியும், கேந்திராவும் கலவரமடைந்தனர். அவர்கள் பேசியது பிற வெளிச்சப்தங்களில் யாருக்கும் கேட்கவில்லை. கனகராஜின் இறுதி ஊர்வலம் கிளம்ப ஆயத்தமானது.பரபரப்பாக இருந்த பரத்தை, இனி பொறுக்கமுடியாது என்று கேந்திரா பிடித்து நிறுத்தினாள். இரண்டு நாட்களாகத் தூங்காத, அழுகை நிறைந்த கண்களோடு பரத் கேந்திராவைப் பார்த்து, "நீங்க ஏன் உங்க வேலையெல்லாம் வுட்டுட்டு வந்தீங்க? உங்களை கவனிக்கக்கூட இங்க முடியாது. எனிவே வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் ஒரு வாரம் கழிச்சு ஆஃபிசுல பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தான்.

"பரத் ஒன் மினிட். எனக்கு ஒரு விஷயம் தெரியணும்."
கேந்திராவின் கண்டிப்பான குரலுக்குக் கட்டுப்பட்டு, உறைந்த பரத்தின் முகத்தை நேராக நோக்கி, "நேத்து இந்த அட்டாக் உங்க உயிரை எடுக்கதானே நடந்தது?" தான் வெளியே சொல்லவேண்டாம் என்று நினைத்த விஷயம் எப்படி கேந்திராவுக்குத் தெரிந்தது என்று அதிர்ச்சி அடைந்தான். முன்தினம் கைலாஷ் புறப்பட்டுப் போனபின், மனோகரிடம் பேசியதில் கைலாஷும், சக்கரவர்த்தியும் மனோகரை இந்தியா அழைத்துவர முக்கிய காரணம் என்பதைத் தெரிந்துகொண்டதிலிருந்து பரத்தின் சந்தேகம் இன்னும் வலுத்தது. தான் பலமுனைகளில் குறிவைக்கப்பட்டிருப்பதை அவன் உள்ளுணர்வு இன்னும் உணர்த்தியது. முதலில் தன் சந்தேகத்தை ஒரு குற்றச்சாட்டாக போலீசிடம் எடுத்துப் போகலாமா என்று நினைத்து, பிறகு எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த பணப்பெருச்சாளிகளை சிக்கவைப்பது இயலாத காரியம் என்று உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான். தன்மீது இந்த கும்பலுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை, தன்னை தீர்த்துக்கட்ட நினைப்பது தான் ஈடுபட்டிருக்கும் எஞ்சின் ஆராய்ச்சியிலிருந்து தன்னை அகற்றத்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டான் பரத். தான் இந்த ஆராய்ச்சியிலிருந்து விலகிக்கொண்டால், இவர்கள் தன்னை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார்கள்.

தானே இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பிரச்சனை இல்லாத ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் கவலை இல்லாமல் உயிர் பிழைக்கலாம். அல்லது, இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு இந்த சதிகாரர்கள் முகத்துக்கெதிரே இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று, பிறகு இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தலாம். ஆனால் இதில் ஆபத்து அதிகம். உயிர் போனாலும் போகலாம் என்று யோசித்த பரத் இன்னும் முனைப்போடு இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதே சரியான வழி என்று தீர்மானித்தான். இந்தச் சதிகாரர்கள் அப்போதுதான் மேலும் பல சதிகளில் ஈடுபடுவார்கள், தனக்கு இன்னும் இவர்களை சிக்கவைக்க ஆதாரம் கிடைத்து, கனகரஜின் மரணத்துக்குப் பழிவாங்கமுடியும் என்று நினைத்தான்.

"பதில் சொல்லுங்க பரத், நேத்து உங்களை தீத்துக்கட்ட தானே முயற்சி நடந்தது?"

