|
தென்றல் பேசுகிறது |
|
- |டிசம்பர் 2007| |
|
|
|
கச்சா எண்ணெயின் விலை மனோதத்துவ வரம்பான நூறு டாலரைத் தொடட்டுமா என்று அச்சுறுத்துகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைத்துக் கொண்டு விலை இறங்கிவிடாதபடி அதன் உற்பத்தியை ஒழுங்கு செய்துகொள்கின்றன. உலகின் எல்லா நாணயங்களுக்கு எதிராகவும் மதிப்புச் சரிந்து வரும் டாலர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. 'விலைமதிப்பற்ற எண்ணெயை நம்மிடம் வாங்கிக் கொண்டு அமெரிக்கா நமக்கு வெற்றுத் தாளைக் கொடுக்கிறது' என்பதாக இரானிய அதிபர் பேசியிருப் பதையும் கவனிக்க வேண்டும். மதிப்புக் கூடிவரும் இந்திய ரூபாய் ஓரளவு இந்த எண்ணெய் விலை அதிகரிப்பைச் சமாளிக்க இந்தியாவுக்கு உதவுகிறது. ஆனால் ஏற்றுமதித் துறையில் ரூபாயின் இந்த மதிப்பேற்றம் பெரும் தாக்கத்தை உண்டாக்கத்தான் போகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவுக்குப் போக விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா ஒரு செலவு மிகுந்த இடமாகத் தெரிகிறது. குறிப்பாக, நிரம்பி வழியும் ஓட்டல் அறை களின் வாடகை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. ஆனால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதால், மாற்று எரிபொருள் களுக்கான தேடல் இன்னும் தீவிரமாகும் என்பது மட்டுமே இப்போதைக்கு ஆறுதல் தரும் ஊகமாக இருக்கிறது. பொருளாதாரத் தத்துவத்தின்படி, ஒரு நாணயத்தின் மதிப்பு ஏறினால் அதன் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். அதாவது, நூறு ரூபாய் சென்ற ஆண்டு எத்தனை பொருள்களை வாங்கியதோ, அதைவிட அதிகப் பொருள்களை இப்போது வாங்க வேண்டும். உண்மையில் அப்படி நடக்கவில்லை. ஆனால், இந்திய அரசின் புள்ளிவிவரப்படி பணவீக்க விகிதம் குறைந்திருக்கிறது; குறைந்து கொண்டேதான் இருக்கிறது. சுற்றிலும் பார்த்தால் எந்த விலையும் மலிவானதாகத் தெரியவில்லை. காரணம் தேடினால் மீண்டும் கேஸொலீனில் தான் போய் நிற்கும். எப்போது இந்த எண்ணெய் அராஜகத்திலிருந்து தப்பப் போகிறோமோ!
| தென்றல் தனது எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில் விளம்பர தாரர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று அதன் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அனைவரையும் நன்றிப் பெருக்கோடு நினைவுகூர்கிறது. | |
மலேசியக் காடுகளில் வேலை செய்வதற்காக இந்தியர்களை, இதில் பெரும்பான்மையும் தமிழர்கள், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அடிமைக் கூலிகளாக அழைத்துச் சென்றது. பின்னர், மலேசியா சுதந்திர நாடாக ஆன பின்னரும் இந்திய வம்சாவளியினருக்கு முதல்தரக் குடியுரிமை கிடைக்கவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர்கள் பிற்படுத்தப்பட்டே வந்திருக்கிறார்கள். இதை எதிர்த்துச் சம உரிமை வேண்டி, அமைதியான முறையில், மகாத்மா காந்தியின் படத்தைக் கையில் ஏந்திச் சுமார் 5000 பேர் தலைநகர் கோலாலம்பூரில் ஓர் பேரணி நடத்தினர். ஆனால் மலேசிய அரசு இவர்கள் மீது தண்ணீர், கண்ணீர்ப் புகை தவிர வன்முறையையும் ஏவி விட்டிருக்கிறது. மலேசியப் பொலீசார் தடியடி நடத்தியதில் பலர் மோசமாகக் காயமுற்றிருக்கிறார்கள். இந்தப் பேரணியை முன்னின்று நடத்திய மூவரை ராஜத்துரோகக் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர். ஆனால் 'அரசுக்கு எதிராக அவர்கள் தமிழில் என்ன பேசினார்கள் என்பது மொழிபெயர்த்துக் கொடுக்கப்படவில்லை' என்று காரணம் காட்டி அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். விஷயம் இத்தோடு முடியவில்லை என்றுதான் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மலேசியாவில் போரிடும் தமிழ் வம்சாவளியினருக்கு எதிரான வன்முறையை எதிர்த்து இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று கோரித் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் என்பது ஆறுதல் தரும் செய்தி. |
|
தென்றல் தனது எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில் விளம்பரதாரர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று அதன் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அனைவரையும் நன்றிப் பெருக்கோடு நினைவுகூர்கிறது. தற்போது இணையம் வழியே உலகெங்கிலுமிருந்து தென்றலைப் படித்துவிட்டு வாசகர்கள் எழுதும் கடிதங்கள் தென்றல் சரியான பாதையில்தான் நடை போடுகிறது என்பதை உறுதி செய்கிறது. மலிவான உத்திகள், மலினமான உணர்வுகளைத் தூண்டும் விஷயங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, தமிழ்ச் சமுதாயத்துக்கு நன்மை என்ற ஒரே நோக்கத்தோடு, தரமானவற்றைத் தெரிந்தெடுத்துத் தருவதில் தென்றல் பெருமிதம் கொள்கிறது. இது தொடர வேண்டுமானால் வாசகர்கள் தென்றல் விளம்பரதாரர்களை ஆதரிக்க வேண்டும். வட அமெரிக்கத் தமிழர்கள் தொடர்ந்து இதில் எழுதி வரவேண்டும். உலகின் இந்தப் பகுதியில் தென்றல்தான் முன்னோடித் தமிழ் இதழ் என்ற இறுமாப்போடு செயல்படத் துணைநிற்க வேண்டும். தென்றல் வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ், பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.
And, Happy Holidays!
டிசம்பர் 2007 |
|
|
|
|
|
|
|