Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
இலக்கியம்
வாழி ஆதன்! வாழி அவினி!
- பெரியண்ணன் சந்திரசேகரன்|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlargeசித்திரைத் திங்களோடு தொடங்குகிறது புத்தாண்டு. சித்திரை மாதத்தில் சித்திரை மீனோடு மதியம் (முழுநிலா) சேரும் நாளும் சித்திராபூரணை என்று கொண்டாடப் படுகிறது. சித்திரா பூரணையைப் பெரு முறையில் தமிழர் கொண்டாடியதைச் சிலப்பதிகாரத்திலே பூம்புகார் நகரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் காண் கிறோம். "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கென" (சிலப்பதிகாரம்:5:64-65) என்கிறது; "சித்திரை மாதத்துச் சித்திரை மீன் மதியத்தைச் சேர்ந்தது என்று வெற்றிவேல் மன்னனுக்கு நேர்ந்த இடுக்கணை ஒழிப்பதற்கென" என்று ஊரார் விழாவெடுத்தைச் சொல்கிறது சிலம்பு. அங்கே ஊரின் முதுகுடிப் பெண்டிர் "பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென" (சிலம்பு: 5: 72-73) என்று பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் சுரக்க வாழ்த்துவதையும் காண்கிறோம்.

மேலும் சிறப்பாக வாழ்த்த ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்திலே ஓரம்போகி என்னும் புலவர் பாடியுள்ள வாழ்த்துகளைக் கேட்போம்; ஐங்குறுநூற்றின் மருதத் திணையிலே அவர் பாடியுள்ள முதற்பத்துப் பாடல்களின் ஒவ்வொரு பாடலின் முதலிரண்டு அடிகளில் சொல்லியுள்ள வாழ்த்துகள் இந்த மங்கலப் பொழுதிலே மிகவும் பொருந்தும். தலைவி இவ்வாறு வாழ்த்துவதாகத் தோழி சொல்வன அவை.

ஆதன் அவினி என்னும் சேரமன்னனை முதலில் வாழ்த்திப் பிறகு பொதுவாழ்த்தாக வாழ்த்துமாறு உள்ளன. அவற்றை இறைவன் என்னும் தலைவனுக்குப் பொருந்துவ தாகவோ குடும்பத்தலைவர்க்குப் பொருந்துவ தாகவோ கொள்ளலாம்.

"வாழி ஆதன்! வாழி அவினி!
நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!"
(ஐங்குறுநூறு:மருதம்:1:1-2)
[பொலி = மிகு; சிற = பெருகு, கொழி]

வாழி ஆதன்! வாழி அவினி! விருந்தோம் பலுக்கு நெல் மிகவும் பெருகுக! விருந் தோம்பலுக்குப் பொன் பெரிதும் கொழிக்க!

சிறக்க என்ற சொல் இங்கே அந்தச் சொல்லின் அடிப்படைப் பொருளிலே வழங்குவதைக் கவனிக்கவும்.

சிறத்தல் என்றால் மிகுதல் என்பதுதான் பொருள். இக்காலத்திலே நாம் அதை மறந்து தகுதி முதலியவற்றால் உயர்தல் என்பதை மட்டுமே அதன்பொருளாகக் கொண்டு அடிப்படைப் பொருளை மறந்து திகைப் பதைக் காண்கிறோம். எனவே இங்கே பொன் சிறக்க என்றால் பொன் பெருகுக என்னும் எளிய கருத்தே பொருளாகும். அதுபோல் பல என்னும் சொல்லும் தன் அடிப்படைப் பொருளிலே வரும்பாடல்களில் வழங்குவதைக் காண்போம்.

ஆதன் என்றும் அவினி என்றும் இந்த இரண்டு சிறிய அழகிய பெயர்கள் இன்றும் நம் குழந்தைகளுக்குச் சூட்டப் பொருந்து வதைப் பெற்றோர் கருத்திற் கொள்க!
"வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே! அருக இரவலர்!"
(ஐங்குறுநூறு:மருதம்:2:1-2)
[அருகு = குறை]

வாழி ஆதன்! வாழி அவினி! வயல்கள் செழுமையாக விளைக! இல்லையென்று இரப்போர் தொகை குறைக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!"
(ஐங்குறுநூறு:மருதம்:3:1-2)

வாழி ஆதன்! வாழி அவினி! பால் மிகவும் பசுக்களில் ஊறுக! எருதுகள் மிகவும் பெருகுக!

