|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜூலை 2020| |
|
|
|
|
கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியதும், மக்கள் ஏதும் அறிந்திராத நிலையில் அரசாங்கம் முழுப்பொறுப்பை ஏற்று நாடுதழுவிய ஊரடங்கு, தனிமைப்படுத்தல், முகமூடி அணிய வற்புறுத்தல், நோய் தாக்கியோரை விரைந்து மருத்துவமனைக்கு அப்புறப்படுத்திச் சிகிச்சை தருதல் எனப் பல்முனை எதிர்த்தாக்குதல் நடத்தவேண்டி இருந்தது. மத்திய ஐக்கிய அரசிடம் தொடங்கி இந்தப் பொறுப்பை மாநிலம், மாவட்டம், ஊரகம் எனக் கீழ்மட்டம்வரை கறாராக ஏற்றுச் செயல்பட வேண்டியிருந்தது, இருக்கிறது, இருக்கப் போகிறது.
"தனித்திரு அல்லது உயிரை விடு" என்பது கிட்டத்தட்ட கொரோனா காலத் தாரகமந்திரமாகிவிட்ட நிலையில் அரசுகள் மட்டுமே இந்தப் போரில் முழு வெற்றிக்குக் காரணமாகிவிட முடியாது என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். தன்மீதும் சுற்றியிருப்பவர்மீதும் அக்கறை கொண்ட, அதற்காகச் சில சுதந்திரங்களைச் சிறிய அளவில் தியாகம் செய்யத் தயாரான தனிநபர்களும், அவர்களைக் கொண்ட சமுதாயங்களும் இன்று கொரோனாவை வெற்றி கண்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா இல்லை என்பது வருத்தந்தரும் உண்மை.
கதவடைப்பைப் பகுதிநேரமாவது திறந்து, தொழில்துறைக்கு உயிர் தரலாம் என்பது வெறும் ஆசையல்ல, கட்டாயம். கத்திமேல் நடக்கும் இந்த வித்தையைச் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், சவாலான நேரங்கள்தாம் அரசுகளின் திறமையை மக்களுக்குக் காண்பிக்கிறது. அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு இதில் என்ன மதிப்பெண் பெறும் என்பதை யோசித்து, அதற்கேற்ற மாற்று நடவடிக்கை எடுப்பது மக்களின் கையில் உள்ளது.
★★★★★ |
|
இந்தக் கடுமையான சூழலில் 'தென்றல்' அச்சிதழைக் கொண்டுவர இந்த மாதமும் இயலவில்லை. ஆயினும் அற்புதமான உள்ளடக்கத்தோடு ஆன்லைனில் வெளியாகிறது. இதற்குத் தொடர்ந்து ஆதரவு தரும் விளம்பரதாரர்களுக்கும் அன்பான வாசகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.
★★★★★
கவிமாமணி, சந்தைப்படுத்தல் நிபுணர், திறன் பயிற்றுநர் எனப் பன்முகச் செயல்பாடு கொண்டவரும், "சிறியாரை மேம்படச் செய்தால் தெய்வம் எல்லாரையும் வாழ்த்தும்" என்பதை ஒருபோதும் மறவாதவருமான பா. வீரராகவனின் நேர்காணல் உங்கள் மனதுக்கும் அறிவுக்கும் விருந்தாகும். முன்னோடி கு.மா. பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் சிறப்பானவை. இன்னும் சிறுகதைகள், சமையல் குறிப்புகள் அனைத்தும் உண்டு.
வாசகர்களுக்கு குருபூர்ணிமா, பக்ரீத், அமெரிக்கச் சுதந்திரநாள் வாழ்த்துகள்.
தென்றல் ஜூலை 2020 |
|
|
|
|
|
|
|