|
உலகுக்கு வண்ணம் பூச முடியாது |
|
- |ஆகஸ்டு 2017| |
|
|
|
|
ஓர் ஊரில் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருந்தார். அவர் வயிற்றுவலி, தலைவலியால் மிகவும் துன்பப்பட்டார். மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. அவர் வண்டி வண்டியாக மருந்துகள் உட்கொண்டதோடு நூற்றுக்கணக்கில் ஊசிகளைப் போட்டுக்கொண்டார். ஆனால் முன்னைவிட வலி அதிகமாயிற்றே தவிரக் குறைந்தபாடில்லை.
ஒருநாள் அவர் இருந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். முனிவர் அவரிடம் அன்பாகப் பேசியதோடு, அவரது துன்பத்துக்குக் காரணம் கண்ணில் இருந்த ஒரு கோளாறுதான் என்று கூறினார். "கண்ணைச் சரி செய், மேலே இருக்கும் மண்டையும், கீழே இருக்கும் வயிறும் சரியாகிவிடும். கண்ணைச் சரி செய்ய, ஒரே ஒரு நிறத்தை மட்டுமே பார். பச்சைநிறம் நல்லது. சிவப்பு, மஞ்சள் அல்லது வேறு நிறங்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடு" என்றார் முனிவர்.
வர்ணம் பூசுவோர் கோஷ்டி ஒன்றை அழைத்து வந்து, அவர்களுக்குப் பெரிய பீப்பாய்கள் நிறைய பச்சை வர்ணத்தை வாங்கிக் கொடுத்த கோடீஸ்வரர், தனது கண் எதன்மீது விழச் சாத்தியம் இருந்தாலும், அதற்குப் பச்சை வர்ணம் தீட்டிவிடும்படிக் கூறினார். எப்படி அஷ்டக்கிரகம் கூடுதல் (எட்டுக் கிரகங்கள் கூடினால் உலகுக்குப் பெரிய அபாயம் ஏற்படும் என்று அப்போது பலர் அதற்காகச் சாந்திகள் செய்தனர்) புரோகிதர்களுக்கு நல்ல வருமானத்தைத் தந்ததோ, அதேபோலக் கோடீஸ்வரரின் நோயால் வர்ணம் தீட்டுவோருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
பத்து நாள் கழித்து முனிவர் திரும்ப வந்தார். அவர் சிவப்பு அங்கி அணிந்திருந்தார். வர்ணம் பூசுவோர் ஒரு வாளியில் பச்சை சாயத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் ஓடினர். எதற்காக என்று கேட்டதற்கு, முதலாளி பச்சையைத் தவிர வேறு எந்த நிறத்தையும் பார்த்தால், வலியெல்லாம் திரும்பி வந்துவிடும் என்பதற்காக என்று பதில் வந்தது.
"உன்னுடைய மலைபோன்ற முட்டாள்தனத்தால் லட்சக்கணக்கில் பணத்தை வீணாக்கிவிட்டாயே!" என்று முனிவர் முதலாளியைக் கடிந்துகொண்டார்.
"நாலு ரூபாய் கொடுத்து நீ பச்சைக் கண்ணாடி வாங்கி அணிந்து கொண்டிருந்தால் போதுமானது. அந்தச் சுவர்கள், சட்டி பானைகள், மரங்கள், நாற்காலிகள் மட்டுமல்லாமல், உன் சொத்தில் பெரும்பங்கும் தப்பித்திருக்கும். இந்த உலகத்துக்கே நீ பச்சை வண்ணம் பூசமுடியாது" என்றார் முனிவர். |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா நன்றி: சனாதன சாரதி |
|
|
|
|
|
|
|