|
தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன முன்முயற்சி |
|
- |டிசம்பர் 2022| |
|
|
|
|
தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் குறித்த ஆய்வு நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்கான முன்முயற்சிக் குழுவானது சமீபத்தில் மயாமியிலிருந்து (Miami, Florida) சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் (San Francisco Bay Area) சென்று அந்நிறுவனத்தின் முயற்சிகளை ஒரு நிகழ்வாக நவம்பர் 12, 2022 அன்று நடத்தியது. பேரா. கலைமதி, பேரா. கிரி நரசிம்மன் மற்றும் செல்வி நிம்மி அருணாச்சலம், செல்வி கமிஷா குமாரஸ்ரீ, திரு. பாலா கண்ணன், திரு. ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா ஆகியோருடன் நடந்த இக்கூட்டத்துக்குத் திரு. நடராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை திரு. ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா அருமையாக வடிவுவமைத்து அவருக்கே உரித்தான பாணியில் மிக நகைச்சுவை கலந்து அரங்கேற்றிக் கொடுத்தார். இது இக்குழுவின் முக்கிய நோக்கமான தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் முன்முயற்சி நிறுவனத்தின் குறிக்கோள்கள், செயல்பாடுகள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் முன்னோட்ட நிகழ்வாக அமைந்தது.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 85 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியான தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் எஞ்சியிருக்கும் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும். இதன் வரலாறு, இலக்கிய, கலாச்சார, பண்பாட்டுப் பதிவுகள் இதன் பழமைக்குச் சான்றுகள். மொழி மற்றும் வரலாறு மட்டுமல்லாது தமிழ் மொழியின் கலைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும் ஒரு வலுவான தன்னிறைவு பெற்ற நிறுவனத்தை உருவாக்குவதே இம் முன்முயற்சியின் நோக்கம். இம்முயற்சி தொடர்ந்து தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவார்ந்த ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலைச் செயல்படுத்தும் ஓர் உயராற்றல்மிகு தமிழ் நிறுவனத்தை உருவாக்கும் என்பது உறுதி. அமெரிக்கா மற்றும் உலகமெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி, இந்தியா இலங்கை வாழ் தமிழர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.
இந்தத் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன முன்முயற்சிக்கு உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழர்களின் ஆதரவும் தேவையாக இருக்கிறது. பல பல்கலைக்கழகங்களில் தனிப்பட்ட தமிழ் இருக்கைகள் நிறுவப்பட்டிருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களைக் கொண்ட தமிழ் ஆய்வு மற்றும் கலாச்சாரத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் பொறுப்புக் கொண்ட நிறுவனம் ஒன்ரு தேவைப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குவதே இந்நிறுவனத்தின் இலக்காகும்.
இந்த முன்முயற்சியின் சின்னமான (Logo) இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் மிகவும் கவர்ந்த ஒன்றாக அமைந்திருந்தது.
நவம்பர் 11, 2022 அன்று, திரு. ரமோஷன் தலைமையில் விரிகுடாப் பகுதி இலங்கைத் தமிழர் இணைந்து, கமிஷா குமரஸ்ரீ அவர்கள் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனத்திற்கு உட்பட்டு நிறுவிய இலங்கைத் தமிழர் அறக்கட்டளையின் செயல்பாட்டையும், முயற்சிகளையும் விரிவாக எடுத்துரைத்தார். முத்தாய்ப்பாக நம் மொழி மற்றும் நமது மூதாதையர் சிறப்புகளை நினைவு கூரவும் பெருமிதம் கொள்ளவும் இம்மாதிரியான நிகழ்வுகள் அமைகின்றன என கமிஷா கூறினார். இருபத்தி மூன்று வயதே ஆன கமிஷா, தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் பண்பாட்டை மேலும் ஆராய்ந்து பல பதிவுகள் படைக்கவுள்ளார்.
இம்முன்முயற்சிக் குழுவின் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்முயற்சியின் முதல் மற்றும் பெருமைமிகு நிகழ்வான "செம்மொழியாம் தமிழ் மொழி" நிகழ்த்தப்பட்டது (YouTube; செப்டம்பர் 25, 2022). பத்மஸ்ரீ பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களைப் பற்றிய அறிமுகமோ விளக்கமோ சொல்லும்முன் நம் அனைவர் மனதிலும் அவரின் அறிவார்ந்த தமிழ் ஆராய்ச்சியும் தமிழ் மொழிக்காக அவரின் அளப்பரிய மகத்தான பணிகளுமே நினைவுக்கு வந்துவிடும். அவரின் முன்னெடுப்பால்தான் தமிழ்த் தாயின் மகுடத்தில் செம்மொழி எனும் மற்றுமோர் வைரம் பதிக்கப்பட்டது.
கமலா அருணாச்சலம் தமிழ் இசை அறக்கட்டளையால் சாத்தியமானது கலைமாமணி ஸ்ரீ சிக்கில் குருச்சரண் அவர்களின் "துன்பங்கள் நீங்க அறியாமையில் இருந்து மீண்டு ஒளியை நோக்கி" ஓர் இசைப்பயணம் (நவம்பர் 23, 2022). அனைவரும் ஆன்ம ஒளி பெற உலகில் உள்ள மனித உயிர்கள் யாவரும் ஒரே நிலையிலானது என்றுணர வள்ளலாரின் திருவருட்பா படைப்புகளைத் தமிழ் இசை வழியே (கர்நாடக இசை) எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க தொடர் கச்சேரி அரங்கேற்றப்பட்டது (நவம்பர் 21, 2022). திருவருட் பிரகாச வள்ளலாரின் 200 வது பிறந்தநாள் விழாவைப் போற்றும் வகையில் வள்ளலார் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை மூலமாக இக்கச்சேரி அரங்கேற்றப்பட்டது.
நிறைவாக எஃப்.ஐ.யூ. பல்கலைக்கழகத்தின் சார்பில் பேரா. கிரிநரசிம்மன் நன்றியுரை நிகழ்த்தினார். பல்கலைக்கழகத் தலைவர் (FIU Past President) "சாத்தியமில்லாதது என்று கருதப்படுவதை, தவிர்க்க முடியாததாக ஆக்குவதே நமது பல்கலைக்கழகத்தின் முத்திரை" என்பதை நினைவு கூர்ந்தார். திரு. பாலகண்ணன் மற்றும் அவர் புதல்வி ஸ்ரீ மீனாட்சி அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வு திரு பாலாஜி அவர்களின் தந்தை தியாகராஜன் அவர்கள் இயற்றிய சரஸ்வதி துதி பாடலுடன் நிறைவேறியது.
தகவல், எழுத்து: முனை. கலைமதி. புளோரிடா பல்கலைக்கழகம்; முனை. சுசீலா மாணிக்கம், சென்னை,
தமிழ்நாடு: திரு. பாலா கண்ணன், கலிஃபோர்னியா, அமெரிக்கா
தமிழ்ச் சின்னம் ஓவியர்: தமிழ்ச்செழியன், சென்னை, தமிழ்நாடு |
|
மேலும் தகவலுக்கு: Website | FaceBook | Twitter | Instagram | Youtube | To donate |
|
|
|
|
|
|
|