"வந்து, அது நிச்சயமா சொல்லமுடியாது" மழுப்பலாக பதிலை ஆரம்பித்த பரத், கேந்திராவின் நேரான பார்வையை சமாளித்துத் தன் பொய்யைத் தொடரமுடியாமல், "யெஸ் என்னைதான் போட்டுத்தள்ளப் பாத்தாங்க. அதுல அப்பாவி கனகராஜ் அங்கிள் என்னைக் காப்பாத்திட்டு உயிரை விட்டுட்டார். ஆமா கேந்திரா, என்னை இந்த ஆராய்ச்சிலேருந்து வெளியேத்தத்தான் இந்த சதி நடக்குதுனு நான் நெனக்கிறேன். ஆனா அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனா இந்த ஆராய்ச்சி டீமிலயே கத்துக்குட்டி நான். என்னை ஏன் குறிவெக்கறாங்கனுதான் புரியலை."

"நீங்க கத்துக்குட்டிங்கிறதுதான் காரணம். உங்களை அப்புறப்படுத்திட்டா, அந்த எடத்துக்கு வேற யாரை வேணும்னாலும் கொண்டுவரலாம். அப்பாவை கன்வின்ஸ் பண்றது அப்ப ஈசினு நெனச்சிருப்பாங்க."

இப்போது, பெண்களின் அழுகை சப்தம் பெரிதாக, ஊர்வலம் கிளம்பிவிட்டது உணர்த்தப்பட்டது. பரத் அத்தோடு பேச்சை நிறுத்திவிட்டு மனோகரோடு சேர்ந்து கொண்டான்.

*****


கனகராஜின் அந்திம காரியங்கள் முடிந்து சில நாட்கள் போயிருந்தன. தீராத அழுகை, 'அவருக்கு இப்படி ஒரு அநியாய சாவா?' என்பன போன்ற பேச்சுக்கள், அவர் எவ்வளவு நல்லவர் என்று போனால்போகிறது என்று சற்றே மிகைப்படுத்தப்பட்ட சிலாகிப்புக்கள் எல்லாம் ஓய்ந்து, கனகராஜ் ஒரு மூன்றுக்கு நான்கு சட்டத்துக்குள், அழுது வடியும் சீரோ வாட் பல்ப் வெளிச்சத்தில் சிரித்தாவாறே புகைப்படமாக மருவிவிட்டார். தினம் கொஞ்சம் சந்தனம், வாழைப்பழத்தில் ஊதுபத்தி, ஒரு சம்பிரதாயக் கும்பிடு இவற்றோடு அவர் குடும்பத்தினர் அமைதி அடைந்தனர். பரத் மனதளவில் சமாதானம் அடையவில்லை. ஆராய்ச்சியைத் தொடர்ந்து, கனகராஜைக் கொன்றவர்களை அடையாளம் கண்டுபிடித்துப் பழிவாங்க உறுதியாக இருந்தான். கனகராஜின் இறுதிச்சடங்குகள் முடியும்வரை பரத் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தான்.அன்றுதான் விடுப்பு முடிந்து அலுவலகம் வந்தான். வழக்கத்தைவிட அன்று கேந்திரா மோட்டார்ஸ் தலைமைச் செயலகம் ஒருவித பரபரப்பில் காணப்பட்டது. சிறுசிறு குழுக்களாக எல்லாரும் கவலையோடு பேசிக்கொண்டிருந்தனர்.

தற்செயலாக வினய் எதிர்ப்பட்டான். பரத்தைப் பார்த்ததும், "பரத். தேங்க் காட். இஸ் எவரிதிங் ஆல்ரைட்? சாரி என்னாலே உன் வீட்டுக்கு வந்து விசாரிக்கமுடியலை. என்ன கவர்ட்லி அட்டாக்" என்று நிஜமான அனுசரணையோடு தோளைத் தட்டி உரிமையாகப் பேசினான்.

"எல்லாம் ஓகே வினய். தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன். ஆமா, என்ன ஹெட்குவார்டர்ஸே ஒரு பரபரப்பா இருக்கு? நான் லீவு முடிச்சு இன்னிக்குதான் வரேன். எனிதிங்க் சீரியஸ்?"

