|
|
|
|
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே கவனத்தில்
இருத்தி, அது உயிர்த் தொடர்பின், உள்ள உந்துதலின், உணர்ச்சியின் வெளிப்பாடு; அது யாப்பின் தாளச் சட்டகத்துகுள் அமைந்து நிற்பது ஒரு உடன் நிகழ்வே என்பதை மறந்த அல்லது அறியாத 'பெரும்புலவப் பெருமக்களின்' குறியீடு என்பதைப்
பார்த்தோம். பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் கூட இவர்களின் இனம் இருக்கத்தான் செய்தது. உரைநடையில் எளிமையைக் கையாளும் இப்பெரு மக்கள், கவிதை என்று வந்துவிட்டால், ஒருவருக்கும் புரியக்கூடாது
என்று கங்கணம் கட்டிக்கொண்டது போன்ற முரட்டு நடையைக் கையாள்வார்கள். எடுத்துக் காட்டாக, மறைமலையடிகளுடைய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவையும் இந்த வகைக்குள் அடங்கத்தான் செய்கிறது. இதை யாரும் மறுக்க
முடியாது. இப்போது குரங்கு இந்தக் குறியிட்டுச் சங்கிலியில் எங்கே இடம் பெறுகிறது என்பதைப் பார்க்கலாம்.
முன்பே சொன்னோம். சின்னக் குயிலிக்கு மாடன், மாமன்மகன். முறைப்பிள்ளை. யாப்பிலக்கணம் கற்ற ஒரே தகுதியாலேயே தனக்குக் கவிதை இயற்றும் முழுத் தகுதியும் உண்டவே உண்டாக்கும் என்று அடம்பிடிக்கும் (உயிர்ப்பற்ற யாப்பர்களை
மட்டுமே சொல்கிறேன்) மரபுச் செக்கு மாடுகள். குரங்கனுக்கும் சின்னக் குயிலிக்கும் சொந்தம் எதுவுமில்லை. குரங்கன் வெளியூர் மாப்பிள்ளை. சின்னக் குயிலியின் சம்மதத்தைக் கேட்காமல், அவளுடைய அப்பனுடன், தன் அப்பனோடு வந்து,
அவளே அறியாமல் அவளை நிச்சயம் செய்துகொண்டுவிட்ட ஒரே காரணத்தாலேயே அவளிடத்தில் தனக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு என்ற மதர்ப்பு நிரம்பியவர் இவர். இந்த நாளில் மட்டுமல்லாமல், பண்டை நாளிலும் இந்த இனத்தவர்,
தமிழ்க் கவிஞர் திருக்கூட்டத்தில் இருக்கவே செய்திருக்கின்றனர். மண்ணின் இயல்புக்குச் சற்றும் பொருந்தாதனவற்றைப் படைப்பதுதான் படைப்பு என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள். 'மேற்கே ரொமாண்டிசிசம், நாச்சுரலிசம், ரியலிசம்,
அப்பால் இம்ப்ரெஷனிசம்; என் மனைவிக்குத் தக்காளி ரசம்' என்ற சுந்தர ராமசாமியின் கவிதைகூட இந்த வகையைச் சேர்ந்ததுதான். இவர்கள் உள்நாட்டின் தன்மைகளோடு ஒட்ட மாட்டார்கள். இவர்களுக்கு இந்த மண்ணின் அடிப்படைக்
கூறுகளேகூட எள்ளி நகையாடத் தக்க பொருளாகத்தான் இருக்கும். 'தொல்காப்பியமா? தொடங்கிட்டியா' என்ற நையாண்டியை இந்த வகையினரிடம் அடிக்கடி கேட்கலாம்
தொல்காப்பியத்தையும், நன்னூலையும் கட்டிக் கொண்டு அழுதால் தமிழ் வளருமா? வால்ட் விட்மேன் தெரியுமா உனக்கு? டிஎஸ் எலியட்? எஸ்ரா பவுண்ட்? அதையெல்லாம் தாண்டிப் பின்நவீனத்துவம்? எக்ஸிஸ்டென்ஷியலிஸம்? இவர்கள்
கையாளும் மொழியோ ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதப்பட்டதாக இருக்கும். சாதாரண உரைநடையை, எழுவாய் பயனிலையை இடம் மாற்றிப் போட்டாலே கவிதை என்று எண்ணும் இனமும் இந்த நாளில் உலாவரத் தொடங்கிவிட்டது.
