கவசம் வாங்கி வந்தேனடி! மாற்றம்
|
|
|
|
|
"மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்.
"இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது கண்ணா. இந்தியா போய்ச் சமர்த்தாக இருக்கணும். யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும். யாராவது கிஃப்ட் கொடுத்தால் தாங்க்ஸ் சொல்லணும்" என்று நான் ஆரம்பித்ததும் "ஓகே மம்மி டன்" என்று குதித்துக்கொண்டே ஓடினான்.
நானும் ஒரு மாதமாக எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து பொருட்கள் வாங்கிக் குவித்திருந்தேன். என் நாத்தனார் கல்யாணத்திற்குச் சென்றதுதான், மூன்றுவருடம் கழித்து இந்தியா போகிறேன்.
*****
ஏர்போர்ட்டிற்கு அப்பா மட்டும் வந்திருந்தார். "கண்ணா நல்லா வளர்ந்துட்டியே" என்று பேரனைக் கொஞ்சியதோடு சரி, ஆதவ் தாத்தாவிடம் ஏதேதோ கேட்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். தாத்தா மௌனமாக இருக்கவே வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் ஆவலுடன் என் தங்கை கட்டிப்பிடிப்பாள் என்று எதிர்பார்த்தேன். கேஷுவலாக "வா அக்கா... அத்தானுக்கு லீவு கிடைக்கலையா?" என்றபடி ஆதவை அழைத்துக்கொண்டு உள்ளே போனாள்.
"என்ன கல்யாணப்பொண்ணு, எப்படி இருக்கே?" என்று நான்தான் ஆசையாகக் கூறியபடி உள்ளே சென்றேன்.
சமையலறை உள்ளிருந்து வந்த அம்மா "வா வசந்தி, குட்டிப்பையா" என்றபடி காலை விந்திவிந்தி நடந்துவந்தாள்.
"என்னம்மா போனில் கூடச் சொல்லவில்லையே. உடம்புக்கு என்ன?" என்று பதறினேன்.
அப்பாதான் அலுத்துக் கொண்டார். "அம்மாவுக்கு ஆர்த்ரைடிஸ் வந்து செலவுக்குமேல் செலவு. கல்யாண வேலைகளையும் நான் ஒருவனே செய்யவேண்டியுள்ளது. உன் அண்ணாவிற்கு லீவு கிடைக்கலையாம்."
ஜெட்லாக் போனவுடன் எல்லோருக்கும் நான் வாங்கி வந்திருந்த பொருட்களை ஆசையுடன் எடுத்துக்கொடுத்தேன். "என்னக்கா, இங்கேயே சூப்பர் மால் எல்லாம் திறந்துட்டான். இங்கே கிடைக்காத பொருளே இல்லை" என்று அலட்சியமாகக் கூறியவள் ஒரு தாங்க்ஸ்கூடச் சொல்லாமல் எடுத்துச் சென்றாள்.
அம்மாதான், "ஏண்டி இவ்வளவு செலவு செஞ்ச? இங்க அப்பா கல்யாண செலவுக்கு கஷ்டப்படுறார். உன் அண்ணனும் கையை விரிச்சுட்டான். உன்னத்தான் மலைபோல் நம்பியிருக்கோம்" என்று ஆரம்பித்ததும் அதிர்ந்தேன்.
"சரிம்மா என்னால் முடிந்தவரை தருகிறேன்" என்று மறுநாளே பணத்தை எடுத்துக் கொடுத்தும் பெரிதாக யாருக்கும் சந்தோஷமில்லை. நெட்டில் இரண்டு மாதமாகத் தேடித்தேடி செலக்ட் செய்து வைத்திருந்த நகைகள், புடவைகளைத் தியாகம் செய்துவிட்டுத்தான் கொடுத்தேன் என்பது இவர்களுக்குப் புரியுமா?
பிறந்த வீட்டில்தான் இப்படி என்று புகுந்த வீட்டிற்குச் சென்றால் அங்கு அதற்குமேல், மாமியார் கால் ஒடிந்து படுத்திருந்தார். என் ஓரகத்தி "தான்மட்டும் அவரைப் பார்க்கவேண்டி உள்ளதே" என்ற எரிச்சலைக் காட்டினாள்.
"நிறைய செலவாகிறது" என்று என் கொழுந்தனார் அலுத்துக்கொண்டார்.
இவர் பெற்றோரைப் பார்த்துக் கொள்கிறாரே என்று என் கணவர் கணக்கில்லாமல் பணம் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார். இவர்கள் யார் உதவியும் இல்லாமல் ஸ்காலர்ஷிப் மற்றும் இரண்டு நண்பர்கள் உதவியால்தான் MS படித்தேன் என்று என் கணவர் மனம்தாளாமல் சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்களுக்கு எதிர்பார்ப்புமட்டும் நிறைய உள்ளது.
