அருண் இராமநாதன்
|
|
|
|
|
கவிஞராக அறிமுகமாகி, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைப்படம் எனக் கலையின் பல தளங்களிலும் விரிவடைந்து, முத்திரை பதித்து வருபவர் இரா. முருகன். தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ந்தவர். மலையாளத்திலிருந்து குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். அருண் கொலாட்கரின் மராட்டிக் கவிதைகளை ஆங்கிலம் வழியே மொழிபெயர்த்திருக்கிறார். கணினித் துறையில் வேலை பார்ப்பவர்களின் மன அழுத்தங்களை, பணிச் சிக்கல்களை, அனுபவங்களைப் பற்றிப் பேசும் 'மூன்று விரல்' இவரது முதல் நாவல். இவரது இளம்பருவ வாழ்வியல் அனுபவங்களைக் கொண்ட, 'நெம்பர் 40, ரெட்டைத் தெரு' கட்டுரை நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. அதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 'ரெட்டைத் தெரு' குறும்படத்தில் தன் வாழ்வியல் அனுபவங்களை ரசனையுடன் பகிர்ந்திருக்கிறார். இவர் நண்பர்களுடன் இணைந்து நடத்திய 'ராயர் காப்பி கிளப்' இணையக் குழுமம் வலைவாசிகளிடையே மிகப் புகழ் பெற்ற ஒன்று. அதில் பல்வேறு சோதனைகளை முயற்சிகளைச் செய்து பார்த்ததுடன் பல்துறை இளைஞர்களை இலக்கியத்தின் பக்கம் கொண்டு வந்தார். மாந்திரீக யதார்த்த நடையில் இவர் எழுதிய 'அரசூர் வம்சம்', 'விஸ்வரூபம்' நாவல்கள் இவரது அசாத்தியத் திறனை வெளிப்படுத்துபவை. 'அரசூர் வம்சம்' ஆங்கிலத்தில் 'The Ghosts of Arasur' என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா-2' போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தா. இலக்கியச் சிந்தனை விருது, கதா விருது, பாரதியார் பல்கலைக்கழக விருது, லில்லி தேவசிகாமணி விருது, NCERT விருது உட்படப் பல பாராட்டுக்களைப் பெற்றவர். தற்போது விஸ்வரூபம் நாவலின் தொடர்ச்சியாக 'அச்சுதம் கேசவம்' என்ற பிரம்மாண்ட நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார். www.eramurukan.in இவரது இணையதளம். இதோ, இரா. முருகன் பேசுகிறார்....
*****
கே: 'நான் ஓர் எழுத்தாளன்' என்ற எண்ணம் முதலில் எப்போது தோன்றியது? ப: நான் எழுதத் தொடங்கியது புதுக்கவிதைதான். தூண்டுதலுக்காக ரொம்ப தூரம் வெளியே போக வேண்டி இரு்க்காமல், எங்கள் ஊர் சிவகங்கையிலேயே, அதுவும் நான் படித்த கல்லூரியிலேயே எனக்குப் பேராசிரியராக இருந்தவர் தமிழ்ப் புதுக்கவிதையை மக்களிடம் எடுத்துச் சென்ற கவிஞர் மீரா (பேரா. மீ. ராசேந்திரன்). அவருடைய 'கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' புதுக்கவிதைத் தொகுதியின் மூலம் எழுபதுகளில் உருவான கவிஞர்களில் நானும் ஒருவன். அதைக்கடந்து புதுக்கவிதைப் பரப்பில் ஏழெட்டு ஆண்டுகள் (கொஞ்சம் அதிகக் காலம்தான்) கடத்தி விட்டேன். அப்படி எழுதிய கவிதைகளில் 'வினைத்தொகை', 'பலகை' இரண்டையும் மறுவாசிப்புச் செய்ய ஒரு தருணம் கிட்டியது. மறுவாசிப்பு என்றால் எழுதி முடித்து, வருடங்கள் சென்று நடந்ததில்லை. போன மாதம் எழுதி, இந்த மாதம் பிரசுரமாகி, நேற்றுக் கையில் பத்திரிகை வந்து படித்து, இன்றைக்கு மறுபடி படிக்கிற கிரமம்தான். திரும்பக் கவிதையைப் படித்தபோது இன்னும் இதில் சொல்ல நிறைய உண்டே, இந்த இறுக்கம் இல்லாமல் கொஞ்சம் காலை வீசிப் போட்டு நடந்து பார்க்கலாமே என்று தோன்ற, அவற்றைச் சிறுகதை ஆக்கினேன். அதற்கு முன்னாலும் சில சிறுகதைகள் எழுதியிருந்தேன். அவை என் கவிதையின் நீட்சியாகவே இருந்தன. ஆனால், கவிதைகளைச் சிறுகதைகளாக வடிவம் மாற்றிய இந்த முயற்சிகள் அவற்றை முற்றிலும் வேறான இலக்கிய வெளிப்பாடாக உணர வைத்தன. இரா.முருகன் என்ற புதுக்கவிஞன் விடைபெற்றுக் கொண்டான். இரா.முருகன் என்ற எழுத்தாளன் மீசையை நீவிக்கொண்டு எழுதத் தொடங்கினான்.
கே: உங்கள் படைப்புகளில் பெரும்பாலானவை மாந்திரீக யதார்த்தப் பாணியில் எழுதப்பட்டவை. மேஜிகல் ரியலிசத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் உள்ளதா? ப: கதையாடலைக் கதைக் களன்தான் தீர்மானிக்கிறது. ஒரு நூறு சிறுகதைகளும், இருபது குறுநாவல்களும், மூன்று விரல் என்ற முதல் நாவலும் எழுதிய பிறகுதான் மாந்திரீக யதார்த்தத்துக்கு வந்தேன். மரபான கதையாடல் என்றாலும் என் கதைகளில் காலத்தை ஒரு பரிமாணமாகக் கொண்டு வருவதில் ஆரம்பம் தொட்டு எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான 'தேர்' கதைகளில் சரிபாதிக்கு மேல் கதையோட்டத்தில் காலம் முன்னும் பின்னும் சதா அதிர்ந்து நகர்வதைப் பதிவு செய்தவை. அந்த உத்தியை அசோகமித்திரன் சார் 'தேர்' முன்னுரையில் 'ஜம்ப் கட்' என்று இனம்கண்டு அறிமுகம் செய்தார். 'அப்போதுதான் இவன் கொஞ்சம் வித்தியாசமாக எழுதுகிறான் என்று என்னைப்பற்றிய புரிதல் தொடங்கியது. ஆனாலும் ஒரு கட்டத்தில் 'சொல்ல நிறைய உண்டு. அதைச் சுருக்கமாக, சட்டென்று மனதில் படிகிற தோதில் சொல்லவேணும். முழுக்கச் சொல்லாமல் கதையை படிக்கிறவர் மனதில் வாசக அனுபவம்மூலம் அதை நிகழ்த்திக் காட்டவேண்டும்' என்ற தேடலின்போது நான் ஜம்ப்கட்டைக் கடந்து போகவேண்டி இருந்தது. அப்போது கண்டடைந்தது மாந்திரீக யதார்த்தம். மார்க்வேஸின் 'நூறாண்டு காலத் தனிமை'யைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நான் எழுத ஆரம்பித்தபோது அந்த நூல் தமிழில் கிடைக்கவில்லை. ஆனால், மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி நன்றாக விற்பனை ஆன அந்த நாவலை இரவு நேரங்களில் சென்னை மாநகராட்சி குடிநீர் வர அடிபம்பு பக்கத்தில் காத்திருந்த நடு இரவு கடந்த நேரங்களில்தான் முழுக்கப் படித்து முடித்தேன். அதன் விளைவாக 'அடிபம்பும் காபிரியல் மார்க்வெஸும் புல்புல்தாராவும்' என்ற என் முதல் மாந்திரீக யதார்த்தக் கதையை நான் எழுதும்போது சான் ஓசே, கலிஃபோர்னியாவில் வேலை நிமித்தம் வசித்து வந்தேன். சென்னையில் 1990களின் மாதக் கணக்கில் நீண்ட குடிநீர் தட்டுப்பாடும், மார்க்வேஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் என் கலிஃபோர்னியா வாசத் தனிமையும் ஏதோ ஒரு அற்புதக் கணத்தில் ஒன்று கலக்காவிட்டால் நான் மாந்திரீக யதார்த்தத்துக்கு வந்திருக்க மாட்டேனோ என்னமோ!
