|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஏப்ரல் 2022| |
|
|
|
|
சென்ற 12 மாதங்களில் அமெரிக்க எஃகு (steel) உற்பத்தியாளரின் அடக்கவிலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. வாஷிங் மெஷின், கார், வீடு என்று நாம் பயன்படுத்தும் பல்வேறு அன்றாடப் பொருட்களின் விலைகளும் இதனால் உயர்ந்துவிட்டன. காரணம், சீனா விலை குறைந்த, அதிக மாசு ஏற்படும் வழிகளில் உற்பத்தி செய்த இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை உலகச் சந்தையில் கொண்டுவந்து குவித்து, பல நாடுகளின் தொழிலையும், வேலை வாய்ப்புகளையும் சிதைத்துக் கொண்டிருந்ததுதான். ஆனால், முந்தைய அமெரிக்க நிர்வாகம் சீனப் பொருட்களின் மீது மட்டுமல்லாமல் பல நட்பு நாடுகளின் பொருட்கள் மீதும் நியாயமற்ற இறக்குமதி வரிகளை விதித்து, அமெரிக்கத் தொழில் மற்றும் வேலை வாய்ப்புச் சூழலைக் குலைத்ததுடன், அந்த நாடுகளுடனான வணிக உறவையும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியது. தற்போதைய பைடன் அரசு ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் போன்றவற்றுடன் இறக்குமதி வரிகளைத் தளர்த்தப் புதிய ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது வரவேற்கத் தக்கது. இதனால் அந்த நாடுகளும் அமெரிக்கப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து இருவழி வணிக வளர்ச்சிக்குப் பாதை இட்டிருக்கின்றன. பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவை கட்டுக்குள் வரவும், வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தங்கள் நல்ல தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
★★★★★
போரிடுகின்ற உக்ரேன் - ரஷ்யா ஆகிய நாடுகளும், இவ்விரண்டின் பின் அணி திரளும் நாடுகளும் போர் நீடித்தால் அது உலகுக்கே பெரும் பாதகமாக அமையும் என்பதை உணர்வது நல்ல அறிகுறி. ரஷ்யாவின் எண்ணெய்க் கம்பெனி ஒன்றை உக்ரேன் திருப்பித் தாக்கி உள்ளது. இது சமாதானப் பேச்சைப் பாதிக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இத்தகைய தொடர்ந்த பதட்ட நிலை நல்லதல்ல. தவிர, கச்சா எண்ணெயின் கடும் விலை ஏற்றம், போக்குவரத்து மற்றும் பொருட்களின் விலைகளில் பிரதிபலிக்கிறது. உள்நாட்டு அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் தத்தளிக்கும் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கும் போர்க்காலச் சூழல் எந்த நன்மையும் தராது. எப்பாடு பட்டாவது போரை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். உக்ரேனின் சிதிலமடைந்த நகரங்களை மீளமைக்கவும் சிதறிப் போன மக்களைத் திரும்பக் கொண்டுவரவும் ரஷ்யா முக்கியப் பொறுப்பேற்றுச் செயல்பட்டாக வேண்டும். இதை உலக நாடுகள் ஒரே குரலில் வற்புறுத்த வேண்டும்.
★★★★★
ஃபெடெக்ஸ் (FedEx) என்பது உலகறிந்த பெயர். இதன் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஆக ராஜ் சுப்பிரமணியம் என்ற இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டிருப்பதில் நமக்குப் பெருமை. IIT மும்பையில் தங்கமெடல் பெற்றுத் தேறியவர் இவர். இவரை, ஃபெடெக்ஸை நிறுவி, 51 ஆண்டுகளாக அதன் தலைமைப் பதவியில் இருந்த ஃப்ரெடரிக் வாலஸ் ஸ்மித் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
★★★★★
மருத்துவம், எழுத்து, பேச்சு, விமர்சனம் என்று பல்துறை வித்தகராகத் திகழும் டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன் அவர்களுடனான நேர்காணல் சுவையானது. அன்னை சாரதாமணி தேவியார், சாதனையாளர் டாக்டர் தமிழ்ச்செல்வி என இந்த இதழில் இடம்பெறும் ஒவ்வொருவருமே நம் மனதைக் கவரத் தவற மாட்டார்கள். சிறுகதைகளும் அப்படித்தான்.
வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு, ஸ்ரீராம நவமி, ஈஸ்டர் திருவிழா வாழ்த்துகள். |
|
தென்றல். ஏப்ரல் 2022 |
|
|
|
|
|
|
|