"ஆமா சீரியஸ்தான். நம்ம கம்பெனி ஷேர் ப்ரைஸ் ஒரே வாரத்துல 20% குறைஞ்சுடுச்சு. இன்டர்நேஷனல் மார்கெட்ல எரிபொருள் வெலை பாதியா திடீர்னு கொறஞ்சதுல, நாம இப்ப கொண்டுவரப் பாக்கற எரிபொருள் சிக்கன v-09 எஞ்சின் அவசியமில்லைனு கன்ஸ்யூமர்ஸ் நெனைக்கறாங்க. ஆயில்வெலை இன்னும் கொறையக் கொறைய, நாம வேற ஏதாவது செய்யலைனா நம்ம ஸ்டாக் அடியோட விழுந்துடும். இப்ப கொறஞ்சதுக்கே, நம்ம காம்படிடர் கேடிகே நம்ம ஸ்டாக்ஸை அதிகம் வாங்கி நம்ம டேக் ஓவர் பண்ணிடுவாங்களோன்னு மார்க்கெட்ல ஒரு பேச்சு ஓடுது.அதுதான் ஒட்டு மொத்தமா எல்லாரும் கூடிக்கூடி பேசிக்கிறாங்க."

பரத்துக்கு இந்த விஷயங்கள் இன்னும் பெரிய அதிர்ச்சியைத் தந்தன.

"சரி பரத், ஒரு எமர்ஜென்சி மீட்டிங்க் போயிட்டுருக்கேன். முடிஞ்சதும், நம்ம சேர்மன் கிட்டேயிருந்து அடுத்து நாம என்ன செய்யப்போறோம்னு தெளிவான விளக்கம் எல்லா எம்ப்ளாயீசுக்கும் வரும். ஸோ, பி பாசிடிவ்." என்று அவன் தலையைத் தட்டிவிட்டு ஓட்டமாக எலவேட்டரை நிறுத்தித் தாவினான்.
குழப்பத்தோடே பரத் ஆராய்ச்சிக்கூடத்தை அடைந்தான். விஷ்வனாத் அப்போதுதான் தன் பிரத்யேக அறையை விட்டு, வினய் குறிப்பிட்ட முக்கியமான கூட்டத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். பரத்தைப் பார்த்ததும், "வெல்கம் பேக் ஜென்டில்மேன். கேந்திரா எல்லாம் சொன்னா. நீ பிழைச்சு திரும்ப வந்தது சந்தோஷம்."

சந்தன மணம் கமழ்ந்த ஏர் ஃப்ரெஷ்னர், இதமான ஏசி, உறுத்தாத டிஸ்டெம்பர் கொண்ட அந்த விசாலமான அறை ஏனோ அன்று பரத்துக்கு இறுக்கத்தைத் தந்தது.
"தேங்க்ஸ் சார். நான் இன்னிலேருந்து மறுபடி சார்ஜ் எடுத்துக்கறேன். நான் லீவுல இருந்தபோது என்ன ப்ரோக்ரஸ்னு வாணிகிட்ட கேட்டுக்கறேன். வேற ஏதாவது?" அந்த அறையைவிட்டுப் போகும் அவசரத்தில் பரத் கேட்டான்.

"பரத் நீ சார்ஜ் எடுத்துக்க வேண்டாம். உன்னுடைய எல்லா பொறுப்பையும் உடனே வாணிகிட்ட கொடுத்துடு, நான் இப்ப ஒரு முக்கியமான மீட்டிங்குக்கு போகணும். மதியம் நான் வரும்போது நீ இந்த ஆராய்ச்சிக்கூடத்துல இருக்கக்கூடாது. உன்னை இன்னிலேருந்து அசெம்ப்ளி செக்‌ஷன் மெயின்டெனன்ஸ் டிபார்ட்மெண்டுக்கு மாத்திட்டேன். இதோ அதுக்கான ஆடர். யூ மே கோ நவ்."

நடுங்கும் கரங்களால் தன்னை ஆராய்ச்சியிலிருந்து வெளியேற்றும் கடிதத்தை பரத் வாங்கினான்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline