Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி
தெரியுமா?: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை
முழங்குதிரை!
பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி
எட்டாவது ஆண்டு நிறைந்த இட்ஸ் டிஃப் வானொலி சேவை
77வது திருமண நாளன்று!
- சிவகுமார் அனந்தசுப்பிரமணியன்|ஜூன் 2013||(2 Comments)
Share:
"ராமச்சந்திரனா என்றேன் ராமச்சந்திரன் என்றான்
எந்த ராமச்சந்திரன் என்று அவன் கேட்கவுமில்லை
நான் கூறவுமில்லை"


- நகுலன்கவிதை

எழுபத்தி ஏழு வருடங்களுக்கு முன்னால், 19 வயது ராமச்சந்திரனுக்கும், 11 வயது ஸ்வர்ணலக்ஷ்மிக்கும் திருமணம்நடந்தபோது அலங்கார விளக்குகள், அறுசுவை உணவு, அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரி, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளையின் நாகஸ்வரம், ஆவுடையார்கோவில் ஹரிஹரபாகவதரின் ஜலதரங்கம், சீதா கல்யாண காலக்ஷேபம் என்று நாட்டரசன்கோட்டை ஊரே ஐந்துநாட்களுக்குத் திமிலோகப்பட்டது.

மணப்பெண்ணின் தகப்பனார் ஸ்வர்ணமணிக்கு 34 வயதுதான் என்றாலும் கைதேர்ந்த மருத்துவராக 30 மைல் சுற்றுவட்டாரத்தில் அதற்குள்ளாகவே பேர்வாங்க ஆரம்பித்திருந்தார். வைத்தியம் தாண்டி அவரது ஈகையும், மனிதர்களைக் கட்டிமேய்க்கும் ஆளுமையும் அவருக்கு நண்பர்களையும், சிஷ்யர்களையும் சம்பாதித்துக் கொடுத்தன. ஸ்வர்ணமணியின் கைராசிக்கு மற்றுமோர் சமீபத்திய உதாரணம், அவர் தடபுடலாக நடத்திவைத்த அவரது மூத்தமகள் ஸ்வர்ணலக்ஷ்மியின் திருமணத்தின் வெற்றிகரமான எழுபத்தியேழாம் ஆண்டு நிறைவு.

4540 மில்லியன் ஆண்டு வயதான பூமியில், 12,000 ஆண்டுகால மனித நாகரிகத்தில், எழுபத்தியேழு வருடம் வெறும் தூசுதான். ஆனால் ராமச்சந்திரன்-ஸ்வர்ணலக்ஷ்மிக்குத் திருமணமான அதே 1936ம் வருடம் சென்னையில் டிராமில் பயணிக்கலாம். கூவம் நதி நீந்திக் குளிக்கும் அளவுக்குத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. வேறொரு ராமச்சந்திரன் (எம்.ஜி.ராமச்சந்திரன்) 'சவுக்கடி சந்திரகாந்தா' படத்தில் பெண்வேடத்தில் அறிமுகமானார். ஜெர்மனியே நாட்சி கட்சி கையில் இருந்தாலும் ஹிட்லருக்கு ஃபிரான்ஸின்மேல் படையெடுக்கும் தைரியம் வரவில்லை. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வாழ்ந்தவர்கள் இன்னும் ஒன்பது வருடத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாததால் சந்தோஷமாக இருந்தார்கள். லாஹூரும் காரைக்குடியும் ஒரேநாட்டில் இருந்தன. சுதந்திர இந்தியாவுக்கே இன்று அறுபத்தியாறு வயதுதான் என்பதை ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டால் எழுபத்தியேழு எவ்வளவு பெரிதென்பது தெரியும்.

ராமச்சந்திரன்-ஸ்வர்ணலக்ஷ்மி தம்பதிகளுக்கு 10 குழந்தைகள், 4 மருமகள்கள், 5 மாப்பிள்ளைகள், சம்பந்திகள், 18 பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் என்று விரிகிறது. மானாமதுரையில் பலப்பல வருடங்களுக்கு ஊரின் ஒரே உயர்நிலைப் பள்ளிக்கூடமும், அதே நேரத்தில் ஒன்பது குழந்தைகளும், சில முதியவர்களும் இருந்த வீடும் பரபரப்பாக ஆனால் குறையின்றி ஓடியகாரணம், "யின்"னும் "யாங்"கும்போல இவர்கள் இருவரது அலைவரிசைகளும் பரஸ்பரம் நிரப்பியபடியே வந்ததுதான்.

ராமச்சந்திரனுக்கு வளையாத முதுகு. சுத்தமான கை. அந்தக் கையளவுமட்டும் சாப்பாடு. ஆங்கில இலக்கியம், அறிவியல், இசை, விளையாட்டு ஈடுபாடுகள். நகைச்சுவை. நுண்ணறிவு. ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி. நண்பர்களுடன் உரையாடல். ஸ்வர்ணலக்ஷ்மிக்குத் தாராள மனசு. பெரிய கை. தமிழ் இலக்கியம். குழப்பமில்லாத சமச்சீர் சமுதாய நோக்கு. பொருளாசை இல்லாமை. ஓயாத உழைப்பு. சமையல். எழுத்து. வீட்டு நிர்வாகம். பெரும்பிரச்சினைகளைப் பொருட்டாக மதியாமை. உறுத்தாத ஓரவஞ்சனையில்லாத பாசம். இருவரின் தேவைகளும், தத்துவங்களும் குழப்பமின்றி இருந்தன இவர்களின் நீண்டகால நட்புக்குக் காரணம். அதேபோல இவர்களின் தினசரி வாழ்க்கையில் இருந்த சுருக்கமும், யதார்த்தமும் சலிப்புத்தட்டாத வாழ்க்கைக்குச் சரியான வரையறை.
ராமச்சந்திரன் பாடம் நடத்துவார். மாடுபிடித்துக் கட்டுவார். தோட்டத்தைப் பராமரிப்பார். ஒட்டடை அடிப்பார். நிறையப் படிப்பார். பி.பி.சி. கேட்பார். பாட்மின்டன் ஆடுவார். நாடகங்களில் நடிப்பார். ஸ்வர்ணலக்ஷ்மி அதிகாலையில் எழுந்த நிமிடம் முதலே காஃபி, சமையல், இரண்டாம் காஃபி என்று சுழன்றபடியே இருப்பார். மாவரைப்பார். குழந்தைகளையும்,முதியவர்களையும் தனித்தனியாகக் கவனிப்பார். பலகையில் தலைவைத்து ஓய்வெடுப்பார். முடிந்தபோதெல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் தரம்வாய்ந்த சிறுகதைகள் எழுதுவார். இருவரும் சலிக்காத உழைப்பாளிகள். பொய், பித்தலாட்டம் ஊழல் பிடிக்காது. பேராசை கிடையவே கிடையாது. இசைப்பிரியர்கள். நிறையச் சிரிப்பார்கள். ஞானிகளுக்கு இணையான சமநிலையைச் சோகத்திலும் சந்தோஷத்திலும் பராமரிக்கும் முதிர்ச்சி அடைந்தவர்கள். குழந்தையாக மறைந்துவிட்ட இரண்டாவது மகன் பாலமுரளிபற்றிய வருத்தமோ, அல்லது இப்போது படிப்பிலும் தொழிலிலும் வளர்ந்துவரும் வம்சாவளியினர்பற்றிய பெருமையோ இருவர் பேச்சிலுமே அளவுக்கு மிஞ்சி எப்போதும் மற்றவர்களுக்குச் சுமையானதே இல்லை.

ஸ்வர்ணலக்ஷ்மி சித்தர்கள் முலாம்பூசிய தத்துவஞானம் உடையவர். பிரார்த்தனை என்ற பழக்கத்தை தன்மானக் குறைவாக நினைப்பவர்.எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று இறைஞ்சுவதை வெறுப்பவர். ராமச்சந்திரன் மேற்கத்திய சித்தாந்தம் உருவாக்கிய சிந்தனைவாதி. மேல்பூச்சை உரசினால் இருவரும் நாத்திகர்களாக இருக்கலாம். அதனால்தான் அக்கிரகாரமாக ஒரே நிறத்தில் மட்டுமே பலகாலம் இருந்த இவர்கள் வாழ்க்கைமுறை அடுத்தடுத்த சந்ததிகளில் நிறப்பிரிகை அடைந்து பலவண்ணங்களில் ஜொலிக்கிறது. இவர்கள் தமது உறவினருக்குமட்டும் சொந்தமானவர்களாக நடந்துகொண்டதே இல்லை. இதற்கு உதாரணம், இவர்களுக்கிருக்கும் எண்ணற்ற (ஏறக்குறைய) தத்துக் குழந்தைகளே. பள்ளியில் படித்தவர்கள், மோர் குடிக்க வந்தவர்கள், கடன் வாங்கி மறந்தவர்கள், பிரச்சனைக்குப் பரிகாரம் தேடி வந்தவர்கள், எந்த நாடு போனாலும் இவர்களையே பெற்றோர் ஸ்தானத்தில் நினப்பவர்கள் எல்லோருக்கும் இவர்களின் அன்பு பாகுபாடில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. நகுலன் கவிதையை நம்வசதிக்குத் திருப்பினால் இவர்கள் நிழல்பட்ட எத்தனையோ ராமச்சந்திரன்கள் இருப்பதைப் பார்க்கலாம். ராமச்சந்திரன்-ஸ்வர்ணலக்ஷ்மி இருவருக்கும் மனம்நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

(திரு.N.S. ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் உள்ள மானாமதுரையில் O.V.C. உயர்நிலைப்பள்ளியில் பல வருடங்கள் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது 96 வயதான அவரும், 88 வயதான அவர் மனைவி திருமதி. ஸ்வர்ணலக்ஷ்மியும் அட்லாண்டாவில் மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார்கள். இவர்களது 77வது திருமண நாள் மே 4, 2013. இந்தக் கட்டுரையை எழுதியவர் அவர்களின் முதல் பேரன்)

சிவகுமார் அனந்தசுப்பிரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி
தெரியுமா?: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை
முழங்குதிரை!
பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி
எட்டாவது ஆண்டு நிறைந்த இட்ஸ் டிஃப் வானொலி சேவை
Share: 




© Copyright 2020 Tamilonline