Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
ஆனந்தக் கனவு கலைகையில்...
- ஹரி கிருஷ்ணன்|பிப்ரவரி 2009|
Share:
'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம். இந்த வாதம் நிகழும் சமயத்திலும் தசரதன் இன்னமும் நாம் சென்றமுறை பார்த்ததைப் போல், மயக்கம் தெளியாத நிலையிலேயே இருக்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ‘அப்பா ராமா, நீ பாட்டுக்குக் காட்டுக்குப் போகிறேன் என்று நிற்கிறாயே! நீ இவ்வாறு செய்வதால் உன் தந்தையாருடைய நிலைமை என்ன ஆகும் என்பது தெரியுமா உனக்கு? அவரால் உன் பிரிவைத் தாங்க முடியுமா? ‘மற்றடந் தானையான் வாழ்விலான்' பெரிய வலிமையை உடைய சேனையைத் தன்னிடத்தில் வைத்துள்ள தசரதன் (அவ்வளவு பெரிய வலியவனாக இருந்த போதிலும், சேனா பலத்தை உடையவனாக இருந்தபோதிலும்) நீ அருகே இல்லை, நீ பிரிந்து சென்றாய் என்று கேட்டால், கேட்ட மாத்திரத்திலேயே உயிர்துறப்பான் அல்லனோ! ராமா, இதை நீ யோசித்தாயா' என்று வசிஷ்டர் சொன்னதும், ராமன் அவருக்குச் சொல்லத் தொடங்கிய முதல் விடை என்னவோ, ‘இது மன்னவனுடைய பணி' என்பதுதான். ‘அன்னவன் பணிதலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன்'. முனிவரே! அரசன் என்னுடைய பிரிவைத் தாங்காமல் உயிரை நீப்பான் என்று சொல்கிறீர்களே, ‘காட்டுக்குப் போ' என்று பணித்ததே மன்னவனுடைய பணிதானே, அதை ஏற்று, அதன்படி நடப்பதல்லவா என் முதல் கடமை!

‘அப்பா வரம் கொடுத்தார். அம்மா என்னைப் பணித்தார்'. இது வசிஷ்டனுடன் தனியிடத்திலே பேசிய வார்த்தை. இந்த வார்த்தைகளை இருவரும் பேசிக்கொள்ளும்போது, லக்ஷ்மணன் அருகில் இருந்தான் என்பதைத் தவிர, இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட செய்தி இன்னொருவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
‘அவன் இடரை நீக்குதல் நின்னது கடன், இது நெறியும் என்றனன்' என் பிரிவு அவனுக்கு ‘உயிர் பிரியுமளவுக்குத் துன்பத்தை ஏற்படுத்துமென்றால், அவனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி அவனுடைய துன்பத்தை மாற்றுவது உங்களுடைய கடமை. அந்தப் பணி உங்களுக்கு உரியது.' ஆக, ‘மன்னவன் பணித்தபடி செய்வது என்னுடைய வேலை; அப்படி அந்தக் கடமையைத் தலையேற்று நான் ஆற்றுகையில் அதனால் தசரதனுக்குத் துன்பம் ஏற்படுமானால், அதைப் போக்கவேண்டியது உங்களுடைய வேலை. முனிவரே, இதுதான் நெறி. இப்படித்தான் நடக்கவேண்டும்' என்றுதான் ராமனுடைய முதல் விடை வருகிறது. அப்போதுதான் வசிஷ்டன் குறுக்கிட்டு, ‘ராமா, இது மன்னவன் பணி என்று சொல்கிறாயே! உன்னிடத்தில் அப்படிச் சொன்னது மன்னவனா? இது உன் தாயார் கேட்ட வரம். ‘தெவ்வர் அம்பு அனையசொல் தீட்டினாள் தனக்கு, அவ்வரம் பொருத வேலரசன் ஆய்கிலாது இவ்வரம் தருவன் என்றது உண்டு'. பகைவர்களுடைய அம்பைப் போல வந்து தைக்கக்கூடிய சொற்களை கைகேயி வீசவும், யோசிக்க முடியாத நிலையில் மன்னன் அவள் கேட்ட வரங்களைத் தருவதாகச் சொன்னது உண்மைதான்'.