'நடந்து கொண்டிருந்தேன் நான்; காய்ந்து கொண்டிருந்தது நிலா; நீலத்தை வெற்றிருட்டால் மூடியது வானம்; வெளிச்சம். இருந்தும் இருட்டு. என் உள்ளம்.' என்று எழுதும் ரகத்தைப் பார்த்திருப்பீர்கள். இந்த வாக்கிய அமைப்பை, 'நான்
நடந்துகொண்டிருந்தேன்; நிலா காய்ந்து கொண்டிருந்தது' என்று மாற்றிப் போட்டால் உரைநடை; 'நடந்துகொண்டிருந்தேன் நான்' என்று எழுவாயை வாக்கியத்தின் இறுதியில் வைத்தால் கவிதை!
என்ன காரணம்? மேலைநாடுகளில், பிறநாட்டு இலக்கியங்களில் காணப்படும் போக்குக்கள் எல்லாவற்றையும் தமிழில் பிரதிபலித்துவிட்டால் போதும். தமிழ் செழித்தோங்கும் என்ற 'கண்டு பாவனை'தான் காரணம். கண்டுபாவனை என்றால்
என்னவென்பீர்கள். சுருக்கமாகச் சொல்கிறேன். ஓர் அரசன் இருந்தான். அமைச்சனோடு உலாப் போகும்போது ஆலயங்களில் பெருந்திரளான மக்கள் அலைமோதுவதைப் பார்த்து "நாட்டில் பக்தி எப்படிப் பெருகியிருக்கிறது பார்த்தாயா?" என்று
பெருமிதமாகக் கேட்டான். அமைச்சன், "அரசே! அது அப்படியொன்றுமில்லை. எல்லாம் கண்டுபாவனை" என்று சுருக்கமாக விடையிறுத்தான். "கண்டுபாவனை என்றால் என்ன?" என்று கேட்டான் அரசன். அமைச்சன் பதில்
சொல்லவில்லை. அவர்கள் நடந்தபடி இருந்தார்கள். வழியில் ஒரு கழுதை செத்துக் கிடந்தது. அமைச்சன் அதை நோக்கி நடந்தான்; மூன்றுமுறை அதைச் சுற்றி வலம் வந்தான்; நெடுஞ்சாண் கிடையாக அந்தக் கழுதைப் பிணத்தை விழுந்து
நமஸ்கரித்தான். பிறகு அதன் உடலிலிருந்து இரண்டு முடியைப் பிய்த்து, காதுக்குப் பின்னால் செருகிக் கொண்டான்.
அமைச்சர் எவ்வளவு படித்தவர், எவ்வளவு அறிவு நிறைந்தவர். அவர் செய்வதில் ஏதோ பொருள் இருக்கத்தான் வேண்டும் என்று தோன்றியது மன்னனுக்கு. அவனும் செத்த கழுதையை மூன்று முறை சுற்றி வலம் வந்தான்; விழுந்து
வணங்கினான். நினைவாக இரண்டு முடியைப் பிடுங்கிக் காதுக்குப் பின்னால் செருகிக் கொண்டான். மக்கள் பார்த்தார்கள். பெருங்கூட்டமாகத் திரண்டிருந்தார்கள். மன்னரும் அமைச்சருமல்லவா ஊர்வலம் போகிறார்கள்! அவர்களுக்கும்
மன்னனுக்குத் தோன்றியது போலவே தோன்றியது. பின்னர், அமைச்சர் செய்திருக்கிறார்; மன்னரும் அதையே செய்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் அறிவில்லையா என்ன? இவர்கள் செய்வதில் நிச்சயம் ஏதோ பொருளிருக்கத்தான் செய்யும்'
என்ற நினைத்தபடி ஒவ்வொருவராக செத்த கழுதையைச் சுற்றி வலம் வந்து விழுந்து வணங்கத் தொடங்கினார்கள். அரை மணிநேரத்தில், தொடர்ந்து பிடுங்கக் கழுதையின் உடலில்தான் முடி இல்லாமல் போய்விட்டது.! |
|
பிறகு அரசனும் அமைச்சனும் தனியாக இருந்தபோது, அமைச்சன் கேட்டான்: "செத்த கழுதையை வலம் வந்து தரையில் விழுந்து வணங்கினீர்கள்; பிறகு, அதன் முடியில் இரண்டைப் பிடுங்கிக் காதுக்குப் பின்னால் செருகிக் கொண்டீர்களே, ஏன் அப்படிச் செய்தீர்கள்?" அரசனுக்கு விடை தெரியவில்லை. "எனக்குத் தெரியாது. நீ செய்தாய். நீ செய்வதில் நிச்சயம் பொருளிருக்கும் என்று நம்பித்தான் நானும் செய்தேன்" என்றான் அரசன். பிறகு அமைச்சன் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வரவழைத்து இதே கேள்வியைக் கேட்டான். எல்லாரும் அதே மாதிரி பதிலைச் சொன்னார்கள். மந்திரி புன்னகைத்தார். அரசரிடம் சொன்னார். ஒருத்தருக்கும் பொருள் தெரியாது. ஆனாலும் செய்தீர்கள். ஏன், எதற்கு என்று கேட்கவில்லை. பெரியவர்கள் என்று 'கருதப்படுபவர்கள்' எதைச் செய்தாலும் அதைப் பார்த்து, அதற்குப் பொருளிருக்கிறதோ இல்லையோ, அப்படியே தாமும் செய்வதுதான் கண்டுபாவனை' என்று விளக்கினான். அரசனுக்குப் புரிந்தது. Mob mentality என்று சொல்வார்கள். 'அந்த நாட்டில் மாடர்னிஸம்; போஸ்ட் மாடர்னிஸம்; அவர்கள் வளர்ந்து விட்டார்கள். நாம் மரபைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறோம்' என்பது போன்ற மேற்போக்கான வாதங்களை நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
செய்பவர்களும், அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக வளர்ந்துள்ள அந்தந்த இஸங்களின் தன்மையை கிரகித்துக்கொண்டு அதை இந்த மண்ணின் தன்மைக்கேற்ப மாற்றித் தரக்கூட முயல மாட்டார்கள். ஃபுல்ஸ்டாப் இல்லாம ஏழு பக்கத்துக்கு ஒரு வாக்கியம் எழுதினேன் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களுக்கும் 'மத்தள பந்தம், ரத பந்தம் செய்தேன்' என்று பெருமைப்பட்டுக் கொண்டவர்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. இப்போது புதுக்கவிதைகளிலும் வார்த்தைகளை அடுக்கி, வரிகளின் நீள வித்தியாசங்களால் தேர், நட்சத்திரம், பூ என்றெல்லாம் வடிவங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கவிதையின் மூல வேரான அந்த உயிர் ரசம் எங்கே இருக்கிறது? யாருக்கும் தெரியாது. கண்டு பாவனை. கண்டு பாவனை. கண்டு பாவனையே!
பாரதி, குரங்கை வர்ணிக்கும் அத்தனை அடிகளும் இங்கே கச்சிதமாகப் பொருந்தும். நீளம் கருதி, இரண்டு மூன்று அடிகளை மட்டும் சொல்கிறேன்:
ஆனவரையு மவர் முயன்று பார்த்தாலும் பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும் மீசையையுந் தாடியையும் விந்தைசெய்தே வானரர்தம் ஆசை முகத்தினைப்போல் ஆக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகி லுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்ததாலும் கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும் வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே வானரர் போலாவாரோ? வாலுக்குப் போவதெங்கே?
மாடு, பொறுமையாகவும், நீண்டதாகவும் செய்யும் திறன் கொண்டது; குரங்கோ, இந்தக் கிளையில் ஒரு கணம், அடுத்த கிளையில் மறுகணம்; அதற்கடுத்த கிளையில் வேறு கணம்; விட்டால், காட்டையே புறக்கணித்து ஏதேனும் ஓர் உச்சாணிக் கோபுரத்தில் சில நிமிடங்கள். ஓரிடத்திலும் பொருந்தி அமர அதனால் இயலாது. பத்து வரிகளுக்கு மேல் கவிதை என்று எதையும் இவர்களால் செய்ய முடியாது. செய்வதிலும் முழுமையாக ஏதும் இருக்காது. ஒன்று கிண்டல்; கேலி; எகத்தாளம்; ஏமாற்றம்; தன்னிரக்கம்; அவலம்..... (அவலம் என்ற சொல் இல்லாமல் எந்தக் கவிதையும் முற்றுப் பெற்று நான் பார்த்ததில்லை!) இப்படிப்பட்ட நான்கைந்து வரி அவசர அடிகள். 