|
தன்னம்பிக்கை தந்த பரிசு |
|
- கமலவேலன்|நவம்பர் 2010| |
|
|
|
|
|
தாயப்பன் வீடு முழுவதும் தேடி விட்டான். இரண்டே அறைகள் கொண்ட சின்ன வீடுதான் அது. அதில் ஒன்று அடுப்பங்கரை. தேடிய அலுப்பில் தலையெல்லாம் கலைந்து முகம் முழுதும் வியர்த்துக் கிடந்தது. புத்தகப்பையை மீண்டும் ஒருமுறை கொட்டிக் கவிழ்த்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தான். அவன் தேடிய அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. முதல் நாள் பள்ளியில் கடைசி பிரீயட் வரை இருந்ததே! தாயப்பன் செய்வதறியாது திகைத்தான். அவனுக்கு அழுகையாய் வந்தது. பத்தாவது படிக்கும் பையன் அழுதால் பார்ப்பவர்கள் கேலி பண்ணுவார்களே என்று அழுகையை அடக்கிக் கொண்டான்.
"என்னடா தம்பி ரொம்ப நேரமாத் தேடறியே.. ஏதாவது காணாமல் போயிடுச்சா?" பரிதவிக்கும் மகனைப் பார்த்துப் பாசத்தோடு வினவினாள் மாரியம்மாள்.
"ஆமாம். அம்மா..."
"அது என்ன புத்தகம்டா?"
"திருக்குறள் புத்தகம். அதை நாலு நாளைக்கு முன்னாலதான் என் வகுப்புத் தமிழாசிரியர் கிட்ட இரவலா வாங்கினேன். அதை நான் இன்னும் படிச்சே முடிக்கலே. அதுக்குள்ளே காணாமல் போயிட்டுது அம்மா" அவன் கவலையோடு சொன்னான்.
"நா... எந்தப் புத்தகத்தைக் கண்டேன். நிழலுக்குக் கூடப் பள்ளிக்கூடத்துல ஒதுங்கினது கிடையாது. போன பொருளைப் பத்தி கவலைப்படாதே! வேற வாங்கிக்கலாம் விடு" மாரியம்மாள் மகனுக்கு ஆறுதல் சொன்னாள்.
"அம்மா... நீங்க சொல்றது நியாயம்தான். இன்னும் மூன்று நாள்ல... எங்க பள்ளிக்கூடத்துல திருக்குறள் மனப்பாடப் போட்டி நடத்துறாங்க. 1330 குறளையும் யார் அடி பிறழாமல் ஒப்பிக்கறாங்களோ அவங்களுக்கு அழகான வெள்ளிக் கோப்பையை முதல் பரிசாத் தர்றாங்க அம்மா. எங்கிட்ட திருக்குறள் புத்தகம் கிடையாது. அப்பாகிட்டே கேட்டால்... 'போடா... நீ படிச்சது போதும். ஏதாவது ஒரு மளிகைக் கடையில உன்னை வேலைக்குச் சேர்த்து விட்டுர்றேன்'னு அலட்சியமாகச் சொல்வார். முக்கால்வாசி குறள் படிச்சு முடிச்சுட்டேன். கடைசி நேரத்துல இப்படி ஆயிடுச்சே அம்மா" தாயப்பன் கண்ணீர் பெருக்கினான்.
"சரி... சரி... இன்னும் நல்லாத் தேடிப் பார்க்கலாம். இப்போ நீ பள்ளிக்கூடத்துக்குப் புறப்படு நேரமாகுது."
தாயப்பனின் அப்பா மாடசாமி காலையிலேயே வயல் வேலை செய்யப் போய்விட்டார். கூலி வேலைதான். எப்பாடு பட்டாவது மகனைப் பத்தாவது வரை படிக்கச் செய்துவிட வேண்டும் என்பதை மாடசாமி மனதுக்குள் உறுதியாய் எண்ணம் கொண்டிருந்தார்.
தாயப்பன் படிப்பில் படு சுட்டி. பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டிகளில் இன்றுவரை அந்தப் பள்ளிக் கூடத்தில் அவன்தான் முதலிடம்.
இதை மனதில் எண்ணித்தான் அவன் வகுப்புத் தமிழாசிரியர், அவனைத் திருக்குறள் மனப்பாடப் போட்டியிலும் கலந்து கொள்ளச் சொன்னார். தாயப்பன் இதையெல்லாம் சிந்தித்தபடியே பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். டவுன் பஸ்ஸில் சென்றால் பத்து நிமிடங்களில் பள்ளிக் கூடத்தை அடைந்து விடலாம். அந்த அளவுக்குப் பொருளாதாரம் இடம் கொடுக்காததால் விளாங்குடியிலிருந்து மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் அருகே உள்ள பள்ளிக்கு நடந்து வந்து படித்துக் கொண்டிருந்தான். அது அவனுக்குப் பழகிப் போய்விட்டது.