வசிஷ்டருடைய சொற்களை மறுபடியும் பாருங்கள். ‘தசரதன் வரம் தந்துவிட்டான்' என்ற வாதத்தை அவர் ஏற்கவில்லை. மாறாக, ‘உன் தாயார், தசரதனுடைய நெஞ்சில் தைக்கும்படியான வெம்மையான சொற்களைப் பாய்ச்சினாள். அரசனும் ‘ஆய்கிலாது'--யோசிக்காமல், யோசிக்கும் திறனற்ற, மனமும் அறிவும் பலத்தை இழந்த சமயத்தில்--‘இந்த வரங்களைத் தருகிறேன்' என்று சொன்னான் என்பது உண்மை தான். வசிஷ்டர் சுற்றி வளைத்துச் சொல்ல வருவது என்னவென்றால், ‘வரம் தருகிறேன் என்று சொன்னானே தவிர, தந்துவிடவில்லையே' என்ற தொனிப்பொருளை உள்ளடக்கிய ஒன்று. வசிஷ்டருடைய வார்த்தையைக் கேட்ட ராமன் (கவி அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும்) புன்னகைத்திருப்பான். அவனுடைய வார்த்தைகளிலேயே அந்தப் புன்முறுவல் தோன்றிவிடுகிறது. கேளுங்கள்:

ஏன்றனன் எந்தை இவ்வரங்கள்; ஏவினாள்
ஈன்றவள். யானது சென்னி ஏந்தினேன்.
சான்றென நின்றநீ தடுத்தியோ என்றான்,
தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்.

நல்லறத்தை பூமியில் நிலைநாட்டுவதற்காக வந்து உதித்தவனாகிய ராமன், வசிஷ்டரைப் பார்த்து, ‘வரங்களைத் தருகிறேன் (தருவதாகச் சொன்னார், தந்துவிடவில்லை என்றெல்லாம் என்னிடத்தில் வாதிப்பதால் எந்தப் பயனும் இல்லை) என்று சொன்னவனோ என் தந்தை. ‘காட்டுக்குப் போ' என்று ‘ஏவினாள்'--கட்டளை இட்டவளோ--என் தாய். தாயின் சொல்லைத் தலையில் ஏந்தினேன். ‘சான்று என நின்ற நீ தடுத்தியோ‘. முனிவரே! இவையெல்லாம் உமக்குத் தெரியாமல் நடந்துவிட்டனவா! எல்லாவற்றுக்கும் நீரல்லவா சாட்சி! எல்லாச் செயல்களுக்கும் சாட்சியாக நிற்கும் அக்னியையும் இறைவனையும் போன்ற நீர், நடந்த எல்லாவற்றையும் அறிந்தவராக இருந்திருந்தும், நான் என்னுடைய கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறீரே! முனிவரே, கடமையில் தவறக்கூடாது என்று எனக்கு போதித்தவரே நீங்கள் அல்லவா! இப்போது இப்படி ஒரு பேச்சுப் பேசலாமா' என்று வசிஷ்டருடைய வாதத்தை முறியடித்தான் ராமன். வசிஷ்டரால் விடை சொல்ல முடியவில்லை. ‘ஒன்று இயம்ப எண்ணிலன்' ஒரு வார்த்தையைக்கூட (ராமனுடைய கேள்விக்கு விடையாகச்) சொல்ல முடியாதவனாக நின்றான். ‘நெடுங்கணீர் நிலத்து நீர்த்து உக.' கண்களிலிருந்து வழியும் நீர் பூமியை நனைக்குமாறு வசிஷ்டன் நின்ற வண்ணமாகவே கிடந்தான். ராமன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் என்று கம்ப சித்திரம் விரிகிறது.

இப்போது, இந்தக் கட்டத்தை அலசினால் ஒன்று தெளிவாகிறது. ‘இது அரசனுடைய கட்டளை' என்ற அளவிலேயே கைகேயி சொன்ன வார்த்தைகளை வெளி உலகுக்குச் சித்திரிக்கவே ராமன் விரும்பினான். ஆனால் அவன் உள்ளம் உணர்ந்திருந்தது வேறு. ‘இது தசரதனுடைய பணி இல்லை. இவ்வாறு செய்யுமாறு என்னைப் பணித்திருப்பவள் தாயார்தான்' என்பதனை அவன் உணர்ந்தே இருந்தான் என்பதுதான் வசிஷ்டருக்கு அவன் அளிக்கும் விடையில் தொனிப்பொருளாக வெளிப்படுகிறது. ‘எந்தை இவ்வரங்கள் ஏன்றனன்; ஏவினாள் ஈன்றவள்'. ‘அப்பா வரம் கொடுத்தார். அம்மா என்னைப் பணித்தார்'. இது வசிஷ்டனுடன் தனியிடத்திலே பேசிய வார்த்தை. இந்த வார்த்தைகளை இருவரும் பேசிக்கொள்ளும்போது, லக்ஷ்மணன் அருகில் இருந்தான் என்பதைத் தவிர, இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட செய்தி இன்னொருவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால், கம்பராமாயணம் நெடுகிலும் எத்தனை இடங்களில், எத்தனைப் பாத்திரங்களின் வாய்மொழியாக இந்த ‘தாய் உரை' என்பது வந்திருக்கிறது என்பதைக் கணக்கில் அடக்க முடியாது. ‘தந்தை சொன்ன சொல்லைத் தலைமேற்கொண்டு, தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கின்படி, ராமன், தசரதனுடைய ஆணையால் காட்டுக்கு வந்தான்' என்ற கருத்தை கம்பராமாயணத்தில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. தொட்ட இடத்திலெல்லாம் ‘இது கைகேயியின் ஆணை', ‘வனவாசம் மேற்கொள்ளச் சொன்னது கைகேயியின் பணி' என்றுதான் பேசப்படுகிறது. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைச் சொல்லவேண்டுமானால்,

