|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜனவரி 2024| |
|
|
|
|
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான முதல்நிலைச் சுற்றுகள் அயோவாவில் ஜனவரி 15ஆம் தேதியன்று தொடங்க உள்ளன. முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு கேள்விக்குறி. ஆமாம், அவர் ஜெயித்தே தீருவார் என்று சில ஊடகங்கள் கூறிய போதிலும், அவரது தகிடுதத்தங்கள் வாக்காளர்களுக்குப் புரிந்தே இருக்கும், அவர் மீண்டெழுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றே அனுமானிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், விவேக் ராமஸ்வாமி என்கிற சுயம்பு மில்லியனர் இன்றைக்கு அதிர்வலைகளை எழுப்பி வருகிறார். உண்மை பேசுதல், தூய்மையான நிர்வாகம், ஊடகங்களின் மகுடிக்கேற்ப ஆடாமை, சட்டபூர்வமல்லாத வந்தேறிகளைத் தடுத்தல், நாட்டுப்பற்று, அமெரிக்காவின் சுயகௌரவத்தை மீட்டெடுத்தல் என்று பல தளங்களில் செயல்படப் போவதாக அவரது விவாதங்கள் அமைந்துள்ளன. குடியரசுக் கட்சியை ஒரு புதிய திசையில் அழைத்துப் போகக்கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெற்றோரைக் கொண்ட இவரது தன்னம்பிக்கையும் சொல்லாற்றலும் எல்லோருக்கும் வியப்பளிக்கின்றன. பொறுத்திருந்து பார்க்கலாம்.
★★★★★
தனி நபர்களைத் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிப்பது தற்காப்புக்காக. அல்லது, அப்படித்தான் கருதப்படுகிறது. ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை முந்தைய வருடங்களைவிட 2023-ல் அதிகமாகி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 656 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 40 சம்பவங்கள் படுகொலையாக முடிந்திருக்கின்றன என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. துப்பாக்கி உரிமத்தை நெறிப்படுத்தும் சட்டங்கள் இறுக்கிப் பிடித்தாலும், மேலே கூறிய 656 என்பது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 2 தனியார் துப்பாக்கிச் சூடு என்றாகிறது! தனிநபர் சுதந்திரம் என்பது சமுதாயத்துக்கு அச்சமும் தீங்கும் விளைவிப்பதாக இருக்கலாமா?
★★★★★
கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி வாசிக்கும் சுவைஞர்கள் இருக்கிறார்கள் என்று உறுதிபடக் கூறுகிறார் 'சிறுவாணி வாசகர் மையம்' ஜி.ஆர். பிரகாஷ் இந்த மாத நேர்காணலில். துப்பறியும் நாவல்களை எழுதி வடுவூர் மாளிகை கட்டியவர், ஆராய்ச்சி நூல் எழுதிக் கைக்காசை இழந்ததையும் 'அலமாரி' பகுதியில் பார்க்கிறோம். நல்லதொரு சிறுகதை, நம்பியாண்டார் நம்பிகளின் வாழ்க்கைச் சுருக்கம் எனப் பல சுவையான பகுதிகளோடு உங்களை அணுகுகிறது தென்றல்.
வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், பாரதக் குடியரசு நாள் வாழ்த்துகள். |
|
தென்றல் ஜனவரி 2024 |
|
|
|
|
|
|
|