|
தென்றல் பேசுகிறது... |
|
- |பிப்ரவரி 2020| |
|
|
|
|
"சோலிய முடிச்சிருவீங்கன்னு நெனச்சேன், செய்ய மாட்டீங்கீயளே!" என்று ஒரு "தமிழறிஞர்" இந்தியப் பிரதமரைக் குறித்துப் பேசினார். அவரை நல்லவராக்கி விட்டார் அமெரிக்க அதிபர். "ஆடம் ஷிஃப் இன்னும் (அதற்கான) விலையைக் கொடுக்கவில்லை" என்றொரு மிரட்டல் (அசால்ட்டாக மிரட்டல் என்று நம்மூர்த் தமிழில் சொல்லத் தோன்றுகிறது, அப்படிச் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும். அசால்ட் என்றால் தாக்குதல்தானே). ஒரு முன்னணி ஜனநாயக நாட்டின் அதிபர் பேட்டை ரவுடித் தரத்துக்கு இறங்கிவிட்டதையே இது காண்பிக்கிறது. ஒரு சாதாரண அலுவலகச் சூழலில் ஒரு சகாவின் உயர்வைத் தடுக்க இப்படி ஒருவர் பேசியிருந்தால் அது சகித்துக் கொள்ளப்படுமா? அதிபரின் கட்சி நிர்வாகிகளும் சரி, கட்சிக்காரர்களும் சரி, ஏன் பொதுவெளியில் இந்தக் கீழ்த்தரமான நடத்தை பற்றிக் கண்டனக்குரல் எழுப்பவில்லை? இது கண்டுகொள்ளாமல் விடப்பட்டால் வரும் நாட்களில் அரசியல் மேடைகள் எத்தகைய தலைவர்களை, அவர்களிடமிருந்து எத்தகைய கேட்கத் தகாத வசனங்களை எதிர்கொள்ள நேரும் என்பதைச் சிந்திக்கவே அச்சமாக இருக்கிறது. வாக்களித்துப் பதவியேற்றிய மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அது தவறு நிகழும்போது உரக்கக் குரல்கொடுத்துக் கண்டனத்தைப் பதிவுசெய்வதுதான். இல்லையென்றால் குறைந்தபட்ச அரசியல் நாகரிகமும் காக்கப்படாது. மிரட்டலில் ஜனநாயகம் உயிர் பிழைத்திருக்காது.
★★★★★
இந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் உழவும் தொழிலும் சீரழிக்கப்படுவதைப் பற்றி முன்னரே பேசியுள்ளோம். இப்போது எஃகு, அதனால் செய்யப்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதித் தீர்வைகள் இன்னும் அதிகரிக்கப் பட்டுள்ளன. இதனால் உள்நாட்டில் எஃகுத் தொழில்துறை முன்னேற்றம் கண்டுள்ளதா என்றால் அதுதான் இல்லை. இங்கும் பணியாளர் பற்றாகுறை, அதிகப்படியான உற்பத்திச் செலவுகள் போன்றவை உற்பத்திக்குக் குறுக்கே நிற்கின்றன. கடமைகளைவிட உரிமைகளுக்குத் தரப்படும் அதிக முக்கியத்துவம் ஒரு மெத்தனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெரிய அரசியல், பொருளாதாரச் சுனாமி ஏற்பட்டாலொழிய நிலைமை மாறும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. சுனாமி வருவதற்கு முன்னே நிலைமையைச் சீரமைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.
★★★★★ |
|
இளவயதிலேயே பல அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் பல்வேறு பொறுப்புகள் வகித்த, தமிழைப் பிழையின்றி எழுதுவதைப் பரப்புவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட, தொழில்நுட்பம் அறிந்த முனைவர் அண்ணா கண்ணனின் நேர்காணல் நம்பிக்கையூட்டுவது. மிகநீண்ட, சிக்கலான பெருங்காப்பியமான மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள அருட்செல்வப் பேரரசன் குறித்த கட்டுரையும் முக்கியமானது. ஆன்மீகத் தமிழ்த் தொடர் உலகின் பிதாமகரான பரணீதரன் பற்றிய கட்டுரை பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளது. சிறுகதைகள், கவிதை, மேலோர் வாழ்வில் எனச் சுவை குன்றாமல் உங்களை வந்தடைகிறது தென்றல்.
வாசகர்களுக்கு மஹாசிவராத்திரி நாள் வாழ்த்துக்கள்.
தென்றல் பிப்ரவரி 2020 |
|
|
|
|
|
|
|