|
|
|
என் மருமகள் அன்று அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தாள். கேட்டதற்கு சூப் கிச்சன் பணிக்குச் சென்றதாகச் சொன்னாள். அப்படி என்றால் என்ன என்று நான் கேட்டேன். அவள் கூறினாள், "சூப் கிச்சனில் அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையில் பணமும் இல்லாதவர்களுக்கு அன்னதானம் அளிக்கிறார்கள். தினமும் இந்த சூப் கிச்சனில் சுமார் 350 நபர்கள் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். அதில் சத்துள்ள சூப், சாலட், ரொட்டித் துண்டு, இனிப்பு டோநட் தரப்படுகிறது. சிலசமயம் பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகளிலிருந்து தற்சமயம் காலாவதி ஆன பொருட்களை இலவசமாக அனுப்பி விடுகிறார்கள். அவை பெரிய குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வழங்கப்படும்.
"தன்னார்வத் தொண்டர்கள் பெரிய அண்டாக்களில் சூப் தயார் செய்வார்கள். பெரிய நிறுவனத்தினர் தங்கள் உயர் அதிகாரிகளை இந்த நற்பணிக்காக ஒருநாள் சம்பளத்துடன் அனுப்பி வைத்து ஆதரவு அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணிக்கே கிச்சனுக்கு சென்று சூப் தயார் செய்து தட்டில் மற்ற பொருட்களை வைத்து நாப்கின், கரண்டி அடுக்கி வைத்து அங்கு சாப்பிடவரும் நபர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்கள். சரியாக மதியம் 12 மணியிலிருந்து 1 மணிவரை உணவு வழங்குகிறார்கள். உணவை அங்கேயே அமர்ந்துதான் உண்ண வேண்டும். வெளியே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஏனெனில் சிலர் மது அல்லது போதைப் பொருளுக்காக இதனை விற்று விடுவார்கள். இந்த சூப் கிச்சன் பொதுவாக சர்ச் அருகில் உள்ளது. இதனால் மின்சாரக் கட்டணம், எரிபொருளுக்கு ஆகும் செலவை அரசாங்கமும் சர்ச்சும் கொடுக்கின்றன." |
|
பெரிய உத்தியோகத்தில் இருக்கும் என் மருமகள் இவ்வாறு தொண்டு செய்வதைக் கேட்க எனக்குப் பெருமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கிறது.
பிரேமா நாராயணன், இல்லினாய்ஸ் |
|
|
|
|
|
|
|