அவர் ஒரு மாசித்தர். பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டக் கூடியவர். நோய்களைக் குணமாக்கிய பெருமைகளும் அவருக்குண்டு. என் சகோதரர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்று வலியால் துடித்தபோது, உடனடி நிவாரணத்துக்காக அந்தச் சித்தரிடம் அவரை நான் அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. பூஜை செய்து, அண்ணனுக்கு திருநீறுப் பிரசாதம் தந்தார் சித்தர்.
நான் அவரை நாடி வந்துவிட்டதால் நிச்சயமாகத் தன்னைப் பற்றிக் கட்டுரைகள் எழுதுவேன் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால், நான் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிந்ததும், அவர்பால் என்னை ஈர்ப்பதற்காக எனக்கு அழைப்புகள் விடுத்தார்.
மீண்டும் ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒருநாள் அங்கு சென்றேன். நடுநிசி நேரம். அறைக் கதவைத் தாழிட்டுவிட்டு, எனக்குச் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் அந்தச் சித்தர். வடித்த சாதத்தை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்தார். அது மீண்டும் அரிசியானது. வெந்த பருப்பைத் தேய்த்துத் துவரம் பருப்பாக்கினார். திருச்சானூர் மஞ்சள் வந்தது. பழநி விபூதி, மீனாட்சி குங்குமம் இப்படி எத்தனையோ... நான் அவற்றில் உற்சாகம் காட்டாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
"இவ்வளவு செஞ்சு காட்றேன், ஆச்சரியப்படாம இருக்கீங்களே, மனசுலே என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க?" என்று சற்றுக் கடுமையாகவே கேட்டார்.
"நீங்கள் இவற்றைக் காட்டிலும் பிரமிக்கத்தக்க அற்புதங்கள் செய்துகாட்டும் சக்தி படைத்தவர் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் எனக்கு எதுவுமே ஆச்சரியமாகத் தோன்றவில்லை" என்றேன்.
"எழுத்தாளர் ஆச்சே... அதான் சாமர்த்தியமா பேசறீங்க.." என்றார். இப்போது அவர் பேச்சில் மட்டுமல்ல, முகத்திலும் கோபம் தெரிந்தது. எனக்குச் சற்று பயமாக இருந்தது. மணிபர்ஸில் இருந்த பெரியவா படத்தைப் பற்றிக் கொள்ளும் பொருட்டு கைகட்டி நின்றேன். நான் வழிக்கு வருவதாக நினைத்துக்கொண்ட அவர், "உங்களுக்கு உபதேசம் பண்றேன், மந்திரத்தை எழுதிக்குங்க" என்று கூறி பேப்பரும் பேனாவும் எங்கிருந்தோ வரவழைத்தார். "பிடிங்க" என்று இரண்டையும் என்னிடம் தந்தார். வாங்கிக் கொண்டேன்.
"ம்... எழுதிக்குங்க..."
"வேண்டாங்க... எனக்கு உபதேசம் ஒன்றும் தேவையில்லை..."
"என்னாது... என் உபதேசம் கிடைக்காதான்னு அவனவன் காத்துக்கிட்டு இருக்கான். நீங்க வாணாண்றீங்களே...!" என்று உரக்கச் சத்தம் போட்டார்.
எனக்கு அடிவயிற்றில் கிலி பிசைந்தெடுத்தது. "மன்னிச்சுடுங்க" என்று கூறியபடி, பேப்பரையும் பேனாவையும் மேஜைமீது வைத்தேன்.
அவர் இருக்கையிலிருந்து எழுந்தார். எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பெரியவாளையே தியானம் செய்யத் தொடங்கினேன். அவர் காப்பாற்றினால்தான் உண்டு.
சித்தர் என்னருகில் வந்தார். என் வலது தோள்பட்டையைத் தொட்டார். "இந்தக் கையாலேதானே எழுதறீங்க.. இதை எழுதவிடாம என்னாலே செய்ய முடியும்.. பார்க்கறீங்களா?" என்று கூறி லேசாக அழுத்தினார். அடுத்த கணம், என் கை சற்றுக் கீழே இறங்கி, தொளதொளவென்று ஆடியது. பெரும் திகில் என்னைப் பற்றிக்கொண்டது. கண்களில் நீர் முட்டி நின்றது. உடம்பே நடுங்கியது. என்ன செய்வது என்று புரியாமல் பதறிப்போனேன். அந்நிலையிலும் 'பெரியவா, பெரியவா' என்று நெஞ்சு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.
"என்னைப்பற்றி எழுதறேன்னு இப்பவாவது சொல்லுங்க... கையைச் சரி பண்ணிடறேன்" என்றார் அந்தச் சித்தர்.
அந்நிலையிலும் நான் வாயைத் திறக்கவேயில்லை!
அந்தச் சித்தர் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் நின்றிருந்தாலும், என்னுள்ளே நிலவிய அச்ச உணர்வை என் முகபாவம் அவருக்குக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.
"பாவம், ரொம்பப் பயந்து போயிருக்கீங்க. நான் கையைச் சரி பண்ணிடறேன். என் சக்தி என்னன்னு இப்பவாவது நீங்க புரிஞ்சுக்கிட்டாப் போதும்" என்று என் வலது தோள்பட்டையைத் தொட்டு, கையைத் தடவி விட்டார். உடனேயே என் கரம் பழையபடி ஆகிவிட்டதை என்னால் உணர முடிந்தது.
அடுத்தபடி ஏதாவது செய்துவிடப் போகிறாரே என்ற பயத்தில், "நான் போகலாமா?" என்று சற்றுத் தயக்கத்துடனேயே கேட்டேன். அவர் சிரித்தார்.
"இப்பப் போயிட்டு வாங்க. பயமெல்லாம் முழுக்கத் தெளிஞ்சப்புறம் இன்னொரு நாள் வாங்க, பேசுவோம்" என்று கூறிக் கதவைத் திறந்து விட்டார். 'இன்றைக்குத் தப்பித்தோம்' என்று எண்ணியவாறு வீட்டுக்கு விரைந்தேன்.
வீட்டுக்குச் சென்ற பிறகு நான் நடந்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் சாதாரணமாகத்தான் என் வீட்டாரிடம் சொன்னேன். சித்தர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைக் கூறி, நான் மடித்து வைத்திருந்த பொட்டலங்களைப் பிரித்து காட்டினேன். அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அறைக்குள் நான் அனுபவித்த வேதனையையும் என்னை வாட்டிய நடுக்கத்தையும் சற்று வேடிக்கையாகவே விமரிசித்தேன். ஆனால், படுத்துக்கொண்ட பிறகு நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
சித்தரின் முகபாவமும், பேச்சும், செய்கையும் சிந்தையைக் குழப்பி என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. மனதின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு கலக்கம், ஒரு திகில், ஒரு பீதி...! புரண்டு புரண்டு படுத்தேன்... அசதியில் ஒரு நொடி கண்ணயர்ந்தால், கனவு உலகத்தில் அந்த அறையின் சூழ்நிலை சுழன்றது. மறுகணம் அலறிப் புடைத்துக் கொண்டு ஒரு விழிப்பு... இந்த அரட்டல் புரட்டலிலே பொழுதும் விடிந்துவிட்டது.
ஏறத்தாழ ஒரு வாரம், என் அன்றாட அலுவல்களில் ஓர் இயந்திரத்தன்மை நிலவியதற்கு மாறிய என் மனநிலைதான் காரணம் என்று என்னால் உணர முடிந்தது.
படுத்தேன், எழுந்தேன், குளித்தேன், படித்தேன், பேசினேன், உணவருந்தினேன், அலுவலகம் சென்றேன். எழுதினேன், திருத்தினேன், மாலை நண்பர்களோடு ஓட்டலுக்குச் சென்றேன், சினிமா பார்த்தேன், சிரித்தேன், அரட்டை அடித்தேன்... ஆனால், அன்று நடுநிசியில் அந்த அறைக்குள் நடந்தவை ஆழ்மனதில் குடியேறி, என் செயல்களுக்குச் செயற்கை முலாம் பூசி, நெஞ்சை நெருடிக் கொண்டிருந்தன. என் எண்ணங்களின் பின்னணியில், இன்னது என்று அடையாளம் காண முடியாத அச்சமும் கலவரமும் எதிரொலித்துக் கொண்டிருக்க, எதையுமே வெளியில் சொல்ல முடியாமல் நான் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தேன். என் அகவாழ்க்கை, புறவாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போய், வேறொருவன் என்னை நிரந்தர நிழலாகத் தொடர்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமையில் சிக்கி, அதனின்றும் மீள வழி தெரியாமல் சிதறுண்டு போனேன்.
நான் எத்தனைதான் மறக்க முயன்றாலும், அந்த நள்ளிரவின் அசாதாரண நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வந்து, என்னை வாட்டி வதைத்தன.
நான் சித்தரிடம் நடந்து கொண்டதும் பேசியதும் முறையற்றவையாக இருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்குமோ என்ற தவிப்பு ஒருபுறம்; அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்து, நான் போகாமல் இருந்தால் விபரீதங்கள் ஏற்படுமோ என்ற மனக்கொந்தளிப்பு மறுபுறம். நாளுக்கு நாள் இதுவே ஒரு மனநோயாகப் பரவி, பேய் பிடித்தவன் போல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள், யாரிடமாவது சொன்னால்தான் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் அரிய நண்பன் டன்லப் கிருஷ்ணனின் இல்லம் சென்று அழமாட்டாத குறையாக என் மனநிலையை எடுத்துக் கூறினேன், "பெரியவா இருக்கா, பார்த்துப்பா என்று எல்லாருக்கும் தைரியம் சொல்லும் நீயே இப்படிப் பயந்துண்டிருக்கியே" என்று என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நண்பன், எனக்குத் தைரியம் சொன்னான்.
"தைரியமாக இருக்கும்படி புத்தி அறிவுறுத்துகிறது. ஆனால், நெஞ்சு குமுறித் துடிக்கிறது. நான் என்ன செய்ய? எனக்கு உடனே பெரியவாளைப் பார்த்து, எல்லாத்தையும் அவர்கிட்டே சொல்லியாகணும். நீ என்னோட வரணும்... நீதான் காரை ஓட்டணும்... உடனே புறப்படு... இப்பவே போயாகணும்" என்று அவசரப்படுத்தினேன்.
அப்போது பெரியவா காஞ்சீபுரத்தில் இல்லை. தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் யாத்திரை செய்து கொண்டிருப்பதை அறிந்து புறப்பட்டுச் சென்றோம்.
இரண்டு மூன்று இடங்களில் காரை நிறுத்திப் பெரியவா இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டே போனோம்.
இரவு பதினோரு மணிக்கு மேலிருக்கும்... ஒரு சாலையில் வேகமாகப் போய்க்கொண்டிருந்தபோது "கிருஷ்ணா, அதோ சைக்கிள் கூண்டு வண்டி நிக்கறது. பெரியவா இங்கேதான் தங்கியிருப்பா... காரை நிறுத்து" என்றேன்.
கார் நின்றது. நாங்கள் இறங்கிச் சென்றோம். பாராக்காரர் சுப்பையா மற்றும் ஓரிருவர் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சாலையை ஒட்டினாற்போல் ஒரு பாழடைந்த சிறு மண்டபம். வாசலில் கண்ணன் உட்கார்ந்திருந்தார் (நான் எத்தனைதான் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் பெரியவா, அப்போது தங்கியிருந்த இடத்தை இப்போது என்னால் நினைவுகூர முடியவில்லை. கண்ணனாலும் தெளிவாகக் கூற இயலவில்லை).
எங்களைக் கண்டதும், "எங்கடா ரெண்டு பேரும் இந்த அர்த்தராத்திரியில் வந்தேள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார் கண்ணன்.
"அதையெல்லாம் அப்புறம் சொல்றேன். பெரியவாளை நான் உடனே தரிசனம் பண்ணணும். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்று கூறினேன்.
"பெரியவா படுத்துண்டுட்டா... அதோ அந்த சாக்குத் திரைக்குப் பின்னாலேதான் படுத்திண்டிருக்கா... இத்தனை நேரம் தூங்கிப் போயிருப்பா... நீ ராத்திரி தங்கி, விடியற்கார்த்தாலே பார்த்துட்டுப்போ... இங்கே இடமில்லே... கார்லேயே படுத்துக்கோங்கோ" என்று கண்ணன் கூறியது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.
நாங்கள் காரை நோக்கிப் புறப்பட்ட நேரத்தில் "யார்ராது கண்ணா? ஸ்ரீதர் வந்திருக்கானா?" என்று திரைக்குப் பின்னாலிருந்து பெரியவாளின் அபயக் குரல் கேட்டது.
"ஆமாம்" என்றார் கண்ணன் .
"வரச்சொல்லு."
கண்ணன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். சயனித்துக் கொண்டிருந்த ஆபத்பாந்தவன் எழுந்து உட்கார்ந்தார். கண்ணீர் பெருக, வந்தனம் செய்து எழுந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். "என்னப்பா?" வாத்சல்யமும் வாஞ்சையும் அன்பும் பரிவும் கலந்த அந்த அமுதக் கேள்வி, வான்மழையாகப் பொழிந்து, நெஞ்சைக் குளிர்வித்தது.
நடந்தவற்றை ஒரு விவரமும் விடாமல் விவரித்தேன். வெட்கமின்றி என் பயத்தை விளக்கினேன். பெரும் சஞ்சலத்திலிருந்து என்னை மீட்கும்படி வேண்டினேன்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவர், "நீ ஏன் அவரைப் பார்க்கப் போனே?" என வினவினார். கேள்வி சுருக்கென்று தைத்தது.
"அண்ணா வயிற்று வலியால் துடிச்சதை என்னால் தாங்க முடியலே. டாக்டர் குடுத்த மாத்திரைகள் வலியைக் குறைக்கலே. ஏதாவது அற்புதங்கள் செய்து, உடனடியா வலியைக் குறைக்க மாட்டாரா என்ற ஆசையில் அவரிடம் போனேன். ஆபரேஷனுக்குப் பெரியவாளிடம் ஆசி வாங்கிக்கொண்ட பிறகு வேறொருவரிடம் சென்றது தப்புதான். அந்தப் பாவத்தை நான் ஒரு வாரமா அனுபவிச்சிண்டிருக்கிறதா தோண்றது. அவர் ஏதாவது பண்ணிடுவாரோன்னு பயமாயிருக்கு. பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும். அதான் ஓடி வந்தேன்" என்று நெஞ்சு படபடக்க, நா குழறக் கூறினேன்.
"ஏன் பயப்படறே? .அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?"
நன்றிக் கண்ணீர் ஊற்றெனப் பெருகி வழிந்தது. நெஞ்சில் கனத்த சுமை சட்டென்று குறைந்தது.
"நீ இனிமே இதுமாதிரி பண்றவா யார் கிட்டேயும் எதுக்கும் போகாதே"
"சரி..."
"போயிட்டு வா."
"பன்னண்டு மணிக்கு மேலே ஆயிடுத்து. ராத்திரி தங்கிட்டு, கார்த்தாலே போறேன்" என்றேன் நான்.
"ஒரு பயமும் இல்லே நீ இப்பவே புறப்பட்டு போ..." என்று மீண்டும் உத்தரவு தந்தார் பெரியவா.
எழுந்து மீண்டும் வந்தனம் செய்துவிட்டுப் புறப்பட்டேன்.
பூர்ண நிலவொளியில், பூர்ண மன அமைதியுடன் நானும் நண்பனும் பயணித்துக் கொண்டிருந்தோம்.
"அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?" நள்ளிரவில் தோன்றிய பயத்தை, நள்ளிரவிலேயே கிள்ளியெறிந்த கேள்வி இது. கேள்வியிலேயே விடையும் அடங்கியிருந்த பெரியவாளின் இந்தக் கேள்வி 'நான் இருக்க பயமேன்?' என்று என் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்து, எதிரொலித்தது.
இதுவே எனக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் தகர்க்க முடியாத அரணாகவும் அமைந்துவிட்டது. இந்தக் கவசமும் அரணும் அச்சமேயற்ற பெரும் நிம்மதியைத் தந்தன. அந்த மன நிம்மதியில் ஆனந்தம் பிறந்தது. மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக்கொண்டே இரவோடு இரவாகச் சென்னையை அடைந்தோம்.
வீட்டுக்குள் நுழையும்போது, இருள் அகன்று விடியத் தொடங்கிவிட்டது.
(பரணீதரன் எழுதிய 'அன்பே.. அருளே..' நூலில் இருந்து) |