|
ஜனவரி 2001: குறுக்கெழுத்துப் புதிர் |
|
- வாஞ்சிநாதன்|ஜனவரி 2001| |
|
|
|
குறுக்கெழுத்துப் புதிர்கள் - ஓர் அறிமுகம்
போர் வீரர்கள் சாவதற்கும், சாம்பார் மணப்பதற்கும் ஒரேகாரணம்: `பெருங்காயம்’ என்ற ஒரு விடுகதை பலரும் அறிந்ததே.
ஒரு சினிமாப் பாடலில் கதாநாயகி `அப்பாவை ஒருத்தியும்,அக்காளை ஒருவனும் திருமணம் செய்வது தகுமா’ என்று கேட்க, கதாநாயகன் `அப்பாவை ( அந்த + பாவை) ஒருத்தியும், அக்காளை (அந்த + காளை) ஒருவனும் தாராளமாக கல்யாணம் செய்து கொள்ளலாம்!’ என்று பதிலடி கொடுக்கிறான்.
டி.ராஜேந்தர் ஒரு படத்தில் `வக்கீல் ஆகணும்னு நெனச்சேன், ஆனால் வக்கில்லாதவனாயிட்டேன்’ என்று சோகத்திலும் ஒரு கடி கடிக்கிறார். காளமேகப்புலவர் ( நமக்கு எட்டாம் கிளாஸ் புத்தகத்தில் செய்யுளாக வந்தாரே, அவரேதான்) ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே `நஞ்சிருக்கும் தோலுரிக்கும்’ என்று பாம்பையும், வாழைப்பழத்தையும் பொருத்தி சிலேடை எழுதி விட்டார். இந்த வார்த்தை ஜாலங்கள் எல்லாம் உங்களை வசீகரித்தால் நிச்சயம் இந்த குறுக்கெழுத்துப் புதிர்களும் மகிழ்விக்கும்.
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது,ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
தமிழ் பத்திரிகைகளிலும் செய்தித் தாள்களிலும் பெரும்பாலும் முதல் வகை மட்டுமே காண முடிகிறது. அம்முறையில் பொது அறிவைச் சோதிக்கும் வண்ணம் புதிர்க் கேள்விகள் அமையும். உதாரணமாக, ` கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்து பாலசந்தர் இயக்கிய படம்’ என்றால் அனேகமாக விடை `மூன்று முடிச்சு’ என்றிருக்கலாம். இது நேரடி முறை.
ஆனால் இங்கு Cryptic Clues வகையில் புதிர்கள் தரவிருக்கிறோம். ( இந்த முறையில் எழுத்தாளர் சுஜாதா பல புதிர்களை உருவாக்கியுள்ளார்.)
ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது.ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)
பலருக்கு இது புதிதா(ரா)க இருக்கலாமென்பதால் சில உதாரணங்கள் இங்கே தரப் பட்டுள்ளன. முதலில் இந்த உதாரணங்களைப் படிக்காமல் புதிர்களை அவிழ்க்க முயலுங்கள்.
குறுக்கெழுத்துப் புதிர்கள் - சில உதாரணங்கள்
நடு இரவில் சூரியன்! (2) விடை: ரவி. இதன் பொருள்சூரியன், இந்த விடையே `இரவில்’ என்ற வார்த்தையின்நடுவில் வந்துள்ளது.
லக்ஷ்மி தமிழ்ப்பெண்ணாக முடியாவிட்டாலும் குறிக்கோளை அடைவாள் (4) விடை: இலக்கு. இந்த வார்த்தையின் அர்த்தம்`குறிக்கோள்’. லக்ஷ்மி எப்படித் தமிழ்ப் பெண்ணாவாள்? `
இலக்குமி’ என்றாகும்போது! `இலக்குமி’ என்ற வார்த்தைமுடியாவிட்டால் (அதாவது, முழுதாக வராவிட்டால்) விடை வரும்.
கைவசம் பாதிரியார் மறைத்து வைத்துள்ள பொருளை ஈட்டு (4) விடை: சம்பாதி. (= பொருள் ஈட்டு). இவ்வார்த்தையை `கைவசம்பாதிரியார்’ மறைத்து வைத்துள்ளதைக் காணலாம்.
தெருக்கள் கூடுமிடத்தில் முழுமதியில்லை (3). விடை: சந்தி(ரன்)
உச்சி வேளையில் கல்லெறிந்து தோழனைக் கூப்பிடு (3) விடை: நண்ப(கல்)
கவிதையுடன் அழகியையும் கூடவே அளிக்கும் கவிஞன் (3) விடை: பாரதி(பா + ரதி)
காதலால் சிவன் கலக்கமுற்று ஓட்டாண்டியானான் (7) விடை: காசில்லாதவன்.இங்கு `கலக்கமுற்று’ என்பது `காதலால் சிவன்’ என்ற வார்த்தைகளின் எழுத்துகளை கொஞ்சம் கலக்கி விட வேண்டும் என்றுஉணர்த்துகிறது.
ஒரு ஸ்வரம் கூட்டி திட்டு, ஒன்றன் பின் ஒன்றான ஒழுங்கமைப்புக்காக(3) விடை: வரிசை. `ச ரி க ம ப த நி’ என்ற ஸ்வரங்களில் ஒன்றான `ரி’ திட்டு என்ற பொருள் கொண்ட`வசை’ யுடன் கூட்டப்படுகிறது. |
|
குறுக்காக
3. மேடைப்பேச்சில் தொடக்கத்தில் முந்தி வந்த பொறி (5) 6. மேடைப்பேச்சில் எம்.ஜி. ஆர். இதன் இதையே குறிப்பிடுவார் (4) 7. ஏதோ வாழ்க்கை (4) 8. நியதிகளுக்குட்பட்டு சட்டியுள் ஆயுதமில்லா விடப்பல் (6) 13. இங்கு வந்தால் பாரி நடந்தே போகும்படி நேரலாம் (6) 14. ஊறுகாய் வேண்டி ராசேந்திரன் இங்கு படையெடுத்தானோ? (4) 15. புரிந்துகொள்ள குலம் தழைக்க (4) 16. பெண்ணைப்பெற்றவர் சீரிய சைவர் அநேகமாக எல்லாம் செய்வர் (5)
நெடுக்காக
1. சர நுழைவால் மகனுக்குப் பிறந்தவன் திறை வாங்குவான் (5) 2. முக்கியத்துவம் திரையரங்கத்தில் தலைவலி தரலாம் (5) 4. ஒருவருக்குச் சொந்தமான பெண் யானைக்கு மதிப்பு இவ்வளவுதானா? (4) 5. உழவன் வைத்திருக்கும் பாத்திரத்துப் பை (4) 9. மாறிமாறி பயிரதில் வந்த சிறுகல் (3) 10. இடி ---இடி (5) 11. தேவர்கள் வாழாவிடத்தில் மலர் பார் (5) 12. ஔவையாருக்குப் பிடிக்காத குலத்தினர் (4)
வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com
குறுக்கெழுத்துப் புதிர்கள் - விடைகள்
குறுக்காக:3. முதற்கண் 6. ரத்தம் 7. பிழைப்பு 8. சட்டப்படி 13. முல்லைத்தீவு 14. கடாரம் 15. விளங்க 16. சீர் வரிசை
நெடுக்காக:1. பேரரசன் 2. முதலிடம் 4. தம்பிடி 5. கலப்பை 9. பரல் 10. மத்தளம் 11. பூவுலகம் 12. இடாதோர் 13. மும்மாரி |
|
|
|
|
|
|
|