|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜனவரி 2023| |
|
|
|
|
அமெரிக்கக் காங்கிரஸ், குடியரசுக் கட்சியின் வசம் இருக்க, செனட் ஜனநாயகக் கட்சியின் வசம் உள்ளது. நாடு பலவகை இக்கட்டுகளுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகியுள்ள இந்தத் தருணத்தில் முக்கியமான முடிவுகளை அரசு எடுப்பதற்கு இந்தப் பிளவு தடையாக இருந்துவிடக் கூடாது. இந்தப் பிளவு அப்படியே மக்களையும் இரு கூறுகளாகப் பிரித்துவிடக் கூடாது. “வாக்குச் சீட்டு எண்ணும் சட்டத்தை நிறைவேற்றுவதில் இரண்டு கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நமது தேர்தல்களின் நேர்மையைப் பாதுகாத்திருக்கிறோம்” என்று அதிபர் பைடன் அறிக்கை விட்டிருக்கிறார். மேலும் அவர், “ரிபப்ளிகன்கள் மற்றும் டெமாக்ரட்டுகள் அமெரிக்காவின் பொருட்டாக ஒன்றிணைய முடியும் என்பதற்கு இந்தச் சட்ட வரைவு ஒரு நிரூபணம். இது தொடரும் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளது நமது எதிர்பார்ப்பும் கூடத்தான்.
★★★★★
வரலாறு காணாத பனிப்புயல் ஒன்று அமெரிக்காவில் பாதியை உறைநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் வந்த இந்த பேரிடர், அமெரிக்க மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. உயிரிழப்பு, பொருள் இழப்பு என்பது ஒருபுறம் இருக்க, விமானங்கள் பெரும் எண்ணிக்கையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் மிக அதிகமாகப் பயணம் செய்யும் காலம் இது. அமெரிக்காவில் வலுவான விரைவு ரயில் தொடர்புகள் அதிகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்கூடு. இந்த வகையில் இந்தியா அண்மைக் காலத்தில் அதிவேக ரயில்களை பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், பல நகரங்களுக்கிடையே இந்தச் சேவைகளை நிறுவ விரைந்து செயல்பட்டு வருகிறது. பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்க ஏதுவாக, பல புதிய இடங்களுக்கு ரயில், விமான சேவைகளை விரிவாக்குவதில் மோதி அரசு தெளிவுடன் விரைந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் உலகின் எந்த நாட்டுக்கும் முன்னோடியாக அமைவன என்பதில் ஐயமில்லை.
★★★★★
இசைக்கலைஞர் வினோத் நாதஸ்வரம், புல்லாங்குழல் எனப் பலவற்றிலும் பரிமளிப்பவர். நம்பிக்கையூட்டும் இளைஞர். அவரது நேர்காணலும் இனிய இசையாக இந்தப் புத்தாண்டில் நம்மை மகிழ்விக்கும். மேம்மத் லேக்ஸ் குறித்த படங்களும் கட்டுரையும் நமக்கு உற்சாகம் ஊட்டும். வீரத்தமிழச்சி கேப்டன் லக்ஷ்மி சேகல் இன்னும் பிற கட்டுரைகள் நமது சிந்தனைக்கு விருந்து. சிறுகதை கேட்கவே வேண்டாம் - நேசம் மிகுந்த பாசக்கலவை. வாருங்கள் சுவைக்கலாம்.
★★★★★
வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி மற்றும் பொங்கல் வாழ்த்துகள். |
|
தென்றல் ஜனவரி 2023 |
|
|
|
|
|
|
|