ராமனை யாரென்று எண்ணினாய்? இவ்வளவு பெரிய நாடு தனக்கு அரசுரிமையாகக் கிடைத்த போதிலும் தன்னுடைய மாற்றாந்தாய் ஏவியதும் அதையெல்லாம் தம்பிக்குக்கொடுத்துவிட்டு வந்தவனில்லையா அவன்?
‘தாய் உரைகொண்டு தாதை உதவிய தாரணி'--பரதனிடத்திலே பேசும் குகன் சொல்வது. (தாயுடைய உரையின் அடிப்படையில் தந்தை உனக்குக் கொடுத்த நாடு) ‘தயரதன் தொல் குலத் தனையன் தம்பி யோடு உயர் குலத்து அன்னைசொல் உச்சி ஏந்தினான்' - ராவண சந்நியாசிக்கு ராமனை அறிமுகப்படுத்தும் விதமாக சீதை சொல்வது. (சம இடத்தில் வால்மீகியில் ‘கைகேயா ப்ரிய காமர்த்தம் தம் ராமம் ந அபிஷே சயாத்' -- கைகேயினிடத்தில் உள்ள அன்பினால் என் மாமனார், ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கவில்லை என்று சொல்வது (வா.இரா., ஆரண்ய காண்டம், ஸர்க்கம் 47, ஸ்லோகம் 13) குறிப்பிடுகிறாள் என்பது கவனிக்கத் தக்கது.) ‘அளவில் கற்புடைய சிற்றவை பணித்தருளலால்' தன்னுடைய சிற்றன்னை பணித்ததை ஏற்று, நாட்டைத் துறந்து காட்டுக்கு வந்தவன் (ராமனை அறிமுகப்படுத்தும் விதமாக சுக்ரீவனிடத்தில் அனுமன் சொல்வது) ‘ஏற்ற பேருல கெலாம் எய்தி ஈன்றவள் மாற்றவள் ஏவ,' ‘ராமனை யாரென்று எண்ணினாய்? இவ்வளவு பெரிய நாடு தனக்கு அரசுரிமையாகக் கிடைத்த போதிலும் தன்னுடைய மாற்றாந்தாய் ஏவியதும் அதையெல்லாம் தம்பிக்குக்கொடுத்துவிட்டு வந்தவனில்லையா அவன்?' தாரையிடத்திலே வாலி சொல்வது. ‘ஊனவில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி, கூனி சூழ்ச்சியால் அரசிழந்து' ‘ராமன் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டான்? உடைந்து போன ஒரு வில்லை உடைத்தான்; செல்லரித்துப் போன மரத்துக்குள் அம்பு விட்டான்; போயும்போயும் ஒரு கூனி செய்த சூழ்ச்சியின் காரணத்தால் அரசை இழந்தான்... அவனெல்லாம் ஒரு பொருட்டா?' - விபீஷணனிடத்தில் ராவணன் கேட்பது.

இப்படி ஏராளமான இடங்கள் இருக்கின்றன. ஏதோ போகிற போக்கில், ‘தசரதனுடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு ராமன் காட்டுக்கு வந்தான்' என்று சொல்பவர்கள் சூர்ப்பணகையும் மண்டோதரியும் என இரண்டே இரண்டு பேர்கள்தாம். விரிவஞ்சி விவரங்களைத் தவிர்க்கிறேன்.

இப்போது ராமன் நினைத்திருக்கக் கூடியது பிடிபடுகிறதல்லவா? இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியது இருக்கிறது. பார்ப்போம்...

ஹரிகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline