|
சாகும் விருப்பம் |
|
- |ஜூன் 2024| |
|
|
|
|
ஒரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் தினமும் காட்டுக்குள் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்து பக்கத்துக் கிராமத்தில் விற்பான். அது அவனது மனைவி மக்கள் உயிர்வாழ மட்டுமே போதுமானதாக இருக்கிறது. ஒருநாள் அவன் குடிசையிலிருந்து கிளம்பிய போது, அவனது மனைவி "நாளைக்கு வருடப் பிறப்பு, அதிகமாக விறகு வெட்டி வாருங்கள், சிறிது அதிகப் பணம் கிடைத்தால் நாம் குழந்தைகளுக்கு நாளைக்குக் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் செய்து கொடுக்கலாம்" என்றாள். சரியென்று தலையாட்டிவிட்டு அவன் கிளம்பினான்.
அன்றைக்கு விறகுக் கட்டு பெரியதாக இருந்தது. அதைத் தலையில் சுமந்துகொண்டு சிறிது தூரம் நடந்ததுமே களைத்துப் போனான். கிராமத்தைச் சென்றடைவதற்கு முன்னதாக அதை அவன் தரையில் வைக்க வேண்டியதாயிற்று. தனது சிரமத்தை எண்ணி அவன் நொந்துகொண்டான். வாழவேண்டுமென்ற ஆசை அவனை விட்டுப் போய்விட்டது.
அவன் எமனை அழைத்தான். "ஓ எமராஜா! என்மீது உனக்குக் கருணை இல்லையா? என்னை ஏன் இவ்வளவு காலமாக மறந்துவிட்டாய்? இந்த அன்றாட அவதியிலிருந்து தப்புவதற்காக நான் இறந்து போவதே மேல் என்று தோன்றுகிறதே" என்றான். அவன்மீது கருணை கொண்ட எமன், அவனது ஆசையை நிறைவேற்ற அவன்முன் தோன்றினான்.
எமனைப் பார்த்ததும் விறகுவெட்டி பின்வாங்கினான். அவன் சாமர்த்தியமாகத் தனது வேண்டுகோளை மாற்றிவிட்டான். ஏதோ துக்கத்தில் எமனை அழைத்துவிட்டானே அன்றி அவன் இறக்க விரும்பவில்லை. "வேண்டாம், இங்கே இந்த விறகுக் கட்டினை என் தலைமேல் ஏற்றி வைக்க யாரும் இல்லை என்பதால் நான் உன்னை உதவிக்கு அழைத்தேன். என் பிரார்த்தனைக்குக் காரணம் அதுதான். இதைத் தூக்கி என் தலைமேல் வைத்துவிடு, நான் வேகமாகக் கிராமத்துக்குப் போய்ச் சேரவேண்டும்" என்றான் அவன்.
அந்தரங்கத்தில் மனிதன் அமரன் (மரணமற்றவன்) என்பதால் அவன் மரணத்தின் பிடியில் சிக்க மறுக்கிறான். வாழ்வதற்கான ஆசை, சாவதற்கான ஆசையைவிட மிகவும் வலுவானது. |
|
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
நன்றி: சனாதன சாரதி, மார்ச் 2024 |
|
|
|
|
|
|
|