கே: உங்கள் எழுத்தின் தனித்துவமாக நகைச்சுவையைச் சொல்லலாம். சிறுகதை, நாவல்கள் மட்டுமில்லாது கட்டுரைகளிலும், திரைப்பட வசனங்களிலும் காண முடிகிறது. எப்படிச் சாத்தியமாகிறது? ப: எல்லாம் இடுக்கண் வருங்கால் நகுக வகையறாதான். சதா இடுக்கண்ணிலே இருக்கேனோ என்னமோ, சதா சிரிச்சுக்கிட்டிருக்கேன். அப்புறம் ஒண்ணு, நான் பிறந்து வளர்ந்த செம்மண் பூமி சிவகங்கை சுபாவமாகவே நகைச்சுவையை அனுபவிக்கிற, உம்முனு போறவனையும் சீண்டி வேடிக்கை பார்க்கிற பிரதேசம். தமிழில் முதல் வசன காவியமான சிவகங்கை முத்துக்குட்டி புலவரின் 'வசன சம்பிரதாயக் கதை' படித்தாலே இது புரியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்தியில் சம்பவித்த தாது வருஷ பஞ்சம் தான் கதைக்களன். பல்லாயிரம் உயிர்களைப் பட்டினி காவுகொண்ட அந்த மகத்தான சோகத்தையும் கொஞ்சம் வறண்ட (wry humor) நகைச்சுவையோடு சொல்லும்போது சோகம் இன்னும் அடர்த்தியாகக் கவியும். சிவகங்கைக்கே உரிய அந்த நகைச்சுவை மரபணு, பிள்ளைப் பிராயத்தில் குடித்த ஆரஞ்சுநிறச் செம்மண் செட்டியூரணித் தண்ணீரோடு எனக்குள் கலந்திருக்கிறதாகவே உணர்கிறேன். விட்டு விலகி நின்று பார்க்கும்போது, என்னைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிக்கிற முதல் வேடிக்கை மனிதன் நான்தான். அவன் பார்வையில் மற்றவர்களிலும் நகைச்சுவை தட்டுப்படுகிறது.
கே:அரசூர் வம்சமாகட்டும், சமீபத்திய விஸ்வரூபமாகட்டும். இரண்டுமே காலவெளியைக் கலைத்து முன்னும் பின்னும் நிரப்புபவை. சுவாரஸ்யமாக இருக்கும் அதே சமயம் வாசகனின் கூர்மையான கவனத்தையும் கோருபவை. மிக நீளமானவை. இம்மாதிரி நாவல்களை எழுதுவதில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? ப: சிக்கல் ஒண்ணும் கிடையாது. படிக்கிறவர்களுக்குச் சிக்கல் இல்லாமல் இருக்கவேணும் என்பது முதல் குறிக்கோள். ஆயிரம் பக்கம் எழுதினாலும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்துவிட்டுத் தான் புரட்ட வைக்க வேண்டும் என்று அடுத்த எதிர்பார்ப்பு. நாவல் எழுதணும்னு தீர்மானம் செய்தபிறகு, கதை நிகழ்கிற காலப்பரப்பில் அமிழ்ந்து விடுவேன். இது சாவதானமாக அனுபவித்துச் செய்யவேண்டிய ஒன்று. தமிழ், மலையாளம், ஆங்கிலம் என்று படிக்க, பயணம் போக, இண்டர்நெட்டில் பல்கலைக் கழக இணையத் தளங்களில் பொறுமையாகத் தேடி நுண்தகவல் சேகரிக்க, கதைக்கான அவுட்லைன் எழுத என்று நேரம் போகும். நாவல் எழுதுவதைவிட அதற்கான ஆயத்தம் செய்யும் இந்தத் தருணங்கள் மனதுக்கு நிறைவானவை.