பிரசவத்திற்கு வந்திருந்த நாத்தனார் என் கை வளையல்களை ஆசையுடன் தொட்டுத்தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்ப்பிணிப்பெண் என்று மனம் கேட்காமல் அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தேன்.
***** |
|
புகுந்த வீட்டுக்குப் போய்விட்டு வருவதற்குள் என் தங்கை ஷாப்பிங் முடித்து விட்டிருந்தாள்.
"ஏம்மா, நான் வந்தவுடன் போயிருக்கலாமல்லவா. தி.நகர் கடைகளை கண்ணாலாவது பார்க்கலாம் என்று ஆசையாக இருந்தேன்" என்று ஆதங்கத்துடன் கூறினேன்.
"இல்லக்கா... ரொம்ப லேட். ஆனால் டைலர் உடனே தரமாட்டான்" என்று கூறி மழுப்பினாள்.
அம்மா உடல்நிலை, கல்யாணவேலை என்று அம்மாவால் நான் ஆசைப்பட்டதைத் செய்துதர முடியாமல் போனது. அதுவும் நிராசையானது. கல்யாண வீட்டிலும் யாரும் என்னை வீட்டுக்கு வரச்சொல்லிப் பெரிதாகக் கூப்பிடாததால் அந்தத் திட்டத்தையும் கைவிட்டேன்.
என் உறவினர்கள் மட்டும்தான் இப்படியா, எல்லோரும் இப்படியா இருக்கிறார்கள்? நான் வாங்கிவந்த வரம்தான் இப்படியோ என்று நான் ஆராய்ந்து முடிப்பதற்குள் என் லீவும் முடிந்து என் கிரெடிட் கார்டிலிருந்த பணமும் கரைந்துவிட்டிருந்தது.
ஃபோனில் பேசிய என் கணவர், "என்ன டார்லிங், லீவு வேண்டுமானால் எக்ஸ்டென்ஷன் செஞ்சுக்கோ" என்று சொன்னதும், "நோ.. நோ. As per sheduled time வந்துவிடுகிறேன்" என்று அவசரமாகக் கூறி ஃபோனை வைத்தேன். மேலேபேசினால் அழுதுவிடுவேனோ என்று தோன்றியது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ATM மெஷின்போல இருந்துவிட்டு ஊருக்குக் கிளம்ப பேக்செய்யத் தொடங்கினேன்.
என் கணவர் கேட்டிருந்த குர்த்தா வாங்கிக்கொண்டு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இந்த டிரைவர் வேலுதான் சொந்தக்காரில் அழைத்து வந்ததுபோல் எல்லா இடங்களுக்கு என்னைப் பொறுமையுடன் அழைத்துப் போனவன். "அக்கா அடுத்ததடவை ஊருக்கு வரும்போதும் என்னைத்தான் ஃபோன் பண்ணிக் கூப்பிடவேண்டும். மறந்து விடாதீர்கள்" என்று உரிமையாகச் சொன்னான்.
"கண்டிப்பாக மறக்கமாட்டேன்" என்று சொல்லி, கடைசியாக வைத்திருந்த ஓர் ஐநூறு ரூபாய் நோட்டை அவனிடம் கொடுத்து ஏதாவது ஷர்ட் வாங்கிக்கொள்" என்று சொல்லிக்கொடுத்தேன்.
மிகுந்த தயக்கத்துடன் வாங்கிக்கொண்ட அவன், ஒரு கடையில் நிறுத்தி ஒரு சிறிய கார் பொம்மை ஒன்றை வாங்கி ஆதவிடம் கொடுத்தான். ஆதவ் முகத்தில் நான் இதுவரை கண்டிராத ஒரு மகிழ்ச்சி.
நான் அவனுக்குச் சொல்லிக் கூட்டிவந்தது எதுவுமே நடக்கவில்லை. அவனும் புரிந்தோ புரியாமலோ என்னிடம் எதுவும் கேட்கவுமில்லை. சொந்தபந்தம் கொடுக்காத மனிதநேயம் இந்த ஆட்டோ டிரைவர்மூலம் கிடைத்தது மனதுக்கு இதமாக இருந்தது.
ஏதேதோ எதிர்பார்ப்புகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் ஏர்போர்ட்டில் ஏறினேன். வெறுமையுடனும், வெறுங்கையுடனும் தாய்நாட்டை விட்டுப் புறப்பட்ட நான், இப்போது பலவித உணர்வுகளுடன் வானில் பறக்க ஆரம்பித்தேன்.
உஷா சந்திரமோகன், சேலம், இந்தியா |
|
|
More
கவசம் வாங்கி வந்தேனடி! மாற்றம்
|
|
|
|
|
|
|