|
|
நீங்களெல்லாம் பெரிய பூகோளத் தேடுபயணிகள். இந்த எரிபொருள் பிரச்சனைக்கு ஒரு சாத்தியமான பதிலை நீங்கள்தாம் சொல்ல வேண்டும் என்று தொடங்கினார் கடவுள். அவருக்கு எதிரே வாஸ்கோ-ட-காமாவும் கிறிஸ்டபர் கொலம்பஸும்!
அமெரிக்கா ஓர் ஆண்டுக்குச் சுமார் 300 பில்லியன் கேலன் எண்ணெயைக் குடித்துத் தீர்க்கிறது. இத்தனைக்கும் ஏகப்பட்ட வேலைகளைச் சைனாவும் இந்தியாவும் எடுத்துக் கொண்டுவிட்டன. அமெரிக்காவின் மக்கள்தொகை அந்த நாடுகளை விட ரொம்பக் குறைச்சல். அமெரிக்காவுக்கு அதிக எண்ணெய் ஏன் தேவைப்படுகிறது தெரியுமா? ஒரு காரணம், இங்கே இருக்கும் கார்கள் கேஸைப் பால்பாயசம் மாதிரிக் குடிக்கின்றன. அவற்றின் எரிபொருள் திறன் (fuel efficiency) ரொம்பக் குறைச்சல் என்று சொன்னார் கடவுள்.
முதல் பயணம்
ஒண்ணு செய்யலாம். மத்தியக் கிழக்கு நாட்டைத் தனது எண்ணெய்த் தேவைக்கு ரொம்பச் சார்ந்திராத ஒரு நாட்டுக்கு முதலில் போகலாம் என்று யோசனை சொன்னார் கொலம்பஸ்.
கொஞ்ச நேர ஆராய்ச்சிக்குப் பின், அப்போ நாம முதலில் பிரேசிலுக்குப் போவோம் என்றார் வாஸ்கோ-ட-காமா.
இருவரும் பிரேசிலில் இருந்த ஓர் கேஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர். அதில் E-85 pump என்று எழுதியிருந்தது. அங்கே ஒருவரிடம் இதுக்கு என்ன பொருள் என்று அவனுடைய மொழியிலேயே கேட்டனர். ஓ இதுவா! இது எத்தனால் (Ethanol) சார்ந்த எரிபொருள். எங்களுக்கு எரிபொருள் விஷயத்தில சுதந்திரம் இருக்குதுன்னா அதுக்கு இதுதான் காரணம். இந்த விடுதலையை நாங்கள் ஏப்ரல் 20, 2006ல் கொண்டாடினோம் என்றார் அவர்.
பிரேசில் தனக்குத் தேவையான எண்ணெயில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்த காலம் எனக்கு நினைவிருக்கிறது. எப்படி இந்த மாற்றம் வந்தது? என்று கேட்டார் வாஸ்கோ-ட-காமா.
விஷயம் தெரிந்த அந்த கேஸ் நிலைய ஆசாமி, நாங்க கேஸலீனில் எத்தனாலைக் கலப்பதில்லை. அதற்குப் பதிலாக, எத்தனாலையே முக்கிய எரிபொருளாக மாற்றிவிட்டோ ம். கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கிறோம். வாகனத் தயாரிப்பாளர் களிடம் எத்தனால், கேஸ் இரண்டிலுமே ஓடும்படிக் கார்களையும் SUVகளையும் தயாரிக்கச் சொன்னோம்.
இப்படி, கேஸ் அல்லது எத்தனால் அல்லது இரண்டின் எந்த விகிதக் கலவையிலும் ஓடும் இவற்றை நாங்கள் மாறுகலவை வாகனம் (flex fuel cars) என்கிறோம். அதனால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் இறக்குமதியாகும் எண்ணெயைச் சார்ந்ததல்ல. அதுமட்டுமல்ல, எத்தனால் தயாரிப்புக்கு ஏராளமான கரும்பு தேவைப்படுவதால், பலரை இது மீண்டும் வேளாண்மைக்குக் கொண்டுபோயிருக்கிறது. |
|
இரண்டாவது பயணம்
வாஸ்கோ-ட-காமாவும் கொலம்பஸும் இப்போது வட அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள்.
கச்சாப் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை சாராயமே எத்தனால் என்பது. இதை அமெரிக்காவில் மக்காச் சோளத்திலிருந்து தயாரிக்கிறார்கள். அங்கேதான் இருக்கு இந்தப் பிரச்சனைக்கு பதில் என்றார் கொலம்பஸ்.
ஆமாம் ஒப்புக்கொண்டார் வாஸ்கோ-ட-காமா, எத்தனாலை கேஸோடு கலந்தால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையும். இந்த கேஸ் நிலையத்தில் போய் நாம் இதைச் சொன்னால் என்ன?
நியூ யார்க்கில் ஒரு கேஸ் நிலையப் பணியாளரிடம் இதைச் சொன்னார்கள். அவர் கூறிய பதில், உங்கள் யோசனையை இங்கே முன்னரே ஆராய்ச்சி செய்து விட்டார்கள். நீங்க சொல்றது சரிதான். இரண்டையும் கலந்து எரிபொருளாக்கலாம். ஆனால் கேஸ் ஸ்டேஷன்ல நாங்க அதிகபட்சம் 15 சதவீதம் எத்தனால்தான் கலக்கலாம். நீங்க உங்க காருக்குப் போடறதில 15 சதவீதம் எத்தனாலும் 85 சதவீதம் ஈயமில்லாத கேஸும் இருக்கும். ஓரளவுக்கு இதனால கேஸ் சேமிக்கப்படுது, ஆனாலும் வெளிநாட்டு எண்ணெய் வாங்க வேண்டியதாகத்தான் இருக்கு.
கொலம்பஸ் விடவில்லை, எத்தனால் உபயோகிக்கறதில நிறைய அனுகூலங்கள் உண்டு. சுற்றுச்சூழல் மாசுபடுவது குறைச்சல், எவ்வளவு வேணுமானாலும் நாமே தயாரிக்கலாம், நம்ம பண்ணை நிலங்களையே பயன்படுத்திக் கச்சாப் பொருள் பெறலாம்... அடுக்கிக் கொண்டே போனார்.
கொலம்பஸ், ஒரு முக்கியமான சிரமத்தைச் சொல்ல மறந்துவிட்டாயே. எத்தனால் எளிதில் ஆவியாகிவிடும் என்பதால் அதைக் குழாய்கள் வழியே கொண்டுசெல்ல முடியாது என்று நினைவுபடுத்தினார் வாஸ்கோ-ட-காமா.
உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார் கேஸ் நிலையப் பணியாளர். ரயில் வழியேதான் இப்போ அதைக் கொண்டு வரோம். அமெரிக்கா பெரிய நாடு, மிட்வெஸ்டிலேதான் பண்ணை நிலங்கள் அதிகம். நியூ யார்க், அட்லாண்டா மாதிரி இடங்களில் மக்காச்சோளம் பயிர்செய்யும் நிலங்கள் இல்லை. அதனால, அமெரிக்கா முழுவதிலும் எத்தனால் அடிப்படையிலான எரிபொருளைப் பயன்படுத்துவது இப்போதைக்கு நடக்காது. இங்கே இருக்கும் சுமார் 2 லட்சம் கேஸ் நிலையங்களில் 585-ல்தான் E-85 எரிபொருள் கிடைக்கும். ஆனால் எத்தனால் அடிப்படை எரி பொருளுக்கும், வழக்கமான கேஸலீனுக்கும் விலை வேறுபாடு குறிப்பிடத் தக்கது. அதனால் வாகனம் வைத்திருப்போருக்கு எத்தனால் எரிபொருளை வாங்கச் சிறப்பான காரணம் எதுவும் இல்லை.
அமெரிக்காவில எல்லோருமே மாறுகலவை வாகனங்களை (flex fuel cars) வாங்கி விட்டால்? என்று புதிர் போட்டார் கொலம்பஸ்.
அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 7.5 பில்லியன் கேலன் எத்தனால் தயாராகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதை 300 பில்லியன் கேலன் கேஸ் தேவையோடு ஒப்பிட்டால் இது ஒரு சுண்டைக்காய்தான். இது எண்ணெய் இறக்குமதியில் பெரிய மாற்றத்தை ஒன்றும் ஏற்படுத்திவிடாது என்று விளக்கினார் வாஸ்கோ-ட-காமா.
இருவரும் மீண்டும் கடவுளின் முன் வந்து நின்றார்கள். அவர் ஒரு குறும்புப் புன்னகையோடு புருவத்தை ஒரு கேள்வியாக உயர்த்தினார்.
வாஸ்கோ-ட-காமாதான் முதலில் பேசினார். எத்தனாலைப் பயன்படுத்தினால் எண்ணெய் இறக்குமதிக்கான தேவையைக் குறைக்கலாம் என்று அறிந்துகொண்டோ ம். சோளம் அல்லது கரும்பிலிருந்தே எத்தனாலைத் தயாரிக்கமுடியும் என்பதால் சூழலுக்கும் அது நல்லது. பிரேசில் கரும்பிலிருந்தே எத்தனாலைத் தயாரிப்பதன் மூலம் எரிபொருளுக்கு வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கலாம்; ஆனால் எல்லா நாடுகளுக்கும் அதுவேதான் தீர்வா என்று சொல்லமுடியவில்லை.
இப்போது கொலம்பஸும் சேர்ந்து கொண்டார், எத்தனால் அடிப்படை எரிபொருளைத் தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள் உள்ளன. வருங்காலத்தில் அவை பெரும் மாறுதலை ஏற்படுத்தும். பசிஃபிக் எத்தனால் (PEIX), ஆர்ச்சர் டேனியல் மிட்லண்ட் (ADM) போன்றவை இதில் அடங்கும். இவை எத்தனாலைத் தயாரித்துப் பல அமெரிக்கப் பிரதேசங்களுக்கு அனுப்புகின்றன.
உண்மையிலேயே எத்தனால்தான் மாற்று எரிபொருளா, இல்லை 1990களின் டாட்காம் மாதிரி புஸ்ஸுன்னு போயிடுமான்னு என்னால சொல்லமுடியலை. முதலீட்டா ளர்கள் இதைக் கண்டுபிடிக்க மண்டையை உடைச்சுக்கிறாங்க. PEIX பங்குகள் ஜனவரியில பத்து டாலரா இருந்தது, மே மாசம் 40 டாலர் ஆச்சு. அப்புறம் மெல்ல இறங்கி இப்போ 22ல நிக்குது.
கடவுள் சொன்னார், "கொலம்பஸ், நீ இந்தியாவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டாய், அமெரிக்காவைக் கண்டுபிடித்தாய். எண்ணெய் இறக்குமதியிலிருந்து சுதந்திரம் கண்டு பிடிக்கிறேன் என்று கிளம்பி இப்போது ஒரு முதலீட்டு வாய்ப்பைத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறாய். பெரிதாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பதே உனக்கு வேலையாகி விட்டது.
சிவா மற்றும் பிரியா 'Dollarwise Penny foolish' என்ற நூலை எழுதியுள்ளனர். மேலும் அறிய: www.wisepen.com
ஆங்கிலத்தில்: சிவா மற்றும் ப்ரியா தமிழ்வடிவம்: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|