முதல் மணி அடிப்பதற்கு முன் அவசர அவசரமாகத் தனது தமிழாசிரியரிடம் சென்று, "ஐயா, நான் இந்தத் தடவை மனப்பாடப் போட்டியிலிருந்து விலக்கிறேன் ஐயா" என்று பயந்துகொண்டே சொன்னான்.
தமிழாசிரியர் காரணம் கேட்டார். அவன் சொல்லத் தயங்கினான். தொலைந்து விட்டது என்று சொன்னால் அவர் கோபிப்பாரே! உடல் நலம் இல்லை என்று சொல்லிச் சமாளித்தான்.
"சரி... அப்புறம் உன் இஷ்டம்..." தமிழாசிரியரும் அவனைக் கட்டாயப்படுத்தவில்லை.
"தளராத முயற்சியும், உழைப்பும் இருந்தால் மனிதன் எந்தக் காரியத்தையும் எளிதில் சாதித்து விடலாம். அதோடு தெய்வ நம்பிக்கையும் வேண்டும்." என்று பாட வேளையின் போது தாயப்பனின் தமிழாசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன கருத்துக்களை அவன் அசைபோட்டுக் கொண்டிருந்தான்.
மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்குச் செல்லாமல் மன ஆறுதலுக்காக மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றான். மாநிலத்தில் உள்ள திருக்கோயில்களில் மாமதுரைக்குச் சிறப்பிடம் உண்டே! அங்கே சென்று தன் பாரத்தை இறக்கி வைக்கத் தாயப்பன் விரும்பினான். |
|
சொக்கநாதரை வணங்கினான். முக்குறுணிப் பிள்ளையாரைப் பணிந்தான். பின்னர் அகிலமெல்லாம் காத்து அருள்புரியும் அங்கயற்கண்ணியின் சன்னதிக்கு வந்தான்.
மீனாட்சியின் அருளாட்சி வேண்டிப் பக்தர்கள் பலர் அங்குக் கை கூப்பி, மெய் மறந்து நின்றார்கள். தாயப்பனும் அம்பாளைப் பணிந்தான். பின்னர் சன்னதிக்கு எதிரேயுள்ள தெப்பக்குளத்தைச் சுற்றி வந்தான். ஒரு பகுதியை அடைந்தபோது அவன் அப்படியே திகைத்து நின்று விட்டான். அவன் இதயம் மகிழ்ச்சியால் துள்ளியது. கவலை மறந்தான். களிப்பு மிகக் கொண்டான். அன்று இரவு வெகுநேரம் கழித்தே வீடு திரும்பினான்.
அடுத்த இரண்டு நாட்கள் தாயப்பன் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் பைத்தியம் பிடித்தவன் போல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையே சுற்றிச் சுற்றி வந்தான்.
பள்ளியில் அவன் வகுப்பில் படிக்கும் மாணவன் பாலகிருஷ்ணனுக்கு, தாயப்பன் பள்ளிக்கு வராதது குறித்து ரொம்ப மகிழ்ச்சி. திருக்குறள் மனப்பாடப் போட்டியில் தனக்கே 'வெள்ளிக் கோப்பை' என்பதை உறுதியாக எண்ணிக் கொண்டான். தன் நெருங்கிய நண்பர்களிடம் இதைச் சொல்லி மகிழ்ந்தான்.
மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த போட்டி நாளும் வந்தது. மிகுந்த உற்சாகத்துடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தான் பாலகிருஷ்ணன்.
போட்டி தொடங்கியது. திடீரென வேக வேகமாக ஓடி வந்தான் தாயப்பன். தானும் போட்டியில் கலந்து கொள்வதாகத் தலைமை ஆசிரியரிடம் சொன்னான். இரண்டு நாட்களாகப் பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று அவர் கேட்டார். தாயப்பன் ஏதோ காரணம் சொன்னான். மாணவர்களின் இரைச்சலில் அந்தக் காரணம் யார் காதிலும் விழவில்லை.
தாயப்பனைப் பார்த்தவுடன் பாலகிருஷ்ணனின் முகம் சுருங்கிவிட்டது. தனது திட்டமெல்லாம் தரைமட்டமாகி விட்டதே என்று கவலைப்பட்டான். ஆனாலும் அவனிடம்தான் திருக்குறள் புத்தகம் இல்லையே என்று இதயத்தின் ஒரு மூலையில் அவனுக்குச் சந்தோஷம். மற்ற மாணவர்களைப் போல் நினைத்தவுடன் காசு கொடுத்துப் புத்தகம் வாங்க அவனால் முடியாது என்பது பாலகிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். எனவே ஓரளவு தெம்பாகவே இருந்தான்.