'உலகத் தமிழ் மாநாடு. திறக்கப்பட்டன இருபத்தோரு லெட்ரின்கள்' என்றொரு கவிதை. (நான் சொல்வன 70களில் வந்தவை.) Bird's Eye View என்று கவிதைத் தலைப்பு. அதாவது பறவைகளின் பார்வையில் புதிதாக வைக்கப்பட்ட இருபத்தோரு சிலைகளும் லெட்ரின்கள் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சொல்வதில் சபை நாகரிகத்துக்குப் பொருந்தி வரும் என்பதால் இதை மட்டுமே சொல்ல முடிந்தது. 'நிரோத் உபயோகி' போன்ற அன்றைய கவிதைகள், இன்றைக்கு அச்சிட முடியாதனவற்றை எழுதிக் குவித்துப் பெருமைப் பட்டுக்கொள்ளும் கவிகுல திலகங்களில் வந்து நிற்கின்றன. நான்கு வரி, மிஞ்சினால் பத்துவரி. அவ்வளவுதான் எழுத முடியும். ஒரு நீண்ட கவிதையையோ, காவியத்தையோ இந்த வடிவத்தில் படைத்துவிட முடியாது. நம்முடைய நெட்டைக் குரங்கரைப் போல. சித்திர கவிதைகளும் இதற்கு விதி விலக்கில்லை. அங்கேயும், ஒரு சித்திரக் கவிதை, இரண்டு சி்த்திரக் கவிதை என்று அவ்வளவுதான் செய்ய முடியுமே தவிர, தொடர்ந்து ஒரு பத்துப் பாடல்கள் கொண்ட பதிகத்தைக்கூட செய்ய முடியாது.
உணர்ச்சி என்பதன் பொருளையே உணராமல், மொழி என்பது, காதலியைப் போல் இதம் பதம் அறிந்து பயன்படுத்தாமல், 'எனக்கு நிச்சயிக்கப்பட்டவள்தானே! என் இஷ்டப்படியெல்லாம் ஆடவேண்டியவள்தானே' என்ற மனோபாவத்துக்குச் சற்றும் இளைக்காத 'என்னய்யா பெரிய தமிழ்? நம்ம பாஷதான? நமக்குத் தெரியாதா? புதுசா எலக்கணம் படிக்கணுமா? நாம எழுதறதுதான் கவித. நாம போறதுதான் வழி. மொழி நாம இழுத்த இழுப்புக்கு வரணும்; வந்தாகணும். It is just there for the sake of communication என்ற மனோபாவம் உடையவர்களிடம், காதலையும் கருணையையும் அழகின் ரசனையையும் நுட்பமான உணர்வுகளையுமா பார்க்க முடியும்? யார் அதிகமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திக் கவிதை இயற்றுவதில் வல்லவர்கள் என்பதில்தான் போட்டி நடக்கிறது. இதிலும், பெண் கவிஞர்கள் வீரத்துடன் புறப்பட்டுவிட்டார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் நியாயம் அவர்களுக்கு. ஆனால், உண்மைக் கவிதை எது என்று இனம் கண்டு கொண்டவர்களுக்கு இவை திகட்டத்தானே செய்கின்றன?
நாகரிகம் கருதி, பாரதி படைத்த குரங்குப் பாத்திரத்தைப் பொருத்திக் காட்டுவதை இந்த அளவில் நிறுத்திக் கொள்கிறேன். அடுத்ததாகச் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. குயிலைக் கவிதை என்று அடையாளம் கண்டோம். How did we arrive at that conclusion? நாமாக, அடிப்படையின்றி உருவாக்கிக் கொண்ட ஊகம் அல்லது assumption தானா? அல்லது, பாரதி இந்தக் குயில் உருவகத்தையும், கவிதைக்கும் தனக்கும் உள்ள உறவைக் காதலனுக்கும் காதலிக்கும் உள்ள உயிர்த் தொடர்பாக அவனுடைய எழுத்தில்--கவிதையிலோ, கட்டுரையிலோ--பயன்படுத்தியிருக்கிறானா? அப்படிச் செய்திருந்தால் மட்டுமே நாம் அடைந்திருக்கும் முடிவு அகச்சான்று (Internal evidence) கொண்டது என்ற முடிவுக்கு வரமுடியும். அதற்கு வருவோம்.
(ஆசிரியருடைய சுபமங்களா சொற்பொழிவுக்கான சுட்டியைச் சென்ற முறை கொடுத்திருந்தோம். தளத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் அது வேலை செய்யவில்லை. தற்போது சரிசெய்யப்பட்ட சுட்டி இது: www.tamilheritage.org இங்குள்ள கடைசி இரு பகுதிகளில் இந்த குயில்-மாடு-குரங்கு விளக்கம் வருகிறது.)
தொடரும்...
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|