ஒரு வழியாக யாரெல்லாம் கதாபாத்திரங்கள், எத்தனை கதை இழைகள், எங்கே எது எந்தக் காலகட்டத்தில் நிகழ்கிறது என்று தீர்மானம் செய்துகொண்டு, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான attributeகளைச் சேர்த்து ஒரு ஆவணம் அடுத்துத் தயாராகும். கதாபாத்திரங்கள் யாருக்கு யார் எப்படி உறவு என்பதும் இன்னொரு நுணுக்கமான வரைபடமாகும். இதெல்லாம் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்க ஏற்பட்ட வரைமுறைகள். அப்படியே நாவலுக்கு இந்த க்ளாஸ் டயகிராம், என்டிட்டி ரிலேஷன்ஷிப் டயகிராம், சீக்வென்ஸ் டயகிராம் சமாசாரங்களை எல்லாம் கடத்துவதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை. கணினித் துறையில் நான் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு வந்திருக்காதுதான். கதை எழுத ஆரம்பித்தவுடன், நான் அமைத்த சட்டகத்தை நானே மீறவேண்டி வரும். கதையாடலின் வேகம் அதைத் தீர்மானிக்கும். எப்படி மீறினாலும் எங்கே போக வேண்டும், எப்படி இது நிறைவடைய வேண்டும் என்ற நோக்கைத் தவற விட்டதில்லை. இந்தத் தீர்மானமே குழப்பமில்லாத வாசிப்பை வாசகர்களுக்குத் தர வழி வகுக்கிறது. ஏழெட்டு கதை இழைகள், பத்து நிகழும் ஊர்கள், நான்கு நாடுகள், அறுபதுக்கு மேல் கதாபாத்திரங்கள், மூன்று காலகட்டங்கள் என்று கதை நிகழ்ந்தாலும் சிக்கல் வார்ப்பிலும் வாசிப்பிலும் வராது.
கே: இன்றைக்கு தமிழகத்தின் நகரமெங்கும் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. சில நூல்கள் நன்கு விற்கின்றன. ஆனால் வாசிப்பவர்களின் சதவீதம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. காரணம் என்ன, வாசகப் பரப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டியதென்ன? ப: நானும் ஒவ்வொரு வருடமும் மார்ச் தொடங்கி டிசம்பர்வரை இப்படித்தான் வாசிப்பு குறைந்து போனதாக நினைக்கிறேன். ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம், அதுவும் தமிழ்ப் புத்தகம் வாங்க அலை மோதும் கூட்டத்தைப் பார்த்த பிறகு கருத்தை வெகுவாக மாற்றிக் கொள்கிறேன். ஃபிப்ரவரியில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷல் நெட்வர்க்கிங் தளங்களில் வாங்கிய புத்தகங்கள், படிக்க எடுத்த புத்தகங்கள் என்று ஆளாளுக்குப் பட்டியல் போடுவதைப் படிக்க, அடுத்த தலைமுறை வாசிப்பைக் கைவிடவில்லை என்று நிச்சயம் செய்துகொள்கிறேன். மார்ச் மாசத்தில் அவர்கள் எல்லோரும் புத்தகங்களை அலமாரியில் வைத்து விட்டுப் பார்க்க வேண்டிய சினிமா, பின்பற்ற வேண்டிய அரசியல் தலைவர் என்று உணர்ச்சிகரமாக விவாதிக்கும்போது அடுத்த ஜனவரிக்காகக் காத்திருக்க ஆரம்பிக்கிறேன். படிக்கிற பழக்கம் இன்னும் அதிகமாக, ஜப்பான்போல் இங்கும் கிராஃபிக் நாவல் - சித்திரக் கதை - புத்தகங்களில் சிரத்தை செலுத்தலாம். முகமூடியும் இரும்புக்கை மாயாவியும் இந்திரஜால் காமிக்ஸுமாக இளையவர்களுக்கு மட்டுமில்லை கிராஃபிக் நாவல். கொஞ்சம் முயன்றால் தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நேர்த்தியான படக் கதையாகலாம்.
கே: பத்திரிகைகள் இன்று நாவல், சிறுகதைகளை அதிகம் பிரசுரிப்பதில்லை. படைப்பிலக்கியம் குறைந்துவிட்டதா? அவற்றை வாசிப்போர் குறைந்துவிட்டனரா? ப: பத்திரிகைகள் எந்தக் காலத்திலும் நாவலைப் பிரசுரித்ததில்லை. தொடர்கதைகள்தாம் மும்முரமாக வாசிக்கப்பட்டன. ஜெயகாந்தன், ஜானகிராமன் எழுதிய சில தொடர்கதைகள் தொகுப்பு வாசிப்பில் நாவலும் ஆனது தற்செயலானதே. சிறுகதைகள் வார, மாதப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவது குறைந்து விட்டது உண்மைதான். பத்திரிகை வடிவம் மாறிக்கொண்டே வருவது இதன் முக்கியக் காரணம். எந்த விஷயம் பற்றியும் மூன்று நிமிடத்துக்குமேல் பார்வையைப் பிடித்து இழுத்து நிறுத்த முடியவில்லை. தொலைக்காட்சிச் சேனல்களை மாற்றி, மாற்றிப் பார்க்கும் காட்சி சார்ந்த அனுபவம் அச்சு ஊடகத்துக்கும் கடந்துவிட்டது. சிறுகதைகளின் இடத்தைக் கட்டுரைகள் பிடித்துக் கொண்டு விட்டன. நாவலும், கட்டுரையும் அடுத்தடுத்து எழுத மகிழ்ச்சியாக இருக்கிறது. நாவலும் சிறுகதையும் அடுத்தடுத்து எழுதுவது கொஞ்சம் சிரமம். நான் மாட்டேன்.
கே: உங்கள் படைப்புகளின் அடிநாதமாக விளங்கும் அரசூர், அம்பலப்புழை ஆகியவை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். ப: அரசூர் என்ற பெயரில் சிவகங்கை, திருவாடானையை அடுத்து இருக்கும் அழகான ஒரு கிராமம் என் பூர்வீக மண்ணாகும். ஆனால் என் கதைகளில் வரும் அரசூர் அதுவல்ல. என் நினைவில் படிந்த சிவகங்கையும், நாட்டரசன்கோட்டையும், மதுரையும், பரமக்குடியும், வில்லிப்புத்தூரும் என் கற்பனையும் கலந்த என் சொந்த மால்குடி அது. அம்பலப்புழை என் வேர்களின் ஊர். கேரள மாநிலத்தில் குட்டநாடு பிரதேசமாக ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள கடலோரச் சிறுநகரம் அது. தகழியும், ஹரிப்பாடும், நெடுமுடியும் கூப்பிடு தூரத்தில் அமைந்த, ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம் நிறைந்து நிற்கும் ஊர். என் அரசூர் நாவல்களில் அம்பலப்புழை கிருஷ்ணன் வராமல் இருந்ததில்லை. |
|
|
கே: இளம்படைப்பாளிகள் பற்றி உங்கள் கருத்தென்ன? ப: போன தலைமுறைகளின் படைப்பாளிகள் கூறத் தயங்கிய விஷயங்களையும் துணிச்சலாகக் கையாள இவர்களுக்குக் கைவரும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஃபேஸ்புக் குழுச்சண்டைகளில் இருந்து ஒதுங்கி இருந்தால் போதும். நிறைய சாதிக்கலாம்.
கே: மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். இன்னும் எவற்றைக் கொண்டுவரும் எண்ணமுள்ளது? ப: சேதுவும் சாரா தாமஸும் தமிழில் இன்னும் அதிகம் அறியப்பட வேண்டியவர்கள். அதுபோல் மலையாள மரபு இலக்கியமும் தமிழுக்கு வரவேண்டிய அவசியம் உண்டு. தொன்மத்தைக் கொண்டாடும் கொட்டாரம் சங்குண்ணியின் 'ஐதிஹ்ய மாலை'யும். அப்புறம் இன்னொன்று - வைக்கம் முகம்மது பஷீர் கதைகளை ஓர் அன்பர் முரட்டடியாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பஷீரின் கதை மொழி இப்போது தமிழில் வந்திருப்பது போன்றது இல்லை. மறு மொழிபெயர்ப்பு அவசியம்.
கே: வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் என்ற வரைகோடு இருப்பது உண்மைதானா? ப: தீவிர இலக்கியத்துக்கு ஆயிரம் வாசகர் அதிகரித்ததும் வணிகமாகிறது. தீவிர இலக்கியம் என்றால் புரியாமல் எழுதுவது, வணிக இலக்கியம் என்றால் கற்பனைக்கு இடமே வைக்காமல் எட்டாம் வாய்ப்பாடுபோல் எழுதுவது என்று நான் எப்போதுமே வரையறைகள் வைத்துக்கொள்வதில்லை.
கே: பத்திரிக்கை, திரைப்படம் இரண்டிலும் வெற்றிகரமாக இயங்குபவர் நீங்கள். இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்? ப: நண்பர் கமல்ஹாசன் சொல்வார்: 'தமிழ் எழுத்தாளர்கள் அவர்களின் இலக்கியத் தடத்தின் நீட்சியாகத் திரைப்படத்தை நினைக்கிறார்கள். நல்ல நாவலாசிரியர் சிறந்த திரைக்கதையாளராவது அபூர்வம். இரண்டும் வெவ்வேறு விதம் என்பதை ஒத்துக் கொள்வதில் பொதுவான தயக்கம் தெரிகிறது'. அவர் சொல்வது உண்மை. நான் திரைக்கதை எழுத அமரும்போது அந்த வடிவத்தை மட்டுமே கவனத்தில் வைக்கிறேன். தொடர்ச்சி குறைந்த, நுணுக்கமான பார்வை அடிப்படையிலான காட்சிகளாக நிகழ்வை நடத்திப் போவது அது. என் முதல் திரைக்கதை எழுதுவதை இலக்கியத்தில் கால் பதித்து வெகு காலம் சென்று, கமல்ஹாசன் என்ற தேர்ந்த திரைக்கதாசிரியரிடம் தான் கற்றேன் என்பதைச் சொல்வதில் எனக்குப் பெருமையே. திரைப்படம் நான் படைப்புமூலம் தொடர்பு கொள்ளும் வட்டத்தைப் பெரிதாக்குகிறது. இந்த வட்டத்தில் என் எழுத்தைப் படித்தவர்கள் சிறுபான்மையே.
கே: இன்றைக்கு இலக்கிய விமர்சனம் என்பது மிகக் குறைந்துவிட்டது. ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளர்களின் நூல்களைப் படிப்பதில்லை, விமர்சிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதைப்பற்றி நீங்கள் கருதுவது என்ன? ப: சில புத்தகங்களைப் படிக்கும்போது அவற்றை எழுதியவரே தான் எழுதியதைப் படித்ததில்லை என்று தோன்றுகிறது. இது என்னுடைய இலக்கிய விமர்சனமா என்று கேட்காதீர்கள். சக எழுத்தாளர்களின் நூல்களைப் படிக்கலாம். விமர்சித்தால் பலருக்குப் பிடிப்பதில்லை. என்னையும் வேண்டுமானால் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
கே: அண்மையில் 'ஷ்ரத்தா' குழுவினர் உங்கள் மூன்று நாடகங்களை அரங்கேற்றினர். மேடை நாடக அனுபவம் குறித்துச் சொல்லுங்கள். ப: மேடை நாடகம் ஒரு குழு சார்ந்த முயற்சி. 'ஆழ்வார்', 'சிலிக்கன் வாசல்', 'எழுத்துக்காரர்' என்ற என் மூன்று கதைகளை நாடகமாக்கும்போது அந்தக் கலை வடிவத்துக்கு எழுதும் நுட்பம் பிடிபட்டது. எழுதியதை ஒத்திகை பார்க்கும்போது அங்கங்கே மாற்றி எழுதவேண்டிய கட்டாயம். உரையாடல்கள் கூர்மையாக இருப்பதும், காட்சியில் யார் யார் பங்கு கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கவனம் வைப்பதும் நாடக எழுத்து முயற்சிகளை சுவாரசியமாக்குகின்றன. அரங்கு அமைப்பு, நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு நாடகங்களை வெற்றிபெறச் செய்கின்றன. ஷ்ரத்தா குழு அப்படியான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. முழுமையான பாராட்டை எதிர்கொண்டோம். நாலே காட்சி மட்டும் அந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டு ஓய்ந்து போவதுதான் என்னைப் பொறுத்தவரை மகத்தான சோகம். அதனால் தளர்ந்து விடாமல், 'சாவடி' என்ற பெயரில் முதல் உலகப்போர் நேரத்தில் ஜெர்மானியப் போர்க் கப்பல் எம்டன் சென்னைத் துறைமுகத்தில் குண்டு வீசிய இரவை மையமாக வைத்து அடுத்த நாடகம் தயார்.