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வழக்கம் போல் தாயப்பனே முதல் பரிசினைத் தட்டிச் சென்றான். பாலகிருஷ்ணனுக்கு மூன்றாவது இடம்.
"தாயப்பா.. நீ இரண்டு நாட்களாகப் பள்ளிக்கு வரவில்லை... திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ளப் போவதுமில்லை என்று சொல்லியிருந்தாய். என்ன இதெல்லாம்... எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!" தமிழாசிரியர் கேட்டார்.
"ஐயா, தாங்கள் எனக்காகக் கொடுத்த திருக்குறள் புத்தகம் தொலைந்து விட்டது. அதை உங்களிடம் சொல்லவும் பயம். சாதாரண கூலித் தொழிலாளியான என் அப்பாவிடம் கேட்டாலும் வாங்கித்தர மாட்டார். போட்டிக்கோ இன்னும் மூன்று தினங்களே இருந்தன. மனம் கலங்கி நின்றேன். இந்த நிலையில்தான் அன்று நீங்கள், 'தளராத முயற்சியுடன் தெய்வ பக்தியும் இருந்தால் காரியங்களைச் சாதித்து விடலாம்" என்ற விளக்கம் கொடுத்தீர்கள். அதை எண்ணியவாறே மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றேன்."
"கோயிலுக்குப் போனதினால திருக்குறள் எல்லாம் மனப்பாடம் ஆயிட்டுதா?" ஆசிரியர் கேட்டார்.
"ஐயா... அங்கே அம்மன் சன்னதிக்கு எதிரேயுள்ள தெப்பக்குளத்தைச் சுற்றி வந்தேன். அபோழுதுதான் அந்தச் சுவர்ப் பகுதியில் சலவைக் கல்லில் முத்துமுத்தான எழுத்துக்களில் அதிகார வரிசையில் திருக்குறள் செதுக்கப்பட்டு, பதிக்கப் பெற்றிருந்ததைப் பார்த்தேன்."
"அடடே... ஆமாம். நான்கூட அவற்றைப் பார்த்திருக்கிறேனே!" ஆசிரியர் வியந்து கூறினார்.
"அன்று இரவு ஒன்பது மணிவரை படித்தேன். அடுத்த இரண்டு நாட்களும் பள்ளிக்கூடத்திற்கு வராமல் தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர்களைச் சுற்றிச்சுற்றி வந்து படித்தேன். ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்ததால் அந்த இரண்டு நாட்களில் எளிதாக மனப்பாடம் ஆகி விட்டது. உடனேதான் நம்பிக்கையோடு போட்டியிலும் கலந்து கொண்டேன். தங்கள் ஆசியாலும் அம்பாளின் கருணையாலும், முதல் பரிசும் பெற்றேன்."
மூச்சுவிடாமல் கூறி முடித்தான் தாயப்பன். தமிழாசிரியர் உள்ளம் நெகிழ்ந்தார். மகிழ்ச்சிப் பெருக்கால் தன் மாணவனைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.
"ஐயா... என்னை மன்னிச்சிடுங்க. நீங்க தாயப்பனுக்காகக் கொடுத்த திருக்குறள் புத்தகத்தை நான்தான் அவன் மீதுள்ள பொறாமை காரணமாக திருடிச் சென்று விட்டேன். இந்த முறை வெற்றி எனக்குத்தான் என்று மமதையோடும் இருந்தேன். என்னை மன்னிச்சிடுங்கய்யா" பாலகிருஷ்ணன் கதறி அழுதான்.
"பாலு... படிப்பில் போட்டியிருக்க வேண்டும். பொறாமை அறவே கூடாது. தவறை நீ உணர்ந்து விட்டாய். அதுவே போதும்" காலில் விழுந்தவனைத் தூக்கி நிறுத்தி அறிவுரை கூறினார் ஆசிரியர்.
தளராத ஊக்கத்துடன் இரண்டு நாட்கள் கோயிலிலேயே கிடந்து படித்துப் பரிசு பெற்ற தாயப்பனை தலைமை ஆசிரியரும் மிகப் பெருமையோடு பாராட்டினார்.
('கோகுலம்' இதழில் முதலில் வெளியானது; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பின்னர் 'தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற தொகுப்பில் வெளியிட்டது)
கமலவேலன் |
|
|
|
|
|
|
|
|