|
|
ஆதிமந்தியம் ஆட்டம் அத்தியும்
[சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். சென்றதவணையில் காவிரிக்கரையில் மணற்பாவையைக் காத்துக் கிடந்த பத்தினியைக் கண்டோம். இங்கே மூன்றாவதாகக் கரிகால் வளவன் மகள் ஆதிமந்தி தன் கணவன் ஆட்டனத்தியைக் காவிரியிடமிருந்து மீட்ட நிகழ்ச்சியைப் பார்ப்போம்.]
கண்ணகி அடுத்துப் பூம்புகார் நகரில் பிறந்த மூன்றாம் பத்தினியைப் பற்றிக் கூறுகிறாள். கண்ணகி சொல்லியுள்ள ஏழுபத்தினிகளில் ஒருவரையும் பெயரால் வஞ்சின மாலையில் சொல்லிக் காண்பதில்லை; இந்த மூன்றாம் பத்தினியின் தகப்பன் கரிகால் வளவன் என்று மட்டும் சொல்கிறாள் கண்ணகி. ஆனாலும் மற்ற சங்க இலக்கியங்களில் இந்த நிகழ்ச்சி வெகுவாகப் பாடப்படுவதால் அவற்றிலிருந்து அந்தப் பத்தினியின் பெயர் ஆதிமந்தி என்று தெரிகிறோம். முதலில் கண்ணகியின் சொற்கள்:
...உரைசான்ற மன்னன் கரிகால் வளவன்மகள், வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கல்நவில் தோளாயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு பொன்னம் கொடிபோலப் போதந்தாள் (சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை: 10-15)
[உரை = சொல், புகழ்; சான்ற = மிகுந்த; கோன் = அரசன்; புனல் = நீர்; நவில் = போல்; தோளாய் = தோளுடையவனே; தழீஇ = தழுவி; பொன்னங்கொடி = பொன்கொடி]
அதாவது "புகழ்மிகுந்த மன்னன் கரிகால்வளவன் மகள், வஞ்சியரசனைக் காவிரிநீர் கொண்டுசெல்லத் தானும் அந்நீரின்பின்னே சென்று 'கல்போலும் தோளை உடையவனே!' என்று அரற்றக் கடல்வந்து அவனை அவள்முன் நிறுத்திக் காட்ட அவனைத் தழுவிக்கொண்டு பொற்கொடிபோலச் சென்றாள்" என்கிறாள் கண்ணகி. அந்த நிகழ்ச்சியின் முழுவிவரத்தைக் காண்போம்.
அந்த வஞ்சியிளவரசன் பெயர் ஆட்டனத்தி (அத்தி என்ற பெயர் இன்றும் அத்தியப்பன் என்ற வடிவில் நம்மிடையே வழங்குவதைக் காணலாம்). வஞ்சி என்ற நகர் சேரநாட்டின் தலைநகர்களில் ஒன்று; அது கேரளத்தின் கடற்கரைப் பட்டினம் என்பார்கள்; சிலர் தமிழ்நாட்டின் கரூர் என்றும் கருதுவர். அத்தியைக் காதலித்து மணந்து கொண்டாள் ஆதிமந்தி. அந்த ஆதிமந்தியோ தமிழகம் கண்ட பெரும் பேரரசர்களுள் தலைசிறந்தவனாகிய கரிகால் வளவன் மகள். மந்தி சிறந்த கவிஞை. அவள் பாடிய சில கவிதைகள் சங்க இலக்கியத்தொகுப்பில் உள்ளன.
கழாரில் காவிரிப் புதுநீர் விழா:
அவ்வாறு அந்தச் சிறந்த காதலனும் காதலியும் மணம்புரிந்து வாழ்ந்து வரும் நாளில் காவிரியில் புதுநீர் வரவைக் கொண்டாடும் பொருட்டு விழா நடந்தது. அது நாம் இன்று ஆடிப்பெருக்கு என அழைப்பதாக இருக்கவேண்டும். அந்த விழாவைக் காவிரிக் கரையில் கழார் என்னும் ஊரில் கொண்டாடப் பேரரசன் கரிகாலன் தன் மகள் மந்தியோடும் மருமகன் அத்தியோடும் மற்ற தன் சுற்றத்தோடும் சென்றான் (அகநானூறு:376). அங்கே மந்தியும் அத்தியும் சுற்றத்தாரோடு நீரில் விளையாடித் திளைத்துக் கொண்டிருந்தனர்.
