|
கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல |
|
- |மே 2019| |
|
|
|
|
சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். அவளுக்கு எவ்வளவு கோபம் இருந்ததென்றால், சூதில் வென்று அங்கே இழுத்துவந்த கயவர்களை அவள் ஒரு பார்வை பார்த்திருந்தால் போதும், அவர்கள் சாம்பல் குவியல் ஆகியிருப்பார்கள். ஆனால் அவளோ தனது மூத்த கணவரான தர்மராஜரைப் பார்த்தாள்; அவளைப் பணயமாக வைத்தவர் அவர்தான்; அவர் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்து அவள் சற்றே அமைதியடைந்தாள்.
பின்னர் அவள் வானிலும் மண்ணிலும் எதிரொலிக்கும் படியாகச் சூளுரைத்தாள்: “என் கூந்தலில் கைவைத்து இழுத்துவந்த இந்தப் பாம்புகளின் மனைவிமார், கூந்தல் அவிழ்ந்து விசிறியெழ, ஆற்றமாட்டாத துயரத்தோடு விதவைக்கோலம் பூணட்டும். இந்தக் காட்டுமிராண்டிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட எனது கூந்தலை நான் அதுவரை பின்னி முடியமாட்டேன்.” எல்லோரும் கேட்கும்படியாக, அவள் தனது பாரம்பரியம், சுயகௌரவம் இவற்றைப் பாதுகாப்பதால் பெற்ற பெருமை, பாரம்பரியத்தின்மீது தான் கொண்ட மரியாதை, அந்தப் பெருமை சற்றும் குறையாமல் பாதுகாக்கத் தான் எடுத்த முடிவு ஆகியவற்றை அவள் உரக்க அறிவித்தாள்.
ராமர், கிருஷ்ணர், ஹரிச்சந்திரன், மீரா, தியாகராஜர், துக்காராம், ராமகிருஷ்ணர், நந்தனார் போன்றோர் தந்த உங்கள் பாரம்பரியத்தை நீங்கள் போற்றிப் பேணுங்கள். உங்கள் பாரிம்பரியப் பெருமை என்பது கவனமாகச் சுற்றப்பட்ட நூல் கண்டைப் போன்றது. அதைக் கையிலிருந்து நழுவவிட்டால் கடுமையான சிக்கல் ஏற்பட்டுவிடும்.
எனவே எச்சரிக்கை! கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல. உங்கள் ஆன்ம சாதனையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.
நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2018. |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |
|
|
|
|
|
|
|