|
எந்தத் தண்ணீர்ப் பை அதிகச் சுத்தம்? |
|
- |ஜூன் 2021| |
|
|
|
|
நீங்கள் எப்போதும் வெளிப்புறமாகவே பார்ப்பதால், மற்றவர் குற்றம் மட்டுமே உங்களுக்குத் தெரியும்; உங்கள் இயல்பிலுள்ள குற்றங்களை உங்களால் பார்க்க முடியாது.
இதோ ஒரு சிறிய கதை. கோடைக்காலத்தில் நாகபுரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கும். இப்போது வேண்டுமானால் நிலைமை சரியாகி இருக்கலாம், ஆனால் பழைய காலத்தில் மிக மோசமாக இருந்தது. ஒரு வைதீகமான முதிய பிராமணப்பெண் தீர்த்தயாத்திரை புறப்பட்டார். அவர் எவ்வளவு ஆசாரமானவர் என்றால், அவர் எதையும் எவரையும் தானும் தொடமாட்டார், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டார். அப்படியோர் ஆசாரமான மனப்பான்மை. அவர் நாகபுரியை அடைந்தபோது மிகவும் வெப்பமாக இருப்பதாக உணர்ந்தார். குழாயைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வரவில்லை. தாகம் அதிகரித்தது. ரயில்நிலையத்தில் தண்ணீர் வழங்க அரசாங்கம் ஓர் ஏற்பாடு செய்திருந்தது. ஒரு மிருகத் தோலால் செய்யப்பட்ட பையில் நீர் கொண்டுவந்து அதைத் தாகத்துடன் இருந்தவர்களுக்கு வழங்குவார்கள். அதைப் பலர் வாங்கிக் குடித்தனர். மிகவும் தாகமாக இருந்தபோதும், தண்ணீர் கொண்டு வருபவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராக இருப்பாரோ, தோற்பை சுத்தமாக இருக்காதோ, அது நன்றாகக் கழுவப்பட்டிருக்காதோ என்றெல்லாம் இந்தப் பெண்மணி சந்தேகப்பட்டார்.
மிகுந்த தயக்கத்துக்குப் பின், தாகத்தை அடக்க முடியாததால் முன்னே சென்றார். தண்ணீர் வழங்கியவரிடம், "அன்புக்குரிய ஐயா, இந்தப் பை சுத்தமானதா? அது தூயதா?" என்று கேட்டார். தண்ணீர் வழங்குபவர் மிகவும் கெட்டிக்காரர். "தண்ணீர் வைத்திருக்கும் தோற்பை, அந்தத் தண்ணீரை எந்தத் தோற்பைக்குள் ஊற்றப் போகிறீர்களோ அதைவிட, அதாவது உங்கள் உடலைவிட, தூய்மையானதுதான். உங்கள் உட்புறத்தைவிட இது சுத்தமாக இருக்கிறது" என்றார் அவர்.
இப்போதெல்லாம் நாம் நம் உடலுக்குள் இருக்கும் அழுக்கை அகற்ற முனையாமல், தோற்பையின் அழுக்கை மட்டும் பார்க்கின்ற வேண்டாத பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2020 |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |
|
|
|
|
|
|
|