இங்கே பல என்னும் சொல் பால் பல என்று வழங்குவதைக் கேட்டுத் திகைக் கலாம்; பல என்றால் ஒன்றிரண்டு என்று எண்ணக்கூடிய பொருள்களுக்குக் தானே, பால் எண்ணுவதன்றே என்று. அந்தத் திகைப்புக்காரணம் மேலே சிறக்க என்பதற் குச் சொல்லியதுபோல் அடிப்படைப் பொருளான மிகுதி என்பதை நாம் மறந்ததே.

"வாழி ஆதன்! வாழி அவினி!
பகைவர் புல்ஆர்க! பார்ப்பார் ஓதுக!
(ஐங்குறுநூறு:மருதம்:4:1-2)

வாழி ஆதன்! வாழி அவினி! பகைவர் புல்லைத் தின்க! உயர்ந்தோர் பழப்பெருஞ் சொற்கள் பொதிந்த நூல்களை மறவாமல் ஓதுக!

பகைவர் என்பதை நாட்டின் பகைவர் மட்டுமன்றி நன்னெறியில் செல்லும் குடும்பத்தின் பகைவர்க்கும் ஆகும்.
நம்முடைய பழைய நூல்களை அவற்றின் ஓதுதலை அழியாமல் காப்போமாக என்றும் நாமும் உருதி பூணவேண்டும்!.

"வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!
(ஐங்குறுநூறு:மருதம்:5:1 2)
[நந்து = வளர், செழி]

வாழி ஆதன்! வாழி அவினி! வேந்தன் பகை நீங்குக! அவனும் பல்லாண்டுகள் வாழ்நாளாகச் செழிக்க!
"வாழி ஆதன்! வாழி அவினி!
பசிஇல் லாகுக! பிணி சேண் நீங்குக!
(ஐங்குறுநூறு:மருதம்:6:1-2)
[பிணி = நோய்; சேண் = தொலைவு]

வாழி ஆதன்! வாழி அவினி! பசி என்பது இல்லாமல் ஆகுக! நோய்கள் தூரத்திலே ஓடுக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
(ஐங்குறுநூறு:மருதம்:7:1-2)
[நனி = மிக]

வாழி ஆதன்! வாழி அவினி! அறம் மிகவும் பெருகுக! அறம் அல்லாதது அழிக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
அரசுமுறை செய்க! களவுஇல் லாகுக!
(ஐங்குறுநூறு:மருதம்:8:1-2)
[முறை = நீதி]

வாழி ஆதன்! வாழி அவினி! அரசு நடுநிலை என்னும் நீதி ஆற்றுக! களவு இல்லாமல் ஆகுக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
நன்றுபெரிது சிறக்க! தீதுஇல் லாகுக!
(ஐங்குறுநூறு:மருதம்:9:1-2)

நல்லது பெரிதும் செழிக்க! தீயது இல்லாமல் ஆகுக!
"வாழி ஆதன்! வாழி அவினி!
மாரி வாய்க்க! வளம்நனி சிறக்க!
(ஐங்குறுநூறு:மருதம்:10:1-2)
[மாரி = மழை; வாய் = நிகழ்]

வாழி ஆதன்! வாழி அவினி! மழை தப்பாது நிகழ்க! வளம் மிகவும் பெருகுக!

என்று தலைவி விரும்பி வாழ்த்தியதாக ஓரம்போகி பாடுகிறான்.

என்ன இனிய மங்கலமான வாழ்த்து! இவை நாம் இந்தப் புத்தாண்டிலும் மட்டு மன்றி மற்ற பலசிறப்பு நிகழ்ச்சிகளிலும் வாழ்த்தப் பொருந்தும்! ஓரம்போகி என்னும் செந்நாப் புலவனின் செந்தமிழ்மொழியினாற் கிளந்த இந்த வாழ்த்துகள்

இந்தக் கட்டுரை வாசகர்க்கும் குடும்பத் தார்க்கும் உலகெல்லார்க்கும் வாய்க்க வாழ்த்துகள்!

பெரியண்ணன் சந்திரசேகரன்
Share: 




© Copyright 2020 Tamilonline