Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது?
- ஹரி கிருஷ்ணன்|மே 2012|
Share:
குயில் பாட்டின் மையச்செய்தி என்ன என்று பார்க்கலாம் எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். குயில் பாட்டை மிக விரிவாக அலசிவிட்டு, என் ஆசிரியப் பெருமான் உரைத்த செய்தியை என் சொற்களால் இங்கே சொல்கிறேன். இந்த ஆய்வில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளில் 95 சதம் கருத்துகள் அவருடையவையே. அவற்றுக்கு அணுக்கமான என் கருத்துகள் சிலச்சில இதனுள் இடம்பெற்றுள்ளன. குயில் பாட்டின் மையச் செய்திக்கு வருவோம்.

எந்த நாடாயினும் சரி; எம்மொழியாயினும் சரி்; எந்தக் காலகட்டமாயினும் சரி, கவிதாதேவியின் உபாசகர்களான கவிஞர்கள் தம் உள்ளத்தி்ல் இருத்தி, நேசத்துடன் (கவிதை இயற்றும் கணங்களில்) அந்தரங்கமாக அக்கவிமகளுடன் கொள்ளும் உறவே சொல்உருவம் பெற்று, கவிதை என்ற மொத்த வடிவத்தை அடைகிறது. பாரதி, ஒரு சௌகரியத்துக்காக--அல்லது பேச்சு வசதிக்காக--தமிழையும் தமிழ்க் கவிதையையும் குவிமையத்தில் வைத்திருக்கிறான். இப்படி, கவிதையை உபாசிக்கும் கவிஞர்களிடையே மூன்று விதமான போக்குகள் தென்படுகின்றன. ஒரு கூட்டத்தார், சிந்தனையைச் செறிவுடையதாக ஆக்க முயலாமல், தமக்கு முன்பிருந்தோர் எந்தப் பாதையிலே சென்றார்களோ அதிலேயே திரும்பத் திரும்ப செக்குமாடுகளைப் போல் உழல்கின்றனர். இவர்களும் படைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும், 'முந்தைய வழக்கம், ஆட்சி, இதைப்போல இதற்கு முன்னால் படைக்கப்பட்ட படைப்பு எல்லாம் இருக்கின்றனவா' என்று பார்த்துப் பார்த்து, இந்தத் தரப்பினர் ஒரு நெடுங்காலப் பரப்பைத் தம்வசமாக்கி இருந்தனர். இப்படிபப்பட்டவர்களின் உள்ளப் பாங்கை, பாரதியைப்பற்றிப் பாடுகையில் பாரதிதாசன் சித்திரிக்கிறார். குறிப்பிட்ட பகுதியைப் பார்ப்போம்:

இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னாள் நிலையிலே முட்டுக என்றும்
வழக்காறு ஒழிந்ததை வைத்து எழுதித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல், புதுநடை போற்றேல் என்றும்
நம்தமிழ்ப் புலவர் நவின்றனர்; நாளும்
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.....
(புதுநெறி காட்டிய புலவன், பாரதிதாசன் கவிதை)


பாரதி வாழ்ந்த காலத்திலும் சரி அதற்கு முன்பும் சரி (ஏன் இப்போதும்கூடத்தான்!) நிலவிய கவிக்கூட்டத்தின் ஒரு சாராரைப் பற்றிய விமரிசனம் இது. 'முன்னாள் நிலையிலே முட்டுக' என்று பாரதிதாசன் குறிப்பிடும்போது, பாரதி பயன்படுத்திய 'மாடு' குறியீட்டைத் தன்னையுமறியாமற் பயன்படுத்தியிருக்கிறார். மாடுதானே முட்டும்! இந்தப் பாடலில், பாரதியைப்போன்ற குசும்புடன் கூடிய வீச்சொன்றைப் போடுகிறார் பாவேந்தர். 'கடவுளைக் குறிக்கும் கவிதையும், பொருள் விளங்கிட எழுதுவதும் ஏற்காதென்றும்' என்ற அடி ஓங்கி அறைவதுபோல விழுகிறது. ஆமாம். பொருள் விளங்காப் பாட்டே மிக உயர்ந்த பாட்டு என்ற கருதுகோள் இன்றும் நிலவியபடிதான் இருக்கிறது. அன்று புரியாத சொல்லால் பாப்புனைந்தனர். இன்று பொருள் துலங்காத கருத்தால் பாப்புனைகின்றனர். அவ்ளவுதான் வித்தியாசம். 'பொருள் விளங்கவில்லையே' என்று கேட்டால், 'யோசித்துப் பார். புரியும்' என்ற இறுமாப்பு மிகுந்த விடையை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். Obscurantism என்ற ஆங்கில, பிறநாட்டுப் படைப்புகளைப் போலி செய்து 'இருண்மை' என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, படிக்கிறவன் பொருள் விளங்காமல் விழிக்கும்போது, இறுக்கமான உதட்டுக்கிடையே நமட்டுச் சிரிப்பொன்றைக் காட்டி, 'பாரு.. இதக்கூட புரிஞ்சுக்க முடியாதவங்களுக்காக என்னை மாதிரியானவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம்' என்று மேட்டிமை கொண்டாடிக் கொள்ளும் கூட்டம் அன்று மட்டுமன்று; இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உள்நாட்டைப் போலி செய்வது மாடு. வெளிநாட்டைப் போலி செய்வது குரங்கு. (ஐயையோ! இதை நான் சொல்லவில்லை. பாரதி குயில் பாட்டில் சொல்லியிருப்பதன் விளக்கத்தை எடுத்துச் சொன்னேன். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பாரதிக்கே!)

எனவே, நடந்து நடந்து பள்ளம் விழுந்துவிட்ட பாதைக்குள்ளேயே தொடர்ந்து நடந்கொண்டிருப்பது ஒரு கூட்டம். இதற்கு off the beaten track என்ற எண்ணம் எழவே எழாது. மாறாக, தான் இயற்றியது ஒவ்வொன்றையும் தனக்கு முன்னால் செய்தவர் செய்தபடியே செய்திருக்கிறோமா என்று பார்த்துப் பார்த்துப் பொருத்திக் கொள்வது இவர்களின் வழக்கம். இன்னொரு கூட்டத்தார் எப்போதும் மரக்கிளைகளிலேயே சஞ்சாரம் செய்துகொண்டிருப்பவர்கள். அவர்களுடைய பாதம் மண்ணில் படவே படாது. 'இன்றைய தேவையை எழுதேல்' என்பது குயில் பாட்டில் உள்ள மாட்டின் குறியீடு சொல்கிறது என்றால்; ஒருக்காலும் உள்நாட்டு வழக்கத்தை ஏறெடுத்தும் பார்க்காதே என்பது குயில் பாட்டின் 'குரங்கு' குறியீடு குறிப்பிடுவோரின் கட்சி. இவர்களுடன் ஒரு பதினைந்து நிமிடம் உரையாடினால், லாரி அன்னி போஸ்ஸிலார், இ இ கமிங்கஸ், பீட்டர் கானர்ஸ், ஆன்ட்ரூ க்ரூமே, இவான் டான் கார்ஸ்வெல் என்று பெயர்களை உதிர்த்துக் கொண்டே இருப்பார்கள். (போதாக்குறைக்கு அவர்களுடைய பெயரை எப்படி உச்சரிப்பது சரியானது என்றொரு விவாதம் கிளம்பும். ஒரே பெயருக்கு நான்குவிதமான உச்சரிப்புகள் சொல்லப்படும். தாம் உச்சரிக்கும் விதமே சரி; அப்படி உச்சரிக்கத் தெரியாதவர்கள் ஒன்றுமே தெரியாதவர்கள் என்பதான மமதைப் போக்கும் இத்தகைய கூட்டங்களில் வெளிப்படுவதை நான் நேரடியாகவே அனுபவித்திருக்கிறேன்.)
ஒன்றை கவனியுங்கள். இந்த இரண்டு கூட்டத்தாருக்குமே இருக்கும் கவிதைக் காதல் பொய்யானதன்று என்பது மிக நிச்சயமான உண்மை. ஆனால், அவர்களுடைய கவனம் கவிதையை முன்னிலைப் படுத்துவதைக் காட்டிலும், தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதிலேயே நிலைபெற்றிருக்கிறது. (அயல்நாட்டுக் கவிஞர்களுடைய பெயர்களை 'இன்ன விதத்தில்தான் உச்சரிக்க வேண்டும். இன்னார் இப்படி உச்சரிக்கிறார். அது தவறு' என்றும், இதைப்போன்ற மற்ற விவாதங்களிலும் ஒரே குழுவின் பல உட்குழுக்களும் அடிதடி மோதலில் இறங்குவதையும் இந்நாள் சிறுபத்திரிகைகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.)

எனவே, கவிதாதேவியின் அருள் இவர்களுக்கும் எப்போதாவது ஒருமுறை சித்தித்துவிடுகிறது. என்றோ ஒருநாள் ஒரு கவிதை அல்லது ஒரே ஒரு வரி சிறப்பாக (தம்மையும் மீறி!) எழுதிவிடுகிறார்கள். கவிதாதேவியை இவர்கள் காதலிப்பது உண்மையே என்றால், கவிதாதேவி இவர்களைக் காதலிப்பது என்னவோ, 'காதலினால் அன்று; கருணையினால்!' இது குயில் பாட்டில் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லப்படுகிறது.

இதற்கு மாறாக, 'தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்' என்பதையே தம் தாரக மந்திரமாகக் கொண்டு, இயற்றும் கவிதைக்குள்ளும் அதனுள் தொனிக்கும் உணர்வுக்குள்ளும் தானே முங்கியெழுந்து முக்குளித்து, கவிதாதேவியும் தானுமாய் வாழும் இனம் மூன்றாவது இனம். குயில் பாட்டில் இளைஞனாகச் சித்திரிக்கப்பட்டுள்ள குறியீடு. 'மாட்டுக் கூட்டத்தாலும்' 'குரங்குக் கூட்டத்தாலும்' தன் வடிவம் இழந்து, மேனி வண்ணம் இழந்து, கருமையாகி, இருக்கும் இடமே புலப்படாது, தன்னுடைய விரகக் கூவலால் (mating call) மட்டுமே தன் இருப்பை அறிவித்துக் கொண்டிருக்கும் கவிதாதேவி, இப்படிப்பட்ட உண்மைக் கவிஞர்களிடம் வசமாகிறாள். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்' என்று பாரதி குறிப்பிடுவதும் இதையே. (இங்கே ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையொளி என்பதற்கு 'சத்தியத்தின் மீது--உண்மையின் மீது--ஏற்படும் நாட்டத்தால் உள்ளத்தில் ஏற்படும் ஒளி என்று மட்டும்தான் பொருள் காண முடியும். ஒளியில் உண்மையொளி, பொய்யொளி என்று எதுவும் இல்லையல்லவா!)

கவிதை என்னும் உலகில் இந்த மூன்று திருக்கூட்டங்களும் இயங்கியபடியேதான் இருக்கும்--நாடு, மொழி, இன, பூகோள பாகுபாடுகள் அனைத்தையும் தாண்டி, காலம் என்ற எல்லையையும் கடந்து, முன்னர், தற்போது, பின்னர் என்று முக்காலங்களிலும் இந்த மூன்று வகைப்பாடும் இருந்தபடியேதான் இருக்கும். மூன்று வகைப்பாடுகளைச் சேர்ந்தோரும் கவிதாதேவியின் மீது பூண்டிருக்கும் காதல் உண்மையே எனினும், கவிதாதேவி முதலிரு வகையினரைக் காதலிக்க நேர்வது 'காதலினால் அன்று. கருணையினால்'. அவளே விரும்பி, தன்னைத் தானே ஒப்படைப்பதோ, கவிதையே வாழ்வின் மூர்ச்சனையாகவும், முழு அர்ப்பணிப்பாகவும் தன் படைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனான, 'உள்ளத்தில் உண்மையொளி உண்டான' அந்தக் கவிஞனிடம் மட்டுமே. இது, கருணையினால் அன்று. காதலினால்.

இந்த மூன்றாவது கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் என்பதை உள்ளத்தில் பரிபூரணமாக உணர்ந்துகொண்ட பாரதி, அதை வெளிப்படையாக அறிவிக்க நாணி, 'நான் ஒருவன் மட்டுமல்லன். எனக்கு முன்னரும் இத்தகையோர் இருந்தனர்; இப்போதும் இருக்கின்றனர்; இனியும் வருவர்' என்று இந்த வகைப்பாட்டில் அடங்கும் அத்தனைபேரையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் குறியீடாகவே அந்த இளைஞன் பாத்திரத்தைக் குறியீடாக உருவாக்கியிருக்கிறான்.

என்ன? குயில் பாட்டின் மர்ம முடிச்சு அவிழ்ந்ததா? வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கச் சொன்னவன், உண்மையில் சொன்ன நினைத்தது என்னவோ 'நாதாந்தமாக நாடிப்பொருள் நவில' என்பதை உணர்ந்தால், குயில் பாட்டுக்குள் மர்ம முடிச்சென்று ஒன்று இல்லவே இல்லை என்பதைத் தெளியலாம்.

பேராசிரியர் தி. வேணுகோபாலனைப் பற்றிய நினைவலைகள் குயில் பாட்டோடு தொடங்கின. கூவல் அடக்கிய குயில் என்று மேம்போக்காக அவருடைய குயில் பாட்டு அணுகுமுறை குறிப்பிடப்பட்டது. இரண்டேகால் ஆண்டுகளாக இந்த நினைவலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது இருபத்தொன்பதாவது தவணை. இவற்றில் பன்னிரண்டு தவணைகள் குயில் பாட்டுக்கு மட்டும் செலழிந்திருக்கின்றன. சொல்வதற்கு என்னிடம் இன்னும் நிறையச் செய்திகள் உள்ளன. பேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடர் பூர்த்தியாகும்போது பூர்த்தியாகட்டும் என்று விட்டுவைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. இந்தத் தொடர் முடிந்தாலும் என் சிந்தனைப் போக்கிலும், அணுகுமுறையிலும், சொல்லும் விதத்திலும் அவர் என்றென்றும் என்மூலமாக வெளிப்பட்டுக் கொண்டே இருப்பார். நான் எதை எழுதினாலும் அவர் என்னகத்தே ஆழமாகப் பதித்திருக்கிற தாக்கம் இயங்கிக் கொண்டே இருக்கும். நினைவலைகளோடு மீண்டும் சந்திப்போம்.

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline