Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
Tamil Unicode / English Search
சின்னக்கதை
சபரியின் பக்தி
- |செப்டம்பர் 2018|
Share:
சபரியின் இதயம் மென்மையானது, கருணை மிக்கது. அவள் மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கிய கதை மிகவும் சுவையானது. சபரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். ஆதிவாசிகள் வழக்கப்படி திருமணத்துக்கு முந்தைய இரவில் அவர்களது தெய்வத்துக்கு ஆடு ஒன்றைப் பலியிட ஏற்பாடு செய்திருந்தனர். அப்படிச் செய்வது தேவியின் அருளைத் தம்பதிகளுக்குப் பெற்றுத் தரும் என்று அவர்கள் நம்பினர். இதைக் கேள்விப்பட்டதும் சபரி அழுதாள். பெற்றோரின் கால்களில் விழுந்து, "பலி ஆட்டின் மரண அலறலில் தொடங்கும் திருமணம் எப்படி அப்பா சந்தோஷமானதாக இருக்கும்?" என்று கேட்டாள். ஆனால் அவளை அப்பால் தள்ளிவிட்டுப் பலியிடப் போய்விட்டார் தந்தை.

அன்றிரவு சபரி அங்கிருந்து தப்பித்துப் போய் அருகிலிருந்த அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்து கொண்டாள். மறுநாள் விடிந்தது. மணவீட்டார் இருவரும் துயரத்தில் ஆழ்ந்தனர். காட்டுக்குள் நுழைந்து அவளைத் தேடினர். "சபரி மதங்கரின் ஆஸ்ரமத்துக்குப் போயிருக்க முடியாது. அங்கே பெண்களுக்கு அனுமதியில்லை" என்று அவர்கள் பேசிக்கொண்டது அருகில் ஒரு புதரில் ஒளிந்திருந்த சபரியின் காதில் விழுந்தது. அதுதான் தனக்குப் பாதுகாப்பான இடம் என்று சபரி தீர்மானித்தாள். யாராவதொரு முனிவர் தன்மீது இரக்கம் காட்டி ஆஸ்ரமத்தில் அடைக்கலம் கொடுப்பார் என்று அவள் நம்பினாள்.

இதைப் புரிந்துகொண்ட மதங்க முனிவர் சபரிக்குத் தனது ஆஸ்ரமத்தில் தங்க இடம் கொடுத்தார். அவர் சபரியிடம், "ஸ்ரீமன் நாராயணர் மனிதவுருவில் பூமிக்கு வந்திருக்கிறார். அவரைக் காட்டுக்கு அனுப்பியுள்ளனர். காட்டில் தவம் செய்யும் ரிஷிகளையும் முனிவர்களையும் அரக்கர்களின் கொடுமையிலிருந்து காக்க அவர் வரப்போகிறார். ஸ்ரீராமர் தனது மனைவி சீதை, தம்பி லட்சுமணர் ஆகியோரோடு வனப்பகுதிகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் அவர் நமது ஆஸ்ரமத்துக்கு வருவார்" என்று கூறினார்.

அன்றிலிருந்து சபரிக்கு ஸ்ரீராமரைத் தவிர வேறெந்த நினைவும் இல்லாமல் போனது. அவரது தரிசனம், பாதம் தீண்டல், அவரோடு பேசுதல் என்பவை தவிர மற்ற ஆசைகளை விட்டொழித்தாள். ராமரசத்தின் இனிமையால் அவளது இதயம் நிரம்பியிருந்தது. அதைத்தவிர வேறெந்த ஜபம், தவம் அல்லது ஆன்ம சாதனையும் அவள் செய்யவில்லை. ஸ்ரீராமரின் வருகைக்காக ஆஸ்ரமத்தைத் தயார் செய்வதிலேயே அவள் நேரத்தைச் செலவிட்டாள்.

பாதையைத் தூய்மை செய்த அதே நேரத்தில் தனது இதயத்தையும் தூய்மை செய்தாள். இரண்டிலும் இருந்த கற்களும் முட்களும் காணாமல் போயின. மண்டிக் கிடந்த புதர்களையும் மேலே தொங்கிய கொடிகளையும் அகற்றினாள். காட்டில் சுற்றியலையும் ராமபிரானின் தலைமுடி வாரப்படாமல் சடை பிடித்திருக்கும், அவை கொடிகளில் மாட்டி இழுக்கும் என்று அவள் அஞ்சினாள். சீதையின் பாதங்களைக் காயப்படுத்தும் என்றஞ்சி அவள் பாதையிலிருந்த மண்கட்டிகளை உடைத்துச் சீராக்கினாள். என்றைக்கு ராமபிரான் வருவார் என்பது எவருக்கும் தெரியாது. அதனால் தினந்தோறும் அவருக்கெனக் காட்டில் கிடைக்கும் கனிகளையும் கிழங்குகளையும் சேகரித்து வைத்தாள்.
சுவையில்லாததை ராமபிரானுக்குக் கொடுத்துவிடக் கூடாதே! அதற்காக அவள் கசப்போ, புளிப்போ, இனிப்போ, ஒவ்வொரு கனியையும் தானே சுவைத்துப் பார்த்து, மிகச் சுவையானதை மட்டுமே ராமருக்கென்று வைத்தாள். காட்டில் பாதையோரத்திலிருந்த பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து மழமழவென்று ஆக்கினாள். ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் நடந்துவந்த களைப்பில் அவற்றில் ஒன்றின்மீது அமர்ந்து ஓய்வெடுக்கக் கூடுமே! தான் மழமழக்கச் செய்த பாறைமீது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று அவள் மிகவும் விரும்பினாள். இப்படியாக அவளது இதயம் 'ராம இதயம்' ஆகிப்போனது.

அவள் ராமரிடம் எவ்வளவு தோய்ந்திருந்தாள் என்றால் அவள் ஒரு பெண்ணென்பதையே மற்ற ரிஷிகள் மறந்துபோய்விட்டனர். அவளது மிகவுயர்ந்த பக்தியை மதங்கர் கூறக்கேட்டு அவர்கள் அவளை ஆஸ்ரமத்தில் தங்கியிருக்க அனுமதித்தனர். மதங்கர் தமது உடலைநீத்துச் செல்லுமுன் சபரியை அழைத்து, "நீ ஒருவளே இங்கிருக்கத் தகுதியானவள்" என்று கூறித் தனது ஆஸ்ரமத்தை அவளிடம் ஒப்படைத்தார்.

சாயிராமனை ஏழைகளிடம் கண்டு அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நீங்களும் சபரி ராமனுக்காகச் செய்த சாதனையின் அதே ஆனந்தத்தை அடையலாம். இந்தச் சேவையின்மூலம் நீங்களும்உங்களுக்குள்ளே ஆத்மாராமனை உணரலாம்.

ஆதாரம்: சனாதன சாரதி, மார்ச் 2017

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா
Share: 




© Copyright 2020 Tamilonline