அத்தி வீரச் செயலோர் காலில் அணியும் கழல் என்னும் ஒலிக்கும் அணிகலன் அணிந்திருந்தான்; இடுப்பில் கரிய கச்சையைக் கட்டி வயிற்றில் பாண்டில் என்னும் அணிகலனும் மணிகள் ஒலிக்கும் கோவையும் அணிந்து வெள்ளத்தில் விரும்பிக் குளித்தான்:
புனைகழல் சேவடிப் புரளக் கரும்கச்சு யாத்த காண்புஇன் அவ்வயிற்று அரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப் புனல்நயந்து ஆடும் அத்தி (அகநானூறு: 376)
[யா = கட்டு; தெளிர்ப்ப = ஒலிக்க; நயந்து = விரும்பி; ஆடும் = நனையும்]
அப்பொழுது திடீரென்று அத்தியைக் காணவில்லை!
காவிரிப்பாவை ஒளித்தாளோ அத்தியை?:
பதறிப்போன மந்தி தேடினாள். மற்றவர்கள் அத்தியின் அழகைக் கண்டு அவனைத் தாழ்ந்த கருங்குழல்கொண்ட காவிரி ஒளித்துக் கொண்டு விட்டாள் என்றே சொல்லினர்!
ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத் தாழ்இரும் கதுப்பின் காவிரி வௌவலின் (அகநானூறு:222)
[நலன் = அழகு; உரைஇ = உராவி, பரவி; இரும் = இருண்ட; கதுப்பு = முடிக்கற்றை; வௌவு = பறி]
என்றும் புனல்நயந்து ஆடும் அத்தி அணிநயந்து காவிரிகொண்டு ஒளித்தாங்கு (அகநானூறு: 376)
[அணி = அழகு; ஒளித்தாங்கு = ஒளித்ததுபோல]
என்றும் அகநானூற்றில் பரணர் பாடுகிறார்.
என் அத்தியைக் கண்டீர்களோ?!
ஆதிமந்தி காவிரிபாயும் வழியெல்லாம் பின்சென்று அரற்றினாள். நாடுநாடாக ஊரூராகச் சென்று "என் ஆட்டனத்தியைக் கண்டீர்களோ! கடல் கொண்டுபோனதோ? இல்லை ஆறுதான் ஒளித்துக்கொண்டதோ? சொல்லுங்கள்" என்று வினாவிக் கொண்டே கண்ணீர் சொரியும் கண்ணோடு சென்றாள்.
ஆட்டன் அத்தியைக் காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல்கொண் டன்றெனப் புனல்ஒளித் தன்றெனக் கலுழ்ந்த கண்ணள் (அகநானூறு:236)
[கொண்டன்று = கொண்டது; ஒளித்தன்று = ஒளித்தது; கலுழ் = நீர்சொரி; கண்ணள் = கண்ணுடையவள்]
என்று அந்த உருக்கமான காட்சியைப் பரணர் பாடுகிறார்.
ஆதிமந்தி ஆட்டனத்தியைத் தொலைத்து இவ்வாறு அலைந்த நிகழ்ச்சி அன்றைய தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. அதன்பின் காதலனைத் தேடும் காதலியின் அளவற்ற சோகத்திற்கு எடுத்துக்காட்டாக மந்தியின் துயரமே பாடியுள்ளனர் புலவர்கள். அதனாலேயே மேற்சொன்ன பாடல்களில் அதைக் காட்டித் தலைவியோ அவள்சார்பில் தோழியோ பாடுவதாக அமைந்துள்ளது. வெள்ளிவீதியார் என்னும் பெண்பாற் புலவர் தம் காதலனைக் காணாமல் தேடியவர் என்று அவ்வையார் பாடலொன்று தெரிவிக்கின்றது; அவர்
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்த ஆதி மந்தி போலப் பேதுற்று வருந்துவன் கொல்லோ? (அகநானூறு:45) [கெடுத்த = தொலைத்த; சிறுமை = இல்லாமை; நோய் = துன்பம்; கூர்ந்த = மிகுந்த; பேதுற்று = மயங்கி]
"தன் காதலனைத் தொலைத்த இல்லாமையால் துன்பம் மிகுந்த ஆதிமந்திபோல மதிமயங்கி நானும் வருந்துவேனோ?" என்று தலைவி பாடுவதாகப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலும் மருதியும்
அவ்வாறு காண்போரும் கேட்போரும் உள்ளம் உருகுமாறு தேடிய ஆதிமந்தி கடைசியில் காவிரி கடலொடு கலக்கும் இடத்திற்கே சென்றுவிட்டாள்; அப்பொழுது அவளது கற்பின் பெருமையை அறிந்த கடல் அவனைக் கடற்கரைக்கு அருகிலுள்ள இடத்தில் கொண்டுவந்து நிறுத்திக் காட்டியது; பின்னர் அங்கே நீராடிக் கொண்டிருந்தவளும் மந்தியின் துயரத்தை அறிந்தவளுமான மருதி என்பவள் அவனை அழைத்து வந்து மந்தியிடம் ஒப்படைத்தாள். இதை
ஆதி மந்தி காதலன் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர் (அகநானூறு: 222)
[படுகடல் = ஒலிக்கும்கடல்; புக்க = புகுந்த; மாண்புகழ் = பெரும்புகழ்; பெறீஇயர் = பெற] என்ற பரணர் பாட்டால் அறிகிறோம். |
|
மருதி தெய்வமா? இல்லை கடலில் மூழ்கிய மனிதையா?
சிலர் மருதி என்பவள் கடலில் வாழும் தெய்வமென்பர்; மற்றும் சிலர் மருதி என்பவள் மேலே சொன்னதுபோல மனிதப் பெண்ணே என்றும் அவள் கடலில் புகுந்தாள் என்பது அவள் அத்தியைக் காக்க முயன்று தானே கடலில் மூழ்கியவள் என்பதையே குறிக்கும் என்றும் சொல்வார்கள் (“Pre-Pallavan Tamil Index”, N. Subrahmanian, University of Madras, 1966).
தொலைந்தவர் என்று உண்டோ?
இங்கே சிறப்பென்னவென்றால் ஆதிமந்திக்குத் தானும் அத்தியின்பின் ஆற்றில் விழுந்து சாவது பெரிய கடினமான செயல் இல்லை; ஆனால் அவளால் ஆட்டனத்தி தொலைந்துவிட்டதை ஏற்கமுடியாத அளவு அவன்மேல் ஈருடல் ஓருயிரான அன்பு இருந்தது. எனவே அவள் அத்தியைக் காண முடியுமென்றே நினைந்து விடாமுயற்சியாய் இருந்தாள். இந்த மனப்பாங்கை ஆதிமந்தியின் நிலையறிந்த வெள்ளிவீதியார் என்னும் பெண்பாற்புலவர் நிலந்தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; விலங்கிரு முந்நீர் காலின் செல்லார்; நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரின் கெடுநரும் உளரோநம் காத லோரே? (குறுந்தொகை: 130)
[தொட்டு = தோண்டி; புகாஅர் = புகார்; விலங்கு = தடு; முந்நீர் = கடல்; கால் = காற்று; குடிமுறை = குடும்பம்; தேரின் = ஆய்ந்தால்; கெடுநர் = தொலைந்தவர்]
"நிலத்தைத் தோண்டி உள்ளே புகார்; வானம் ஏறிச்செல்லார்; தடுக்கும் பெருங் கடலில் காற்றின் துணையால் கப்பலில் செல்லார்; நாடுநாடாக ஊர் ஊராகக் குடும்பம் குடும்பமாகத் தேடினால் என் காதலர் தொலைந்தவர் என்று ஆவாரோ? மாட்டார்!” என்று சொல்கிறார்!
இதைக் கண்ணகி கோவலன் இறந்ததைக் கேட்டவுடன் சாகாமல், மதுரையை எரித்துப் பதினான்கு நாட்கள் நடந்து மலையேறிக் கோவலனை அடைந்ததோடு ஒப்பிடவேண்டும்.
அவ்வாறு அழியாத உள்ள உறுதியும் அன்பும் கொண்ட பொன்னங் கொடியாகத் திகழ்ந்தாள் ஆதிமந்தி.
அடுத்து கடற்கரையில் கணவன் வரும்வரை கல்லுருவமாகக் காத்திருந்த பூம்புகார்ப் பத்தினியைக் காண்போம்.
பெரியண்ணன் சந்திரசேகரன், அட்லாண்டா. |
|
|
|
|
|
|
|