கே: எழுத்துலகில் சாதித்தாயிற்றா? சாதிக்க வேண்டியது உள்ளதா? ப: சாதிக்க வேண்டி உள்ளது, சாதித்தாயிற்று என்ற இரண்டுமே நாமாக ஏற்படுத்திக் கொண்ட மனநிலை. நான் சாதிக்க முயன்றுகொண்டே இருக்கிறேன்.
தொகுப்பு: மதுரபாரதி, அரவிந்த்
*****
சுஜாதாவும் நானும் சுஜாதா சார் பற்றி, அவரோடு கொண்டிருந்த குரு-சிஷ்ய உறவுபற்றி நிறைய எழுதிவிட்டேன். இனியும் எழுதினால் பாசாங்காகி விடக்கூடிய அபாயம் உண்டு. அவர் என்னை பாசிட்டிவ் ஆகப் பாதித்தவர். அதே சமயம், அவர் எழுத்து அவரை மீறிக் கடக்கவும் எனக்கு உத்வேகம் அளித்த ஒன்று. முன்பு ஒரு பேட்டியில் சொல்லியதுபோல, சுஜாதா என்ற படைப்பாளிமேல் எனக்கு பக்தியும் அவர் செய்யாததைச் செய்ய வேகமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது. அவர்மேல் வைத்த பக்தி பின்னாட்களில் என் அறிவியல் படைப்புகளின் வடிவத்தில் வெளிப்பட்டது. அறிவியலை எளிமையாக, சுவாரசியமாகத் தமிழில் எழுத சுஜாதா தமிழ் தவிர வேறே மார்க்கம் கிடையாது. சுஜாதா மாதிரி எழுதறான் என்று இசையும் வசையும் எனக்குக் கிட்ட என் கம்ப்யூட்டர் கட்டுரைகளும் அறிவியல் புனைகதைகளும் முக்கியக் காரணம். சிறுகதை, நாவலில் சுஜாதா தொடாத மேஜிக்கல் ரியலிசம், காலம் ஒரு பரிமாணமாகக் கதை சொல்வது என்று நான் சுஜாதைவை விட்டு விலகியே நடக்கிறேன். அரசூர் வம்சம் வெளிவந்தபோது அவர் இருந்தார். நாவலை ரசித்ததோடு, தான் தயாரித்த சிறப்பு குமுதம் ஒன்றில் அதிலிருந்து ஒரு முழு அத்தியாயத்தைப் பிரசுரித்து, தமிழில் வாழையடி வாழையாக முன் தலைமுறை எழுத்தை உள்வாங்கிக் கொண்டு முகிழும் உரைநடைக்கு அந்த எழுத்தை உதாரணம் காட்டியிருந்தார். அந்தப் பெருந்தன்மையும் அன்பும் அவரைத் தவிர வேறு யாரிடமும் தென்பட்டதில்லை. அவர் மகான். நிச்சயமாக. - இரா.முருகன்
*****
கமல்... க்ரேஸி மோகன்.... நான்.... கமலுடனான நட்பு இனிமையானது. காலையில் வெண்பாவாக, மதியம் ரசித்த ஆங்கில நூலில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்வதாக, சமயத்தில் இரவில் எழுப்பி, அன்று ஏற்பட்ட ஒரு சிறிய அனுபவத்தைப் பங்குபோட்டுக் கொள்வதாக அமைகிறது அது. சில நேரம் வாரக் கணக்கில் தொடர்பே இல்லாமல் இருந்துவிட்டு அடுத்த உரையாடல், முன்னால் விட்ட இடத்தில் இருந்து தொடரும். கமல் அவர்களைப் போல் எனக்குக் கிடைத்த இன்னொரு நெருங்கிய நண்பர் க்ரேஸி மோகன். பைரப்பாவின் கன்னட நாவலான பருவத்தையும், காளிதாசனின் குமார சம்பவத்தையும், ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றையும் மோகன் சொல்லாமல் படித்திருக்க மாட்டேன். படித்து அறிந்து நட்புக்கொண்ட வகையில் 'பிஏகே அண்ணா' (புலிநகக் கொன்றை நாவலாசிரியர் பி.ஏ. கிருஷ்ணன்) கமல், மோகன், நான் என்ற மூவருக்குமே நெருங்கிய நண்பராகி விட்டார். - இரா.முருகன்
*****
"பயில்வான்" முருகன் "கோயிலை ஒட்டிய தேரடியில் மரத் தேரைக் கழுவித் துடைத்து, ஜமுக்காளங்களை உருட்டி, நீளமாகத் தழைகிற தோரணங்களை மாட்டி, பூவும், வாழையிலை, மாவிலையுமாக அலங்காரம் செய்யப்படும். நல்லையா கடையோடு நாலைந்து வளையல்கடை, கோலிசோடா கடை, பலூன்கடை என்று வரிசையாகத் தெருவோரமாக முளைத்திருக்கும். மலிவுவிலை சர்பத் கடையில் மூன்றுபைசா நாணயங்கள் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரில் மிதந்தபடி சர்பத் விலையைச் சொல்லிக்கொண்டிருக்கும். சுதந்திர இந்தியா அதற்கு முன்போ பின்போ வெளியிட்ட வேறு எந்தக் காசும் மிதந்ததில்லை. கடையில் நீட்டினால், கண்ணாடி கிளாஸில் சாக்ரின் ஜாஸ்தியான, ஐஸ்கட்டி போட்ட சர்பத்தும் அப்புறம் மூணு பைசாவுக்குக் குடிக்கக் கிடைக்கவில்லை. சர்பத் கடைக்குப் பக்கத்தில் பொட்டல்வெளியில் கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கரடுகரடாகத் திரண்ட கையும் காலுமாகக் கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, 'தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே' என்று சோனியாக ஒருத்தர் தொடர்ந்து கையில் ஒலிபெருக்கி வைத்து முழங்கிக் கொண்டிருப்பார். முறுக்குமீசை தவிர அவருக்கும் பீமசேனனுக்கும் வேறு ஒற்றுமை இருக்காது. அவ்வப்போது இருபத்தைந்து பைசா செலவில் உடனடியாகப் பீமசேனனாக உத்தேசித்து யாராவது காசை நீட்ட, பக்கத்தில் வைத்த ஒரு வாளால், அல்வா மலையிலிருந்து லாவகமாக ஐந்து சென்டிமீட்டர் நீள, அகலம் மற்றும் இரண்டு சென்டிமீட்டர் கனத்தில் ஒரு துண்டை வெட்டி பூவரச இலையில் வைத்து அல்வாக்காரர் தருவார். வாங்கிச் சாப்பிட்டவர்கள் இலையை விட்டெறிந்துவிட்டு கம்பீரமாகப் பார்த்தபடி நடப்பார்கள். அல்பமான ஒரு இருபத்தைந்து காசு வீட்டுப் பெரியவர்கள் கொடுத்திருந்தால் நான் இன்னேரம் பயில்வானாகியிருப்பேன்." - இரா.முருகன் எழுதிய 'நெம்பர் 40, இரட்டைத் தெரு' நூலிலிருந்து...
*****
நாள்தோறும்... பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த, பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க, காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத் தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில் விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து, சமைத்து, பரிமாறி, தரை துடைத்து, பாத்திரம் ஒழித்துப் போட்டு, பசங்களைப் படுக்கையில் விட்டு, மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு காத்திருக்கும் கணவன் கண்காட்ட வரேன் என்று தலையசைத்து இருட்டில் மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில் வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து, வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள் வானம் பார்த்தாள். பெய் என்றாள்.
- இரா.முருகன் எழுதிய 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' கவிதைத்தொகுப்பிலிருந்து.... |
|
|
More
அருண் இராமநாதன்
|
|
|
|
|
|
|
|